krishnasamy epsபுதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் நீண்டநாள் கோரிக்கையான பட்டியல் பிரிவில் உள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளர், தேவேந்திரகுலத்தான், வாதிரியார் என்ற 7 பிரிவினரையும் ஒன்றிணைத்து ஒரே சமூகமாக தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டிருகின்றது.

அவரின் கோரிக்கையை ஏற்று மாநில அரசு ஆணை பிறப்பித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. அதன்படி மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இதுகுறித்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிகின்றது.

ஆனால் கிருஷ்ணசாமி அவர்களின் மற்றொரு முக்கிய கோரிக்கையான பட்டியல் சாதிப் பிரிவில் இருந்து வெளியேறுதல் என்ற கோரிக்கையை மாநில மற்றும் மத்திய அரசுகள் ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை.

இது தொடர்பாக பேசிய கிருஷ்ணசாமி அவர்கள் "தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளின் ஒரு பகுதியான பெயர் மாற்ற திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ஆறு உட்பிரிவுகளைச் சேர்ந்த வகுப்பினரை 'தேவேந்திரகுல வேளாளர்' என்ற பெயரில் அழைப்பதோடு, பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. பட்டியல் பிரிவில் இடம் பெற்றதால் சமூக ஒடுக்குதல்களுக்கு ஆளாகினோம்.

புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கை என்பது பெயர் மாற்றம் மட்டுமல்ல; பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதும்தான். ஆனால், மத்திய அரசு பெயர் மாற்றத்தை மட்டும் நிறைவேற்றியுள்ளது.

பெயர் மாற்ற மசோதாவில் சிறு மாற்றம் கொண்டுவந்து பட்டியல் பிரிவில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே மத்திய அரசுக்கு நாங்கள் விடுக்கும் வேண்டுகோள். தமிழக அரசு வெறும் பெயர் மாற்றத்திற்கு மட்டுமே பரிந்துரை செய்துள்ளது.

பெயர் மாற்றத்தை, நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. மத்திய அரசின் நடவடிக்கை இடிந்த சுவருக்கு வர்ணம் பூசுவது போன்ற நடவடிக்கை. பட்டியல் பிரிவு வெளியேற்றம் என்பது எங்களது அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனை, பட்டியல் பிரிவில் இருந்து எங்களை நீக்கவில்லை எனில் சமத்துவத்தை விரும்பாதவர்கள் என்று தான் அர்த்தம்.

பட்டியல் பிரிவு வெளியேற்றம் அறிவிப்பு வரும் வரை எங்களது போராட்டம் தொடரும். பட்டியல் பிரிவில் இருப்பதால் அரசுப் பணி உள்ளிட்ட இட ஒதுக்கீட்டிற்காக நாங்கள் வெளியேறவில்லை; மாறாக சுயமரியாதைக்காகத் தான் வெளியேறுகிறோம்.

எந்த அரசியல் கட்சி மீதும் தனிப்பட்ட அனுசரணையாக நான் இருக்க மாட்டேன். ஒத்த கருத்து இருக்கக் கூடிய கட்சியோடு கூட்டணியில் இருந்திருக்கிறோம். எங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதால்தான் நாங்கள் பா.ஜ.க.வுடன் இணைந்தோம் என்றும் கூறியுள்ளார்.

கிருஷ்ணசாமி அவர்களின் பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைக்கு அவர் குறிப்பிடும் 6 சாதியை சேர்ந்த மக்களிடமிருந்தும் இதுவரை பெரும்பாலும் பெரிய அளவிலான எதிர்ப்பு இல்லாத காரணத்தால் பட்டியல் வெளியேற்றம் என்ற கோரிக்கைக்கு ஆதரவு இருப்பதாகவே தெரிகின்றது.

நம்முடைய விமர்சனம் கூட கிருஷ்ணசாமி அவர்களின் பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிரானது அல்ல. ஆனால் பட்டியல் பிரிவு சுயமரியாதைக்கு இழுக்கு என கருதும் கிருஷ்ணசாமி ஏன் சூத்திரன் பட்டத்தை தன்னுடைய மக்களுக்கு கட்ட துடிக்கின்றார் என்பதுதான்.

ஆனால் தன்னை சூத்திரன் என்று இந்துமதம் இழிவு செய்கின்றது என்பதை உணராமல் பட்டியல் சாதி மக்கள் மீது சாதிய வன்கொடுமைகளை கட்டவிழ்த்துவிடும் கேடு கெட்ட சமூகத்தில் நாம் கிருஷ்ணசாமியின் கோரிக்கை மீது தத்துவார்த்த போர்தொடுப்பது கேலிக்கூத்தானது.

