கோடையின் வெப்பம் தணிந்து விட்டது. ஆங்காங்கே மழையும் பெய்யத் தொடங்கிவிட்டது. நம்மைச் சுற்றியிருக்கும் ஊர்கள் பசுமையாய் தெரிகின்றன. மக்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்... இப்படி எண்ணிக் கொண்டிருக்கிற பலபேர் இருக்கிறார்கள். அரசுக்கும், அதிகாரிகளுக்கும் இவர்கள்தான் தேவை. இவர்களுக்காக அரசும், அதிகாரிகளும் பல பொய்களை தயாரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்த "உலகமயமாக்கலில் இந்தியா' என்ற கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பின்வருமாறு பேசியிருக்கிறார்: "இந்தியாவில் வருவாயின் பெரும்பகுதி, மனித மற்றும் சமுதாய மேம்பாட்டுக்காகச் செலவிடப்படுகிறது. இதனால், மிகச் சிறந்த சிந்தனைகளையும், வடிவமைப்புகளையும், உலகத்தரம் வாய்ந்த ஆய்வு மற்றும் வளர்ச்சிகளை உருவாக்கும் திறனை இந்திய நாடு பெற்றுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 70 ஆயிரம் கோடி. கடந்த 14 ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருந்து வருகிறது. இதன் மூலம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்று என்ற பெருமையை அது பெற்றுள்ளது. வறுமை ஒழிப்புக்கு ஏற்ற வகையில் இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன''.

இது ஒரு பொய்தான். புள்ளி விவரங்கள் ஒருவேளை சரியாக இருக்கலாம். ஆனால், வறுமை பற்றிய உண்மை வேறாக இருக்கிறது. 1900லிருந்து 2005 வரை இந்தியாவில் 1,391,841,000 பேர் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை, இந்தியாவின் நடப்பு மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம்! இதில் 42,50,430 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

இந்தியாவின் மிகப் பெரும் வறட்சிகளாக 1965, 1972, 1979, 1987 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சிகளைக் குறிப்பிடுகிறார்கள். வறட்சி என்பது மழைப்பொழிவு குறைந்துபோய், வேளாண்மை கடுமையாய் பாதிக்கப்படுவது என்று வரையறுக்கப்படுகிறது. வேளாண்மை உற்பத்தியில் 37 சதம் வீழ்ச்சியடைந்தால், அது அதிகாரப்பூர்வமான வறட்சியாகக் கருதப்படும். ஒரு பகுதியில் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக மழை இல்லை என்றால் வறட்சி ஏற்படும். வறட்சியின் பின் விளைவுகளாக உண்டாவது பசி, வறுமை, கடன் மற்றும் சாவுகளும் தற்கொலைகளும்தான்.

மழை இல்லாமல்போனாலும், நிலத்தடிநீர் குறைந்தாலும், மண்ணின் ஈரத்தன்மை குறைந்தாலும் வறட்சி உண்டாகின்றது என்கிறார்கள் வல்லுநர்கள். இந்தியாவில் மழைப் பொழிவு குறைந்து கொண்டுவந்தாலும் மிக மோசமாகப் போய்விடவில்லை. ஆனால், இங்கே பட்டினிச் சாவுகளும், குடிநீர்த் தட்டுப்பாடும், தற்கொலைகளும் மலிந்து கிடக்கின்றன. கடந்த ஆண்டில் ஆந்திரா, பீகார் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் ஒவ்வொன்றிலும் சுமார் இருபதுக்கும் குறையாத மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டும் தண்ணீர் பஞ்சம், கடன் உள்ளிட்ட விளைவுகளும் ஏற்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசும் அதிகாரிகளும் ஊடகங்களுடன் கைகோர்த்துக் கொண்டு பொய்களை சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றனர். புகழ்பெற்ற பத்திரிகையாளர் சாய்நாத் அவர்களின் கருத்துப்படி பார்த்தால், வறட்சிக்கான நான்காவது காரணமாக அரசை சொல்லலாம். அரசே இங்கு வறட்சியை உண்டாக்குகிறது! "ஏழைகளைத் தவிர அனைவரும் வறட்சியை விரும்புகின்றனர்' என்கிறார் சாய்நாத். இந்தியாவில் வளர்ந்துவரும் பெரிய தொழில் துறையாக வறட்சி இருக்கிறது! பல்வேறு தொழில்களிலிருந்து ஒரு மாநிலம் பெறும் லாபத்தைவிடவும் அதிகமாக வறட்சிக்கு நிதி செலவழிக்கப்படுகிறது.

