karl marx 350புரட்சியாளர்கள் யார்? புரட்சிகர அமைப்புகள் எவை? புரட்சிகர அணிசேர்க்கை என்றால் என்ன? தனிமனிதர்கள், நிகழ்வுகளை, அமைப்புகளை பற்றி எப்படி மதிப்பீடு செய்வது, தேர்தல்கள் பற்றிய ஒரு மார்க்சிய அணுகுமுறை

Reason has always existed, but not always in a reasonable form. The critic can therefore start out from any form of theoretical and practical consciousness and from the forms peculiar to existing reality develop the true reality as its obligation and its final goal – Karl Marx

காரணம் எப்போதும் இருந்து வருகிறது. ஆனால் எப்போதும் அதன் காரண காரியமான வடிவத்தில் இருப்பதில்லை. எனவே விமர்சிப்பவர் எந்தவொரு கோட்பாட்டு, நடைமுறை யதார்த்ததில் இருந்து தொடங்கலாம்.

அது தற்போதுள்ள யதார்த்தத்திற்கு தனிசிறப்பான குறிப்பிட்ட வடிவங்களிலிருந்து உண்மையான யதார்த்தத்தை நோக்கி வளர்த்தெடுப்பதை அதன் கடமையாகவும் அதன் இறுதி இலக்காகவும் கொண்டிருக்க வேண்டும் என்பார் மாமேதை காரல் மார்க்ஸ்.

மார்க்சியம் என்பது நமது சமூகத்தின் முன் வைக்கப்பட்ட ஒரு புரட்சிகர தத்துவமாகும். அதாவது இந்த உலகத்தை, மனித சமூகங்களை, தனிமனிதர்கள், உயிர்சூழலை ஒருங்கிணைந்த முறையில் புரிந்துக் கொள்வதற்க்கான புரட்சிகர தத்துவம் கண்ணோட்டமாகும்.

தோழர் காரல் மார்க்ஸ்க்கு முன்பு வரை வந்த எல்லா தத்துவங்களும் உலகத்தை, இயற்கையை, உயிர் வாழ்க்கையை, மனித சமூகத்தை விளக்கி காட்ட வந்தவைகளாகும். மார்க்சியம் என்பதோ உலகத்தை, உயிர் வாழ்க்கையை, மனித சமூகத்தை விளக்கும் தத்துவமாக இல்லாமல் உலகத்தை மாற்றி அமைக்கும் தத்துவமாக தன்னை அறிவித்து கொண்டது. பிரகனப்படுத்தியது. மற்ற தத்துவங்களுக்கும் மார்க்சியத்திற்கும் இடையிலான இந்த அடிப்படை வேறுபாட்டை புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

மார்க்சிய தத்துவத்தின் அடிப்படைகள்

1. வரலாற்று இயக்கவியல் பொருள்முதலியல்,
2. வர்க்க போராட்டம்,
3. அறிவியல்பூர்வமான கம்யுனிசம்

என்பவைகளாகும். இவைகளின் மீது கட்டி அமைக்கப்பட்டதுதான் மார்க்சிய தத்துவமாகும். இந்த அடிப்படைகளை விட்டு அல்லது தனித்தனியாக எந்த நிகழ்வை, மனிதர்களை, கொள்கைகளை, அமைப்புகளை, சமூக குழுக்களை, இயற்கையை மதிப்பீடு செய்வது கம்யுனிச தத்துவத்திற்கு எதிரானது.

மார்க்சியம் என்பது வரட்டு சூத்திரம் அல்ல.. குறிப்பான முரண்பாடுகளுக்கும் (இயங்கியலுக்கும்), வரலாற்றுக்கும், பொருளியல் சூழலுக்கும் ஏற்ப மாறுபடும். வளரும், வளர்ந்துள்ளது. வளர்ந்துக் கொண்டிருக்கும் புரட்சி தத்துவம். அதனால் தான் இந்த புரட்சிகர தத்துவம் லெனினியமாக, மாவோ சிந்தனையாக அல்லது மாவோயியமாக வளர்ந்துள்ளது.

இன்னும் சிறப்பாக வளரும்.. மாறும்… புதியனவற்றை இணைத்துக் கொள்ளும். மார்க்சியம் அடிப்படை கோட்பாடுகளையும், குறிப்பான அரசியல் சூழலியலையும் என்ற இரண்டையும் தன்னுள் கொண்டது..இது அனைவருக்கு தெரிந்தது எனினும் இதனை ஆழமாக உணர்ந்து கற்று கொள்ள வேண்டும்.

அடிக்கடி வரும் விவாதங்களில் வரட்டு கோட்பாட்டாளர்களுக்கும், நடைமுறையாளர்களும் இதில் பிளவுகள் தமிழகத்தில், இந்தியாவில் இருக்கின்றன. உலகம் முழுவதும் எல்லா தேசங்கள், நாடுகளில் இவை உள்ளன..

