2000 மாவது வருஷம்... நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன்.

அப்போதே நான் ஆனந்த விகடனின் தீவிர வாசகன். அதில் மாணவர் பத்திரிகையாளர் திட்டம் என்று ஒரு ப்ரோஸெஸ் வருடா வருடம் நடப்பதுண்டு. அதில் கலந்து கொள்ளலாம் என்று அவர்கள் கேட்டது போல.. ஒரு கதையோ கட்டுரையோ எழுதி அனுப்பினேன். அதில் பாஸ் ஆகி விட்டதாகவும்.. நேர்முக எழுத்து தேர்வு கோவை - மணி ஸ்கூலில் ஒரு சண்டே நடப்பதாகவும் கார்ட் வந்தது.

எந்தவித முன்னேற்பாடும் எனக்கு இல்லை. விட்டேத்தி மனநிலை அப்போதிருந்தே இருந்ததால்... வெறுமனே உள்ளே சென்றேன். அங்கு சென்ற பிறகு ஸ்பாட்டில் டாபிக் கொடுத்து எழுதச் சொன்னார்கள். எனக்கு தெரிந்து குறைந்த பட்சம் 300 பேருக்கு மேல் எழுதி இருப்பார்கள்.

அந்த ரிசல்ட்டும் குறிப்பிட்ட நாட்களுக்கு பின் வந்தது. அதிலும் பாஸ். அதன் பிறகு.. நேர்முகத் தேர்வுக்கு சென்னைக்கு வர சொன்னார்கள். நான் பாலா கமல் மூவரும் போனோம். அங்கு அண்ணா சாலையில் கேட்டு கேட்டு ஆனந்த விகடன் அலுவலகத்துக்கு அப்படி இப்படி என்று ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே சென்று விட்டிருந்தோம்.

கோவையில் இருந்து நான்கே பேர் தான் தேர்வு. அதில் நானும் ஒருவன்.

டீ ஸ்னேக்ஸ் எல்லாம் தந்து... முதல் ஸெஸ்ஸன் திரு பாலசுப்ரமணியம் அய்யா அவர்கள் முன்னிலையில் நடந்தது. தனி தனியாக நிறைய பேசினார். நாங்கள் ஒரு 12 பேர் மட்டும் தான் அந்த செஸ்ஸனில் இருந்தோம். அதன் பிறகு மதியம் ஸெஸ்ஸன்...

ஒரு கேமரா மேன்... ஒரு ரைட்டர்... சேர்ந்து சென்னையைச் சுற்ற வேண்டும். அங்கிருக்கும்... சுவாரஷ்யமான தகவல்களை சேகரித்து படம் பிடித்துக் கொண்டு வர வேண்டும். இது தான் டாஸ்க்.

நானும் கோபி செட்டிபாளையத்தை சேர்ந்த ஒரு புகைப்படக்காரரும் ஜோடி சேர... சென்னை தலையும் புரியவில்லை காலும் புரிவல்லை. அப்போதிருந்த மனநிலை நிறைய பயத்தை சேர்த்து விட்டிருந்தது எனக்கு. சென்னையை கவனிக்கும் அதே நேரம் எனக்குள் நிகழும்.. பயத்தையும் கவனிக்க வேண்டி இருந்தது. யாரைக் கண்டாலும் பயம். எதைக் கண்டாலும் பயம். வேலையில் கவனம் ஊன்ற முடியவில்லை.

உட்கார்ந்த இடத்தில் இருந்து கதை எழுதுவது போல இல்லை... பத்திரிகையாளன் வேலை. அது தேடி அலைவது... தேகம் தேய ஓடி சேகரிப்பது... என்றெல்லாம் ஒரு மாதிரி முன் பின்னாக பின்னாளில் புரிந்தது.

