panchayatதமிழகத்தில் நீண்ட இழுபறிகளுக்கு பின்னர் ஊராட்சி மன்றங்களுக்கு இந்த ஆண்டு தமிழக அரசு தேர்தல் நடத்தியது. தேர்தல் நடத்தி ஊராட்சி மன்றங்கள் பொறுப்புக்கு வந்தாலும், அவைகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் மக்களின் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கூட தங்களால் நிறைவேற்ற முடியவில்லை. மக்களுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை.

ஊராட்சிகளில் மத்திய, மாநில அரசுகளால் நிறைவேற்றப்படும் சாலை, வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பணிகளை அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர்களை கொண்டு நிறைவேற்றாமல், ஊராட்சி தலைவர்களுக்கு  தகவல் கூட தராமல், நேரிடையாக ஒப்பந்ததாரர்கள் மூலம் நிறைவேற்றுகிறார்கள். நூறு நாள் வேலைக்கும் ஊராட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லாமல் அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டில் நடத்தப்படுகிறது.

மேற்கண்ட வகைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களுக்கான அதிகாரங்களை மத்திய, மாநில அரசுகள் பறித்து விட்டதாக கடந்த சில நாட்களாக ஊராட்சி மன்றத் தலைவர்கள் குற்றம் சாட்டுவதோடு, தமிழகத்தின் பல இடங்களிலும் போராட்டமும் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டங்களில் ஆளும் கட்சியை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் கலந்து கொள்வதில்லை.

ஆனாலும் தமக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டு வெறு ரப்பர் ஸ்டாம்புகளாக தாங்கள் ஆக்கப்பட்டுள்ளதை இவர்களும் ஏற்காவிட்டாலும், ஆளும் கட்சி ஊராட்சி மன்ற தலைவர்களாக,  அரசுக்கு விசுவாசமாக நடந்து கொண்டால், ஏதோ ஒரு வகையில் தமக்கு ஆதாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஆதாயமும் அடைகிறார்கள். இப்படி கிடைக்கக் கூடிய ஆதாயம் தாங்கள் தேர்தலில் செலவிட்ட தொகையை திருப்பி எடுக்கும் அளவுக்கு இல்லா விட்டாலும், இதுவாவது கிடைக்கிறதே என்று மனதை தேற்றிக் கொள்ள இவர்களுக்கு உதவுகிறது.

ஆளும் கட்சி அல்லாத ஊராட்சி மன்றத் தலைவர்களும் இதிலிருந்து வேறு பட்டவர்கள் இல்லை. ஆளும் கட்சி ஊராட்சி தலைவர்களுக்கும், ஏனைய ஊராட்சி தலைவர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் பறிக்கப்பட்ட தங்களது உரிமைகளுக்காக போராடுவதாக காட்டி கொள்வது மட்டுமே ஆகும்.

தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு  ஏதும் செய்ய முடியாததால் மக்களின் கேள்விகளுக்கு தங்களால் பதில் சொல்ல முடியவில்லை என்கிறார்கள். ஆனால் அவர்கள் நடத்தும் உரிமை போராட்டங்களுக்கு ஒரு சில மக்களைக் கூட இவர்கள் அழைத்து வருவதில்லை. அப்படி யாரையாவது இவர்கள் அழைத்து வரவேண்டுமானால் குறைந்தது அவர்களுக்கு குவாட்டர் சாராயமாவது வாங்கித் தர வேண்டும்.

ஏற்கனவே தேர்தலில் செலவழித்த தொகையையே  திருப்பி எடுக்க வழி வகை தெரியாமல் தவிக்கும் போது மீண்டும், மீண்டும் செலவிடுவதில் என்ன பயனிருக்க போகிறது? வாக்களித்த மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தங்களால் பதில் சொல்ல முடியவில்லை என்று ஊராட்சி தலைவர்கள் கூறுகிறார்களே அது உண்மையா? யார் அந்த மக்கள்?  தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாக்களித்தவர்கள் அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் வாக்களித்தார்கள். இதனால் அவர்களுக்கு வாக்களித்தவர்கள் தார்மீக ரீதியாக கேள்வி கேட்கும் உரிமையை இழந்து விட்டார்கள்.அதனால் அவர்கள் கேள்வி கேட்பதில்லை.

உண்மையில் ஊராட்சி தலைவர்களை கேள்வி கேட்பவர்கள் தலைவருக்கான தேர்தலில் தோல்வி அடைந்தவர்களே தவிர மக்கள் இல்லை. தனக்கு ஓட்டு போடாதவர்கள் தங்களை கேள்வி கேட்க எந்த உரிமையும் இல்லாதவர்கள் என்பதுதான் இந்திய நாட்டின் ஜனநாயக மாண்பாகும்.

