கடந்த காலங்களில் நாம் வாசித்தறிந்த வரலாற்றுக் கேவலங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, நாகரீகம், மாந்தநேயம் ஆகியவை கொல்லப்பட்டு இன்று அவை குற்றுயிராய் கிடக்கும் நிலை வளர்ந்து கொண்டிருக்கிறது. அரசியல் என்பது மக்களுக்கு பணியாற்ற கிடைத்த வாய்ப்பு என்ற அடிப்படை நிலைப்பாடு சிதைந்து, அழிக்கப்பட்டுவிட்டது. மாறாக, அவை வெள்ளை உடையும், வெள்ளை பணமுமான சொர்க்கமாக இன்று உருமாறி நிற்கிறது. பதவி வெறி யார், என்ன நிலைக்குப் போனாலும் பரவாயில்லை, எம்மைவிட்டு நாம் எமது பதவியை விட்டொழிப்பதில்லை என்கின்ற ஒரு குறுகிய நிலைத்தன்மையை அடைந்திருக்கிறது.

ஒரு காலத்தில் மக்கள் பணி ஆற்றுவதற்காக அணி அணியாக பலர் அரசியல் களத்திற்கு வந்தார்கள்.  மாந்தகுல விடுதலை, மக்களின் எதிர்கால வாழ்வு, அவர்களின் மகிழ்ச்சிகான உத்திரவாதம், அவர்களின் உணவு, உறைவிடம், உடை போன்றவற்றிற்கான உரிமைகள் இவைகள் குறித்து தான் அரசியலின் பண்பு படரத் தொடங்கியது. பின்னர் அது விரிந்து, பரந்து, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்றவைகளில் தம்மை முழுமைப்படுத்திக் கொண்டது. ஆக, அரசு, அரசியல் என்பது ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்திருக்கும் நிலைகளாகும். அரசை கைப்பற்ற வேண்டும் என்பதற்கான ஒரு அரசியல் என்பதைவிட, அரசை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் அரசியல் என்ற கீழ்தன்மை தமிழ்நாட்டில் செழித்தோங்கி வளரத் தொடங்கிவிட்டது. கொள்கை, லட்சியம், கோட்பாடு, நேர்மை, தூய்மை, உண்மை, பண்பு இவைகளெல்லாம் புறந்தள்ளப்பட்டு யாரோடு கூட்டணி அமைத்தால் தமக்கு பதவி சுகம் கிடைக்கும் என்பது உயர்ந்தோங்கி நிற்கிறது. இது காலத்தால் அழிக்கப்படும் என்றாலும், இப்போது அவை நம்மை வதைத்து வாட்டுகிறது.

ஒரு நாட்டுப்புற கதை உண்டு. ஆற்றின் கரையோரம் இரண்டு நண்பர்கள் நடந்து சென்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஓடுகின்ற வெள்ளத்தில் கம்பளி மூட்டையைப் போன்று ஒன்று அடித்துச் செல்லப்படுவதை கண்ட நண்பர்களில் ஒருவன், 'ஏதோ ஒன்று அடித்துச் செல்கிறது. அதை மீட்டு வர வேண்டும். நான் ஆற்றில் குதிக்கிறேன்' என்று சொல்லி குதிக்கிறான். வெகுநேரம் அந்த ஆற்று வெள்ளத்தில் மூட்டைக்கும் இவனுக்குமான போராட்டம் நீடிக்கிறது. கரையில் இருக்கும் நண்பன் கத்துகிறான். 'என்ன ஆனது? கொண்டுவர முடியாவிட்டால் அதை அங்கேயே போட்டுவிட்டு வந்துவிட வேண்டியதுதானே' என்று. ஆற்றிலிருந்து குரல் கேட்கிறது, 'நண்பா! அடித்து வரப்பட்டது கம்பளி மூட்டை அல்ல. கரடி. நான் அதைவிட்டு வெகுநேரமாகிவிட்டது. ஆனால் அது என்னை விடவில்லை' என்று. 

