முல்லைப் பெரியாற்றில் புதிய அணைகட்ட கேரள அரசு நில அளவை செய்ய நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்ததை எதிர்த்துத் தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்த முன்வந்துள்ளன. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தலைமையில் 30.09.09 அன்று மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. அதில் பல்வேறு உழவர் அமைப்புகளின் தலைவர்களும் தோழமை அமைப்புகளின் பொறுப்பாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    இந்நிலையில் 24.09.09 அன்று பிற்பகல் தமிழக அரசு சார்பில் ஓர் அதிகாரி மூலம் அறிக்கை வெளியிடப்பட்டது. அவ்வறிக்கை 25.09.09 தமிழ்நாளேடுகளிலும் வந்துள்ளது. அதில், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு கேரள அரசுக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சு ஜெயராம் ரமேஷ் உறுதி அளித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், அவ்வாறு நடுவண் அமைச்சர் கூறவில்லை என்ற செய்தி ஆங்கில நாளேடான இந்துவில் (25.09.09) வந்துள்ளது. “தொழில்நுட்பக் காரணங்களுக்காக நில அளவை செய்ய கேரள அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டப்படுவது பற்றி எங்கள் துறை எதுவும் சொல்வதற்கில்லை” என்று நடுவண் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

உண்மைக்கு மாறான செய்தியைத் தமிழக அரசு உலவவிட்டது ஏன்? கேரள அரசு புதிய அணை கட்ட மறைமுக ஆதரவு தருவது போல் தமிழக அரசின் தவறான செய்திப் பரப்பல் அமைந்துள்ளது. மேலும் தமிழக முதலமைச்சர் நடுவண் அமைச்சர் ஜெயராம் ரமேசுக்கு எழுதிய கடிதத்தில், “புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு செய்வது தொடர்பாக கேரள அரசுக்கு அனுமதி அளிப்பதற்கு முன், தமிழக அரசுடன் விவாதிக்க வேண்டும்” என்று பொத்தாம் பொதுவில் கூறியுள்ளார். அனுமதி கொடுக்கக் கூடாது என்று கோரவில்லை. குறிப்பான கோரிக்கை எதையும் வெளிப்படையாகத் தெரிவிக்காமல் “தமிழக அரசுடன் விவாதிக்க வேண்டும்” என்று பட்டும் படாமல் கடிதம் எழுதிய முதலமைச்சர் கருணாநிதி, அதிகாரியை விட்டு, பொய்த்தகவல் தரச்சொன்னது முல்லைப் பெரியாற்றில் தமிழகத்திற்குள்ள சட்டப்படியான உரிமையைக் கைக்கழுவ முதலமைச்சர் அணியமாக உள்ளார் என்ற அவர் மனநிலையை அம்பலப்படுத்தி விட்டது.

2006 பிப்ரவரி 27ஆம் நாள் உச்சநீதிமன்றம், 142 அடி உயரத்திற்கு முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசு தண்ணீர் தேக்கலாம் என்று தீர்ப்பளித்தது. அப்போது முதல்வராக இருந்த செயலலிதாவும் அத்தீர்ப்பை செயல்படுத்தவில்லை. அடுத்த மூன்று மாதங்களில் மே மாதம் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசும் அத்தீர்ப்பை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 136 அடிக்கு மேல் ஓர் அங்குலம் கூட தண்ணீர் தேக்கப்படவில்லை.

கேரள அரசோ, உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் துளியும் சட்டை செய்யாமல், இப்பொழுதுள்ள அணையை இடிப்பதற்கு வழிசெய்யும் சட்டமூலத்தைக் கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநர் கையொப்பம் பெற்று அதைச் சட்டமும் ஆக்கிவிட்டது.

கேரள அரசு புதிய அணை கட்டுவதாகச் சொல்வது ஒரு சூழ்ச்சி வலை தவிர வேறல்ல. புதிய அணை என்று போக்குக் காட்டி, பழைய அணையை இடிப்பதே அதன் திட்டம். பழைய அணை இடிக்கப்பட்டு விட்டால், முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டிற்கு 999 ஆண்டுகளுக்கு அனுபோக உரிமை வழங்கியுள்ள ஒப்பந்தம் பழைய அணைக்குத் தானே தவிர புதிய அணைக்கு இல்லை என்று கேரளம் வல்லடி வழக்கு பேசும். பிறகு புதிய அணை கட்டும் என்பதற்கும் உறுதி கிடையாது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு பக்கம், புதிய அணை கட்டுவதை எதிர்த்துத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் போட்ட புதிய வழக்கு மறுபக்கம். இவ்விரண்டும் இருக்கும் போது, நடுவண் அமைச்சர் ஒருவர், கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு நில அளவை செய்ய அனுமதி அளித்திருப்பதும் அவர் அதை உறுதிப்படுத்திப் பேசவதும் சாதாரணச் செய்தி இல்லை. “அணை கட்டுவது எனது துறை சார்ந்த செய்தியல்ல” என்று அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்; கூறுவது தந்திரப் பேச்சு தவிர அதில், நேர்மையும் இல்லை; உண்மையும் இல்லை.

இந்திய அரசு மறைமுகமாகக் கேரள அரசின் புதிய அணைத் திட்டத்திற்கு உதவுகிறது என்பதே இதில் தமிழ்நாடு புரிந்து கொள்ள வேண்டிய செய்தி. ஆனால் தமிழக அரசு “கேரளத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” என்று ஜெய்ராம் ரமேஷ் சொன்னதாகப் பொய்ச் செய்தியைப் பரப்புவது, இந்திய அரசையும் கேரள அரசையும் கண்டித்துத் தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டங்களை நடத்தவிடாமல் திசை திருப்புவதற்குச் செய்யும் தந்திரம் ஆகும். அது மட்டுமின்றி, கேரள அரசுக்கு மறைமுகமாக உதவி செய்வதும் ஆகும். தமிழக அரசின் இந்த இனத்துரோகத்தைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தெசப் பொதுவுடைமைக் கட்சி