Love Jihadபிப்ரவரி 14 வந்தாலே ‘கொண்டாட’ கிளம்பி விடுவார்கள் இரு தரப்பினர். முதலாமவர்கள் காதலர்கள் என்பது நாம் அறிந்ததே. இரண்டாவது தரப்பு கலாச்சாரக் காவலர்களான காவிப் படை! இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்க பரிவாரங்கள் காதலர்களைத் தாக்குவது, வற்புறுத்தி தாலி கட்ட வைப்பது, வாழ்த்து அட்டை விற்கப்படும் கடைகளை அடித்து நொறுக்குவது என அட்டகாசங்களை அரங்கேற்றும் நாளாகவும் காதலர் தினம் நம் நாட்டில் மாறிப் போனது கெடுவாய்ப்பே! இந்த ஒரு நாள் கூத்து காவி அரசுகளின் சட்டங்களால் காதலர்களின் வாழ்நாள் முழுவதும் கடும் நெடுக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

லவ் ஜிகாத் எனும் காதல் போர்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட காலம் போய், இன்று சர்க்காரால் நிச்சயிக்கப்படுகின்றன; காவல்துறையும் நீதிமன்றமும் அதற்கு அனுமதி வழங்க வேண்டும். சென்ற மாதம் உச்ச நீதிமன்றம் லவ் ஜிகாத் (காதல் போர்) சட்டங்களுக்கு எதிராக தடை விதிக்க மறுத்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது!

1954-ல் உ.பி.யின் முதல்வராக இருந்த சரண்சிங் (இவர் முன்னாள் பிரதமரும் கூட) அந்நாள் பிரதமர் நேருவுக்கு ஒரு பரிந்துரையை வழங்கினார். அரசு அதிகாரிகளாக விரும்புபவர்கள் தன் சாதிக்கு வெளியே திருமணம் செய்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது இக்கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு சட்டம் இயற்ற நேருவை கேட்டுக் கொண்டார்.

இது குடிமக்களின் தனி மனித சுதந்திரம் மற்றும் உரிமைக்கு எதிரானது என்று நேரு அதனை நிராகரித்தார். சரண்சிங்கின் மாநிலமான உ.பி.யில் இன்று நடப்பது என்ன?

உத்தரபிரதேசத்தில் நடக்கும் கொடுமைகள்

டிசம்பர் 2-ந் தேதி லக்னோவில் 24 வயது முஸ்லிம் ஆணுக்கும் 22 வயது இந்து பெண்ணிற்கும் ‘இந்து’ முறைப்படியே நடக்க இருந்த திருமணத்தை உ.பி. காவலர்கள் தடுத்து நிறுத்தினர். டிசம்பர் 6-ந் தேதி மோராதாபாத்தில் உள்ள திருமணப் பதிவு அலுவலகத்தை பஜ்ரங்தள் படையினர் முற்றிகையிட்டு, திருமணத்தை பதிவு செய்ய வந்த தம்பதியர்களைத் (முஸ்லிம் ஆணும் இந்து பெண்ணும்) தடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதில் வினோதம் என்னவென்றால் இந்த இருவருக்கும் கடந்த ஜூலை மாதத்திலேயே திருமணம் நடந்தேறிவிட்டது! சட்டம் வந்ததோ நவம்பர் மாத இறுதியில்தான்! அதே உ.பி. யில் கான்கேர்கேடே என்ற இடத்திலும் இதேபோன்று திருமணம் செய்துகொண்டு சில மாதங்களாக சேர்ந்து வாழ்ந்துக் கொண்டிருந்த 27 வயது முஸ்லிம் கணவனும் 24 வயது இந்து மனைவியும் அதே காவிக் கும்பல் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரித்து வைக்கப்படுகின்றனர்.

“என் கணவரின் குடும்பம், மதம் போன்ற பின்னணி எல்லாம் தெரிந்துதான் திருமணம் செய்துகொண்டேன்” என எவ்வளவோ கூறியும் அந்த முஸ்லிம் பெண் மீரட்டில் உள்ள அரசு மகளிர் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டார். கணவர் எந்த நேரத்திலும் சிறைக்கு அனுப்பப்படலாம்! இந்த காட்டுமிராண்டித்தனமான கொடுமைகள் எல்லாம் நடப்பதற்கு காரணம் என்ன?

