water2தமிழகத்தின் தொன்மையான நகரங்களில் முக்கியமானது மதுரை நகரம். வைகை நதியை தனது வரலாற்று அடையாளமாகக் கொண்டு, அதன் இரு கரைகளையும் பற்றிப் படர்ந்து விரிந்திருக்கும் மதுரை, இன்று கடும் குடிநீர் தட்டுப்பாட்டில் சிக்கிக் கிடக்கிறது! தமிழத்தில் சென்னை, கோவைக்கு அடுத்த பெரிய நகரமான மதுரை மாநகராட்சியில் உள்ள “100 வார்டுகளில் சுமார் 18.47 லட்சம் மக்கள்(2011 கணக்கெடுப்பின்படி) வசிக்கின்றனர்.

சுமார் 5 லட்சம் குடியிருப்புகளைக் கொண்ட இந்நகரின் இன்றைய ஒருநாள் குடிநீர்த் தேவை 22 கோடி லிட்டர். ஆனால் தற்போது கிடைப்பதோ 17.5 கோடி லிட்டர்தான்! எனவே நிலவும் பற்றாக்குறை 4.5 கோடி லிட்டர்” என கூறுகிறது மாநகராட்சி நிர்வாகம்!

மதுரையின் எதிர்கால குடிநீர் தேவையை 2019-ல் மதிப்பீடு செய்த மத்திய பொதுசுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் அமைப்பு (CPHEEO) “மதுரையில் அடுத்த 15 ஆண்டுகளில் (2034-ல்) நகரின் மக்கள்தொகை சுமார் 19.23 லட்சமாக இருக்கும். எனவே 2034-ல் நகரின் தினசரி 31.70 கோடிலிட்டர் குடிநீர் தேவைப்படும்” என மதிப்பீடு செய்கிறது.

தற்சமயம் வைகை ஆற்றின் 1 மற்றும் 2 திட்டங்களின் மூலம் (68+47) = 115 மில்லியன் லிட்டரும், ஆனையூர், விலாங்குடி, திருப்பரங்குன்றம், கோச்சடை ஆகிய ஆற்றுப்படுகை திட்டங்கள் மூலம் = 30 மில்லியன் லிட்டரும், காவிரிநீர் (CWSS) பங்கீட்டு மூலம் கிடைப்பது = 47 மில்லியன் லிட்டர். ஆக மொத்தம் தற்போது தினசரி 192 மில்லியன் லிட்டர் குடிநீர் நகருக்கு கிடைத்து வருகிறது. ஆனால் 2034-ல் தேவைப்படுவதோ தினசரி 317 மில்லியன் லிட்டர்! எனவே எதிர்காலப் பற்றாக்குறை நாளொன்றுக்கு 125 மில்லியன் லிட்டர்! அதாவது வருடத்திற்கு சுமார் 1630 மில்லியன் கனஅடி நீர் தேவை!

சிதைக்கப்பட்ட வைகையின் கட்டமைப்பு!

waterr1வைகைநதியின் அழிந்துபோன நீராதாரங்களை காட்டும் வரைபடம்.

வைகை ஆறுதான் மதுரையின் குடிநீர் ஆதாரம். வைகை அதன் நீர்பிடிப்பு பகுதியில் கிடைக்கும் குறைந்தளவு மழை நீரையும், பெருமளவு பெரியாற்று நீரையும் மட்டுமே இன்று நம்பியுள்ளது. ஆனால் 1970-களுக்கு முன்பு வரை, வைகை வளமான நீராதாரங்களைக் கொண்ட ஆறாக இருந்ததை பல ஆய்வாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.

“செல்லும் வழிநெடுகிலும் ஆற்றின் இருகரைகளிலும் சுமார் 2500 குளங்கள் இருந்துள்ளது. இதில் 3-ல் ஒரு பகுதி குளங்கள் சொந்த நீர்பிடிப்பு பகுதிகளைக் கொண்டவை. மீதி பெருமழைக் காலங்களில் கிடைக்கும் நீரை தேக்கி வைப்பவை. மேட்டுப்பகுதியில் உள்ள குளத்தில் நிரம்பிய பின் வெளியேறும் உபரி நீர், வழிந்தோடி அதன் கீழுள்ள அடுத்தடுத்த குளங்களில் தேங்கும். இறுதியில் வைகை ஆற்றில் சென்று கலக்கும் வகையில் இக்குளங்கள் இணைக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு 2500 குளங்கள், நீரோடைகள், கால்வாய்கள், முகத்துவாரங்கள் என சங்கிலித் தொடர் போன்ற ஒரு கட்டமைப்பு வைகை நதியின் பெரும் நீராதாரமாக இருந்துள்ளது.” என்று கொலம்பியா பல்கலைக்கழகம் (அமெரிக்கா) 2016-ல் வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது. (பார்க்க: https://www.arch.columbia.edu/books/reader/192-water-urbanism-madurai-india)