அவர் வைக்கும் பல விமர்சனங்கள் முக்கியமானவையாக உள்ளது. குறிப்பாக “இடஒதுக்கீடு மட்டும் சமூகநீதியாக முடியாது” என்பது

சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் வஞ்சிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது உண்மைதான். இட ஒதுக்கீட்டின் மூலம் சமூகத்தில் கீழ் நிலையில் இருந்த பல சாதி மக்கள் அரசு அதிகாரத்திலும் இன்னும் பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் அடைந்திருக்கின்றார்கள்.

ஆனால் இவை எவையும் சாதி ஒழிப்பு என்ற இறுதி இலக்கை நோக்கிய பயணத்தில் எந்த முன்னேற்றத்தையும் கொண்டுவந்து விடவில்லை.

இட ஒதுக்கீட்டால் பயன்பெற்றவர்கள் சாதிச்சங்க தலைவர்களாகவும் சாதிய வன்மத்தை கொம்பு சீவி விடும் சாதி வெறியர்களாகவும் மாறி எந்த சாதி, சமூகத்தில் தன்னை சமூக மற்றும் கல்வி ரீதியாக முன்னேற தடையாக இருந்ததாக சொல்லி இட ஒதுக்கீட்டை பெற்றார்களோ இன்று அதே நபர்கள் தங்களின் சாதியை ஆண்ட சாதி என்றும் ஆண்ட பரம்பரை என்றும் சொல்லி அதே சாதியை வைத்து பிழைப்பு நடத்துபவர்களாக மாறி இருக்கின்றார்கள்.

மிக மிக சொற்பமான அளவே சாதி மறுப்பு திருமணங்கள் நடைபெறுகின்றன. சாதி ஆணவ படுகொலைகள் சமூகத்தின் பண்பாடாக மாறிக் கொண்டு இருகின்றது. சாதி மறுப்பு திருமணங்களை கட்டாயமாக்கவோ இல்லை குறைந்த பட்சம் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் சாதி மாறி காதலிப்பவர்களுக்குமான சட்ட ரீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்ய வக்கற்ற நிலையில்தான் கட்சிகள் இருக்கின்றன.

இட ஒதுக்கீடு எந்த வகையிலும் சாதிய இழிவை ஒழிக்கவில்லை என்றால் அதனால் பலனடைந்தவர்கள் எந்த வகையிலும் சாதி ஒழிப்பு சிந்தனை இல்லாதவர்களாக இருப்பார்களேயானால் நாம் ஏன் இன்னும் இட ஒதுக்கீட்டை காரணம் காட்டி பட்டியல் சாதி மக்களை அதே இழிநிலையில் இருக்க கட்டாயப்படுத்த வேண்டும்.

நாம் செய்ய வேண்டியது அவர்களை “நீ இங்கேயே இரு, உனக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று சொல்லி அவர்களை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு சூத்திர சாதி வெறியர்களின் சாதி வெறிக்கு இலக்காக மாற்றுவதா? இல்லை அவர்கள் விரும்பும் வகையில் அதாவது பட்டியல் வெளியேற்றம் என்பதை ஆதரித்து அவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய போராடுவதா என்பதை முடிவு செய்ய வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.

தலித்தாக வாழும் ஒருவனுக்குத்தான் தீண்டாமையின், சமூக ஒதுக்கலின் வலியை முழுமையாக உணர முடியும். எனவே பட்டியல் வெளியேற்றம் என்பதை முற்போக்குவாதிகள் ஆதரிப்பதுதான் நியாயமானது.

இருக்கும் சமூக அமைப்பில் எது சிறந்தது என்பதை அந்த மக்களே முடிவு செய்துகொள்ளட்டும். நாம் வலியுறுத்தலாம் “சூத்திர பட்டத்தை (பார்ப்பானின் வைப்பாட்டி ,மகன்) ஏற்றுக் கொள்வதைவிட இந்து மதத்தைவிட்டு வெளியேறுவது நிரந்தர தீர்வாக அமையும்” என்று.

ஆனால் “இந்து மதத்திற்கு உள்ளேயே நாங்கள் இருந்து கொள்கின்றோம் ஏற்கெனவே சூத்திரனாக இருந்து கொண்டு வெட்க மானமே இல்லாமல் இத்தனை நாளாக எங்கள் மீது தீண்டாமையையும் சமூக ஒதுக்கலையும் கடைபிடித்த பார்ப்பானின் வைப்பாட்டி மகன்களுக்கு இல்லாத சுரணையை நீங்கள் எங்களிடம் மட்டும் எதிர்ப்பார்ப்பது என்ன நியாயம்” என்று கேட்டால் அவர்களின் போக்கிற்கே அவர்களை விட்டுவிட வேண்டும்.

