கனவுகளைத் தேடிய

பயணமாய்த்தான்...

அன்றைய விடியலும்

தொடங்கியது.

 

மிக வேகமாய்

இழுத்துச் சென்ற

காலத்தினூடே

எங்கும் தட்டுபடவில்லை

தேடிய கனவுகள்.

 

தேடித் திரிந்து

களைத்து அமர்கையில்...

கனவுகளை விற்பதாய்

கடைவிரித்தான் ஒருவன்.

 

பலவகை கனவுகள்

விலைக்கு கிடைக்குமென்று

எந்த சலனமுமின்றி

கூவி விற்றான்.

 

கனவுகளை வகைபிரிக்கும்

தந்திரம் கேட்கையில்

உரக்க சிரித்துப் பின்

காதோடு சொன்னான்.

"வாங்கும் மனிதரின்

ஆசையை வைத்துதான்".

 

தேடும் என் கனவுகள்

அவனிடம் கிடைக்குமா என்று

தயக்கமாய் கேட்டேன்.

 

சற்று நேரம் என்னை

உற்று நோக்கி பின் கேட்டான்..

"நீ கவிதை எழுதுவியோ"...

 

எப்படி சொன்னாய் என

கண்கள் விரிய கேட்டதும்..

"அதான் கனவைத் தொலைத்து

தேடிக் கொண்டிருக்கிறாயே"..

ஏளனப் புன்னகையுடன்

விடைபெற எத்தனித்தவனை

பெயர் கேட்டு நிறுத்தினேன்..

 

"ஏன்...

அடுத்த கவிதைக்கு

தலைப்பு வேண்டுமோ..."

அதிர்ந்து சிரித்தபடி

நிற்காமல் சென்றான்...

 

அவமான சாட்டைகள்

சுழற்றி அடிக்க..

எனக்குள் நானே..

சொல்லிக் கொண்டேன்..

 

"நிச்சயம் அவனிடம்

என் கனவுகள்

இருந்திருக்க வாய்ப்பில்லை."..

 

- சசிதரன் தேவேந்திரன்