வருமானத்தைப் பெருக்குகிற, லாபம் தருகிற ஒரு தொழிலாக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் வறட்சி மாறிவிட்டது என்கிறார் சாய்நாத். மழைப் பொழிவை வறட்சியிலிருந்து துண்டித்துப் பார்க்கும் வகையிலேயே இந்தியா இதை அணுகுகிறது. ஒரு பகுதியில் போதிய மழைப்பொழிவு இருந்தாலும், அங்கு வறட்சி நிலவுவது ஒரு வினோதமான உண்மை. மழையைப் பயன்படுத்தும் உருப்படியான திட்டங்களோ, நீர்ப்பிடிப்பு பகுதிகளை மேம்படுத்தும் உத்திகளோ, நீர் தாரங்களை தேசச்சொத்தாக பாவிக்கும் பழக்கமோ இங்கில்லை. தண்ணீரை விற்கத் தொடங்கிவிட்டார்கள். தண்ணீரை வைத்து, அரசியல் பேரங்கள் முதல் தொழில் பேரங்கள் வரை நடக்கின்றன.

‘வறட்சியால் பாதிக்கப்படுவதும் சாவதும் எளிய மக்களே. அதனால் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அம்மக்களுக்கென தீட்டப்படும் திட்டங்களிலிருந்து கிடைக்கும் கொள்ளை வருவாயைக் கொண்டு அரசும், அதிகாரிகளும் சொகுசு வாழ்க்கை, வாழலாம்' என்ற நிலை இங்கு பொதுப்புத்தியாக நீடிக்கிறது.

மத்தியில் தற்போது ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, கிராமப்புற வேலை உறுதியளிப்பு சட்டத்தைக் கொண்டு வந்தது. வேலைக்கு உத்தரவாதம் என்ற அடிப்படையில், ‘சம்பூர்ண கிராமின் ரோஜ்கர் யோஜனா' போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. போதிய அளவு உணவு கையிருப்பு இருக்கிறது. இருந்தும் இந்தியாவில் முக்கால்பாகம்பேர் போதிய உணவு கிடைக்கப் பெறாமல்தான் இருக்கிறார்கள்.

இந்தியாவின் நடப்பு வறட்சி நிலைமையைப் பார்த்தால், அதிர்ச்சி தரும் காட்சிகள் முன்னால் வந்து நிற்கின்றன. மகாராட்டிராவில் உணவுக்குறைபாட்டினால் 9000 குழந்தைகள் இறந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் திவாசிகளில் பலர் காட்டை விட்டு புலம் பெயர்ந்து, செங்கல் சூளைகளில் உழைத்து களைக்கிறார்கள். அவர்தம் பெண்கள் உணவுக்கென தம் சதையை விற்கிறார்கள்!

