“பேரழிவுகள் நிகழ்வதற்காகக் காத்து நிற்கின்றன” (Disasters wait to happen) என்று ஒர் ஆய்வு முடிவு அறிவிக்கிறது. உலகம் முழுவதிலும் இதுநாள்வரை நிகழ்ந்துள்ள பேரழிவுகள் திடீரென்று ஒரு கணப்பொழுதில் நிகழ்வதில்லை. பேரழிவிற்கான தொடக்கம் ஒரு புள்ளியாகத் துவங்கி, எவருடைய கவனத்திற்கும் பிடிபடாமல், படிப்படியாக வளர்ந்து பேரழிவாக ஒரு கணத்தில் நிகழ்கின்றன. இது இயற்கையில் நிகழும் பேரழிவுகளுக்கு மட்டுமல்ல; சமூகத்தில் நிகழும் பேரழிவுகளுக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளதை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், பிப்ரவரி 19, 2009 அன்று நடைபெற்ற நிகழ்வை உற்று நோக்கும்போது புலப்படுகிறது.

Police attackஇந்நிகழ்வு குறித்த வழக்கு விசாரணை அண்மையில் இந்தியத் தலைமை நீதிமன்றத்தில், 26 பிப்ரவரி 2009 அன்று நடைபெற்றபோது, தலைமை நீதிபதி திரு.கேஜி.பாலகிருஷ்ணன், “இச்சம்பவம் நிகழாமல் தடுப்பதற்கு மூத்த வழக்கறிஞர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? என்ன ஆலோசனை வழங்கினார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளதை இந்த அறிக்கையின் துவக்கப் புள்ளியாக நாம் கொள்கிறோம்.

இந்தக் கருத்தாய்வை எவ்வித விருப்பு-வெறுப்பு, சார்புமின்றி மேற்கொள்ள வேண்டியுள்ளது. காரணம், நீதித்துறை என்பது இந்நாட்டில் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக பலமற்ற பெரும்பான்மையான மக்களுக்கு, குறிப்பாக உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, கடைசிப் புகலிடமாக அமைந்துள்ளது. இந்நிலையில்தான் நீதித்துறையில் வழக்குரைஞர் தொழில் என்பது கண்ணியமான சமூகக் கடமையாக கருதப்படுகிறது. மற்ற தொழில்களைப் போலன்றி, வழக்குரைஞர் தொழில் லாப-நஷ்டக் கணக்குகளுக்கு அப்பால் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பிற சட்டங்கள் நம் மக்களுக்கு அளித்திருக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், மீட்டெடுப்பதிலும் வழக்குரைஞர்களின் பங்கு மிக இன்றியமையாததாக அமைந்துள்ளது. இன்றளவும், பெரும்பான்மையான உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உள்ள உரிமைகளை-சட்டம் இயற்றி வழங்கப்பட்டிருக்கும் அவ்வுரிமைகளை-நிலைநாட்டும் நீதிமன்றத் தீர்ப்புகள் சமூக அக்கறையுள்ள வழக்கறிஞர்களாலேயே சாத்தியப்பட்டுள்ளன. அதனாலேயே, வேறு எந்த தொழில் வல்லுநருக்கும் வழங்கப்படாத “கற்றறிந்த” என்ற அடைமொழி வழக்கறிஞர்களுக்கு சமூகம் அளித்துள்ள அங்கீகாரமாகக் கருதவேண்டியுள்ளது.

இத்தகைய “கற்றறிந்த” வழக்கறிஞர்கள்தான் உலகமெங்கிலும் பல்வேறு மக்கள் இயக்கங்களை நடத்தி தேசங்களை விடுதலை பெறச் செய்தனர் என்ற வரலாறு நாம் ஒன்றும் அறியாததல்ல. இன்றளவும் தேசத்தை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பதவிகளில் கணிசமான இடத்தைப் பெற்றிருப்பவர்களும் வழக்கறிஞர்களே! இந்தப் பின்னணியில்தான், 150-ஆம் ஆண்டை நெருங்கும் சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் ஓர் அழியாத கறையாக அமைந்துள்ள பிப்ரவரி 19 சம்பவம் குறித்து அணுக வேண்டியுள்ளது.