மதமாற்றத் தடுப்பு அவசர சட்டம் 2020

உத்தரபிரதேசத்தில் காதல் என்ற பெயரில் (லவ் ஜிகாத்) இந்து பெண்கள் கட்டாய மதமாற்றத்துக்கு உள்ளாக்கப்படுவதாக பஜ்ரங்தள் உள்ளிட்ட காவிக்கும்பல் கூப்பாடு போட்டதின் விளைவாக, அதன் ஏவலாளி உ.பி. யோகி அரசு ‘சட்டவிரோத மதமாற்றத் தடுப்பு அரசர சட்டம், 2020’ என்ற ஒன்றை கடந்த 28 நவம்பர் 2020-ல் கொண்டுவந்தது.

இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்களை 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும். மேலும், திருமணத்திற்காக ஒருவர் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டிருந்தால், அத்திருமணம் செல்லாது என்று இந்த சட்டத்தின் கீழ் அறிவிக்கவும் முடியும். ‘மதம் மாறிய பிறகு திருமணம் செய்துகொள்ள விரும்பினால் இரண்டு மாதங்களுக்கு முன்பே மாவட்ட நீதிமன்றத்தில் முன்அனுமதி பெறவேண்டும்’ என்கிறது இச்சட்டம்.

இதுபோன்ற சட்டங்கள் இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், கர்நாடகா, மத்தியபிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களிலும் இயற்றப்பட்டன. மத்தியபிரதேச மாநில சட்டப்படி, 10 ஆண்டுகள் சிறையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்க முடியும்.

சாதி மறுப்புத் திருமணங்களுக்கு வழங்கப்படும் ரூ. 50,000 திட்டத்தை இந்தச் சட்டத்தைக் காரணம் காட்டி உத்தரகாண்ட் அரசு நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளது. உ.பி. முதல்வர் யோகி சொல்கிறார், “தங்கள் அடையாளங்களை மறைத்துக் கொண்டு, எங்கள் சகோதரிகளின் கண்ணியத்தோடு விளையாடுபவர்களை எச்சரிக்கிறேன். உங்கள் வழிகளைச் சரிசெய்யாவிட்டால், உங்களை பாடையில் ஏற்றி இடுகாட்டிற்கு வழிகாட்டுவேன்.”

லவ் ஜிகாத் அரசியலின் வரலாறு

2007-ல் குஜராத்தில் பஜ்ரங்தள் அமைப்புதான் முதன் முதலாக ‘லவ் ஜிகாத்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியது. காதல் ‘போரில்’ ஈடுபட்டிருக்கும் முஸ்லிம் இளைஞர்களிடமிருந்து இந்துப் பெண்களைக் “காப்பாற்ற” அவர்கள் பணிக்குழுக்களை நியமித்தனர். 2009-ல் கேரளா, கர்நாடகாவிலும் காவிப்படை இக்கருத்தைப் பரப்பியது.

கர்நாடகாவில் 30,000 இந்துப் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதல் என்று மயக்கி வைத்திருக்கிறார்கள் என பொய்ப் பிரச்சாரம் செய்தனர். நான்கு ஆண்டுகள் கழித்து, முஸாஃபர் நகரில் முஸ்லிம் இளைஞர் ஜட் சாதிப் பெண்ணை மானபங்கப்படுத்தியதாக பெரிய கலவரத்தை உருவாக்கினர். லவ் ஜிகாத்திற்கு எதிரான பிரச்சாரத்தை 2014 முதல் பாஜக அக்கட்சியின் கொள்கையாக்கி, தேர்தல் உத்தியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

கேரளாவில் லவ் ஜிகாத்

2016-ல் கேரளாவில் நடந்த ஹாதியா வழக்கு மூலம் லவ் ஜிகாத் என்ற சொல் தேசியஅளவில் பேசுபொருளானது. 24 வயது அகிலா இஸ்லாம் சமயத்திற்கு மாறி தன் பெயரை ஹாதியா என வைத்துக் கொண்டார். ஷஃபின் ஜஹான் என்ற முஸ்லிம் இளைஞரை மணந்தார். இதற்கு ஹாதியாவின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்ததோடு நீதிமன்றத்தையும் அணுகினர்.