சூத்திர பட்டத்தை சுமந்துக் கொண்டே ஆண்ட பரம்பரை கதை பேசி இந்துமதத்தை போற்றும் சூத்திரர்கள் மத்தியில் தேவேந்திர குல வேளாளர்களும் சேர்ந்துக் கொள்வதால் எந்த மோசமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.

ஆனால் டாக்டர் கிருஷ்ணசாமியின் கனவு பலிக்குமா என்பதுதான் இப்போது கேள்விக்குறியாக உள்ளது. 7 சாதிகளை இணைத்து ஒரே சாதியாக அறிவிக்க மட்டுமே இப்போதைக்கு பார்ப்பன மோடி அரசு அனுமதி அளித்துள்ளது. அவரின் முக்கிய கோரிக்கையை இந்த அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை.

தன்னுடைய கோரிக்கையை வென்றெடுக்கவே கிருஷ்ணசாமி சங்கிகளுடன் சேர்ந்து தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் காலிகளை வளர்க்க உதவும் வேலையை செய்தார், செய்துக் கொண்டிருக்கின்றார் என்பதை அவரே சொன்னது போல “எங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதால்தான் நாங்கள் பா.ஜ.க.வுடன் இணைந்தோம்” என்பதுதான் மூலம் புரிந்துகொள்ள முடிகின்றது.

ஆனால் இவ்வளவு அடியால் வேலை பார்த்தும் கிருஷ்ணசாமியின் கோரிக்கையை பார்ப்பன பாதம் தாங்கி மோடி அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் துயரமானது. ஒருவேளை தான் அடிமையாக நினைக்கும் ஒரு சாதி அதில் இருந்து மேல்நிலையாக்கம் பெற்றுக் கொண்டால் தனக்கு யார் அடிமையாக இருப்பது என்று மனுவின் வாரிசுகள் சிந்தித்து இருக்கலாம்.

அது உண்மையாகவும் இருக்கலாம். இப்போதே வேளாளர் என்ற பெயரை தங்களைத் தவிர யாரும் பயன்படுத்தக்கூடாது என்று சில சூத்திர அடிமைகள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்து இருக்கின்றன.

கிருஷ்ணசாமிக்கு தெரியாதது ஒன்றும் அல்ல பிஜேபிக்கு சூத்திர சாதி வெறியர்கள் முக்கியமா? இல்லை சுயமரியாதைக்காக பட்டியலில் இருந்து வெளியேறுவது முக்கியமா? என்றால் அது எப்போதும் சூத்திர சாதி வெறியர்களுக்குதான் முன்னுரிமை கொடுக்கும்.

யாரை அடியாளாக வைத்துக் கொள்வது, யாரை அருகில் வைத்துக் கொள்வது என்பதெல்லாம் பிஜேபி காரனின் டிஎன்ஏவிலேயே இருக்கின்றது. சங்கிகளோடு சேர்ந்து சாதிய மேல்நிலையாக்கமடைய முயற்சிக்கும் கிருஷ்ணசாமிக்கு நிச்சயம் இது பெரிய அளவில் நிம்மதி இன்மையை ஏற்படுத்தும்.

வேண்டுமென்றால் சிவாஜி செய்தது போல செய்யலாம். சத்திரபதி சிவாஜி தன்னை அரசராக மகுடம் சூட்டிக் கொண்டதைப் பார்ப்பனர்கள் ஏற்க மறுத்தனர். சிவாஜி ஒரு சத்திரியர் வகுப்பைச் சார்ந்தவர் கிடையாது என்றும், அவர் ஒரு சூத்திரர் அல்லாத தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர் என்றும் பார்ப்பனர்கள் உட்பட 96 மராத்தி உயர்குடியினர் போர்க்கொடி தூக்கினர்.

மகாராஷ்டிராவில் உள்ள எந்தப் பார்ப்பனனும் சிவாஜி பதவியேற்கும் போது மதச் சடங்குகள் செய்யத் தயாராக இல்லை. எனவே சிவாஜி காசியில் இருந்து காகபட்டர் என்பவரை வரவழைத்து அவருக்குப் பெரும் பொருள் கொடுத்து வேதமுறைப்படி சடங்குகள் செய்ய வைத்து மகுடம் சூட்டிக்கொண்டார்.

அதே போல கிருஷ்ணசாமி தான் புனிதமாக நம்பும் இந்துமதத்தில் சூத்திர பட்டத்தை அடைய சில உண்டக்கட்டி பார்ப்பான்களுக்கு பெரும் அளவில் பொன்னும் பொருளும் கொடுத்து தன்னையும் தன் மக்களையும் சூத்திரர்களாக அறிவிக்க வைக்கலாம்.

எப்படியோ பட்டியல் வெளியேற்றம் என்ற கோரிக்கை நிறைவேறினால் மகிழ்ச்சியே. கிருஷ்ணசாமி அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கையை பார்க்க நாம் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றோம்.

- செ.கார்கி