1980-90-களில் கிராமங்களிலிருந்து அதிகளவில் நடந்த நகர்புற குடியேற்றம், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நகர்புற விரிவாக்கத் திட்டங்கள், கிரானைட் குவாரிகள், கெமிக்கல் ஆலைகள் மற்றும் ரியல் எஸ்டேட் கும்பலின் தொடர் ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றால் மேற்கண்ட நீர்வளக் கட்டமைப்புகள் படிப்படியாக அழித்து ஒழிக்கப்பட்டு விட்டது. இதன் விளைவாகவே இன்று வைகை நதி ‘எடுப்பார் கைப்பிள்ளையைப் போல’ பெரியாற்று நீரை மட்டுமே தாங்கிச் செல்லும் இழிநிலைக்கு ஆளாகியுள்ளது!

மீதமிருக்கும் குளங்களும், கால்வாய்களும், நகரின் குப்பைக் கிடங்குகளாக, கழிவுநீர் தேங்குமிடமாக, கொசுக்களின் இனவிருத்திக் கூடமாக உருமாறி விட்டது. அரசே பல குளங்களை அழித்து பேருந்து நிலையம், நீதிமன்ற கட்டிடங்களை நிறுவியிருக்கிறது. மேற்கண்ட காரணங்களால் நகரின் நிலத்தடி நீர் பெரும்பாலான பகுதிகளில் 400 மீட்டருக்கும் கீழ் சென்றுவிட்டது. இதன் விளைவாக, மதுரையின் குடிநீர் தேவைக்காக வைகைக் கரைகளில் 1800 போர்வெல் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரையின் வடக்கு மண்டலத்தில் கோச்சடை, மேலக்கல், தச்சம்பத்து போன்ற இடங்களில் உள்ள கிணறுகள் மூலம் நாளொன்றுக்கு 52 மில்லியன் கனஅடி நீர் கிடைத்து வந்தது. தற்போது 29.76 மி.க.அ. தான் கிடைக்கிறது!

இதுபோல தென்மண்டலத்தில் மணலூர், திருபுவனம், பகுதியிலுள்ள கின்றுகள் மூலம் 9 மி.க.அ. நீர் தினசரி கிடைத்து வந்த நிலையில் தற்போது இது 7 மி.க.அ. ஆக குறைந்து போனது. இப்பகுதியில் வைகை நீர் அதிக மாசுபாடு இருப்பதாலும், குடிநீர் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை என்பதால் இத்திட்டம் கடந்த நான்கு வருடமாக முழுமையாக கைவிடப்பட்டு விட்டதாக மாநகராட்சியின் குறிப்புகள் கூறுகின்றன.

இவ்வாறு ஆட்சியாளர்களும், அரசும், கிரிமினல் தொழிலதிபர்களும் கூட்டு சேர்ந்து நகரின் நீராதாரங்களை சூறையாடியதன் விளைவுதான் இன்றைய மதுரை குடிநீர் தட்டுப்பாட்டிற்கு அடிப்படைக் காரணம்! இதன் தொடர்ச்சியாக இவர்களது கவனம் தற்போது பெரியாற்று நீரை நோக்கி திரும்பியிருக்கிறது.

தடையற்ற குடிநீர் விநியோகத் திட்டம்!

மதுரையின் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கி, தடையற்ற குடிநீர் விநியோக வசதியை ஏற்படுத்துவதற்காக தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது இந்த புதிய திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள வைகை ஆற்று நீர் வழங்கல் திட்டத்துடன், கூடுதலாக முல்லைப் பெரியாற்று நீரை நேரடியாக மதுரைக்கு கொண்டு செல்லும் வகையில் திட்டமிடப்படுகிறது.