சட்டஉரிமைகள் மீறப்பட்டு, உரிமை மீறல் தொடர்பான விழிப்புணர்வு பெருகி, நாள்தோறும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளுக்காக நீதிமன்றங்களை அதிகளவில் அணுகி வருகின்றனர். இதனாலும், மக்கள் தொகைக்கு ஏற்ப நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படாததாலும், நீதிபதிகள் நியமிக்கப்படாததாலும், வழக்குகள் பெருமளவில் தேக்கம் அடைகின்றன. இந்நிலையில்தான் ‘வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு சட்டத்திற்கு முரணானது' என்று இந்திய உச்சநீதிமன்றம் கடந்த 1991-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. எனினும், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஊறு ஏற்படும் தருணங்களில் இப்போரட்டமுறையை வழக்கறிஞர்கள் கைக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் அதே தீர்ப்பில் கூறியிருந்தது.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தொடர்ந்துவரும் அங்குள்ள தமிழர்கள் மீதான கொடுந்தாக்குதல்கள் இந்த ஆண்டின் துவக்கத்தில் உச்சக்கட்டத்தை எட்டத்தொடங்கின. பன்னாட்டுச் சட்டங்களில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் இலங்கைத் தமிழருக்கு மறுக்கப்பட்டுள்ளது உலகத்தின் பெரும்பான்மையான ஊடகங்களின் வெளிப்பட்டுள்ளது. இந்த சூழலில்தான், இலங்கைத் தமிழருக்காக என்ற போர்வையில் வழக்கமான அரசியல் நடத்தும் அமைப்புகளை ஒதுக்கிவிட்டு ஒர் உண்மையான இயக்கம் உருவாக வேண்டிய நிலை எற்பட்டது.

தமிழ்ச் சமூகத்தின் மற்ற துறையினர் மனித உரிமை உணர்வுள்ளவர்களாக இருந்தபோதிலும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர் இதை முன்னெடுத்து செல்லத் தலைபட்டனர். 30 ஜனவரி 2009 முதல் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அன்று நிகழ்ந்த முத்துக்குமார் என்னும் சென்னை இளைஞரின் தீக்குளிப்பு தமிழகமெங்கும் இலங்கைத் தமிழர்பால் ஒரு மிகப்பெரும் ஆதரவு அலையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்தன. வழக்குரைஞர்களின் போராட்டம், செங்கற்பட்டு மற்றும் சேலம் சட்டக்கல்லூரி மாணவர்களிடேயே பாதிப்பை ஏற்படுத்தியது. சென்னை வழக்கறிஞர்களின் போராட்டம் ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவத்தை மேற்கொண்டது. அதன் தொடர் நடவடிக்கைகளில், இலங்கை வங்கி உடைப்பு, பேருந்துக் கடத்தல், சைக்கிள் கடை உடைப்பு, தொடர்வண்டி நிறுத்தும் போராட்டம், இராணுவத் தலைமையக முற்றுகைப் போராட்டம், வாக்காளர் அடையாள அட்டை எரிப்புப் போராட்டம், சோனியாகாந்தி பட எரிப்புப் போராட்டம் போன்ற சம்பவங்களில் சட்டமீறல் நடைபெற்றதாக காவல்துறை வழக்குகள் பதிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பிப்ரவரி 4 அன்று நடைபெற்ற கடையடைப்பில் கலந்து கொள்ளாமல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே திறந்து வைக்கப்பட்டிருந்த சைக்கிள் கடை ஒன்றை இலங்கைத் தமிழருக்காக ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய வழக்குரைஞர்கள் சிலர் தாக்கி பொருட்களை சேதப்படுத்தியதாக காவல்துறையினர் ஒரு வழக்கை பதிவு செய்தனர். அச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சில வழக்குரைஞர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தக் கூடாது என்று சக வழக்குரைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அப்போதும் கூட வழக்குரைஞர் புகழேந்தியை காவல்துறையினர் தாக்கியதால் அவரது மண்டை உடைப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பரபரப்பால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் அப்போதே மாநகர குற்றவியல் நடுவரால். சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

ஜனவரி 30 அன்று தொடங்கிய இலங்கைத் தமிழர் ஆதரவு நீதிமன்றப் புறக்கணிப்பு, பிப்ரவரி 9 வரை தொடர்ந்தது. பிப்ரவரி 10 அன்று மீண்டும் பணிக்குத் திரும்பிய வழக்கறிஞர்கள், மீண்டும் பிப்ரவரி 11 முதல் பிப்ரவரி 17 வரை நீதிமன்றப் புறக்கணிப்பைத் தொடர்ந்தனர். பிப்ரவரி 18 அன்று குற்றவியல் நடைமுறை சட்டத்திருத்தத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் நீதிமன்றப் புறக்கணிப்பு நடைபெற்றது. பிப்ரவரி 19 அன்று நீதிமன்றத்திற்கு வழக்குரைஞர்கள் செல்லத் தொடங்கினர்.