கேரள உயர் நீதிமன்றம் 2017-ல் அந்தத் திருமணத்தை ரத்து செய்து ஹாதியாவைப் பெற்றோருடன் அனுப்பி வைக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து கணவர் உச்ச நீதிமன்றம் சென்றார். 2018-ல் ‘ஹாதியாவின் திருமணம் சட்டப்படி செல்லும்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது!

கேரளாவில் இவ்வாறு புகாரளிக்கப்பட்ட 89 திருமணங்கள் விசாரிக்கப்பட்டன. அவற்றில் 78 வழக்குகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று தள்ளுபடி செய்யப்பட்டன. 2005-ம் ஆண்டு கேரள கத்தோலிக்க ஆயர் பேரவை லவ்; ஜிகாத்திற்கு 4,500 பெண்கள் பலிகடா ஆகியிருக்கிறார்கள் என குற்றம் சாட்டியது. 2009-ல் கேரள முதல்வராக இருந்த உம்மன் சாண்டி, “2006 வரை மாநிலத்தில் 2,667 பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருக்கிறார்கள். இதில் ஒன்று கூட கட்டாய மதமாற்றம் இல்லை” என விளக்கம் தர வேண்டியிருந்தது.

‘லவ் ஜிகாத்’ எனும் போலிவாதம்

முஸ்லிம் இளைஞர்கள் திட்டமிட்டு இந்துப் பெண்களைக் காதலித்து திருமணம் செய்கிறார்கள் என்பது போலியான வாதம். (தமிழ்நாட்டில் தலித் இளைஞர்கள் ஆதிக்கச் சாதி பெண்களைத் திட்டமிட்டு காதலிக்கிறார்கள். இது நாடகக் காதல் என்ற ஒரு சாராரின் வாதத்திற்கு ஒப்பானது இது!) மத மாற்றங்களாலும், இரு மதத்தினருக்கிடையே நடைபெறும் திருமணங்களாலும் இந்துக்களின் எண்ணிக்கை குறைகிறது என்பதெல்லாம் ஒரே காவிக் கூச்சல்தான்.

அதில் எள்ளளவும் உண்மையில்லை. தேசிய பொருளாதார ஆய்வு கவுன்சில் தரும் புள்ளிவிவரம் இது. நம் நாட்டில் பெண்கள் மதம் மீறி செய்துகொள்ளும் திருமணங்கள் வெறும் 2.21 சதவீதம்தான்!

தனிமனித சுதந்திரம் மற்றும் மனித உரிமைக்கு எதிரான சட்டம்

இந்தச் சட்டங்கள் ஒருவரின் தனிப்பட்ட உரிமையையும், மதத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தையும் பறிக்கும் வகையில் இருக்கிறது. எந்தவொரு மதத்தையும் பின்பற்றுவதற்கும் பரப்புவதற்குமான உரிமையை அரசியலமைப்பு சட்டத்தின் 25வது பிரிவு வழங்குகிறது. மேலும், இச்சட்டங்கள் அனைத்தும் அரசியல் சட்டத்தின் 25வது பிரிவுக்கும், திருமணம் செய்துகொள்ளும் அடிப்படை உரிமைக்கும் எதிரானவை.

1954-ல் இயற்றப்பட்ட சிறப்பு திருமணச் சட்டம் இரு மதத்தினருக்கிடையே நடைபெறும் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியது. இதற்கு முற்றிலும் எதிரானது காவி அரசுகளின் இந்த புதிய சட்டம்! ‘ஃபிரான்ஸ் இளைஞரை மணந்த தமிழ்ப்பெண்’ என்பது இன்று மகிழ்ச்சியான செய்தி; நாளை இது குற்றச்செய்தி ஆகலாம்! எனவே இச்சட்டங்கள் அரசியலமைப்பு சட்டம் தருகின்ற உரிமைகளுக்கு மட்டுமல்ல சர்வதேச மனித உரிமை பிரகடனத்திற்கும் (குறிப்பாக அனைத்து விதமான பாலின மற்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குதல்) எதிரானது. ஏனெனில் இந்தியாவும் அதில் கையெழுத்திட்டிருக்கிறது!

