இலங்கைத் தலைமை நீதிபதியின் வாக்குமூலம்

நீதித்துறை அமைச்சகத்தின் கலையரங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய சிறிலங்கா உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சரத் நந்த சில்வா கூறியதாவது:

“தமிழர்கள் பிறரை மதித்து நடக்கக் கூடியவர்கள். அவர்கள் நம் சட்டத்தை மதித்தார்கள்,மற்றவர்களின் உரிமைகளையும் மதித்தார்கள். விடுதலைப் புலிகளே கூட நம் நீதித் துறையை மதித்து நடந்து கொண்டனர். அவர்கள் நம் நீதிமன்றங்களைக் குறிவைத்து ஒரே ஒரு குண்டும் சுட்டதில்லை. நான் சட்டநோக்கில் பிரபாகரனுக்குப் பெருந்தீங்கு செய்தேன். ஆனால் நீதிமன்றங்களைத் திறப்பதற்காக என்னால் யாழ்ப்பாணம் சென்றுவர முடிந்தது.

“வடக்கிலும் கிழக்கிலும் தொடர்ச்சியாக நம் நீதிபதிகள் இருந்தார்கள். புலிகள் பிறப்பித்த ஆணைகளுக்கும் அவர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டியிருந்தது. நாம் அவர்களை நீக்கினோம். வெற்றிடங்களை நிரப்ப தெற்கிலிருந்து யாரும் அனுப்பப் படவில்லை. அந்த மாகாணங்களிலிருந்தே பொருத்தமானவர்களை அமர்த்தினோம்.

“ஆனால் விடுதலைப் புலிகளும்கூட நம் நீதிமன்றங்களை மதித்தார்கள். கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் தம்  சொந்த நீதிமன்றங்களை நடத்தி வந்த போதிலும் அவர்கள் நம் நீதிமன்றங்களை நோக்கி ஒரு முறை கூட துவக்கைத் திருப்பியதில்லை. புலிக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஒளிந்து கொண்டவர்களைத் தளைப்படுத்த நம் நீதிமன்றங்கள் ஆணை பிறப்பித்த போது, புலிகள் அவர்களைக் கைது செய்து இராணுவத்திடம் ஒப்படைத்தார்கள்.

“அரசுத் தலைமை வழக்குரைஞர் என்ற முறையில் நானே பிரபாகரனுக்கு எதிரான குற்றச் சாற்றுரையை அணியப்படுத்தினேன். நான் அமர்த்திய ஒரு நீதிபதி அவருக்கு 200 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தார். புலிகளின் ஆட்சிக்கு உலக வங்கி உதவிகள் கிடைப்பதற்கு வழி செய்யக்கூடிய ஆழிப் பேரலைக்குப் பிறகான செயற்பாட்டு மேலாண்மை அமைப்பை (P.TOMS) நானே நீக்கம் செய்தேன். இதையயல்லாம் செய்துவிட்டு யாழ்ப்பாணத்தில் நீதிமன்றங்களைத் திறக்கச் சென்றேன். அவர்கள் நமக்கெதிரானவர்களாக இருந்தால் நானே முதன்மைக் குறியாக இருந்திருக்கலாம்.

ஒரு சிறந்த எடுத்துக்காட்டைச் சொல்வதானால், விடுதலைப் புலிகளின் நீதிமன்றம் விசாரித்த ஒரு வழக்கில் ஒரு குழந்தையின் தந்தை இன்னார் என்பதைச் சரி பார்ப்பதற்கு மரபணுச் சோதனை தேவைப்பட்டது. புலிகள் இவ்வழக்கை நம் நீதிமன்றங்களில் ஒன்றுக்கு அனுப்பிவைக்கக் கட்டளை இட்டார்கள். நாம் அதை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கினோம்.”

நீதிபதி சில்வா ஓய்வு பெறுவதற்கு முன் தெரிவித்த கருத்துகள் இவை.

Pin It