அண்மையில் மத்திய அரசு, சமூக நீதி தொடர்புடைய இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்தது. தனியார் தொழிற் கல்வி நிறுவனங்களில் தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்திட, 104ஆவது அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டது. மத்திய அரசின் இந்த இரண்டு அறிவிப்புகளையும் எந்தப் பெரிய அரசியல் கட்சிகளும் எதிர்க்கவில்லை.

Reservation
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியில் 27 சதவிகித இடஒதுக்கீடு மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, ஆதிக்க சாதியினரிடையே ஆத்திரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வெறும் 15 சதவிகித மக்கள் தொகை கொண்ட ஆதிக்க சாதியினர் கூட்டம், 85 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட உயர் பதவிகளையும், உயர்கல்வி இடங்களையும் இதுநாள்வரை ஆக்கிரமித்து வருகின்றனர். அவர்களின் இந்த அபகரிப்புக்கு புதிய ஆபத்து வருகிறது என்பதாலேயே, அவ்வப்பொழுது சமூக நீதிக்கு எதிரானப் போரைத் தொடங்கி வருகின்றனர்.

1990 இல் மண்டல் குழு பரிந்துரைகளின் அடிப்படையில், வேலைவாய்ப்பில் 27 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திட முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அறிவித்தபொழுது, அதை அன்று ராஜிவ் காந்தி கடுமையாக எதிர்த்தார். மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக 2 மணிநேரம் நாடாளுமன்றத்தில் பேசினார். அப்பொழுது காங்கிரஸ், ஜனதா தளம் உட்பட பல கட்சிகளின் தலைவர்களிடையே இப்பிரச்சினையில் எதிர்மறையான போக்குகள் நிலவின. தலைவர்கள் பிளவுபட்டு நின்றனர். இதனால் அன்று, மண்டல் குழு பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு எதிரான போராட்டம் கடுமையாக இருந்தது. இன்று அந்த நிலை இல்லை. மண்டல் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்துவதை அன்று எதிர்த்த காங்கிரஸ், இன்று அதன் மற்றொரு முக்கிய பரிந்துரையை நடைமுறைப்படுத்துகிறது. இது 2006; 1990 அல்ல! இது சமூக நீதிக்கான காலம். கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை பா.ஜ.க.வால்கூட நேரடியாக எதிர்க்க முடியவில்லை.

இருப்பினும், வலுவான மின்னணு ஊடகங்களையும் பத்திகைகளையும் கைப்பற்றியுள்ள ஆதிக்க சாதியினர், இடஒதுக்கீட்டிற்கு எதிரான நச்சுப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து வருகின்றனர். டில்லி மற்றும் பெங்களூரில் மருத்துவ மாணவர்கள், இடஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராடுகிறார்கள். அதை சில ஆங்கிலத் தொலைக்காட்சிகள் முன்னுரிமை அளித்து செய்தி வெளியிடுகின்றன. சில ஆதிக்க சாதி மாணவர்கள் செய்யும் இந்தப் போராட்டத்தை ஒளிபரப்பி ஊதி பெரிதுபடுத்துகின்றன. தகுதி உள்ள மருத்துவர்கள் வேண்டும், திறமையான மருத்துவர்கள் வேண்டும் என உள்நோக்கத்துடன் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அறிவியல் பூர்வமற்ற, உண்மைக்கு மாறான, வரலாற்றைத் திரித்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இடஒதுக்கீட்டால் தகுதி, திறமை போகாது என்பது, வரலாற்று ரீதியாக இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ள பல மாநிலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு அளிக்கப்பட்டால் ஒடுக்கப்பட்ட மக்களும் திறமையை நிரூபிப்பார்கள். சமைக்க வாய்ப்பு கொடுக்காமலேயே அவர்களுக்கு சமைக்க வராது என்று குற்றம் சாட்டுவது மோசடித்தனமானது. கடந்த ஆண்டு 300 க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், பதிமூன்றுக்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள், திறந்த போட்டியில் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ளனர். திறமையும் தகுதியும் இல்லாமலா இது சாத்தியமானது?

