rajini copyநடிகர் ரஜினிகாந்த் ஒரு சில நாட்களுக்கு முன் அவரது புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றதாக ஊடகங்களில் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது. ரஜினி வானூர்தி நிற்கும் இடத்திற்கே (Tarrmac) தனது வாகனத்தில் போய் இறங்கி 'போஸ்' கொடுக்கும் காட்சி புகைப்படமாக ஊடகங்களில் வெளியானது.

இதில் அப்படி என்ன செய்தி மதிப்பு இருக்கிறது? திரைப்பட உலக செய்திகளுக்காக நடத்தப்படும் ஏடுகளில் அல்லது மைய நீரோட்ட ஊடகங்களில் சினிமா செய்திகள் என்ற தலைப்பில் வெளியானால் கூட ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் ஒரு நடிகரின் தொழில் முறை பயணத்திற்கு இவ்வளவு முதன்மைத்துவம் கொடுத்து மைய நீரோட்ட ஊடகங்கள் செய்தி வெளியிடுவது சகிக்க முடியாததாக இருக்கிறது. போகட்டும், அவர்கள் அப்படித்தான். நாம் இப்போது பேசுவது இதில் சட்டத்தை மீறி ரஜினிகாந்த் நடந்துக் கொண்டதை பற்றித்தான்.

இந்திய வானூர்தி நிலையங்களில் வானூர்தி நிற்கும் இடத்திற்கே வாகனத்தில் போய் இறங்கி அப்படியே வானூர்தியில் ஏறுவதற்கு ஒரு சில வகையினரை மட்டுமே சட்ட விதிமுறைகள் அனுமதிக்கின்றன.

குடியரசு தலைவர், பிரதமர், அந்தந்த மாநில முதல்வர்கள், இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ளோர் என ஒரு சிலருக்கே அந்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்வர்களும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தனர். அதை கூட இரண்டு ஆண்டுகளுக்கு முன் அரசு ரத்து செய்து விட்டது.

நேரடியாக வானூர்தி நிற்கும் இடத்திற்கு போய் இறங்கும் பயணிகளின் கைப் பயணப்பைகள் சோதனைகளுக்கு உட்படுத்தப்படாமல் அவர்களது வாகனத்தில் இருந்து அப்படியே வானூர்திக்குள் சென்று விடும் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இதற்கு கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இப்போது நமக்கு எழும் கேள்விகள்...

சட்டம் இவ்வாறு இருக்க ரஜினிகாந்த் என்ன தகுதியில் வானூர்தி நிறுத்துமிடம் வரை தனது வாகனத்தில் சென்றார்?

இது விதிமீறல் என்று அவருக்கு தெரியுமா தெரியாதா?

தெரியும் என்றால் என்ன தைரியத்தில் இதை படம் பிடித்து வெளியிட்டார்?. (ஊடக செய்தியாளர்கள் அங்குச் சென்று படம் பிடிக்க வாய்ப்பில்லை. ஆகவே ரஜினிதான் சொந்தமாக படம் பிடித்து வெளியிட்டு இருக்கிறார்)

தெரியாது என்றால் இப்படி ஒரு பொது அறிவு அற்ற தற்குறியாக இருந்து கொண்டு இந்த நாட்டின் அரசியலையே மாற்றி அமைக்கப் போகிறேன் என அவர் பேசுவது தமிழக மக்களை கேலிச் செய்வது இல்லையா?

ரஜினிகாந்த்திற்கு பிரவுன் சுகர் கடத்தலில் தொடர்பு இருப்பதாக பா ஜ க வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி குற்றம் சாட்டி இருக்கும் நிலையில் அவரது பயணப்பைகள் பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படாமல் வானூர்திக்குள் அனுமதிக்கப்படலாமா?

இருக்கின்ற சட்டங்களையே மதிக்காத இந்த ரஜினிகாந்த்தான் 'சிஸ்டம் கெட்டுப்போயிருக்கு' என அதை சரி செய்யப் புறப்பட்டிருக்கிறார்.

காலக்கொடுமை!!!

- திப்பு