மகாராட்டிராவின் விதார்பா மாவட்டத்தில் மட்டும் 2003லிருந்து 2004 க்குள் பருத்தி பயிரிட்டு, கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் 644 பேர். அடுத்தடுத்து வறட்சி, நீர்வளம் வற்றிப் போனது, அதிக ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டியிருப்பது, பணம் இன்மை... இதுவே பட்டினிச் சாவுகளுக்கும் தற்கொலைக்கும் இட்டுச் சென்றுள்ளன. அரசு இதை பட்டினிச்சாவுகள் என்றோ, வறட்சி என்றோ ஒப்புக் கொள்ள மறுக்கிறது. இச்சாவுகளுக்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும் என்கிறது அது. அந்தக் காரணங்கள் அரசுக்கு மட்டுமே தெரியும்! பலகோடி ரூபாய் செலவழித்து சாலை வசதி தேவையில்லை என்கிறது, நிதிசெலவை கண்காணிக்கும் அமைப்பு. ஆனாலும் மேம்பாலங்களும், நான்கு வழிச்சாலைகளும் இங்கு நிர்மாணிக்கப்பட்டபடியேதான் இருக்கின்றன. மும்பையில் மட்டும் 45 புதுமேம்பாலங்களுக்கு, 300 கோடி செலவழித்திருக்கிறார்களாம் கடந்த ஆண்டில்.

பஞ்சாப்பில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட எண்ணிக்கை, குலை நடுக்கம் தரச் செய்கிறது. 1988 இலிருந்து 2004 வரை 2,116 பேர். மத்தியப் பிரதேசத்தில் இத்தகு தற்கொலைகளோடு கால்நடைகளின் சாவும் சேர்ந்து கொண்டுள்ளது. சுமார் பத்தாயிரம் கால்நடைகள் 2003 இல் இறந்துள்ளன. ராஜஸ்தானில் வறட்சியின் பிடியில் இருக்கும் மக்கள், இலைதழைகளை சாப்பிட்டு உயிர் கழிக்கின்றனர். உயிர் பிழைக்கவும் பசியாறவும் பெண்கள் உடலை விற்கிறார்கள். ஒவ்வோராண்டும் அங்கு வறுமையினால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை 200.

கர்நாடகாவில் சுமார் 21 மாவட்டங்களின் 80 வட்டங்கள், தண்ணீர் தட்டுப்பாட்டால் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றன. ஆயிரம் அடி ஆழ்துளை கிணறு போட்டாலும் தண்ணீர் இல்லை. பல நகரங்களில் நகராட்சியே நீர் விநியோகத்தை லாரிகள் மூலம் செய்கிறது. ஒரு மாதத்துக்கு 5000 ரூபாய் தண்ணீருக்கு மட்டும் செலவழிக்கும் நிலை, பல ஊராட்சிகளில் ஏற்பட்டுள்ளது. பெரிய மாவட்டமான கோலார், கொடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தின் 4,300 நீர்த் தேக்கத் தொட்டிகளில் 3,500 தேக்கத் தொட்டிகள் காய்ந்துள்ளன.

தமிழ் நாட்டில் அறிவிக்கப்படாத வறட்சியும், குடிநீர் பற்றாக்குறையும் நிறைந்துள்ளது. அரசின் வெளிப்படையான அறிவிப்பும் புள்ளிவிவரங்களும் இல்லாத நிலையில் பத்திரிகை செய்திகள் உண்மை நிலையை சுட்டிக் காட்டுவதாய் உள்ளன. பல மாவட்டங்களில் போதிய குடி தண்ணீர் இல்லை. எண்ணூறு அடி ஆழ்த்துளை கிணறுகள்கூட வற்றியுள்ளன. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம். பல மைல்கள் மிதிவண்டியில் சென்று தண்ணீர் கொண்டுவரும் நிலை. ‘இதுபோன்ற மோசமான வறட்சியை நாங்கள் பார்த்ததில்லை. 800 அடி கிணறுகளும் வற்றிவிட்டன' என்கிறார்கள் மக்கள். 1984 இல் ஏற்பட்ட வறட்சியில்கூட 60, 70 அடிகளிலேயே நீர் கிடைத்தது. இப்போது நிலைமையை நினைத்துப்பார்க்க முடியவில்லை. இப்படி தொடர்ச்சியான தண்ணீர் தட்டுப்பாட்டாலும், வறட்சியாலும், கடும் வெப்பத்தாலும் தமிழகத்தில் கடந்த ஏழு ண்டுகளில் மட்டும் 8 சதவிகிதம் மாடுகள் குறைந்து போய் உள்ளன. இவற்றில் எருமைகளின் வீழ்ச்சி 40 சதவிகிதம் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்லுகிறது (‘தினமணி' 12.6.2005).

