rainy night 333பகலில் பெய்து குதூகலம் தருவது போல்
இரவு மழை ஏனோ இருப்பதில்லை --அது
தொலைந்து போன மனிதர்களுக்கான
துயரம் சுமந்த அழுகை போலவே உள்ளது அது....

யாருமற்ற இடம் தேடி அமர்ந்து
இறுகக் கட்டிய முழங்கால்களுக்குள்
வெடித்து வரும் விம்மலை
அழுத்திக் கடித்த உதடு மூடி
விசும்பித் துடித்து அடங்குவதும்
மீறுவதுமாகத்தான் தோன்றுகிறது
இந்த இரவு மழை ஏனோ ....

வெளிச்சத்தின் வீராப்புகளை
இருளுக்குள் அடமானம்
வைத்தது போல்
தின்று துப்பும் கனாக்களையும் மீறி
பாதம் தீண்டிச் சில்லிட வைக்கிறது .....

தொலைந்து போனதோ
தொலைத்துப் போனதோ
ஊடறுத்து விழும் மழைக் கம்பியின்
நிறம் தெரியா இருண்மையில்
ஓசை மட்டும் கேட்டு
உறக்கம் கெட வைக்கலாம்
சில கணங்களுக்கேனும் அது ...

தட்டு முட்டு சாமன்களையெல்லாம்
ஈரச்சாக்கிட்டு மூடிவைத்துவிட்டு ....
பசிக்கு உணவில்லாத போது
பானைத்தண்ணி இருக்குல்ல என
மொண்டு குடித்துவிட்டு
மூடப்பட்ட கடைதேடிச்சென்று
குடும்பத்தோடு ஒதுங்குபவனுக்கும் ...

காலைச் சுற்றிய நாய்க்குட்டியை
தே அங்கிட்டுப் போவேன
எட்டி விரட்டி விட்டு
கைப் பிள்ளை நனையாது
உட்கார்ந்து கொண்டே உறங்குபவளுக்கும் .....

பகல் மழையின் சிரிப்போ
இரவு மழையின் கதறலோ
எல்லாம் ஒன்றாகித்தான் போகிறது...

- சாயாசுந்தரம்