இத்திட்டப்படி, பெரியாறு தமிழகத்தில் நுழையும் எல்லைப் பகுதியான லோயர்கேம்ப் கிராமத்தில், ஆண்டுமுழுவதும் நீர் தேங்கும் வகையில் ஒரு தடுப்பணை கட்டப்படும். இதனருகில் 3 மீட்டர் சுற்றளவுள்ள 4 உறை கிணறுகளும், ஒரு நீர் தேக்கத் தொட்டியும் நிறுவப்படும். 280HP திறனுள்ள (4+உபரியாக2=) 6 பம்புகள் நிறுவப்பட்டு (ஒவ்வொரு பம்பும் நிமிடத்திற்கு 23,555 லிட்டர் நீர் இறைக்கும் திறனுள்ளவை.) இதன்மூலம் தினசரி 130 மில்லியன் லிட்டர் (13 கோடி லிட்டர்) நீர் சேகரிக்கப்படும்.

 லோயர்கேம்ப்பில் தடுப்பணை அமையவுள்ள தலைமடைப் பகுதி.

இவ்வாறு தலைமடையில் சேகரிக்கப்படும் ஆற்று நீரானது, 95 கி.மீ. தொலைவில், நிலக்கோட்டை தாலுக்காவிலுள்ள பண்ணைப்பட்டியில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிதாக அமைக்கப்படும் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். இங்கு தினமும் 12.5 கோடி லிட்டர் நீர் சுத்திகரிக்கப்படும்.

இங்கு சுத்திகரிக்கப்படும் நீரானது 54 கி.மீ. தூரத்திற்கு பாதுகாக்கப்பட்ட குழாய்கள் மூலம் கொண்டு சென்று, மதுரை மாநகராட்சியின் மெயின் குழாய்களில் இணைக்கப்படுவதன் மூலம், தினசரி 12.5 கோடிலிட்டர் குடிநீர் நகரில் விநியோகம் செய்யப்படும்.

“விநியோக வசதிக்காக 81 நீர் தேக்கத் தொட்டிகள் தேவை. தற்போது செயல்பாட்டில் உள்ள 45 தொட்டிகள் தவிர, புதிதாக 36 தொட்டிகள் நகரில் நிறுவப்படும். மேலும், ஏற்கனவே உள்ள பழைய குழாய்கள் 77 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும்” என்கிறார் மாநகராட்சி கமிஷனர் S.விசாகன். (பார்க்க: டைம்ஸ் ஆஃப் இந்தியா மே-7/2019)

2017-ஜூலையில் எம்ஜிஆர் பிறந்த நாளன்று, தமிழக முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமியால் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு, 2018 ஜூலையில் தமிழக அரசின் நீர்வள பயன்பாட்டுக் கமிட்டி அனுமதி வழங்கியது. ஜூன் 2019-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கி, 2022 இறுதியில் நகரில் குடிநீர் விநியோகம் தொடங்கப்படும் என்று திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

சுமார் 1020 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இத்திட்டத்திற்கு மத்திய அரசு+ மாநிலஅரசு+ சம்பந்தப்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சி ஆகிய மூன்று வழிகளில் இதற்கான நிதி ஒதுக்கப்படுகிறது. நகர்புற வளர்ச்சி மற்றும் புத்தாக்கத் திட்டம் (AMRUT), ஸ்வஜ் பாரத், ஸ்மார்ட் சிட்டி, ஆகிய திட்டங்கள் மூலம் மத்திய அரசு நிதியுதவி செய்கிறது.

தமிழக அரசின் பங்காக, “தமிழ்நாடு நகர்புற முதன்மை முதலீட்டுத் திட்டம்” என்ற பெயரில் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இதற்காக கடன்வாங்கி செலவு செய்கிறது. மீதியை நகராட்சி அல்லது மாநகராட்சிகள் தங்களது சொந்த வருவாயிலிருந்து செலுத்த வேண்டும் என்கிறது திட்ட அறிக்கை! (காண்க: https://www.adb.org/projects/documents/ind-49107-003-ffa)

பறிபோகும் பாசன வசதிகள்!

வைகை அணை மற்றும் முல்லைப் பெரியாறு அணை ஆகிய இரு அணைகளும் அடிப்படையில் பாசன வசதிகளை முக்கிய நோக்கமாகக் கொண்டவை. பாசனத்தேவை போக உபரி நீர்தான் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கம்பம் பள்ளத்தாக்கில் முப்போக விவசாயம் என்பது இன்று ஒருபோக விவசாயமாக சுருங்கிவிட்டது.