இதற்கிடையில், பிப்ரவரி 17 அன்று ஒரு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்திருந்த சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக, நீதிமன்ற அறைக்குள்ளே நீதிபதிகள் முன்னிலையிலேயே, சில முழக்கங்களை எழுப்பியதாகவும், அவர் மீது முட்டை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் பெரும் பரபரப்பு நாடு முழுவதும் ஏற்பட்டது. இச்சம்பவத்திற்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதிபதி திரு.வீ.ஆர். கிருஷ்ணய்யர், நீதிபதி திரு. பி.என்.பகவதி மற்றும் தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு. ரஜீந்தர் சச்சார் போன்ற மனித உரிமைப் போராளிகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது நீதிமன்ற வரலாற்றில் ஒர் அவமானச் சின்னமாக அமைந்துள்ளது குறித்து அனைவரும் கவலை தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் 20 வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பிப்ரவரி 18 அன்று இரவு வழக்குரைஞர் கினி லியு இமானுவேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மீதம் உள்ளவர்களைக் கைது செய்ய காவல்துறையினர் தனிப்படை அமைத்தனர். மறுநாள், பிப்ரவரி 19 அன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அதே வழக்கிற்காக சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் வந்திருந்தார். அவருக்கு மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தலைமை நீதிபதியின் நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரிக்கப்பட்டபோது நீதிமன்ற அறையிலேயே துப்பாக்கி ஏந்திய போலீசார் சுப்பிரமணியன் சுவாமியின் காவலுக்கு நின்றிருந்தனர். இது குறித்து தற்காலிகத் தலைமை நீதிபதியே, “இது என்ன இராணுவ நீதிமன்றம் போல் இருக்கிறது”, என்று கூறி இவ்வழக்கின் விசாரணையை வேறு ஒரு நாளுக்கு ஒத்திவைத்தார்.

முட்டை வீசப்பட்ட சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களாகக் குறிப்பிடப்பட்டிருந்த வழக்கறிஞர்களில் முக்கியமான சிலர், பிப்ரவரி 19 காலை முதலே பதற்றத்துடன் இருந்தனர். அவர்கள் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் இருந்ததால் அவர்கள் உயர்நீதிமன்ற வளாகத்திலேயே இருந்தனர். காவல்துறையினரும் அவர்களை உடனடியாக கைது செய்வார்களா, இல்லையா என்ற பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

மதியம் இரண்டரை மணியளவில், குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர்களில் முக்கியமான சிலர் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு குழுவாகச் சென்று கைதாகிக் கொள்வது என்ற முடிவுடன் காவல் நிலையம் நோக்கிச் சென்றனர். அவர்களுடன் மற்றும் சில வழக்கறிஞர்களும் உடன் சென்றனர். காவல் நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த அவ்வழக்கறிஞர்கள், ‘சுப்பிரமணியன் சுவாமி வழக்கில் எங்களை கைது செய்து கொள்ளுங்கள். நாங்கள் தயார்' என்று அறிவித்தனர். காவல்துறையினர் அவர்களைக் கைது செய்ய மறுத்ததுடன் அவர்களைக் கைது செய்ய வேண்டிய தனிப்படை அவர்களைத் தேடி வெளியே சென்றிருப்பதால், தாங்கள் அவர்களை கைது செய்யமுடியாது என்று அறிவித்தனர். இது குறித்த வாக்குவாதம் இருதரப்பினருக்குமிடையே சிறிது நேரம் நடைபெற்றது. இறுதியில், காவல்துறையினர் அவ்வழக்குரைஞர்களைக் கைது செய்ய ஒப்புக் கொண்டனர். உடனே, அவ்வழக்கறிஞர்களில் ஒருவர் தட்டச்சு செய்யப்பட்ட ஒரு புகாரை அளித்து, பிப்ரவரி 17 அன்று நீதிமன்ற வளாகத்தில் சுப்பிரமணியன் சுவாமி தன்னை சாதிப்பெயர் சொல்லி திட்டிவிட்டதாகவும் எனவே சுவாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் புகார் தருவதாகவும், அதைப் பெற்றுக் கொண்டு புகார் பெற்றமைக்கான ஒப்புகை ரசீது தந்தால் அனைவரும் கைதாகிவிடுவோம் என்று கூறினர்.

