rajasdas DGPஇந்தியாவில் முன்னால் பிரதமரின் மகள் பிரியங்கா காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில், “மனித தன்மையற்ற கொடூர நடத்தையினால் தலித் பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இறந்து போய்விட்டார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹத்ரஸ் மாவட்ட பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் பாதிக்கப்படப் பெண் பரிதாபமாக இறந்து போனார்.

பெண்களுக்குப் பாதுகாப்புக்கான எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாத மாநிலம் என்றால் அது யோகி ஆதித்யநாத்தின் உத்தரப் பிரதேசம்தான். ஹத்ரஸ், ஷாஜஹான்பூர், கோரக்பூர் என்று மாறி மாறி பாலியல் வன்கொடுமைகள் தொடர்கின்றது. குற்றவாளிகள் வெளிப்படையாகவே குற்றங்களைச் செய்து வருகின்றனர் என்றார்.

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை

தமிழகத்தில் தினசரி செய்திதாள்களை திறந்தாலே இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக பாதுகாப்பு உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று கோடிக்கணக்கான பணத்தை அள்ளி இறைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தினந்தோரும் விளம்பரம் செய்கிறார்.

ஆனால், முதல்வர் பாதுகாப்பிற்காக வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் சித்திரவதை ஏற்பட்டுள்ளது. இந்த மனித தன்மையற்ற கொடூரத்தை செய்தவரைத்தான் சட்டம், ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸை வரம்பு மீறி ஆளும்கட்சி விசுவாசத்தை அங்கீகரிக்கும் விதமாக சட்டம், ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக தமிழக முதல்வர் பதவி உயர்வு தந்துள்ளார்.

யார் இந்த ராஜேஸ் தாஸ்?

தமிழகத்தில் கொரோனா தாக்குதல் உச்சகட்டமாக இருந்த சமயத்தில் சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா இராஜேஸ்சின் கணவர் தான் ராஜேஸ் தாஸ், இவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். 1989 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று தமிழக பணிக்கு நியமிக்கப்பட்டார்.

திருவள்ளூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி உள்ளார். திருவள்ளுர் மாவட்டத்தில் 2002 ம் ஆண்டு எஸ்பியாக பணியாற்றிய போது காவலர் ஒருவரை பெல்டால் அடித்ததற்காக மனித உரிமை ஆணையத்தால் ரூ.2 லட்சம் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளார். மேலும் அதே மாவட்டத்தில் பெண் டிஎஸ்பி ஒருவருக்கு பாலியில் துன்புறுத்தல் கொடுத்ததினால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அதன் பின் தென் மண்டல ஐ.ஜியாக பணியாற்றிய போது அமைதியாக போராடி வந்த கூடங்குளம் மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியவர். முல்லைப் பெரியாறு போராட்டத்தின் போது விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியவர்.

பரமங்குடி துப்பாக்கி சூட்டில் அப்பாவிகள் ஏழு பேர் கொலைக்கு காரணமானவர். இது போன்று தமிழகத்தில் உச்சகட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வந்தவர் தான் ராஜேஸ் தாஸ்.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு நடந்த பாலியல் சித்திரவதை

கடந்த 21ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடடி பழனிச்சாமி திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு தேர்தல் பரப்புரைச் சுற்றுப் பயணம் முடிந்து சேலம் சென்றார். முதல்வரின் பாதுகாப்புப் பணிக்காக சென்றிருந்த சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், கரூர் வரைச் சென்று அங்கிருந்து சென்னை திரும்பினார்.

அப்போது கரூரில் முதல்வரின் பாதுகாப்புப் பணியில் இருந்த ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரியைப் பார்த்ததும், ஒரு முக்கியமான விசயமாக பேசனும் காரில் ஏறும்படி கூறி உள்ளார். பெண் அதிகாரி காரில் ஏறியதும், தனது கார் டிரைவரைப் பார்த்து ராஜேஷ்தாஸ் முறைத்துள்ளார்.

டிரைவர் இறங்கியதும், பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் சித்திரவதையில் ஈடுபட்டுள்ளார். கடுமையான எதிர்ப்பு தெரிவித்து விட்டுக் காரை விட்டு பெண் அதிகாரி இறங்க முயன்றபோது, வலுக் கட்டாயமாக காரில் அமர வைத்து, டிரைவரை அழைத்துக் காரை எடுக்கும்படி கட்டளையிட்டுள்ளார்.

அதிர்ச்சியில் உறைந்திருந்த பெண் அதிகாரியிடம், 'கள்ளக்குறிச்சியில் எனக்கு தெரிந்தவரின் சொகுசு விடுதி உள்ளது. அங்கு இருவரும் செல்லலாம்’ என்று கூறியுள்ளார்.

ஆனால், அதற்கு உடனடியாகவும், உறுதியாகவும் மறுப்புத் தெரிவித்த அந்தப் பெண் அதிகாரி 'உங்கள் மகள் வயதில் உள்ள என்னிடம் நீங்கள் இப்படி நடக்கலாமா’ என்று கேட்டும், பொருட்படுத்தாமல் காரிலேயே பெண் அதிகாரியை பலவந்தப்படுத்த முயன்றுள்ளார்.