தேனி மாவட்டம் கோம்பை கிராமத்திலிருந்து போடி வரை உள்ள 40 குளங்களில் நீரைத் தேக்குவதன் மூலம் இவ்வட்டாரத்தின் நிலத்தடி நீரைப் பெருக்குவதற்காக நிறைவேற்றப்பட்டது 18-ஆம் கால்வாய்த் திட்டம். கடந்த 30 வருடத்திற்கும் மேலாக மக்கள் போராடிப் பெற்ற இத்திட்டத்திற்கு வருடத்தில் வெறும் 9 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் விடுகிறது அரசு! உசிலம்பட்டி வட்டாரத்தில் நிறைவேற்றப்பட்ட 58 கிராமக் கால்வாயில் இன்றுவரை தண்ணீரே எட்டிப் பார்க்கவில்லை. பெரியாற்றில் 100 கனஅடி நீர் திறந்துவிட்டால், வைகை அணைக்கு வெறும் 40 கனஅடிதான் சென்று சேருகிறது.

ஆளும்கட்சியினர் மற்றும் அதிகாரிகளுடன் துணையோடு வழிநெடுக நடக்கும் தண்ணீர் திருட்டுதான் இதற்கு காரணம். வருடத்திற்கு 200 கனஅடி நீர் இவ்வாறு களவாடப்படுகிறது. தேனி மாவட்டத்தில் 78 PWD குளங்களும், 90 பஞ்சாயத்துக் குளங்களும் தூர்வாரப்பட்டுள்ளதாக ஆட்சியர் கூறுகிறார். (ஜூலை:10/2019/ டைம்ஸ் ஆஃப் இந்தியா). இதே ஆட்சியரிடம்தான் சில குளங்களையே காணவில்லை என்று விவசாயிகள் ஆதாரங்களுடன் புகார் அளிக்கிறார்கள்! பல கிராமப்புற குளங்கள் நகரங்களின் குப்பைக் கிடங்குகளாக காட்சியளிக்கின்றன!

‘ஜல் சக்தி அபியான்’ திட்டம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம் தாலுக்கா கிராமங்களை கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளாக அடையாளம் காட்டுகிறது! மத்திய நிலத்தடி நீர்வள துறையின் புள்ளிவிவரமோ, தேனி மாவட்டத்தை அதிகளவு நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆபத்தான பகுதியாக வரையறுக்கிறது.

பல்லாண்டுகளாக நீடித்துவரும் மேற்கண்ட விவசாயிகளின் அடிப்படையான பிரச்சனைகளைத் தீர்க்க அரசுத்துறைகள் உருப்படியான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் கிணற்றில் விழுந்த கல்லாக கிடக்கிறது!

புறக்கணிக்கப்படும் கிராமங்கள்.

water3“மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீருக்காக ஆற்றுநீரைக் கொண்டு செல்வதில் என்ன தவறு? மதுரை போன்ற வளரும் நகரங்களின் எதிர்காலத் தேவைக்கு ஏற்ப திட்டமிட்டு செயல்படுவதுதானே அரசின் கடமை” என்று அதிகாரிகள் வாதிடுகிறார்கள். மதுரையின் எதிர்காலத் தேவைக்கு கவலைப் படும் இவர்கள், கிராமங்களின் நிகழ்கால குடிநீர் பிரச்சனை குறித்து ஏன் கவலைப்படவில்லை?

பெரியாறு + வைகை ஆறுகளின் நீரை நம்பி மதுரை + தேனி மாவட்டங்களில் ஏற்கனவே 57 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. நூற்றுக்கணக்கான கிராமங்களையும், 10-க்கும் மேற்பட்ட வர்த்தக நகரங்களையும் உள்ளடக்கிய, மேற்கண்ட 57 திட்டத்திற்கும் மொத்தமாக பயன்படும் நீரின் அளவு தினசரி 8.48 கோடி லிட்டர்! ஆனால் 58-வது திட்டமாக கொண்டு வரப்படும் மதுரைக்கான புதிய திட்டத்திற்கு மட்டும் தேவைப்படுவது தினசரி 12.5 கோடி லிட்டர்! இதன்படி ஒரு வருடத்திற்கு 1630 கனஅடி நீர் பெரியாற்றிலிருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்படுகிறது!