புகாரை வாங்கிப் படித்த காவல்துறை அதிகாரிகள், ‘நடைபெறாத ஒரு சம்பவத்திற்கு தரப்படும் புகாரை வாங்கிக் கொள்ள முடியாது' என்று மறுத்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள், புகாரைப் பெறுவது மட்டுமல்லாமல், காவல்துறை அப்புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். அப்போதுதான் தாங்கள் கைதாவோம் என்று கூறி முதல் தகவல் அறிக்கையை உடனடியாகப் பதிவு செய்ய வற்புறுத்தினர். கடும் வாக்குவாதத்திற்குப் பின் காவல்துறையினர் புகாரைப் பெற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்

எனவே காவலுக்கு உட்படுத்தப்பட காவல்துறை வாகனத்திற்குள் செல்லுமாறு வழக்குரைஞர்களை வலியுறுத்தினர். உடனே அவ்வழக்குரைஞர்கள், முதல் தகவல் அறிக்கையின் நகல் தங்களுக்கு உடனடியாகத் தரப்பட வேண்டும். அப்போதுதான் தாங்கள் கைது நடவடிக்கைக்கு உட்படுவோம் என்று நிலைப்பாடு எடுத்து வலியுறுத்தினர். அவர்கள் கேட்டவாறே காவல்துறையினரும் முதல் தகவல் அறிக்கையின் நகலைக் கொடுத்து கைது நடவடிக்கைக்கு உட்படுமாறு கேட்டுக் கொண்டனர். அந்நிலையில், மேற்படி வழக்கறிஞர்கள் தங்கள் கைது நடவடிக்கைக்கு ஒத்தழைக்க மறுத்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், நீதிமன்ற வளாகத்தில் உயர்காவல் அதிகாரிகள் வந்தனர். குறிப்பாக, சென்னை மாநகர காவல் ஆணையாளர் திரு. கே.இராதகிருஷ்ணன், இணை ஆணையாளர் திரு இராமசுப்பிரமணியம், உதவி ஆணையாளர்கள் திரு. சின்கா, திரு.பன்னீர்செல்வம், திரு.ராஜேந்திரன் உட்பட பெருந்திரளான காவல்துறையினர் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் குழுமினர். சிறிது நேரத்தில் சிறப்புக் காவல்படையினர், ஆயுதக் காவல்படையினர், துரித நடவடிக்கைப் படை என பெரும் கலவரத்தை கட்டுப்படுத்தும் அளவிற்கு ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் உயர்நீதிமன்ற வளாகத்தினுள் காவலர்கள் நுழைந்தனர். அவர்கள் அனைவரும் உயர்நீதிமன்ற காவல்நிலையத்திற்கு முன்பு குவிக்கப்பட்டனர்.

வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, கலவரத்திற்கான எவ்வித அறிகுறியும் இல்லாத சூழ்நிலையில், சட்டமுறைப்படி வழங்க வேண்டிய எவ்வித எச்சரிக்கையும் கொடுக்காமல் காவல்துறையினர் கடும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். இதில் பாதிக்கப்பட்ட அனைவருமே முட்டை வீசப்பட்ட சம்பவத்திற்கு முற்றிலும் தொடர்பற்றவர்கள். உயர்நீதிமன்ற நீதிபதி திரு ஆறுமுகப் பெருமாள் ஆதித்யன் தவிர, கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகள் சிலரும், நீதிமன்றப்பணியாளர்கள், வழக்கிற்காக வந்திருந்த பொதுமக்களும் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களையும், நான்கு சக்கர வாகனங்களையும் அடித்து உடைத்து காவல்துறையினர் பெருமளவில் சேதம் விளைவித்தனர். நீதிமன்ற அறைகளுக்குள்ளும், நீதிமன்ற அலுவலகங்களுக்குள்ளும், நூலகத்திலும், வழக்குரைஞர் சங்க அலுவலகத்தில் இருந்தவர்களும், அங்கிருந்த பொருட்களும்கூட காவல்துறையினரின் வன்முறை வெறியாட்டத்திற்குத் தப்பவில்லை. இச்சம்பவத்தில் இருநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நூறு பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் நடந்தவை வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதால் இங்கு விவரிக்கத் தேவையில்லை.

இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு காவல்துறையினரே காரணம் என்பது அனைவராலும் உணரப்பட்டாலும், அது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்க கூடிய ஒரு நிகழ்வு என்பதையே இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேhம். இது காவல்துறையினரின் அத்துமீறலை நியாயப்படுத்துவதற்கோ அல்லது வழக்குரைஞர்களின் மனிதாபிமான உணர்வை இழிவுபடுத்தவோ அல்ல. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் ஒவ்வொருவரும் தங்களை சுயவிமர்சனம் செய்து கொள்ள அறைகூவல் விடுப்பதே இந்த அறிக்கையின் நோக்கம். எனவேதான் தனிநபர்களின் பெயர்கள் இங்கு தவிர்க்கப்பட்டிருக்கின்றன.

முதலில், இச்சம்பவத்தை எவ்வாறு தவிர்த்திருக்க முடியும் என்பதற்கான காரணங்களைக் காண்போம். இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது ஓர் அரசியல் பிரச்சினை. அதுவும், ஒரு அண்டை நாட்டின் பிரச்சினை. மனிதாபிமான அடிப்படையில், பாதிக்கப்படும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு அளிப்பது,ஆதரவுக் குரல் எழுப்புவது என்பதும் ஓர் அரசியல் நிலைப்பாடுதான். வழக்குரைஞர் தொழிலுக்கும், நீதித்துறைக்கும் நேரடியாக தொடர்பற்ற இந்த அரசியல் பிரச்சினையை முன்வைத்து வழக்குரைஞர்கள் நீதிமன்றத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்துவது என்பது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல. அப்படியே இந்த அரசியல் பிரச்சினையில் நடுவண் மற்றும் மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்து அப்பாவி இலங்கைத் தமிழர் கொல்லப்படுவதைத் தடுக்க வலியுறுத்துவதே இந்தப் போராட்டம் நடத்துவதற்கான நியாயம் என்று வைத்துக் கொண்டாலும், அத்தகைய கவன ஈர்ப்புக்கு[ ஒருநாள் நீதிமன்றப் புறக்கணிப்பே போதுமானது. அதைத் தொடர்ந்து நடத்துவது இங்கு பாதிக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களின் வழக்காடும் உரிமையை மறுப்பதாகும். மேலும், இப்பிரச்சினைக்கு காலவரையற்ற நீதிமன்றப் புறகணிப்பு என்பது எவ்விதத்திலும் தீர்வாகாது என்பது அனைவரும் அறிந்ததே.

எந்த ஒரு போராட்டத்தையும் அதன் வீரியத்தை வலுவிழக்க செய்பவை அப்போராட்டத்தில் பங்குபெறும் நபர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதுதான். இந்தப் போராட்டத்திலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சட்டமீறல்கள் வழக்குரைஞர்களால் நிகழ்த்தப்பட்டன. இதன்_லம் கவனப்படுத்த வேண்டிய இலங்கைத் தமிழர் பிரச்சினை, வழக்குரைஞர்கள் ஏற்படுத்தும் பிரச்சனையாக திசை திருப்பப்பட்டது. பிப்ரவரி 9 அன்றே முடிந்த இந்த நீதிமன்றப் புறக்கணிப்பு சில வழக்குரைஞர்களின் உள்நோக்கமுடைய வலியுறுத்தல்களால் மீண்டும் தொடர்ந்தது, வழக்குரைஞர்களிடையே கடும் அதிருப்தியையும் வழக்காளர்களிடம் பெரும் சோர்வையும், விரக்தியையும் எற்படுத்தியது.

