Modi Zuckerbergகடந்த மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த வால் ஸ்டிரிட் பத்திரிக்கை பேஸ்புக் நிறுவனத்தில் இந்தியக் கிளை எவ்வாறு ஆளும் பிஜேபிக்கு சாதகமாக நடந்து கொள்கின்றது என்பதை அம்பலப்படுத்தி இருந்தது. ஆனால் அதை பேஸ்புக் நிர்வாகம் மறுத்து, தன்னைச் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக அறிவித்துக் கொண்டாலும், அதன் செயல்பாடுகள் முழுக்க முழுக்க ஆளும் பிஜேபிக்கு ஆதரவாக இருப்பதன் மூலம் தனது வர்த்தக நலன்களை பெருக்கிக் கொள்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.

ஆளும் பிஜேபியைச் சேர்ந்த நபர்கள் வெறுப்பை உமிழும் பதிவுகளையோ வதந்திகளையோ பதிவிடும் போது அதைத் தணிக்கை செய்யாமல் எதிர்ப்பு வரும்வரை அதை நீக்காமல் வைத்திருந்து அதன் மதவாதச் செயல் திட்டத்திற்கு ஒத்திசைவாக இயங்குகின்றது. இதற்குக் கைமாறாகத்தான் ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவில் பேஸ்புக் ரூ 43574 கோடியை முதலீடு செய்துள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை பேஸ்புக் செயலியை 290 மில்லியன் பேரும், அதன் மற்றொரு செயலியான வாட்ஸ்அப்பை 400 மில்லியன் பேரும் பயன் படுத்துகின்றார்கள். இதனால் இந்திய மக்களின் சிந்தனையை வடிவமைப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் பேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் பெரும்பங்கு வகிக்கின்றன.

நாம் சாதாரணமாக நினைத்து பேஸ்புக்கில் தரும் தகவல்கள் பதிவுகள் அனைத்துமே விலை மதிப்பில்லாதவையாக கார்ப்ரேட்டுகளுக்கும் அவர்களால் வழிநடத்தப்படும் அரசியல்வாதிகளுக்கும் உள்ளன. பெரும்பான்மை மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்வதன் மூலம் அவர்களால் மிக எளிதாக அதை மாற்றியமைக்கவும், தாங்கள் விரும்பும் நபர்களை ஆட்சியில் அமர்த்தவும் முடிகின்றது.

பேஸ்புக் நிறுவனத்தின் மீதும் அதன் நம்பகத்தன்மை மீதும் கேள்வி எழுப்பப்படுவது இது முதன்முறை அல்ல. ஏற்கெனவே கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருட பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளுக்கு தெரியாமலேயே அனுமதித்த வழக்கில் பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ. 4.72 கோடி அபராதம் விதித்து பிரிட்டன் அரசு உத்தரவிட்டது.

இந்தியாவை எடுத்துக் கொண்டால் 2018 ஆம் ஆண்டு ராகுல் காந்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தை பிரபலப்படுத்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் உதவியை நாடினார் என்று பிஜேபி குற்றம் சாட்டியது. ஆனால் உண்மையில் இந்த முறைகேட்டில் பாஜக ஈடுபட்டது அம்பலமாகியது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் இந்திய கிளையான 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' என்ற நிறுவனத்துடன் பாஜக கட்சிதான் தொடர்பில் இருந்துள்ளது.

இதை 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனத்தின் இந்திய சிஇஓ ஒப்புக் கொண்டார். மேலும் 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனத்தின் 'லிங்க்டின்' பக்கத்தில் “நான்கு வெவ்வேறு தேர்தல்களில் பாஜக கட்சிக்காக நாங்கள் உதவி செய்தோம். அதன் மூலம் பாஜக கட்சி வெற்றி பெற்றது” என்று அந்த நிறுவனம் வெளிப்படையாகக் குறிப்பிட்டு இருக்கின்றது.

இந்த 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனம் மூலம் தான் பாஜக இந்தியா முழுக்க பொய்யான செய்திகளையும், பொய்யான புள்ளி விவரங்களையும் கொடுத்து மக்களின் மனநிலையை மாற்றியது. மேலும் இந்த நிறுவனத்துடன் ராஜ்நாத் சிங் மிக நெருக்கமாகத் தொடர்பில் இருந்ததும் அம்பலமாகி இருக்கின்றது.