அரசின் குடிநீர் வழங்கல் திட்டங்களில் கிராமப்புற திட்டங்களுக்கு நாளொன்றுக்கு/ஒரு நபருக்கு 55 லிட்டர் என்ற அளவீடு பின்பற்றப்படுகிறது. இதுவே நகரங்களுக்கு 135 லிட்டர், பெரு நகரங்களுக்கு 150 லிட்டர் என்றும் நிர்ணயிக்கிறது அரசு! ஆனால் நடைமுறையில், அரசுத் திட்டங்கள் மூலம் கிராமங்களில் கிடைப்பது 40 லிட்டருக்கும் குறைவு என்பதை அரசே ஒத்துக்கொள்கிறது!

கிராமங்களில் வாரத்திற்கு ஓரிரு நாட்கள் வீதம் ஒரு மணிநேரம் மட்டுமே கூட்டுக்குடிநீர் வரும். இதற்கும் எவ்வித உத்தரவாதமும் கிடையாது. சிறு குழாய் உடைப்பு ஏற்பட்டாலும் அதனை சரி செய்வதற்கே பல வாரங்களை கடத்தி விடுவார்கள்! ஏதாவது தொற்றுநோய் வந்தால்தான் தண்ணீர் தொட்டிகளைக் கழுவுவார்கள்! இதுவும்கூட மக்கள் பயன்படுத்தும் வகையில் தரமாகவும், சுகாதாரமாகவும் கிடைப்பதில்லை.

எனவே மக்கள் கூட்டுக்குடி நீரை பாத்திரம் கழுவவும், துணி சலவைக்கும், கால்நடைகள் பராமரிப்புக்குமே பயன்படுத்துகிறார்கள். பல கிராமங்களில் இன்றுவரை குடிநீர் தேவைக்கு போர்வெல் அல்லது கிணற்று நீரையே பயன்படுத்தி வருகிறார்கள் என்பதுதான் உண்மை! கிராமங்களில் இதுவரை தண்ணீரையே முகர்ந்து பார்க்காத சில அதிசய குடிநீர் தொட்டிகளும் உண்டு!

கம்பம், சின்னமனூர், தேனி, போடிநாயக்கனூர், பெரியகுளம், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி போன்ற நகரங்களின் கதையோ இதைவிட கொடுமையானது. பகல் நேரத்தில் தண்ணீர் விடமாட்டார்கள். நடுஇரவில் எந்த முன்னறிவிப்பு மின்றி திறந்து விடுவார்கள். நீர்விழும் சத்தம் கேட்டு எழுந்தால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும்! இல்லாவிட்டால் அடுத்த ஒரு வாரத்திற்கு ‘கேன் தண்ணி’ தான் கதி! இவ்வாறு திட்டமிட்டு கிராம மக்களின் நலனில் அலட்சியம் காட்டிவரும் அரசுக்கு, மதுரை மாநகரின் மக்கள் மீது மட்டும் 1020 கோடிரூபாய் கரிசனம் வருகிறதே ஏன்?

தனியார்மயமாகும் குடிநீர் திட்டங்கள்!

பொதுவாக இது குடிநீர் திட்டம் என்று அறியப்பட்டாலும், உண்மையில் இது “நீண்டகால நோக்கில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த தொழில்,வர்த்தக மேம்பாட்டுத் திட்டங்களின்” ஒரு அங்கமாகும். 2018-20-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் செயல்திட்டமானது, சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான தொழில்துறை மையங்கள், துறைமுகங்கள், ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரு தொழில்துறை மண்டலமாக அறிவித்துள்ளது.

தமிழக அரசு தனது விசன் - 2023 (VISION-2023) அறிக்கையில், சென்னை - ஒசூர், சென்னை - திருச்சி, கோவை - மதுரை, கோவை - சேலம், மதுரை - தூ த்துக்குடி ஆகியவற்றை 5 முன்னுரிமை பெற்ற தொழில் மையங்களாக குறிப்பிடுகிறது! இதன் பொருள் என்னவென்றால், எதிர்காலத்தில் அந்நிய முதலீட்டாளர்களும், தொழில்துறை முதலாளிகளும் இம்மையங்களில் அதிகளவு முதலீடு செய்யப் போகிறார்கள் என்பதுதான்.