Police attackபிப்ரவரி 17 அன்று நீதிமன்ற அறைக்குள் இரு நீதிபதிகளின் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக முழக்கமிட்டதும், முட்டை வீசிய சம்பவம் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடையே வழக்குரைஞர்கள் மீதான மதிப்பை மிகப் பெருமளவில் மீட்டெடுக்க முடியாத நிலைகுலையச் செய்யும் செயலாக அமைந்தது. பிப்ரவரி 19 அன்று கைது நடவடிக்கைக்கு உட்பட விரும்பிய வழக்குரைஞர்கள் சட்டமுறைப்படி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி நீதிமன்றக் காவலுக்குச் செல்லுவதை ஏதோ காரணங்களுக்காகத் தவிர்த்து உயர்நீதிமன்றக் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். கைது செய்யப்படுவதற்கு முன்வருவதாகக் கூறிய அவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது நிலைபாட்டை மாற்றிக் கொண்டனர்.

இதன் துவக்கப் புள்ளியாக பிப்ரவரி 17 அன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் சுப்பிரமணியன் சுவாமி தன்னை சாதிப்பெயர் சொல்லி இழிவுபடுத்தியதாக அவ்வழக்கறிஞர்களில் ஒருவர், பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி-சம்பவம் நடைபெற்றதாகச் சொல்லப்படும் இரண்டு நாட்கள் கழித்து- கொடுத்த முழுக்க முழுக்கப் பொய்யான புகார்தான் காவல்துறையினர் அத்துமீறிய வன்முறையை அப்பாவிகள்மீது கட்டவிழ்த்துவிடக் காரணமாக அமைந்தது. அதோடு மட்டுமல்லாமல், அப்பொய்ப்புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யச் சொல்லி வலியுறுத்தியதும், அவ்வாறு பதிவு செய்யப்பட்டதும் அவ்வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி கைது செய்யப்பட்டால்தான் தாங்கள் கைது நடவடிக்கைக்கு உட்படுவோம் என்று கூறியதும் வழக்குரைஞர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்தக் காத்திருந்த காவல்துறையினருக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது. இந்தத் தாக்குதலில் வழக்குரைஞர்கள் பார்த்தசாரதி மற்றும் கயல்விழி ஆகியோர் மட்டுமே குற்றம்சாட்டப்பட்ட வழக்குரைஞர்களில் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டவர்கள். மற்;ற அனைவரும் தற்காலிகத் தலைமை நீதிபதியிடம் பாதுகாப்பாக முறையிட சென்றுவிட்டனர்.

காவல்துறையினரின் அராஜகம்:

பிப்ரவரி 17 சம்பவத்திற்கு உயர்நீதிமன்றமே விசாரணைக்கு உத்திரவிட்டிருந்த சூழ்நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவைப் பெறhமல் அச்சம்பவத்திற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தது இத்தாக்குதல் சம்பவத்திற்கு முக்கிய அடிப்படை ஆகும். அதிலும், உரிய விசாரணை ஏதும் மேற்கொள்ளாமல் தற்போதைய நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் நன்கு அறியப்பட்ட வழக்குரைஞர்களை குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்த்ததுடன், சாதாரணத் தாக்குதல் சம்பவத்தை கொலை முயற்சி வழக்காக பதிவு செய்ததும் காவல்துறையினரின் கட்டவிழ்ந்தப் போக்கிற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

அதேபோல் பிப்ரவரி 18 அன்றிரவு வழக்குரைஞர் கினி இமானுவேலை கைது செய்து சிறையில் அடைத்ததும் காவல்துறையினர் உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறியாமல் செய்த சட்டமீறலாகும். இதன் காரணமாகத்தான் பிப்ரவரி 19 அன்று காலை முதல் உயர்நீதிமன்ற வளாகத்தில் இனம்புரியாத பதற்றம் நிலவியது. பிப்ரவரி 19 அன்று தற்காலிகத் தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறைக்குள்வரை ஆயுதம் ஏந்திய முன்னூறுக்கும் மேற்பட்ட போலீசார் சுப்பிரமணியன் சுவாமிக்கு பாதுகாப்பு என்ற பெயரில் குவிக்கப்பட்டதும் நீதிமன்றத்தை மிகவும் அவமதித்த செயலாகும்.

பிப்ரவரி 17 சம்பவத்தில் மீதம் உள்ள குற்றம்சாட்டப்பட்ட வழக்குரைஞர்களைக் கைது செய்வது குறித்து எவ்வித தௌpவான நிலைபாடும் எடுக்காமல், உயர்நீதிமன்ற வளாகத்தில் பிப்ரவரி 19 காலை முதல் ஏற்பட்டிருந்த பதற்றத்தைத் தணிப்பதற்குப் பதிலாக, மேலும் அப்பதற்றத்தை தூண்டிவிடும்வகையில, உயர்நீதிமன்ற தற்காலிகத் தலைமை நீதிபதியின் முன் அனுமதியின்றி, நாள் முழுவதும் தொடர்ச்சியாக குவிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான காவலர்களின் இருப்பும் பதற்றத்தை மென்மேலும் கூட்டுவதாகவே அமைந்தது.