சன் யாட் சென், ஸ்டாலின் பற்றிய மதிப்பீடுகளை மாவோ விவரிக்கிறார். இன்னும் பல்வேறு போராட்டங்கள், இயக்கங்களை பற்றிய மதிப்பீடுகளை மாவோ முன் வைக்கின்றார். சதாரண மனிதன், இளஞன் புரட்சியாளானா என்பதை எப்படி மதிப்பீடு செய்வது என்று விவரிக்கின்றார்.

'ஒரு இளஞன் ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழ்நிலையில் தொழிலாளர்கள் உழவர்களுடன் இணைத்துப் போராடுகிறானா.. நேற்று அவன் அப்படி இருந்தால் தொழிலாளர்களுடன் இணைந்து போராடினால் அவன் புரட்சியாளன்.. இன்று அவனே இணைந்து போராடவில்லையெனில் அவன் எதிர் புரட்சியாளன்' என்கிறார் மாவோ.

எதிர் புரட்சியாளன், புரட்சியாளன் என்று தனிமனிதர்களை, புரட்சிகர இயக்கங்கள், எதிர்புரட்சிகர இயக்கங்கள் என்று அமைப்புகளை மதிப்ப்பீடுகள் எப்பொழுதும் ஒன்றாக இருக்காது.

குறிப்பான சூழ்நிலைகள், அரசியல் நிகழ்வு போக்குகளில் மாறுபடும். மாறிக் கொண்டு இருக்கும். எனவே, சமூக மாற்றத்தில், புரட்சியில் தீர்க்க வேண்டிய அடிப்படையான விசயம் நண்பர்கள், எதிரிகள் யார் என்பதாகும்.

இது புரட்சியின் மூல யுத்தி, செயல் யுத்திகள், புரட்சி முன்னேறும் பல்வேறு கட்டங்களை, பின்னடைவு காலக் கட்டங்கள், மக்கள்திரள் போராட்ட அலை ஏற்றங்கள், அலை இறக்கங்கள் பொறுத்து தீர்மானிக்கப்படும் என்று புரட்சிகளை முன்னின்று நடத்திய கம்யுனிஸ்ட் கட்சிகள் நமக்கு விளக்கி விட்டு சென்றுள்ளன.

குறிப்பான இன்றைய இந்திய அரசியல் சூழலில், பார்ப்பனீய தத்துத்துவத்தை வழிகாட்டியாக கொண்ட இந்துத்துவா பாசிசம் அரசியல் அதிகாரத்திற்கு வந்துள்ளது. மிகத் தீவிரமாக பார்ப்பனீய, சாதிய, இந்துமத கருத்துக்களை, செயல்பாடுகளை ஒருபுறமும், ஏகாதிபத்திய நலன்களை, கார்ப்பரேட் நலன்களை, பெருமுதலாளிகளின் நலன்களை செயல்படுத்து என்று மற்றொரு புறமாக மிருகத்தனமான அதிகாரத் திமிருடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இவற்றின் மூல ஊற்றுகளாக மனுஸ்மிருதி, அர்த்த சாஸ்திரம், பகவத்கீதை போன்ற சமூக நீதி, வர்க்க பொருளாதார ஏற்றதாழ்வுகள், கோட்பாடு - தத்துவத்தில் கருத்து முதல்வாத கருத்துகளை, ஏகாதிபத்திய நவகாலனிய கொள்கைகளை இணைத்து கொண்டு செயல்படுகிறது.

இதிலிருந்து கிளைத்து வளர்த்த அத்வைதம், துவைதம், சைவம் போன்ற பல்வேறு தத்துவ பள்ளிகளிலும், இவைகள் அனைத்தையும், பல்வேறு வைதீக மரபுகளையும் இணைத்து பிரிட்டன் காலனிய ஆதிக்கமும், பார்ப்பனீயமும் இணைந்து உருவாக்கிய இந்து மதமும் முக்கிய கருத்தியல் ஆதிக்கமாக தொடர்கிறது.

நுகர்வுவெறி பண்பாடும், சமூகமாக சிந்திப்பதற்கு மாறாக தனிமனிதர்கள் தீவுகளாகவும் ஏகாதிபத்தியம் மக்களை மாற்றி உள்ளது. இதன் அடிப்படையின் மீதுதான் ஏற்றத் தாழ்வுகளை, படிநிலை சுரண்டல் பிரமீடு அமைப்பு கருத்தியலில் அமைந்த இராமாயணம், மகாபாரதம், ஸ்மிருதிகள், புராணங்களை, கம்ப ராமாயணம் இன்னும் எண்ணற்ற நவீன இலக்கிய, கலைகள் தொடர்ந்து இதை மக்கள் மனங்களில் திணிந்து அவர்களின் துயரங்களை திசைதிருப்பி, புரட்சி கனலை மழுங்க செய்கின்றன என்பது புறநிலை யதார்த்தமாகும்.