(என்னை அலுவலகத்தில் விட்டுவிட்டு வெளியே சென்று மதியம் வருவதாக போன நண்பர்கள் மதியம் வந்து பார்த்து விட்டு.. என்னை காணாமல் என்னைத் தேடி... அலுவலத்தில் யாரிடமும் கேட்காமல்... அங்கிருந்து மீண்டும் வெளியே போயி... அன்று இரவு வரை நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமல் மாற்றி மாற்றி தேடி அலைந்து பிறகு அலுவகத்தில் சந்தித்து சண்டையிட்டுக் கொண்டது... வேறு கதை)

ஒருவழியாக அன்று மாலை ஆனந்த விகடன் அலுவலகத்தில்... அன்று மதிய செஸ்ஸனில் சென்னையில் கண்ட.. சேகரித்த... செய்திகள்... புகைப்படங்கள் எல்லாம் சமர்ப்பித்து விட்டு... கிளம்பி விட்டோம். டூ அண்ட் ப்ரோ எல்லாம் அவர்களே தந்தார்கள். அதன் பிறகு 15 நாட்கள் கழித்து செய்தி வந்தது.

"உங்களை தேர்வு செய்ய இயலவில்லை... தொடர்ந்து முயற்சிக்கவும்"

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எங்கே தப்பு நடந்தது என்று யோசித்து யோசித்து பார்க்கிறேன். என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

கோவை மருத்துவக் கல்லூரியில் இருந்து ஒரு பையன் (அவ்ளோ மொக்கையாக பேசினான்). காருண்யாவில் இருந்து ஒருவன் (அவ்ளோ சுயநலவாதியாக இருந்தான்) கிருஷ்ணம்மா கல்லூரியில் இருந்து பெண் (ஓரளவுக்கு எங்களை வழி நடத்தியது அவள் தான்) VLB JCAS யில் இருந்து நான். (ஸ்டைலாக இருந்தது நான் தான்.)

இதில் மற்ற மூவரும் செலக்ட் ஆகி இருந்தார்கள். நான் ஆகவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நான் யோசிக்க யோசிக்க... ஒரு விஷயம் புலப்பட்டது. அன்று நான் சென்னை சாலைகளில் கண்ட காட்சிகளை எல்லாமே தொகுத்திருந்தேன். ஆனால் அதே நேரம் காணாத காட்சி ஒன்றையும் சேர்த்திருக்கிறேன்.

ஒரு பத்திரிகையாளனுக்கு நிஜம் தான் குறிக்கோளாக இருக்க வேண்டும். புனைவு அல்ல. புனைவு எழுத வேண்டும் என்றால் எழுத்தாளனாக ஆகி விட வேண்டும். ஆனால் இருப்பதை இம்மி பிசகாமல் மக்களிடையே கொண்டு சேர்க்க நிஜம் தான் வேண்டும். அன்று exaggeration-ல் நான் கலந்த அந்த சின்ன புனைவு.. என்னை ஒதுக்கி இருக்கிறது... என்று புரிந்துக் கொண்டேன்.

சரி.. எல்லாமே பாடம் தான். இந்த வாழ்வின் பெரிய பெரிய நகர்வுகள் எல்லாமே சிறிய சிறிய முன் செய்த தவறுகளில் இருந்து தான் நிகழ்ந்திருக்கிறது... என்று புரியும் போது... அதே பத்திரிகையில்.. அடுத்த ஆறு ஆண்டுகளில் என் கவிதை பிரசுரமானது.. இன்று வரை ஆகிக் கொண்டிருக்கிறது.. இன்னும் ஆகும்.

தானே கற்ற பாடங்கள் ஒரு போதும் வீண் ஆவதில்லை.

முடிந்தளவு உண்மைக்கு அருகே இருப்பது ஒருபோதும் கை விடாது என்று புரிந்துக் கொண்டதை மீண்டும் இன்று நினைவு படுத்துகிறேன் உங்களுக்கும்... முக்கியமாக எனக்கும்.

- கவிஜி