summer 495

பயன்படு!

கண்ணே கன்றே! என்வேரின் தோன்றலே!
மண்ணின் செல்வமே மாசறு பொன்னே!
வடக்கின் வாடைக்கும் அணையா விளக்கே!
முடக்கும் கோடைக்கும் அஞ்சா நெஞ்சமே!
ஈட்டிக் குருத்தால் மண்ணைப் பிளந்தாய்
பாட்டுத் தமிழாய்ப் பரவி வளர்ந்தாய்
எந்தன் காலம் சாயுங் காலம்
உந்தன் காலம் விடியும் காலம்
எந்தன் பரம்பரை பிறப்பே குழந்தாய்!
இந்தமண் நமதுமண்: நமக்கு உயிரைத்
தந்தமண்: ஊட்டி நம்மை வளர்த்தமண்
எந்த உயிரும் நம்மை நாடும்
அண்டிய வர்தமை நிழலில் அணைப்பாய்
காற்றை வீசி வியர்வைத் துடைப்பாய்
மலரின் மணத்தைக் தென்றலில் கலப்பாய்
நோய்க்கு மருந்தாம் தேனைச் சொரிவாய்
மானுடத் தொண்டர்க்கு மலரைச் சேர்ப்பாய்
கனியை வழங்கிப் பசியைத் தீர்ப்பாய்
வேரையும் வேண்டுவோர் வாழட்டும் ஈவாய்
வெட்டுவோர்க் கும்பயன் படவே வீழ்வாய்;
பிறவியின் பயனைச் செயலில் நாட்டவே !

கோடை

சூரியன் தீயைக் கொளுத்திப் போட்டான்
ஆரியம் சாதியைக் கலந்தது போன்றே
பூமண் பட்டுச் சருகாய்ப் போனது!
நீலவான் துளியையும் உண்டு தீர்த்தது!
ஆறுகள் யாவும் வேட்கையில் தவித்தன!
பச்சைப் பட்டாய்ப் படர்ந்த புல்லும்
விடுதலைப் போரில் எந்தமிழ் வீரர்
இன்னுயிர் ஈந்து பட்டது போன்றே
மண்மேல் சாம்பலாய் பொசுங்கிப் போயின!
நீர்வாழ் உயிர்கள் நிலத்துள் புதைந்தன!
பறவைச் சிறகுகள் எரிந்து போயின!
உழைப்பவர் வியர்வை வற்றிப் போயின!
உழவன் விழிகள் வானை வெறித்தன!
ஈரம் அற்ற செல்வர் மனம்போல்
ஆழ்கடல் மண்ணை அலைகொண் டரிப்பதோ?

- குயில்தாசன்