இப்போது அரசியல் இப்படிதான் ஆகிவிட்டது. இவர்கள் ஒருவேளை இதைவிட்டு வரநினைத்தாலும் அவர்களைப் பற்றிக் கொண்டிருக்கின்ற ஆட்சி அதிகார மமதை, போகும் போது, வரும்போது அதிகாரிகளும், காவலர்களும் செலுத்தும் மரியாதை, பணக்காரர்களிடம் தமக்கு கிடைக்கும் அங்கீகாரம் இவைகள் கரடியைப் போல் இவர்களை பிடித்து வைத்துக் கொண்டு விட மறுக்கிறது. இனி இவர்களாக விரும்பினாலும்கூட அதைவிட்டு வரமுடியாத சூழ்நிலைதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த அரசியல் தன்மையிலிருந்து மாறுபடவே முடியாதா என்ற சிந்தனையெல்லாம் மக்களைக் குறித்து அக்கறை கொள்வோரின் சிந்தனையில் தினம் தினம் எரிந்து கொண்டுதான் இருக்கின்றன. கடந்த காலங்களில் தந்தை பெரியார், ராசாசி, காமராசர், மா.பொ.சி. போன்ற தலைவர்கள் தமிழக அரசியலில் எதிர்எதிர் கருத்தியலில் இருந்தாலும்கூட, அரசியலில் இவர்கள் தமது கருத்தை வெளிப்படுத்தினாலும், சொந்த வாழ்வு என்று வரும்போது, எந்த நிலையிலும் அவர்கள் இவர்களுக்கான பிளவை உண்டாக்கிக் கொண்டது கிடையாது.

ஒருவரை ஒருவர் எந்த சூழலிலும் விட்டுக் கொடுத்தது கிடையாது. தந்தை பெரியாருக்கும், ராசாசிக்கும் ஏராளமான கருத்து மோதல் இருக்கிறது. இருவரும் எதிர் எதிர் கருத்துடையவர்கள்தான். ஆனால் அந்த கருத்தியலைத் தாண்டி, அவர்களுக்கான ஒரு ஒற்றுமை இருந்தது. ராசாசி மரணத்தின்போது, எவர் தடுத்தும் அடக்க முடியாத அளவிற்கு தந்தை பெரியார் தேம்பி தேம்பி அழுததை பழ.நெடுமாறன் அவர்கள் நினைவுப்படுத்துகிறார். ஆக, இன்று இருக்கும் அரசியல் நிலை என்பது எதிர்க்கட்சி என்றால் தமக்கு எதிரி. அவனை அழித்தொழித்தப்பின்னர் தான் நமக்கு மாற்று சிந்தனையே உதிக்கும் என்ற சீர்கெட்ட மனநிலை அரசியலை சிங்காரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த போக்கு எந்த அளவிற்கு வந்துநிற்கிறது என்றால், தமிழீழ விடுதலைக்கான அடையாளத்தை, தன்னகத்தே கொண்ட பிரபாகரன் அவர்கள் தமது போராட்ட களத்தை, தமது வாழ்வின் காலத்தை முழுக்க முழுக்க தமிழர்களின் விடுதலைக்காகவே அர்ப்பணித்தார். அதற்காக அவர் அடைந்த வலிகள், இழந்த இழப்புகள், பெற்ற அவமானங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. உலகெங்கும் தமிழர் என்கின்ற ஒரு இனம் இருப்பதை மிக சாதாரணமாக அறிமுகப்படுத்திய, அசாதாராண மனிதராக மேதகு தேசிய தலைவர் அவர்கள் வாழ்ந்து வருகிறார். அவர் தமிழர்களுக்கும், தமிழுக்கும் அங்கீகாரத்தை பெற்றுத் தந்தாரே தவிர, தமிழ் விரோத நடவடிக்கையோ, அல்லது தமிழர் கொள்கைகளுக்கு எதிராகவோ தமிழ்நாட்டிற்கு புறம்பாகவோ எந்த காலத்திலும் நின்றது கிடையாது.

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தமிழராக போற்றப்படும் அவரின் தாயார், தமிழ்நாட்டிற்கு வந்து சிகிச்சைப் பெற வேண்டும் என்று விரும்பியது, வெறும் சிகிச்சைக்காக மட்டும் அல்ல. மனநிறைவுக்காக. சிகிச்சை என்பது வெறும் மருந்தால் கிடைப்பதல்ல. அது, மகிழ்வை உள்ளடக்கியது.  மிக எளிதாக விளக்க வேண்டுமென்றால், கமலஹாசன் நடித்த வசூல்ராசா எம்.பி.பி.எஸ். என்ற திரைப்படத்தில் வெறும் மருந்தால் குணப்படுத்த முடியாத பல்வேறு வியாதிகளை, தமது அன்பால் குணப்படுத்த முடியும் என்பதை மிக இயல்பாக வெளிப்படுத்தி இருப்பார். இது பொதுவாக எல்லா நோயாளிகளுக்கும் பொருந்தக் கூடியதுதான். நோயர்கள் தமது மருந்தைக்கூட மகிழ்வோடு தருவதற்கான கரத்தை எதிர்பார்க்கிறார்கள். அந்த தாயும் மகிழ்வோடு ஒரு கரம் தன்னை அணைக்கும் என்ற மனநிலையில்தான் தமிழகத்திற்கு வந்தார்.