ஆணாதிக்க சட்டம்

வயது வந்த பெண்களை சொத்தாகப் பார்க்கும் கருத்தியலே லவ் ஜிகாத். எனவே இச்சட்டத்தின் அடிப்படை ஆழ்ந்த ஆணாதிக்கமே! 1920 -களில் வட இந்தியாவில் இந்து பெண்கள் ஆடு மாடுகளைப் போல கடத்திச் செல்லப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதே மனநிலை இன்று உயிர்ப்பிக்கப்படுகிறது. இந்த சட்டம் முஸ்லிம் ஆண்களை குறிவைப்பதாக வெளியில் தெரிந்தாலும், உண்மையிலேயே இது இந்துப் பெண்களுக்கு வாழ்க்கையை நரகமாக்குகிறது.

காதல் போரும் ஊடகங்களும்

லவ் ஜிகாத் பிரச்சனை ஊடகங்களையும் விட்டு வைக்கவில்லை. விக்ரம் சேத் எழுதிய “பொருத்தமான பையன்” என்ற நாவலைத் தழுவி நெட்ஃபிலிக்ஸ் சேனலில் ஒரு தொடர் கடந்த நவம்பர் மாதத்தில் ஒளிபரப்பானது. அதில் மிகச் சாதாரணமான ஒரு காட்சி; கதாநாயகி நாயகனை முத்தமிடுவது. கதைப்படி நாயகன் முஸ்லிம், நாயகி இந்து.

போதாதா! மத்தியபிரதேசத்தில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் உறுப்பினர் ஒருவர் அந்த சேனலின் அதிகாரிகள் மன்னிப்புக் கேட்கவேண்டும் என காவல் நிலையத்தில் புகார் தருகிறார். அதற்கு அவர் கூறும் காரணம் அந்த காட்சி லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கிறதாம்! கடந்த அக்டோபர் மாதத்தில் ஒளிபரப்பான தனிஷ்க் நகை அணிகலன்கள் விளம்பரம் திடீரென்று நிறுத்தப்பட்டது. அதற்குக் காரணமும் இருமதத்தைச் சேர்ந்த தம்பதியினர் அந்த விளம்பரத்தில் காட்டப்பட்டதற்கு எதிரான காவிக் கூச்சலே!

தேவை: பாதுகாக்கும் சட்டங்களே

திருமணம் செய்ய கணவன் அல்லது மனைவியை தேர்ந்தேடுக்கும் தனிமனித உரிமையை ஆதரித்து பல நீதிமன்ற தீர்ப்புகள் வந்திருக்கின்றன. ஏற்கனவே குறிப்பிட்ட 2018-ல் ‘ஹாதியா’ வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தொடங்கி, 11 நவம்பர் 2020-ல் அலகாபாத் உயர் நீதிமன்றம், 30 நவம்பர் 2020-ல் கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் செப்டம்பர் 2019-ல் உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு போன்றவை வழங்கிய தீர்ப்புகள் என பல உதாரணங்ளைச் சுட்டலாம்.

இரு மதத்தினரிடையேயான திருமணங்களைப் பாதுகாக்க இருக்கும் ஒரே சட்டம் 1954-ல் இயற்றப்பட்ட திருமண சிறப்புச் சட்டம். ஆனாலும் இதில் நிறைய குறைபாடுகள் இருக்கின்றன. இச்சட்டப்படி 30 நாட்களுக்கு முன் திருமணப் பதிவு அலுவலகத்தில்; கொடுக்கப்படும் தம்பதியரின் முழு விவரங்கள் தகவல் பலகையில் வெளியிடப்பட வேண்டியது அவசியம்.

மதவெறிக் கும்பல் இத்தகவல்களின் அடிப்படையில் திருமணம் செய்யவிருக்கும் ஆணையும் பெண்ணையும் மிரட்டுவதும், வன்முறையில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி விட்டது! உ.பி. மற்றும் சில மாநிலங்கள் இயற்றியிருக்கும் மதமாற்றத் தடுப்பு சட்டங்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டவையா? அவை செல்லுபடியாகுமா? என விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இச்சூழலில், ஜனநாயகம், சமத்துவம், பன்மைத்துவம், தனிநபர் உரிமை மற்றும் எந்த மதத்தையும் பின்பற்றும் சுதந்திரம் போன்ற விழுமியங்களைப் பாதுகாக்கின்ற சட்டங்களே இன்றைய அவசர தேவை. அவற்றைக் காவல் மற்றும் நீதித் துறைகள் திறம்பட செயல்படுத்துவதும் காலத்தின் கட்டாயம். இதுவே உண்மையான காதலர் தினக் கொண்டாட்டமாக அமையும்.

- சி.பேசில் சேவியர்