பின்னர் 'காரை நிறுத்தாவிட்டால் குதித்து விடுவேன். என் உயிர் போவது பற்றி எனக்கு அச்சமில்லை. ஆனால் அதற்கு பிறகான விபரீதங்களை நீங்கள் சந்திக்க வேண்டும்’ என்ற அளவுக்கு சென்று எச்சரித்துள்ளார். இதன் பின்னர் காரில் இருந்து பெண் அதிகாரியை இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

துணை நின்ற காவல்துறை

பாலியல் சித்திரவதையால் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி காரில் சென்னை புறப்படுவதைப் பார்த்து, தன் மீது அவர் புகார் தெரிவிக்கலாம் என உஷாரான ராஜேஸ் தாஸ், அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் இதற்கு முன் தனி பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்தவர் மூலம் சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.

அது, வெற்றி பெறாத நிலையில் அந்த பெண் அதிகாரியின் காரை மடக்கி அவரை தன்னிடம் பேச வைக்க கள்ளக்குறிச்சி எஸ்.பியின் உதவியை நாடியுள்ளார். அவர் மறுத்துள்ளார். பிறகு விழுப்புரம் எஸ்.பி யின் உதவியை நாடியுள்ளார். அவரும் மறுத்துள்ளார்.

அதன் பிறகு செங்கல்பட்டு எஸ்.பி கண்ணனை தொடர்பு கொண்டுள்ளார். உடனே அவர் ஒரு டிஸ்பி ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் தனது அதிரடிப் படையுடன் செங்கல்பட்டு சுங்கச் சாவடியில் வைத்து ஏதோ ஒரு குற்றவாளியை மடக்கி பிடிப்பது போல பெண் ஐபிஎஸ் அதிகாரியை வழிமறித்துள்ளார்.

தன்னுடைய செல்போனில் ராஜேஷ்தாஸிடம் பேசுமாறு நிர்பந்தித்துள்ளார். சமாதானம், மிரட்டல், உடல் ரீதியான மறித்தல் வரை தனது அதிகாரத்தை திணித்துள்ளார். அனைத்தையும் மீறிச் சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி தன் புகாரில் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் பெயரையும் சேர்த்துள்ளார்.

நீதி கிடைப்பது எப்போது

ஹத்ரஸ் மாவட்ட தலித் பெண்ணில் இருந்து, ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரியாக அதிகார மையத்தில் உயர்ந்திருந்தாலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாடு முழுவதும் தினம் தினம் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

அதிகார மையத்தில் இருப்போர் பெண்ணாக இருந்தாலும் பாலியல் புகார் தெரிவிக்கும் போது பெண்கள் ஆதரவற்ற நிலைக்கே தள்ளப்படுகிறார்கள்.

தமிழகத்தில் 2002 ம் ஆண்டு சட்டம் ஒழுங்கு டிஜிபி யாக இருந்த ரவீந்திரநாத் மீது ஒரு பெண் போலீஸ் அதிகாரி புகார் தெரிவித்தார். அதில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு நடவடிக்கை நின்று விட்டது. லஞ்ச ஒழிப்புத் துறையில் ஐ.ஜியாக இருந்த முருகன் மீது ஒரு பெண் ஐ பி எஸ் அதிகாரி பாலியல் புகார் தெரிவித்தார்.

ஆனால் சட்டத்தின் ஓட்டைகள் மூலம் தன் மீது நடவடிக்கை பாயாமல் தடுத்து தற்சமயம் தென்மண்டல ஐ.ஜியாக பணியாற்றி வருகிறார். இதேபோல் தமிழக ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இறுதியில் இவ் விவகாரம் தொடர்பான விசாரணையில் பேராசிரியர் சிக்கி பல்வேறு அவமானங்களை சந்தித்துச் சிறைக்கு சென்று தற்போது மவுனாகி விட்டார்.

பொள்ளாட்சியில் பல பெண்கள் பாலியல் சித்திரவதைக்கு உள்ளான விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் ஆளும் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களின் வாரிசுகள் சம்பந்தப்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமானது.

தற்சமயம் சிபிஐ விசாரணையில் ஆமை வேகத்தில் நகர்கிறது. இது போன்றே சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மீதே பாலியல் குற்றச்சாட்டு எழுந்த போது, அந்த விசாரணையை அவரே தலைமையேற்ற போதும் அவராகவே அதிலிருந்து விடுவித்துக் கொண்ட போதும், அவரின் ஒய்விற்கு பின் அவர் மூன்று மாதங்களில் மாநிலங்களவை உறுப்பினராகி அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட போதும் இனியும் பெண்களுக்கு நீதி கிடைக்குமா என்ற கேள்விதான் திரும்பத் திரும்ப எழுகின்றது.

- இ.ஆசீர், மனித உரிமை காப்பாளார் கூட்டமைப்பு