இன்று ஆட்சி அதிகார்த்தை கைப்பற்றி உள்ள பாஜக கட்சி ஒவ்வொரு திட்டங்களிலும் குயபுத்தியுடன், சதிதனத்துடனும், புளுகு மூட்டைகளுடன், அரை உண்மைகளுடன், துரோகங்களுடன் மேற்கண்ட அனைத்தையும் இணைந்த இந்துத்துவா பாசிசத்தை அனைத்து தளங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

ஒரே தேசம் - ஒரே குரல், உலகமயமாக்க்கல், தாராளமயமாக்கல், புதியகாலனியமாக்கல், பாகிஸ்தான் மீதான போர் வெறி, ஜி.எஸ்.டி, புதிய கல்வி கொள்கை, பசுவதை தடைச் சட்டம், பொது சிவில் சட்டம், காஷ்மீர் இன மக்கள் மீதான இராணுவ வன்முறை, மாட்டிறைச்சி உணவு அரசியல், நீட் தேர்வு, 10% பொருளாதார அரியவகை ஏழைகளுக்கான (பார்ப்பனர்கள்) இடஒதுக்கீடு, தலித்துக்கள் - பெண்கள் - சிறுபான்மையினர் - அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான பன்முகத்தாக்குதல்கள்… என்று பன்முனை பொருளாதார, பண்பாட்டு, சமூக தாக்குதல்களை, சுரண்டல்களை மோடி அரசாங்கம் தொடர்ந்து செய்கின்றது. இன்னும் அதை மிக தீவிரமாக திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் கொடூரங்களை அரங்கேற்றப் போகின்றது

இந்த குறிப்பான வரலாற்று, சமூக, அரசியல், பொருளியல் சூழலில் கம்யுனிஸ்டுகள் மட்டுமா புரட்சியாளர்கள்..?

சாதி சனநாயகத்திற்கு, பாசிச கொடுங்கோன்மைகளுக்கு மாற்றக சமூக சனநாயகத்தை, மனித உரிமைகளை முன் நகர்த்தும், பொருளாதார ஏற்றத்தாழ்வு சுரண்டல்களுக்கு எதிரான அனைத்துப் போராட்டங்களும், பலவேறு மக்கள் திரள்களின் கிளர்ச்சிகளும், பதிவுகளும் அவற்றை செய்யும் மனிதர்கள், அமைப்புகள் அனைவரும் புரட்சியாளர்கள், புரட்சிகர சக்திகள் ஆவார்கள்.

பாசிசத்திற்கு எதிராக மூன்றாம் அகிலத்தின், பல்வேறு கம்யுனிஸ்டு கட்சிகள் அய்க்கிய முன்னணி செயல்திட்டங்கள் இதைத்தான் விரிவாக கூறுகின்றன. பாசிசத்திற்கு எதிராக பரந்து விரிந்த கூட்டணிகளும், அய்க்கிய முன்னணிகளும், அனைத்து மக்களும் அணிதிரளும் மக்கள்திரள் போராட்டக் களங்களும் தேவை.

இந்த அடிப்படையில் பாசிசத்திற்கு எதிராக களத்தில் உள்ள அனைவரும் புரட்சியாளர்கள்!

தலித் இயக்கங்கள், பெரியார் இயக்கங்கள், தமிழ்தேசிய இயக்கங்கள், பல்வேறு கம்யுனிஸ் கட்சிகள் புரட்சிகரமானவை! இந்த அவைதீக மரபுகளை மறுத்த பல்வேறு சிறுபான்மை சக்திகளும் புரட்சியின் அங்கங்கள்! ஏகாதிபத்திய - புதுகாலனிய சுரண்லுக்கு எதிரான இயக்கங்கள் புரட்சியின் உந்துவிசைகள்! இதுதான் இன்றைய குறிப்பான மார்க்சிய திட்டத்தின் அடிப்படையாக இருக்க முடியும்!

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் கால கூட்டணிகள், அரசியல் அணிச் சேர்க்கைகளுக்கு இந்த கொள்கைதான் முதன்மையானது.

நம்நாட்டின் குறிப்பான பார்ப்பனீய பாசிசத்தை தேர்தல் உட்பட அனைத்து களங்களிலும் பாசிச எதிர்ப்பு கூட்டணிகளை, அய்க்கிய முன்னணிகளை, கூட்டு அரசியல் - நடைமுறை இயக்கங்களை, கூட்டுச் சிந்தனைகளை வளர்க்கும் விதமாக புரட்சியாளர்கள்! இதனை சிதைக்கும் அனைத்தும் மார்க்சிய விரோத செயல்களே!

புரட்சியாளர்கள் யார் என்பதில் மார்க்சிய - லெனினிசம் என்ற நிலைப்பாடு குறித்து ஆழமான ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளாமல் சில மேலோட்டமான வார்த்தை ஜாலங்கள், கோட்பாடு - மேற்கோள்கள் புலம்பல்களின் அடிப்படையில் தொடர்ந்துச் செயல்படுவது, விவாதிப்பது போவாத ஊருக்கு வழிகாட்டுவதாகும். இயக்க மறுப்பியல் கண்ணோட்டமாகும்!

- கி.நடராசன்