அமெரிக்க மற்றும் பிரித்தானிய அரசுகளின் அழுத்தம் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையே தமிழினப் படுகொலைக்குக் காரணமாக அமைந்தது என்பதை நிறுவுவதற்கான மக்கள் தீர்ப்பாய அமர்வு – 3 அண்மையில் நிறைவு பெற்றது. இதில் ஈழத் தமிழர்களுக்கும் குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கும் ஆதரவாகத் தீர்ப்பாயத்தில் தனது ஆய்வை சமர்ப்பித்தார் பிறப்பால் சிங்களரான பேராசிரியர் யூட் லால் பெர்னாண்டோ (Jude Lal Fernando) அவர்கள். நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த விடைகள் விடுதலைப்புலிகள் மீதும் ஈழத் தமிழர்கள் மீதும் அவர்களுடைய விடுதலைப் போராட்டத்தின் மீதுமான அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் சரியான பதிலாய் அமைந்துள்ளன. ஆகவே அந்தத் தீர்ப்பாய நிகழ்வுகளை இங்கு காண்போம்!

“தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு (த.வி.பு) நிதி திரட்டியது குற்றம் அல்ல, அது எனது உரிமை” என யேர்மனிய (German) நீதிமன்றில் மனுத் தொடுத்திருக்கும் நாதன் தம்பி மற்றும் ஆனந்தராசா மீதான விசாரணை அமர்வு – 7 கடந்த 10.06.2022 அன்று நடைபெற்றது.

இதற்கு முன்னதாக அரசத் தரப்பால் சிறப்பு ஆய்வாளராக (Expert) அழைத்து வரப்பட்ட யேர்மனிய பேராசிரியர் ரோசல் (Rössel) என்பவர் தமிழர் தரப்பின் நியாயப்பாடுகளைப் புறந்தள்ளி, முற்றுமுழுதான எதிர்மனநிலையோடும், த.வி.பு-வினரைப் போர்வெறியர்களாகச் சித்தரித்தும் தனது ஆய்வை வழங்கியிருந்தார். அவரது ஆய்வு ஒருதலைப்பட்சமானது எனக் கூறிய எமது தரப்புச் சட்டவாளர்கள், பிறிதொரு சிறப்பு ஆய்வாளரை (Expert) நீதிமன்று அனுமதிக்க வேண்டுமென நீதிபதிகளிடம் முன்வைத்த வேண்டுகோளை 08.06.2022 அன்று நடைபெற்ற அமர்வில் நீதிபதிகள் மறுத்ததுடன், பிறிதொருவர் தேவையில்லை என விளக்கங்களையும் கொடுத்திருந்தனர்.

Jude Lal Fernando in Tribunalவேண்டுமென்றால் சாதாரண சாட்சியாளராக ஒருவரை அனுமதிக்க இயலும் எனக் கூறியதுடன், அதற்கான முடிவும் 10.06.2022 அன்று சொல்லப்படும் எனத் தெரிவித்திருந்தனர். ஆனாலும் நாம் எமது தரப்புச் சிறப்பு ஆய்வாளராகப் பேராசிரியர் யூட் லால் பெர்னாண்டோ (Jude Lal Fernando) அவர்களை அதற்கு முந்தைய நாளான வியாழக்கிழமையே யேர்மனிக்கு அழைத்து அணியமாகத் தங்க வைத்திருந்தோம்.

10.06.2022 காலை 10:30 மணியளவில் ஆரம்பித்த நீதிமன்ற அமர்வில், 2006-09 வரையான (ஐரோப்பிய ஒன்றியம் த.வி.பு-வைத் தடை செய்திருந்த) காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீதும் போராளிகள் மீதும் சிங்கள அரசால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் பற்றி எமது சட்டவாளர்கள் நீதிபதிக்கு எடுத்துரைத்தனர். தட்சா உருவாக்கிய தமிழினப்படுகொலை ஆவணக்கையேடு (Genocide Chronicle) ஆதாரங்களோடு வெளியிட்ட தகவல்களை எமது சட்டவாளர் நீதிபதிகளிடம் ஒப்புவித்தார்.