இந்தியாவில் பீகாருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் சுமார் 10 லட்சம் கொத்தடிமைகள் இருக்கிறார்கள். 12 லட்சம் குழந்தைத் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். வறட்சி, வேலையின்மை, கடன் தொல்லை காரணமாக வேறு மாநிலங்களுக்குச் சென்று நகரங்களில் உதிரித் தொழிலாளர்களாகவும், தங்கம், வெள்ளிச் சுரங்கங்களில் கொத்தடிமைகளாகவும் இருக்கிறார்கள் (‘தினமணி' 12.6.2005).

இந்த நிலைக்கு முற்றிலும் மாறாக அரசின் குரல் நம்மிடம் ஒலிக்கிறது. அண்மையில் தமிழகத்தின் வடமாவட்டங்களுக்கு வந்துபோன மத்திய அமைச்சர் ரா. வேலு, வேலூர் மாவட்டத்திலும், திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஊரக வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு என 67.76 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்றுகூறி இருக்கிறார். இதில் கிராம குடிநீர்த் திட்டம், வேலைக்கு உணவு திட்டம், ஒருங்கிணைந்த நீர்ப்பிடிப்புத் திட்டம் போன்றவை அடங்கும். இவ்வளவு தொகையும் செலவு செய்யப்படுவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் சட்டமன்ற, நாடாளுமன்ற, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுக்கள் வேறு!

இவ்வளவு பணத்தைக் கொண்டு வறட்சியின் பாதிப்பினால் இடம் பெயர்வதையோ, குடிநீர் பற்றாக்குறையையோ ஏன் போக்க முடியவில்லை? மக்கள் நலனில் அக்கறை இல்லாத திட்டங்களால் பெருவாரியான நிதி வீணாகிறது. இடைத்தரகர்களும், அரசு மற்றும் அதிகார எந்திரங்கள் திட்டத்தை செயல்படுத்தும் போர்வையில் சுரண்டி கொழுக்கின்றன. பெரும் ஒப்பந்தக்காரர்களும், அரசியல்வாதிகளுமே பெரும்பாலான திட்டங்களால் வளமடைகிறார்கள். மக்கள் வறுமையிலும், பசியிலும் பட்டினியிலும் இருந்தால்தான் நிதி ஒதுக்கீடுகள் வரும். எனவே, வறட்சியும் வறுமையும் ஒழியக்கூடாது எனக் கருதுகின்றனர்.

பீகாரில் கயை மாவட்டம், பதேரி கிராமத்தில் இருக்கும் அரசு தொடக்கப் பள்ளியில், போன மாதம் பகல் உணவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. உணவை சமைக்க இரு தலித் பெண்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இதைக் கண்ட ஆதிக்கச் சாதியினர், தலித் பெண்களை திட்டி பள்ளியினை விட்டு வெளியேற்றிவிட்டு, சமைத்த உணவை குழிதோண்டி கொட்டி மூடியிருக்கிறார்கள். இந்த நிகழ்வு நமக்கு காட்டுவது இந்திய சாதிய சமூகத்தின் மனநிலையை! சாதிய சமூகத்தின் ஆதிக்கம் நிறைந்த அரசும், அதிகாரமும் ஏழைகளைப் பசியாற விடாது இருக்கின்றன. வறுமையும், பட்டினியும் அவர்களுக்கு வேண்டும். இல்லை என்றால் அதை உற்பத்தியும் செய்வார்கள். ஆனால், இன்னும் அவர்கள் புரிந்து கொள்ளாத ஒன்றிருக்கிறது. பசியும், வறுமையும், வறட்சியும் வேட்டை மிருகங்களைப் போன்றவை.

புள்ளிவிவரங்கள் : தெகல்கா

Pin It