இந்த ஜனநாயக மாண்பை பாதுகாப்பதில் நாட்டிலேயே ஊராட்சி தலைவர்கள் தான் முன்னணி படையாக செயல்படுபவர்கள். கிராமம் என்கிற குறுகிய வட்டத்திற்குள் அனைவரையும் கண்காணிப்பதற்கும், அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கும் வாய்ப்புள்ளவர்கள் இவர்கள் தான். எனவே மக்களின் கேள்வி கேட்கும் உரிமைகளுக்கு முதன்மையான எதிரிகளும் இவர்கள்தான்.

ஊராட்சி தலைவர் பதவியை அவர்கள் இலவசமாக பெறவில்லை. பத்திலிருந்து, இருபத்து ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவு செய்து விலை கொடுத்து வாங்கியதாகும். தேர்தல் வெற்றியே முறைகேடான வழியில் பெற்றதாகும். எனவேதான் இவர்கள் முதலும் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழிக்கு இலக்கணமாக திகழ்கிறார்கள்.

இவர்கள் எந்த சட்டத்தையும் மதிப்பவர்கள் இல்லை. தாங்கள் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுத்தப் பணத்தை தலைவர் என்ற பதவியை விலை கொடுத்து வாங்க செய்த செலவாக கருதுகிறார்கள். தாங்கள் விலை கொடுத்து வாங்கிய உடமையை தான் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துவதற்கு தனக்கு உரிமை உள்ளது.

அதன் மீது கேள்வி எழுப்ப எவனுக்கும் உரிமை இல்லை என்று மனப்பூர்வக்கவே இவர்கள் நம்புகிறார்கள். இந்த இவர்களின் உறுதியான முடிவான, முடிவும், பெண்ணடிமைத் தனமும் இணைந்து  பெண்கள் தலைவர்களாக உள்ள ஊராட்சிகளில், அந்த குடும்ப ஆண்களே அறிவிக்கப்படாத தலைவர்களாக செயல்படுவதை தவறான அம்சமாக பார்ப்பதை தடுக்கிறது.

பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் சரிசமமான உரிமைகள் ஏதும் இல்லை என்றுக் கருதும் இச்சமூகத்தின் கருத்துக்கு எதிராக, அவர்களுக்கும் சமமான உரிமைகள் உண்டு என்று, அதை  பெயரளவிற்கு மட்டுமே சட்டமாக்கி வைத்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

அதனால்தான் ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது என்தற்கு ஏற்ப பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்குமான சட்ட ரீதியான உரிமைகள் அனைத்தும் வெறும் ஏட்டளவில் மட்டுமே உள்ளது.

தாழ்த்தப்பட்ட ஊராட்சி தலைவர்கள் அவமானப் படுத்தப்படுவதும் இச்சமூகத்தின் இயல்பான ஒரு நிகழ்வே ஆகும்.தாங்கள் ஊராட்சி தலைவர்களாக இருந்தாலும், மேல் சாதிகள் தங்களை அவமானப் படுத்துவதற்கு எதிராக போராடும் தார்மீக ரீதியான உரிமைமையை இழந்தவர்கள் இவர்கள்.

1. தேர்தல் நேரத்தில் மேல்சாதிகளின் வாக்குகளை பெறுவதற்காக அவர்களிடம் கூனிக்குறுகி நின்று, காலில் விழுந்து வாக்கு கேட்டவர்களில் யார் நம்பகமான அடிமையாக மேல்சாதிகள் கருதினார்களோ அவர்களைத்தான் அவர்கள் தலைவர்களாக ஆக்கினார்கள். இந்த அவர்களின் நம்பிக்கைக்கு மாறாக தாழ்த்தப்பட்ட தலைவர்கள் நாற்காலிகளில் அமருவதை நம்பிக்கை துரோகமாக அவர்கள் கருதுகிறார்கள்.

2. தாழ்த்தப்பட்ட ஊராட்சி தலைவர்களை எந்த மேல்சாதி பண்பு இழிவுபடுத்துகிறதோ, அதே இழிவான மேல்சாதி பண்பை தனது சொந்த சாதி மக்களிடம் இவர்கள் காட்டுகிறார்கள். ஊராட்சி தலைவராக தான் ஆகி விட்டதால்,தனது சொந்த சாதி மக்களை விட ஒப்பீட்டளவில் தான் மேலானவர்களாக இவர்கள் தங்களை கருதிக் கொள்கிறார்கள். சக மனிதர்களையே தன்னை விட கீழானவர்களாக கருதும் மேல் சாதிகளின் இந்த பண்பை இவர்கள் எவ்வித நெருடலும் இன்றி கடைபிடிக்கிறார்கள்.