* செஞ்சோலை மீதான தாக்குதல்

* இனியவாழ்வு இல்லம் மீதான தாக்குதல்

* புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான தாக்குதல்

* இசைப்பிரியா படுகொலை

* மூதாளர் பேணலகம் மீதான தாக்குதல்

* உணவிற்கு வரிசையில் காத்திருந்த மக்கள் மீதான தாக்குதல்

* மருத்துவ ஊர்தி மீதான கிளேமோர் (Claymore) தாக்குதல்

* 5000-க்கும் மேற்பட்ட குண்டுகள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பிரதேசத்தினுள் வீசப்பட்டமை

* நச்சுக்குண்டு மற்றும் கொத்தணிக் குண்டுத் தாக்குதல்

ஆகியன ஆதாரங்களோடு சமர்ப்பிக்கப்பட்டன.

அத்துடன் எம்மால் முன்மொழியப்பட்ட சிறப்பு ஆய்வாளரை அனுமதிப்பதற்கான தேவை நீதிமன்றிற்கு இல்லை என்ற அடிப்படையில் நீதிபதிகளினால் தரப்பட்ட விளக்கங்கள் பொருத்தமற்றவை என எமது சட்டவாளர்கள் முன்வைத்த வாதங்களின் பேரில் அது பற்றி மீண்டும் தாம் ஆராய வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், பிற்பகல் 3:00 மணிக்கு மீண்டும் அமர்வு ஆரம்பமாகும் என அறிவித்தனர்.

3:00 மணியளவில் ஆரம்பித்த அமர்வில் பேராசிரியர் யூட் லால் அவர்களைச் சிறப்பு ஆய்வாளராக நீதிமன்று ஏற்றுக் கொள்வதாக நீதிபதிகள் அறிவிக்க, சோர்வை நீக்கிய மகிழ்வாக அது அமைந்தது. இதுவே பாரியதொரு திருப்பம் என அனைவராலும் பேசப்பட்டது.

முதலில் பேராசிரியர் யூட் லால் அவர்களை எமது சட்டவாளர் நீதிமன்றிற்கு அறிமுகப்படுத்தினார். பேராசிரியர் யூட் லால் பெர்னாண்டோ அவர்கள் சிங்கள இனத்தைச் சேர்ந்த கிறித்தவ மதகுரு ஆவார். அயர்லாந்து நாட்டில் துணைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இன, மத வேறுபாடுகளினால் உருவாகும் சர்வதேசச் சிக்கல்கள் தொடர்பான கற்கை நெறியில் 15-க்கும் மேற்பட்ட முதுமாணிகளை (master degree) உருவாக்கியவர். போருக்கெதிரான சிங்கள மக்கள் கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்தவர். இரு தீர்ப்பாயங்களுக்குத் தலைமை தாங்கியவர். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். அத்தோடு சிறிலங்காவின் மூன்று பிரதான நாளேடுகளில் பத்தி எழுத்தாளராகப் பணிபுரிந்தவர்.

“பேராசிரியர் யூட் லால் பெர்னாண்டோ அவர்கள் உண்மைக்குத் தீங்கிழைக்க மாட்டார் என்ற நம்பிக்கையோடு இந்த அவை (senate) அவரைச் செவிமடுக்கிறது” என நீதிபதிகள் அறிவிக்க, பேராசிரியர் யூட் லால் அவர்கள் தொடர்ந்தார். (நேரம் பிற்பகல் 3:30.)

“எனது பெயர் யூட் லால் பெர்னாண்டோ. நான் அயர்லாந்திலிருந்து இங்கே வந்திருக்கிறேன். சிறிலங்கா என்றாலே தமிழர்கள் மீதான அடக்குமுறை என்பது அந்த நாட்டின் அடையாளமாகி விட்டது. இதைச் சொல்வதற்கு எனக்கு இரு தகுதிகள் உள்ளதாக நான் நம்புகிறேன். முதலாவது தகுதி, நான் 2006 வரை சிறிலங்காவில் வாழ்ந்து அந்த மக்களுடன் தொடர்பில் இருந்தவன். இரண்டாவது தகுதி, நான் ஒரு பேராசிரியராக இருக்கிறேன். சிங்களம் எனது தாய்மொழி. ஆனால் தமிழும் எனக்குப் பேசத் தெரியும். தமிழர்கள் அந்த மண்ணில் எதிர்கொண்டு வருகின்ற சிக்கல்கள் குறித்துத் தெளிவாக எடுத்துரைத்த பேராசிரியர்களாக நான் சிலரை அடையாளம் காட்டுவேன். முதலாமவர், கொழும்பு பல்கலைக் கழகத்தின் அரசியல் கற்கை நெறிக்கான பிரிவின் தலைவரும் பேராசிரியருமான ஜயதேவ உயங்கொட. இரண்டாமவர், ஊப்சாலா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பீற்றர் சால்க் அவர்கள்.

