alyan kurdi

ஒரு புகைப்படம்
இந்த உலகத்தின் மனசாட்சியை
உலுக்கி விட்டதாகச் சொல்கிறார்களே
அப்படியென்றால்
இந்த உலகத்திடம் மனசாட்சி என்பது
இன்னும் இருக்கிறதா என்ன

விழுந்த குண்டுகளில் எரிந்தும் எரியாமலும்
உயிர்பிடித்து ஓடிய அந்த வியட்நாம் சிறுமியின்
புகைப்படம் கூட
ஒரு காலத்தில் உங்களை
உலுக்கியதாகத்தான் சொன்னீர்கள்
மனசாட்சியுள்ள மனிதர்களே!

bopal victimமுள்ளிவாய்க்கால் யுத்தத்தில்
குழந்தைகளைத் தேடித் தேடி
மருத்துவமனைகளிலும் பள்ளிக்கூடங்களிலும்
போடப்பட்ட குண்டுகளில்
சிதறிக் கிடந்த பிள்ளைகளின் புகைப்படங்கள் கூட
ஒரு காலத்தில் உங்களை
உலுக்கியதாகத்தான் சொன்னீர்கள்
மனசாட்சியுள்ள மனிதர்களே!

இஸ்ரேலின் ஏவுகணைகள்
காஸாவின் பள்ளிக்கூடங்களைக்
குறிபார்த்து விழுந்ததில்
குதறி எறியப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களும் கூட
ஒரு காலத்தில் உங்களை
உலுக்கியதாகத்தான் சொன்னீர்கள்
மனசாட்சியுள்ள மனிதர்களே!

சிரியாவின் அய்லானின் பெயரால்
வியட்நாமின் கிம்புக்கின் பெயரால்
ஈழத்துக் குழந்தைகளின் பெயரால்
காஸாவின் குழந்தைகளின் பெயரால்
இந்த உலகத்திற்கு இன்னும் நீங்கள் காட்டாத
புகைப்படங்களில் இருக்கும் குழந்தைகளின் பெயரால்
உங்களுடைய மனசாட்சியை சந்தேகிக்கிறேன் நான்
உங்களுடைய மனசாட்சியை சபிக்கிறேன் நான்

யுத்த பின்னணியில்
எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் தவிர
பசித்துப் பசித்து நகர முடியாமல் நகரும்
சூடானின் எலும்புச் சிறுமியும் காத்திருக்கும் கழுகும்
போபால் விஷவாயு தாக்கியதில்
புதைக்கப்பட்ட குழந்தையின் முகமும் என
எத்தனையோ புகைப்படங்கள்...

இந்த உலகத்தில்
புகைப்படங்களுக்கு ஒன்றும் பஞ்சமில்லை
ஒவ்வொரு புகைப்படமும்
ஒருவாரத் தலைப்புச் செய்திகளே
ஒவ்வொரு புகைப்படமும்
ஒருகணம் திகைப்பூட்டூம் காட்சிகளே

எல்லா தேசத்தின் எல்லாக் கதவுகளும்
எந்தவொரு வியாபாரிக்கும்
எப்போதும் திறந்தே இருக்கிறது
உலகமயமாக்கலோ முதலாளிகளுக்கு மட்டும்
எல்லைக்கோடுகளே இல்லாமல் செய்துவிட்டது

ஆனால்
இந்த அப்பாவி மக்களுக்கு
ஒரே ஒரு கணம்
ஆழமாய் உள்ளிழுத்து நிம்மதியாய் வெளிவிடும்
அந்த மூச்சுக்காற்றுக்காக
இத்தனை பரிதவிப்பா இத்தனை அலைக்கழிப்பா

பில்லியன் கணக்கில் ஆயுதம் விற்றவன் சொல்கிறான்
அந்த நாட்டின் அகதிகளை
ஆயிரக்கணக்கில் தான் அனுமதிப்பேனென்று
கோடிக் கணக்கில்
ஆயுதம் விற்றவன் சொல்கிறான்
ஆயுதம் விற்கத் தவிர வேறெதற்கும்
எங்கள் எல்லைக் கதவு திறக்காதென்று
வாய்கூசாமல் இவர்கள் சொன்னாலும் சொல்வார்கள்
எங்கள் விமானங்களில் ஆயுதங்களை அல்ல
சிலுவைகளைத்தான் நாங்கள் அனுப்பினோம் என்று

