முகத்தை மூடிக் கொள்ளும் பர்தா முறையை பெண்கள் மீது இசுலாமிய மதம் திணித்து வருகிறது. பெண்ணடிமையை வலியுறுத்தும் இந்த பழமைவாதத்துக்கு பெண்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. பல இசுலாமிய நாடுகளிலேயே இந்த பர்தா முறைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளன. அய்ரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியம், அண்மையில் பொது விடங்களில் ‘பர்தா’ (முகமூடி) அணிவதைத் தடை செய்துள்ளது. பர்தாவுக்கு முதன் முதலாக தடை விதித்துள்ள அய்ரோப்பிய நாடு பெல்ஜியம் ஆகும். அந்நாட்டின் கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் உள்துறை நிர்வாகக் குழு, இத்தடைக்கு ஆதரவாக ஒருமித்த வாக்களித்துள்ளது. அடையாளம் காணமுடியாமல் முழுமையாக முகத்தை மூடும் பர்தாவுடன் பொது மக்கள் நடமாடும் பகுதியில் எவரும் நடமாடக் கூடாது என்று தடை உத்தரவு கூறுகிறது. மதத்தின் விழா நாட்களில் மட்டும் உரிய அனுமதி பெற்று பர்தா அணியலாம். மீறி பர்தா அணிந்து நடமாடுவோருக்கு ஒரு வாரம் சிறைத் தண்டனை அல்லது 15 முதல் 20 ஈரோ நாணயம் வரை அபராதம் விதிக்கப்படும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் முழு ஆதரவுடன், எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் இந்த தடைச் சட்டம் அமுலுக்கு வருகிறது.

தகவல் : டைம்ஸ் ஆப் இந்தியா

-பெரியார் முழக்கம் செய்தியாளர்

Pin It