எனது முதல் தகுதியான, அந்த மண்ணில் வாழ்ந்ததன் அடிப்படையில் தமிழ் மக்களுக்காகத் த.வி.பு-வால் உருவாக்கப்பட்ட நடைமுறையரசை நேரில் கண்டிருக்கிறேன்.”

நீதிபதி (குறுக்கிட்டு) : த.வி.பு மட்டுமே தமிழ் மக்களின் பாதுகாவலர்கள் என்பது உண்மையா? அதற்கான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளனவா?

“இதற்கு ஆதாரமாக அந்த மண்ணில் வாழ்ந்த மக்கள் இருக்கிறார்கள். இரண்டாவதாக நோர்வே நாட்டினால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் இருக்கின்றன.”

நீதிபதி (மீண்டும் குறுக்கிட்டு) : 2002-க்குப் பின்னர்தான் மக்களுக்கான கட்டமைப்பைப் புலிகள் உருவாக்கினரா?

“இல்லை. 2002-க்கு முன்பே மக்களுக்கான கட்டமைப்புகளை அவர்கள் உருவாக்கி விட்டனர்.”

நீதிபதி (குறுக்கிட்டு) : இவை போதுமான ஆதாரங்களாக இருக்குமா எனக் கேள்வி எழுப்பப்படுகிறதே?

“மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே, நான் மூச்செடுத்துக் கொள்ள நீங்கள் அனுமதி தர வேண்டும். முழுமையாக எனது ஆய்வைச் செவிமடுக்க வேண்டும். நான் எனது மாணவர்களுக்குச் சொல்வதும் இதையேதான். யார் சொல்வதையும் கேட்பதை விட, முழுமையாக ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள் என்பதை நான் அடிக்கடி நினைவூட்டுவேன்.”

நீதிபதி (புன்னகைத்து விட்டு) : நீங்கள் தாராளமாகப் பேசலாம்.

“சிறிலங்கா அரசு வடக்கு கிழக்கிலிருந்து தமிழர்கள் மீதும், மலையகத் தமிழர்கள் மீதும் தொடர்ச்சியாக அடக்குமுறையை நடாத்தி வருகிறது. தமிழ் பேசும் இசுலாமிய மக்கள் மீதும் இதே அடக்குமுறை நடத்தப்படுகிறது. 1956 - 1976 வரை சிங்களவர்களால் தமிழர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதனாலேயே தமிழர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள 1976-இல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் உருவாக்கினர். ஆனால் அதையும் சிங்கள அரசு புறக்கணித்தது. அதன் பின் தமிழர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை. பலவீனமான ஓர் இனத்தின் பிரதிநிதிகளாகத் த.வி.பு உருவானது. அது மக்களிலிருந்தே உருவானது. ஆயுதப் போராட்டம் நிகழ்ந்து புலிகள் உச்ச பலத்தில் இருந்தபோதும் 2004-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில், புலிகளின் ஆணை பெற்ற TNA என்ற கட்சி உருவாக்கப்பட்டது. அதில் தமிழருக்கும், தமிழ் பேசும் இசுலாமியருக்கும், மலையகத் தமிழருக்கும் இடம் ஒதுக்கப்பட்டது. புலிகள் ஆயுதங்களை நேசிப்பவர்களாக இருந்திருந்தால் அரசியல் கட்சியொன்றை உருவாக்க வேண்டிய தேவை இருந்திருக்காது.”

நீதிபதி : த.வி.பு-வின் பிரதான குறிக்கோள் என்ன?

