சுரண்டல் கொடுமை தாங்க வொணாது
அரசியல் மாற்றம் வேண்டும் மக்களின்
பேரா ளர்கள் மாறா யிருந்தால்
சேரார் செயலில், சொல்லில் மட்டும்
வீரம் பேசிப் பார்ப்பன ரிடத்தில்
சோரம் போய்த்தான் தன்வழி மறந்து
விகிதா சாரப் பங்கீட்டு முறையைத்
திகிலாய் நினைத்துப் பேசவும் மறுப்பார்
சாதி முதன்மைப் பிரச்சினை இல்லை
நீதி என்பது வர்க்கப் போரே
என்றே கூறும் பொதுமைக் கட்சிகளும்
என்றும் கூலி உயர்வு வட்டம்
விட்டு வெளியே வாரார் ஆதலின்
கெட்டுப் போகாப் பேராளர் களையே
தேர்வதில் மாறா மனதுடன் இருப்பதும்
கூர்ந்த விழிப்பும் வினைஞர்க்கு வேண்டுமே

(சுரண்டலினால் அனுபவிக்கும் துன்பங்களைத் தாங்க முடியாமல் (அதை ஒழிப்பதற்காக) அரசியல் மாற்றம் வேண்டுகின்ற மக்களின் பிரதிநிதிகள் உண்மையானவர்களாக இல்லாமல் இருந்தால், சொல்லில் மட்டும் வீரம் பேசி விட்டு, செயலில் ஒன்றும் செய்ய மாட்டார்கள். அவர்கள் பார்ப்பனர்களிடத்தில் சோரம் போய், வந்த வழியை மறந்து விட்டு, (அனைத்து வகுப்பு மக்களிலும் உள்ள திறமையானவர்கள் உயர்நிலையிலும், திறமைக் குறைவானவர்கள் கீழ்நிலையிலும் பணிக்கு அமர்த்தப்பட வழி வகுக்கும்) விகிதாசாரப் பங்கீட்டு முறையை, (அது பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் உயர்நிலையில் செல்லும் வழிகளில் தடைகளை ஏற்படுத்துவதால் பார்ப்பனர்களுடைய விரோதத்தைச் சம்பாதிக்க நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தில்) திகிலாக நினைத்து, (அதைப் பற்றி) பேசவும் மறுப்பார்கள். சாதி முதன்மைப் பிரச்சினை இல்லை; வர்க்கத்தை ஒழிப்பது தான் நீதியாகும் என்று சொல்லும் பொதுவுடைமைக் கட்சிகளும், கூலி உயர்வு வட்டத்தை விட்டு வருவதில்லை என்பதால், (மக்களின் நோக்கத்திற்கு மாறாகக்) கெட்டுப் போகாத பிரதிநிதிகளைத் தேர்ந்து எடுப்பதிலும் (தேர்ந்து எடுத்த பின்பும் அவர்கள் ஒழுங்காய் இருக்கிறார்களா என்று கண்காணிக்க) கூர்ந்த விழிப்புடன் இருப்பதிலும் மாறாத (நிலையான) மனதுடன் தொழிலாளர்கள் இருக்க வேண்டும்.)

- இராமியா