தமிழ்நாட்டு மக்கள் தம்மை சொந்த தாயாக கொண்டாடுவார்கள் என்ற மனநிலையில் அவர் வந்திருப்பார் என்று நினைக்கிறோம். ஆனால் அவர் புறக்கணிக்கப்பட்டதின் மூலம் ஏமாற்றப்பட்டார்.  அதோடு அந்த நிகழ்வை விட்டிருக்கலாம். அதற்காக போராட்டங்கள், வழக்குகள், ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள், தமிழக அரசியல் தளம் எவ்வளவு நாகரீகமற்ற நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது என்பதை காட்டுவதற்கு நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் சாட்சியங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எம்மை கேட்டால், அப்படி சொல்வதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. இவ்வளவு கீழிறங்கி வந்து, சிகிச்சைப் பெறாமல் இருப்பதே அந்த தாய்க்கு நலம் பயக்கும் என்பதை நாம் சொல்வதற்கு வெட்கப்படுகிறோம். இந்த நிகழ்வுகள் எல்லாம் கடந்துபோய்விட்டது. அவரும் மீண்டும் மலேசியா சென்றுவிட்டார்.

சிகிச்சைப் பெற வேண்டும், சிகிச்சை தர வேண்டும், நடுவண் அரசு அனுமதி தர வேண்டும், இது செயலலிதாவால் நிகழ்ந்ததுதான், இதை வைத்து அரசியல் நடத்துவார்கள், இது மடம் அல்ல என்ற அரசியல் கூத்துகள் எல்லாம், தமிழர் தன்மானத்தை சூறையாடி விட்டது. அதையும்தாண்டி அவர் இங்கு வரவேண்டுமா என்று தான் நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தோம். நம்மைப் பொறுத்தவரை அவர் வரக்கூடாது என்பதுதான். ஆனால் இப்படி நாம் வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்த காலத்திலேயே, தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் அறிக்கை ஒன்றை வாசிக்கிறார். தேசிய தலைவரின் தாயார் தமிழ்நாட்டில் தங்கி சிகிச்சைப் பெறலாமாம். ஆனால் அவர் நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் சிகிச்சைப் பெற வேண்டும். அவர் சொல்லும் சிகிச்சை, அவர் சொல்லும் நிபந்தனை, தமிழ்நாட்டு மக்களை வெட்கி தலைகுனிய வைக்கிறது.

முதலாக, அவர் சிகிச்சைக்காக மட்டும் தமிழ்நாட்டிற்கு வரவேண்டும். மருத்துவமனையை விட்டு வெளியில் எங்கும் தங்கக்கூடாது. தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு நண்பர்களாக இருப்பவர்களுடன் எவ்வித தொடர்பும் கொள்ளக்கூடாது. முன்னரே யாரோடெல்லாம் அவர் பேசப்போகிறார் என்கின்ற தகவலை தெரிவிக்க வேண்டும். அந்த உறவினர்களின் பெயர் பட்டியலை வைத்துக் கொண்டு தான் அவர்களை சந்திக்க அனுமதிப்பார்கள்.  இப்படி ஒரு நிபந்தனையோடு அந்தத் தாய் சிகிச்சைப்பெற வேண்டுமா என்று சிந்திக்கும்போது மனது வலிக்கிறது. ஆனாலும் நம்மால் ஒன்று செய்ய இயலா நிலையில் இருக்கிறோம். இதோடு விட்டாரே என்ற ஒருவித நிம்மதி இருக்கிறது.