உள்நாட்டு யுத்தமாம் உள்நாட்டு யுத்தம்
அப்படியென்றால் என்ன
உங்கள் ராணுவம் வந்து அமைதியை நிலைநாட்ட
நீங்கள் செய்யும் முன்னேற்பாடுதானே
இந்த உள்நாட்டு யுத்தம்

vietnam victimநீங்களே ஆயுதம் கொடுக்கிறீர்கள்
நீங்களே கொலை செய்கிறீர்கள்
நீங்களே கண்ணீரும் வடிக்கிறீர்கள்
மண்டையே வெடித்து விடும்போலிருக்கிறது
உங்கள் நாடகங்களைப் பார்க்க பார்க்க

ஒவ்வொரு நாட்டின்
எல்லைக் கோடுகளுக்குப் பக்கத்திலும்
பயணக் களைப்பில்
வாழ்க்கையின் மீதான பெரும் விருப்பத்தில்
உடல்சோர்ந்து உயிர்சுமந்து நின்றுகொண்டிருக்கும்
அந்த அகதிக்கூட்டங்களின் முகங்களை
ஒருகணம் உற்றுப்பாருங்கள்
இதயங்களின் குமுறல்களைக் கேட்டாலும் கேட்பீர்கள்

கொள்ளைக்காரனும் கொலைகாரனும்
அரச மரியாதையோடும் தகுந்த பாதுகாப்போடும்
விமானத்தில் பறந்து போக
ஒன்றுமில்லாத இந்தப் பஞ்சைப் பராரிகள்
கள்ளத்தோணியிலும் கிடைக்கும் வண்டிகளிலும்
வாழிடப் பிச்சை கேட்டு
வருந்தி அலைந்து கொண்டிருப்பது
உங்கள் மனசாட்சியை
ஏதாவது செய்யும் என்ற நம்பிக்கை
எனக்குக் கொஞ்சமும் இல்லை

குண்டுபோட்டு கொல்லப்பட வேண்டியவர்கள் குழந்தைகளா
அந்த ஆயுத வியாபாரிகளல்லவா
அலைக்கழிக்கப்பட்டு படுகொலை செய்யப்படவேண்டியது
அந்த அய்லான்களா
இந்தக் கேடுகெட்ட உலகத்தின் முதலாளிகளல்லவா

என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்
இன்னும் பார்ப்பீர்கள்
இதைவிடக் கொடூரமான காட்சிகளை

ஏனென்றால்
ஆயுதங்கள் தீர்ந்துவிடவில்லை
அணுகுண்டுகள் பயன்படுத்தி முடியவில்லை
ஏவுகணைகளுக்கு வெறி குறையவில்லை
பணத்தாசை
நாடுபிடிக்கும் வெறி
வல்லரசுக் கனவு
எண்ணைப் பசி
எதுவும் அடங்கிவிடவில்லை

sudan childஇதற்கு மேலும்
மனிதாபிமானம் மனசாட்சி என்றெல்லாம்
நீங்கள் பிதற்றினீர்களென்றால்
அவர்களோடு சேர்ந்து நீங்களும்
நாசாமாகத் தான் போவீர்கள்
என்று சொல்வதைத் தவிர
என்னிடம் ஒரு செய்தியுமில்லை

இறுதியாக
அய்லானின் நினைவில் இந்த இரவில்
இந்த இதயம் இப்படி ஏன்
கொதித்துக் கொதித்துச் சூடேற வேண்டும்
ஏனென்றால்
அயல் நாட்டுக்காரனல்ல அந்நிய மனிதனுமல்ல
அய்லான் அந்த அய்லான் என்னுடைய மகன்
அந்த அய்லான் என்னுடைய மகனேதான்...

உங்களுக்கு...?

- ஜோசப் ராஜா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)