“இக்கேள்விக்கு நன்றி தெரிவிக்கிறேன் நீதிபதி அவர்களே! நான் சிங்கள இனத்தவன். எனது ஆரம்பக் கல்வியின்போது எமது பாடப்புத்தகங்கள் அனைத்தும் தமிழருக்கு எதிரான மனநிலையைத் தூண்டும் விதமாகவே இருந்தன. அந்த மனநிலையின் வெளிப்பாட்டினைப் பாதுகாப்பதில் சிறிலங்கா அரசும் காவல்துறையும் உடந்தையாக இருந்தன. 1956-இல் தமிழர்கள் சிறிலங்காவில் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். பின்னர் 1977-இல் அது மேலும் தீவிரமடைந்தது. நான் முதலில் கூறியது போன்று, இதன் காரணமாகவே அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இணைந்து 1976-இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை உருவாக்கின. சிங்கள அரசானது தமிழர்களுக்கு எதிரானதாக மட்டும் இருக்கவில்லை. சிங்களவர்களுக்கு எதிரானதாகவும் இருந்தது. 20,000 சிங்கள இளைஞர்கள் (JVP) சிங்கள அரசால் கண்மூடித்தனமாகப் படுகொலை செய்யப்பட்டனர். இதனோடு ஒப்பிட்டால் தமிழர்களின் நிலை எவ்வாறிருக்கும் என நீங்கள் கணிக்க முடியும்.

அவ்வாறாயின் தன் மீது நிகழ்த்தப்படும் படுகொலைகளை பலவீனமான தமிழினம் தடுத்து நிறுத்துவது எவ்வாறு என்ற கேள்வி எழுகிறது. UN Convention கூறுவதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ‘தமது இனம் மற்றும் இன நலனைப் பாதுகாக்க அந்த மக்கள் (Nation) ஆயுதம் ஏந்துவது தவறானதல்ல’ என்பதுவே அது. நான் தென்னாப்பிரிக்காவில் கற்றுக் கொண்டிருந்த வேளை ஏராளமான இன மீட்புப் போராட்டங்கள் பற்றிக் கற்றிருக்கிறேன்.

புலிகளை உற்று நோக்கினால், அவர்கள் எப்போதும் தமது இராணுவ பலத்தை உபயோகித்து சமாதானத்தை நிலைநாட்டவே முயன்றார்கள். அதாவது சிறிலங்கா அரசின் மீது தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களை சமாதானத்தை நோக்கி இழுத்து வந்தார்கள். அவர்கள் கொலைகளில் ஆர்வமற்றவர்கள் என்பதற்கு இதை விட ஆதாரம் தேவைப்படாது.”

நீதிபதி : அப்படியானால் புலிகள் சமாதானத்தை விரும்புவதில்லை என இதற்கு முன்பு ஆய்வாளராக வந்திருந்த பேராசிரியர் ரோசல் கூறுவது தவறானதா?

“ஆம்! அது முற்றிலும் தவறானது. இதற்கான ஆதாரம் நோர்வேயிடம் உண்டு. அதை விடவும் 2000 ஆண்டில் புலிகள் மேற்கொண்ட பாரிய தாக்குதலிற்கு முதல் நாள், இராணுவத்தினரைச் சரணடையுமாறு ‘புலிகளின் குரல்’ மூலம் சிங்களத்தில் அறிவித்தல் விடுத்ததற்கு சாட்சியாக நான் இருக்கிறேன். சிங்கள மக்களுடன் இவ்வாறான தொடர்பாடல்களுக்காகவே புலிகள் சிங்களப் பத்திரிகையையும் நடத்தி வந்தார்கள். கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்களைப் புலிகள் விடுதலை செய்து, அவர்கள் கொலைகளில் ஆர்வமற்றவர்கள் என்பதை சிங்கள மக்களுக்கு நிரூபித்திருக்கிறார்கள்.

2000 ஆண்டின் கிறிஸ்துமஸ் காலப்பகுதியில் நான் வன்னியில் இருந்தேன். தேவாலயமொன்றில் வழிபாட்டில் இருந்த வேளை, புலிகள் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தை அறிவித்தனர். (பேராசிரியர் ரோசல் இதைக் குறிப்பிடவில்லை.) ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் புலிகள் அதனை ஒரு மாதக் காலம் நீட்டித்தனர். அப்பொழுதும் சிறிலங்கா ஏற்றுக் கொள்ளவில்லை. மீளவும் புலிகள் மார்ச் மாதம் வரை போர் நிறுத்தத்தை நீட்டித்தனர். ஆனால் அப்போதும் சிறிலங்கா அதனை நிராகரித்தது. இந்தப் போர்நிறுத்தக் காலத்தில் ஒரு இராணுவ வீரர் கூடப் புலிகளால் கொல்லப்படவில்லை. ஆனால் 130 போராளிகள் இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள். கூடவே மக்களும் கொல்லப்பட்டார்கள்.” (இதற்கான வரைவு ஆதாரம் நீதிமன்றில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது)

(தொடரும்...)

- சபா