Rahul Gandhi 376சென்ற முறை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்ட போது பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலகினார்.

அப்போது ராகுல் காந்தி தன் தலைவர் பதவியைத் துறந்த பொழுது, தன்னைப் பின்தொடர்ந்து மற்ற தலைவர்களும் பதவி விலகுவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் தோல்விக்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று உறுதியாக நம்பிக் கொண்டு இருந்த மாநில, மாவட்டத் தலைவர்கள் கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் தங்கள் பதவியை அப்படியே தொடர்ந்தனர்.

இந்த அமைப்பை மாற்றாமல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு சாத்தியமே இல்லை.

ஓர் உதாரணம் பார்ப்போம். எங்கள் ஊருக்கு அருகே கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிற்பி ரங்கநாதன் என்பவர் காங்கிரஸ் சார்பில் வார்டு உறுப்பினராக போட்டியிட சீட் கேட்டார். (இவர் கடந்த இரண்டு முறையும் வார்டு உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அப்பகுதி மக்களிடையே தனிப்பட்ட ஆதரவும் இவருக்கு உண்டு.)

ஆனால் மாவட்ட பொறுப்பாளர் 'சில, பல' காரணங்களால் சிற்பி ரங்கநாதனுக்குப் பதிலாக தனக்கு வேண்டிய ஒருவருக்கு வாய்ப்பு அளித்தார். ஆனால் அந்த வார்டில் சுயேட்சையாகப் போட்டியிட்ட சிற்பி ரங்கநாதன் தான் வென்றார்.

வெற்றி பெற்ற பிறகு இப்போது கட்சி சாராத உறுப்பினராக இருக்கும் ரங்கநாதன் ஒருவேளை வேறு கட்சியில் இணைந்தால் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய இழப்பு தானே?

இப்படித்தான் தகுதியான ஒவ்வொருவரையும் துரத்தி விடுகிறார்கள். கரூர் எம்பி ஜோதிமணி, எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்குவதற்கு பட்ட கஷ்டம் நமக்குத் தெரியாததா என்ன?

திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆதரவாளராம். தங்கபாலு டெல்லியைச் சேர்ந்த முக்கிய காங்கிரஸ் தலைவருக்கு ஆதரவாளராக இருப்பார். இந்த தகுதியின் அடிப்படையில் தான் ஒவ்வொரு மாநில மாவட்ட தலைவர்களையும் நியமிக்கிறார்கள்.

இப்படி தொண்டர்களைப் பற்றி சிந்திக்காமல், தொண்டர்களை நம்பாமல் கட்சி நடத்தினால் கட்சி எப்படி வளரும்?

பாஜகவில் அண்ணாமலை இணைந்த சமயத்தில் தான் காங்கிரஸில் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் இணைந்தார். தலைவராக பொறுப்பு கொடுத்து அண்ணாமலையைப் பயன்படுத்திக் கொண்டது பாஜக. ஆனால் அறிவும் ஆற்றலும் கொண்ட சசிகாந்த் செந்திலைப் பயன்படுத்தவே இல்லை காங்கிரஸ் கட்சி.

தங்களின் கொள்கைக்காக எதையும் செய்யக்கூடிய பல்லாயிரம் முழு நேர ஊழியர்களைக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது பாஜக. ஆனால் தங்கள் தொண்டர்களை நம்பாமல், மக்கள் செல்வாக்கு கொஞ்சமும் இல்லாத தலைவர்களைக் கொண்டு காலம் தள்ளி வருகிறது காங்கிரஸ்.

கீழே வார்டு அளவில் இருந்து உண்மையான தொண்டர்களைச் சேர்த்து கீழிருந்து மேலே வரை தேர்தல் நடத்தி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே காங்கிரஸ் மீளும்.

செய்வாரா ராகுல் காந்தி? ராகுல் காந்தியை செயல்படுத்த விடுவார்களா பழம்பெரும் தலைவர்கள்???

- உ.மஸ்தான்