இதை தவிர்த்து, அவர் விமானத்தை விட்டு இறங்கும்போது சோனியா ஜி வாழ்க! என்று முழக்கமிட வேண்டும். டாக்டர் கலைஞர் வாழ்க! என்று முழக்கமிட வேண்டும். என் உயிர் காத்த தலைவரே! என்று வாழ்த்தி அறிக்கை தர வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் நல்லாட்சிக்கு துணை புரிகின்ற நிலையை எடுத்துக்காட்டும் விதத்தில்தான் எமக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது என்று அன்னையின் சார்பாக யாராவது ஒருவர் அறிக்கை தரவேண்டும். அதை ஊடகங்கள் எல்லாம் ஏற்று உலகெல்லாம் இருக்கும் தமிழர்களுக்கு, அடடா...! இவரல்லவா தலைவர்! தேசிய தலைவருக்கும், இவருக்கும் ஆயிரம் முரண்பாடு இருந்தாலும், அவரின் அன்னையை இன்முகத்தோடு வரவேற்று தமிழ்நாட்டில் அவர் ஏற்படுத்தி இருக்கும் மருத்துவ திட்டத்தில் சேர்க்காமல், அன்னைக்காக ஒரு புதிய திட்டத்தையே வகுத்திருக்கிறாரே என்று புகழ வேண்டும் என்றெல்லாம் அவர் எதிர்பார்த்திருப்பார். 

காரணம் இந்த உலகத்தில் யாரும் செய்யாத ஒரு மாபெரும் புகழ் விரும்பியாக தமிழக முதல்வர் இருக்கிறார். மாதத்திற்கு இரண்டு முறை திரைப்பட துறையினர் குத்தாட்டத்தோடு அவரை வாழ்த்திப் பேசுவதை முகம் சுளிக்காமல் கேட்டு மகிழும் மனப்பக்குவத்தை அவர் பெற்று விட்டார். எந்த மனிதனும் தம்மைத் தொடர்ந்து புகழுவதைக் கேட்டு கொஞ்சமாவது வெட்கப்படுவான். ஆனால் தமிழக முதல்வரைப் பொறுத்தமட்டில் அந்த வெட்கம் துளிக்கூட இல்லாமல் அவர் முழு நிர்வாண நிலைக்கு, அதாவது ஜெயின் துறவிகள் நிலைக்கு அவர் வந்துவிட்டார். ஆனால் புகழ்ந்து பேசும்போது, மகிழ்வோடு ரசிக்கும் தமிழக முதல்வர், ஏதாவது ஒரு காரணத்தால் விமர்சனம் என்று வந்துவிட்டால் தேளைவிட வேகமாக வார்த்தைகளால் கொட்டித் தீர்க்கிறார்.  ஆகவே, தமிழக முதல்வரிடம் நாம் தேசிய தலைவரின் தாய்க்கு சிகிச்சை அளியுங்கள் என்றெல்லாம் கெஞ்சிக் கொண்டிருக்க முடியாது.

சிறைக்குள் சிகிச்சை பெறுவது அவமானம். அவர்கள் விதித்திருக்கும் நிபந்தனை என்பது முற்றிலுமாக ஒரு கைதிக்கு விதிக்கும் நிபந்தனையைவிடக் கேவலமானது. சிறைக்குள் சிகிச்சையா என்று சிந்திக்கும் போது நம்மையும் அறியாமல் வேதனை தெறிக்கிறது. ஆனாலும் என்ன செய்ய? நாம் சனநாயக குடியரசில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கே ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் ஏதாவது செய்ய முடியும். அதை சகித்துக் கொண்டிருப்பதுதான் சனநாயக பண்பு என்று நமக்கு கற்றுத்தரப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கேவலங்கள் எல்லாம் தமக்கு வேண்டாம் என்றுதான் அந்தத் தாய் நான் சொந்த மண்ணிற்கே செல்கிறேன் என்று இந்த தமிழ் மக்களைப் பார்த்து வெட்கப்பட்டு சென்றிருக்கிறார்.

இது தமிழினத்திற்கு கிடைத்த, தமிழ் மரபுக்குக் கிடைத்த, தமிழ் நாகரீகத்திற்கு கிடைத்த மாபெரும் அவமானம் என்பதை மட்டும் ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது. தேசிய தலைவரின் தாய் செய்த செயல் தூ என காரி உமிழ்ந்து, நீயும் உன் சிகிச்சையும் என்று சொல்லியதைப் போல் இருக்கிறது. ஆனாலும் என்ன செய்ய? நாம் அவமானத்திற்கு பழகிவிட்டோம். முகத்தில் பட்ட எச்சிலை துடைத்துக் கொண்டு தமிழ் வாழ்க! என்று மீண்டும் மீண்டும் முழக்கமிட்டு நம் பயணத்தை தொடர்வோம்.

- கண்மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It