இவர்களின் மேற்கண்ட பண்பினால் தேர்தலில் தன்னிடம் தோல்வி அடைந்த சொந்த சாதியினரிடம் மட்டுமல்ல, தனக்கு வாக்களித்த தனது சொந்த சாதி மக்களின் ஆதரவை கூட இழந்து போய் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்கிறார்கள்.      

ஊராட்சி மன்ற பெண் தலைவர்களுக்கும், தாழ்த்தப்பட்ட தலைவர்களுக்குமான, இட ஒதுக்கீட்டு உரிமைகளையும், சமூக ரீதியான உரிமைகளையும் உறுதிப்படுத்தும் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசு அலுவலங்களிலும், நீதி மன்றங்களிலும் உள்ளவர்களும் இந்த சமூகத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருப்பதால் இவர்களும் சட்டத்திற்கு புறம்பான இவைகள் அனைத்தையும் இயல்பான ஒன்றாகவே பார்க்கிறார்கள்.

இதனோடு நேற்று வரை ஊரில் சராசரி மனிதர்களாக இருந்தவர்கள் இன்று தலைவர் என்ற பதவி கிடைத்து, போலீசு நிலையங்களிலும்,ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும்,ஏனைய அரசு அலுவலங்களிலும் இவர்களை  அதிகாரிகள் நாற்காலிகளில் உட்கார வைத்து பேசுவதையே பெருமையாக கருதுகிறார்கள். இந்த பெருமித மனப்பான்மை ஊரில் மற்றவர்களை விட தங்களை மேலானவர்களாக கருத வைத்து தலை கால் புரியாமல் இவர்களை ஆட வைக்கிறது.

ஊராட்சி தொடர்பாக  ஒருவர் கேள்வி, கேட்பதே தன்னை அவமானப்படுத்தும் செயலாக பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை தமது முதன்மையான எதிரிகளாகவும் கருதி பழி வாங்கும் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். மொத்தத்தில் இவர்கள் தங்களை முடி சூடா மன்னர்களாகவே கருதிக் கொள்கிறார்கள். இதன் மூலம் தம்மை தாமே இவர்கள் சக மனிதர்களிடமிருந்து தனிமைப் படுத்திக் கொள்கின்றனர்.

ஊராட்சியையே தமது தனியுடைமையாக இவர்கள் கருதுவதால், அரசால் ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதியையும் தனது மனம் போன போக்கில் கையாள்வது என்பதும் தமது உரிமையாகவே கருதுகிறார்கள்.

இவர்களால் மதிக்கப்படும்  ஒரே மனிதர்கள் என்பவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள்,  போலீசு மற்றும் ஏனைய அரசு அலுவலர்கள் மட்டுமே. ஊராட்சி  நிதியை கையாடல்கள் செய்வதற்கும், தாங்கள் ஊரில் முடிசூடா மன்னர்களாக வலம் வருவதற்கும் உதவியும், பாதுகாப்பும் அளிப்பவர்கள் இவர்களே என்பதுதான் இதற்கான அடிப்படை காரணியாகும்.

ஊராட்சி நிதியை கொள்ளையடிப்பதற்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என்பதால் ஊராட்சி தலைவர்களும், அரசு அலுவலர்களும் கூட்டுக் கொள்ளையர்களாக இயல்பாகவே ஒருவருக்கொருவர் புரிந்துணர்வை  ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

சாராம்சமாக ஊராட்சி தலைவர்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் என்பவைகள், மக்கள் நலன்களுக்கானதை போன்றதொரு தோற்றத்தை தந்தாலும், உண்மையில் அது மக்கள் பணத்தை பங்கிட்டுக் கொள்வதற்கான கொள்ளையர்களுக்கு இடையிலான போட்டியே ஆகும்.இது மக்களுக்கும் நம்மை விட நன்றாகவே தெரியும்.

ஏனென்றால் ஊராட்சி தலைவர்கள் கொள்ளை அடிக்கப்போகும் பணத்தில் முன்கூட்டியே பங்கு வாங்கிக் கொண்டவர்கள் வாக்காள பெரு மக்கள் என்பதால், இந்த உண்மையை புரிந்து கொள்வதில்  அவர்களுக்கு  சிரமம் எதுவும் இருப்பதில்லை.   

- சூறாவளி