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு பற்றி அறிவிப்புகள் வரும் பொழுதெல்லாம் தகுதி, திறமை பற்றி வாய் கிழியப் பேசப்படுகிறது. தகுதியான திறமையான ஆகம விதிகளையும் வேதங்களையும் நன்கு கற்றுத் தேர்ந்த பார்ப்பனர் அல்லாத மக்களை அர்ச்சகராக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தால், இதற்கு ஒரே தகுதியாக கூறப்படுவது பார்ப்பனராகப் பிறக்க வேண்டும் என்பதுதான். பார்ப்பனராகப் பிறந்திருக்க வேண்டும் அப்படி இருந்தால், பைத்தியம் பிடித்த பார்ப்பனர்கூட அர்ச்சகராகலாம். தகுதிமிக்கவராக இருந்தாலும் பார்ப்பனரல்லாதவரால் அர்ச்சகராக முடியாது. கருவறைக்குள் நுழைவதற்கு மட்டும் இந்த ஆதிக்கவாதிகள் பரம்பரை இடஒதுக்கீட்டை வலியுறுத்துவது ஏன்? முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கங்கள் போராடினாலும், இன்னும் இங்கு ஒரு ஜாதி ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லையே!

‘தகுதி திறமை' பற்றி பேசுவது தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை இழிவுபடுத்துவதாகும். தகுதி, திறமை எனப் பேசி 27 சதவிகித இடஒதுக்கீடு வரவிடாமல் தடுத்துவிட்டால், மக்கள் தொகையில் 15 சதவிகிதமாக உள்ளவர்கள் 77.5 சதவிகித (எஸ்.சி./எஸ்.டி. இடங்கள் 22.5 போக) உயர்கல்வி வாய்ப்புகளையும் அபகரிக்கவே இம்முயற்சி. எஸ்.சி./எஸ்.டி.க்கான 22.5 சதவிகித இடஒதுக்கீட்டையும் முழுமையாக நடைமுறைப்படுத்தாமல், அந்த இடங்களையும் இந்தக் கூட்டம் கொள்ளையடிக்கப் பார்க்கிறது. சென்னை அய்.அய்.டி. இல் உள்ள 450 துறைத் தலைவர்களில் 2 பேர் மட்டுமே தலித்; 50 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள். அங்கு தலித் / பழங்குடியினர் இடஒதுக்கீடு 22.5 சதவிகிதத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தியிருந்தால், 103 இடங்களுக்கு தலித் / பழங்குடியினர் பிரதிநிதித்துவம் இருந்திருக்க வேண்டும். 27 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியிருந்தால், 121 பேருக்கு மேல் பிற்படுத்தப்பட்டோர் இருந்திருக்க வேண்டும்.

தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுவதால்தான் இந்த நாடு Reserved Nation ஆக மாற்றப்பட்டுவிட்டதாகக் கதைக்கிறார்கள். 2500 ஆண்டுகளுக்கு மேலாகவே இந்த நாடு பார்ப்பனர்களின் நலன்களுக்காக மட்டுமே reserved செய்யப்பட்ட நாடாக இருக்கவில்லையா? மநுதர்மம் தானே இந்நாட்டின் முதல் இடஒதுக்கீடு. சமூக அநீதியான, சாதி ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கான, கொடுமையான சட்ட திட்டங்களை, தண்டனைகளைக் கொண்ட இடஒதுக்கீடு! ஏகலைவனின் கட்டை விரலையும், சம்பூகனின் தலையையும் பறித்துக் கொண்ட இடஒதுக்கீட்டை மறைத்துவிட முடியுமா? இன்றளவும் முன்னுரிமை கொடுத்து வெளியிடப்படும் ராமாயண, மகாபாரதத் தொடர்கள் இதற்கு சாட்சியாக விளங்கவில்லையா?