கைது நடவடிக்கைக்கு உட்படுவதாகக் கூறிய வழக்குரைஞர்களை சட்டப்படி கைது செய்யாமல் வழக்குரைஞர்களிடையே பதற்றத்தை மென்மேலும் ஊக்குவிக்கும் வகையில் காவல்துறைச் செயல்பட்டதும் மிகவும் கண்டிக்கதக்கது. கலவரத்திற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாத சூழ்நிலையில் வழக்குரைஞர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் நோக்கத்துடன் நிகழ்த்தப்பட்ட கொடுந்தாக்குதல் நீதித்துறையின் மீதான காவல்துறையின் வன்மத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கலவரம் என்ற ஒன்று ஏற்பட்டால் கூட அச்சூழலிலும் காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய சட்ட நடைமுறைகள், நெறிமுறைகள் உள்ளன. அவற்றில் எதையும் குறைந்தபட்ச அளவி;ல் கூட பின்பற்றhத காவல்துறையினர், கண்ணில்பட்ட நபர்களையெல்லாம் மண்டைக் காயம் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே உள்நோக்கத்துடன் செயல்பட்டது காவல்துறையினரின் அராஜகப்போக்கையே காட்டுகிறது.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் என்று இல்லாமல் கண்ணில்பட்ட நபர்களையெல்லாம் காவல் துறையினர்; தாக்கியுள்ளனர். நீதிமன்ற அலுவலகங்களும் நீதிமன்ற அறைகளும் கூட இத்தாக்குதலில் பலிவாங்கப்பட்டன. மேலும், நீதிமன்ற வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களையும், நீதிமன்றச் சொத்துகளையும் காவல்துறையினர் சேதப்படுத்தியதற்கு எவ்வித காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. அதேபோல், நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே எதிரே இருந்த தெருக்களில் நடமாடியவர்களும் கூட இக்கொடூரத் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. இந்த கொடூரத் தாக்குதலை தலைமை தாங்கி முன்னின்று நடத்தியது சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் திரு. கே. இராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகளும் ஆவர். இதன் மூலம் மாநில அரசின் ஆசி பெறாமல் இந்த வன்முறைத் தாண்டவம் அரங்கேறி இருக்காது என்பது உறுதியாகிறது. இதற்கான உள்நோக்கம் என்ன என்பது குறித்து தனி ஒரு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கப்பட வேண்டும்.

நமது கோரிக்கைகள்

1. சட்டமீறல் நடவடிக்கைகளில் வழக்குரைஞர்கள் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமே தவிர, வன்முறையைக் கட்டவிழ்த்து நீதிதுறையையே நிலைகுலையச்செய்த காவல்துறையினர், குறிப்பாக தமிழக காவல்துறை இயக்குநர், சென்னை காவல்துறை ஆணையாளர், மற்றும் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட குறிப்பிட்ட காவலர்கள் என அனைவர் மீதும் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படவேண்டும். இது தவிர, துறைசார்ந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும். அதற்கு ஏதுவாக இவர்கள் அனைவரையும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்படவேண்டும்.

உயர் நீதிமன்றத்தில் தற்காலிகத் தலைமை நீதிபதியிடமோ அல்லது தலைமைப் பதிவாளரிடமோ முன்அனுமதி பெறhமல் பல்வேறு ஆயுதப் படையைச் சேர்ந்த காவலர்களை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வந்தது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகக் கருதப்படவேண்டும். அதற்குக் காரணமான உயர்காவல்துறை அதிகாரிகள் அனைவர்மீதும் வழக்கு தொடரப்பட வேண்டும். 3. பிப்ரவரி 17 சம்பவத்தில் வழக்குரைஞர்கள் ஈடுபட்டதாக உயர்நீதிமன்றம் தக்க விசாரணைக்குப் பின்முடிவு செய்யும்போது அவ்வழக்குரைஞர்களுக்கு எதிராக சட்டபடி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

- சு.சத்தியச் சந்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)