மேற்குறிப்பிட்ட மைய நகரங்கள் மற்றும் இதற்குட்பட்ட ஆம்பூர், கடலூர், வேலூர், திருப்பூர், ராசபாளையம், நெல்லை ஆகிய முக்கிய நகரங்களின் குடிநீர்வசதி, கழிவுநீர் அகற்றல், நிதி மற்றும் நிர்வாக மேலாண்மை போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மத்திய - மாநில அரசுகள் பலவேறு திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றன. அதாவது, முதலீட்டாளர் களைக் கவர்ந்து இழுப்பதுதான் இத்திட்டங்களின் மைய நோக்கம்! இதில் மக்கள் நலன் என்பது “நெல்லுக்கு பாயும் தண்ணீர், புல்லுக்கும் கொஞ்சம் பாயும்” என்ற நிலையில்தான் இருக்கும்!

மதுரையின் புதிய குடிநீர் வழங்கல் திட்ட மதிப்பீடான ரூ1020 கோடியில் 33% கடனாகத் தரும் ஆசிய வளர்ச்சிவங்கி, குழாய் இணைப்புகளில் மீட்டர் பொருத்துவதை நிபந்தனையாகக் கூறுகிறது!

மேலும் மதுரையின் குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை நோக்கமாகக் கொண்டுதான் இதன் நிர்வாக முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (MAWS)-யின் கீழ்தான் குடிநீர் திட்டங்கள் செயல்படும். ஆனால் மதுரை புதிய குடிநீர் திட்டமானது, ‘தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதிசேவைகள் லிமிடெட்’(TNUIFSL) என்ற அரசின் துணை நிறுவனம் மூலம் செயல்படுத்தப் படுகிறது. மேலும், திட்ட நிர்வாகம், செயல்பாடு, கண்காணித்தல், ஆகியவற்றை புதிதாக அமைக்கப்படும் திட்ட மேலாண்மைக் குழு (PMU) மேற்கொள்ளும் என்கிறது திட்ட அறிக்கை!

மாநகராட்சியின் கமிஷனர் திரு.எஸ்.விசாகன் பேட்டியும் இடையே உறுதிப்படுத்துகிறது. “மாநகராட்சியில் போதிய நிதியின்மையால் புதிய குடிநீர் திட்டத்தை பொதுமக்கள்+ தனியார் பங்களிப்புடன்(public private partnership) செயல்படுத்த ஆலோசித்து வருவதாக” கூறுகிறார்! (காண்க:மே-7/2019/ டைம்ஸ் ஆஃப் இந்தியா)

ஏற்கனவே கோவையின் குடிநீர் திட்டம் சூயஸ் நிறுவனத்திடம் சென்றுவிட்டது. இன்று மதுரை, நாளை அடுத்தடுத்த நகரங்களின் குடிநீர் திட்டங்களும் படிப்படியாக தனியார் வசம் செல்ல இருக்கிறது. பெரியாறு போல அருகிலுள்ள நீர்வளங்கள் அனைத்தும் படிப்படியாக தனியார் கைகளில் ஒப்படைக்கப்படும்!

பொருளாதார முன்னேற்றம், வேலை வாய்ப்பை அதிகரிப்பது என்ற பெயரில் கொண்டுவரப்படும் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் முதலாளிகளுக்கு சாதகமான நகரங்களை மையப்படுத்தியே அமுல்படுத்தப்படுகிறது. இதுவே கிராமப்புற மக்கள் நகரங்களை நோக்கி படையெடுப்பதற்கும், நகரங்கள் வீங்கி விரிவடைதற்கும் அடிப்படையாக உள்ளது. நகர்மயமாதல் அதிகாரிக்கும் வேகத்திற்கு நாட்டின் நீர்வளம் உட்பட அனைத்து வளங்களும் நகரங்களின் தேவைக்காக மடைமாற்றப்படுவதும் அதிகரிக்கிறது. கிராமப்புறங்கள் நகரங்களின் ‘சேரிப்பகுதியாக’ கருதப்பட்டு கைவிடப்படுகிறது!

பாசன நீருக்காக விவசாயிகள் கேரளா அரசோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அரசோ பாசனத் திட்டங்களைக் கிடப்பில் போட்டுவிட்டு குடிநீர் திட்டம் என்ற பெயரில் தண்ணீரை விற்பனைப் பண்டமாக மாற்றி வருகிறது! தொழில் முதலாளிகளின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி என்று கருதும் மோடி, எடப்பாடி கும்பலிடம் கிராம மக்கள், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் பற்றிய அக்கறையை எப்படி எதிர்பார்க்க முடியும்?

- தேனி மாறன்