"மநுதர்ம இடஒதுக்கீடு' சாதிய ஏற்றத்தாழ்வை, சமூக அநீதியை நோக்கமாகக் கொண்டது; சுரண்டலையும் ஒடுக்குறையையும் நோக்கமாகக் கொண்டது; ஆதிக்க சாதியினரின் நலன்களை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டது; பெண்களை அடிமைப்படுத்தும் நோக்கம் கொண்டது. ஆனால், அரசமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்படும் இடஒதுக்கீடு சமூக சமத்துவத்தையும், சாதி ஒழிப்பையும் நோக்கமாகக் கொண்டது; ஆதிக்க சாதியினரின்ஆக்கிரமிப்பை அகற்றி, மக்கள் தொகைக்கேற்ப பிரதிநிதித்துவம் அளிப்பதையே நோக்கமாகக் கொண்டது; பெண்ணடிமைத் தனத்தை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டது; ஜனநாயகத் தன்மையும் பன்முகத் தன்மையும் கொண்டது.

மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு என்பது, நாட்டில் சுகாதாரத் துறையைப் பாழ்படுத்திவிடும்; திறமைமிக்க மருத்துவர்கள் இல்லாமல் போய் விடுவார்கள் என இந்திய மருத்துவச் சங்கம் இடஒதுக்கீட்டிற்கு எதிராகப் பேசுகிறது. தமிழகத்தில் 1927 முதல் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதால் தலித், பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் மிகத் திறமையான மருத்துவர்கள் உருவாகியுள்ளனர். இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாக சென்னை திகழ்கிறது. சென்னை நகரில் உள்ள பெரும்பாலான மருத்துவர்கள் பிற்படுத்தப்பட்ட, தலித் வகுப்பினர்தான். மேலும் பிற்படுத்தப்பட்ட, தலித் வகுப்பைச் சார்ந்த மருத்துவர்கள்தான் படிப்பை முடித்தவுடன் இந்திய மக்களுக்காக இங்கு சேவை செய்கிறார்கள். பெரும்பாலான ஆதிக்கச் சாதி மருத்துவர்கள் படிப்பை முடித்ததும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்குப் பறந்துவிடுகிறார்கள்.

இந்தியாவில் 44.6 சதவிகித மக்கள், தங்களது மருத்துவ சிகிச்சைகளுக்காக எம்.பி.பி.எஸ். படிப்பே படிக்காத போலி மருத்துவர்களையே நம்பியுள்ளனர். தகுதி திறமை படைத்த மருத்துவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஆதிக்கச் சாதி மருத்துவர்கள், கிராமப்புற மக்கள் பற்றி கவலைப்படுவதே இல்லை. மக்கள் வரிப் பணத்தில் படித்த 36,000 பேர், வளர்ச்சியடைந்த நாடான பிரிட்டனில், பணக்கார நோயாளிகளுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றனர். 4000 பேர் பிரிட்டனில் புதிய வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் அய்ந்தில் ஒருவர் இந்தியர். அதிலும் பெரும்பாலானோர் ஆதிக்க சாதியினரே. இந்திய மக்களைப் பற்றி கவலைப்படாமல் வளர்ச்சியடைந்த நாடுகளில், பணத்திற்காக சேவை செய்து கொண்டிருக்கும் மருத்துவர்களின் பிரதிநிதிகளான இவர்கள், இந்திய மக்களின் நலத்தைப் பற்றி கவலைப்படுவது கேலிக்கூத்தானதாகும்.

எனவே, இவர்களின் இது போன்ற பிரச்சாரங்களை பிற்படுத்தப்பட்ட, தலித் மக்கள் ஒன்றுபட்டு போராடி முறியடிக்க வேண்டும். இவர்களின் போராட்டங்களுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்த வேண்டும். அதுவே மத்திய அரசு தனது இடஒதுக்கீடு வழங்கிடும் முடிவிலிருந்து பின்வாங்கி விடாமல் தடுத்திட உதவும். அந்தவகையில், மத்திய அரசின் அகில இந்திய மருத்துவ அறிவியல் மய்யம், ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவக் கல்வி நிறுவனங்களில் உயர் மருத்துவப் படிப்புகளுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னையில் 1.5.2006 அன்று, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நிகழ்த்தியது.

-ஜி.ஆர்.ரவீந்திரநாத்
Pin It