அதுமட்டுமல்ல தெலுங்கானவைச் சேர்ந்த பிஜேபி எம்எல்ஏ டி.ராஜாசிங் என்பவர் மாட்டிறைச்சி சாப்பிடும் முஸ்லீம்களைக் கொல்ல வேண்டும் என்றும், மசூதிகளை இடிக்க வேண்டும் என்றும், ரோஹிங்கியா முஸ்லிம்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும் பேஸ்புக்கில் வெறுப்பைக் கொட்டி இருந்தார். இதனால் அவரது பக்கத்திற்கு பேஸ்புக் தடை விதித்தது. ஆனால் அதை தன்னுடைய செல்வாக்கால் அவர் உடனே மீட்டெடுத்ததோடு அந்த சங்கி இன்னும் பேஸ்புக்கில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டுதான் உள்ளார்

அதே போல குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் முஸ்லிம்கள் போராடிய போது பிஜேபியைச் சேர்ந்த கபில் மிஸ்ரா என்ற காலி திட்டமிட்டே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வெளியிட்ட வீடியோவால் பெரும் கலவரம் ஏற்பட்டு 50க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வீடியோ நீக்கப்பட்டாலும் கபில் மிஸ்ராவுக்கு பேஸ்புக் தடைவிதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் பேஸ்புக்கின் இந்தியக் கிளை பிஜேபிக்கு ஆதரவாக செயல்படுகின்றது என்பதைப் பற்றி நியூஸ்கிளிக் இணையதளம் ஐந்து பகுதிகளாக தனது விசாரணையை வெளியிட்டது. அதில் பேஸ்புக்கின் இந்திய நிர்வாகிகளில் பலர் பாஜகவுடனும் மோடியுடனும் நெருக்கமான தொடர்பில் இருப்பதை ஏற்கெனவே அம்பலப்படுத்தி இருந்தது.

இந்நிலையில்தான் ஜனவரி 2019, மக்களவைத் தேர்தலுக்கு முன், மோடி அரசை எதிர்த்து கருத்துக்களை வெளியிட்டு வந்த 44 பேஸ்புக் பக்கங்களை தடை செய்யுமாறு பேஸ்புக்கிடம் பாஜக கேட்டுக் கொண்டது தெரிய வந்துள்ளது. பாஜகவின் அன்பு கட்டளைக்குப் பணிந்து நீக்கப்பட்ட அந்த 44 பேஸ்புக் பக்கங்களில் என்.டி.டிவி பத்திரிகையாளார் ரவிஷ் குமார், மற்றும் வினோத் துவா -க்கு ஆதரவான பக்கங்களும் அடங்கும். பாஜகவால் சொல்லப்பட்டு தடை செய்யப்பட்ட மற்ற பக்கங்கள் பீம் ஆர்மி, வி ஹேட் பிஜேபி, தி ட்ரூத் ஆப் குஜராத் போன்றவை ஆகும். இதில் ட்ரூத் ஆப் குஜராத் என்ற பக்கம் உண்மை கண்டறிந்து வெளியிடும் ஆல்ட் நியுசின் செய்திகளைப் பகிர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல பேஸ்புக்கால் நீக்கப்பட்ட 17 பிஜேபி ஆதரவுப் பக்கங்களை மீண்டும் செயல்பட வைக்குமாறு பாஜக பேஸ்புக்கிடம் கேட்டுக் கொண்டதன் பேரில் அதன் மீதான தடையும் நீக்கப்பட்டு அவை செயல்படச் செய்யப்பட்டன. மேலும் பாஜக ஆதரவுப் பக்கங்களை தாங்கள் தவறுதலாக நீக்கி விட்டதாக பேஸ்புக் இந்தியா நிர்வாகம் பாஜக ஐடி செல் தலைவர் அமித் மால்வியாவிடம் கூறியுள்ளது.

ஆனால் இதில் ஒரு பக்கத்தை போஸ்ட்கார்ட் நியுஸ் நிறுவனர் மகேஷ் வி ஹெக்டே நடத்தி வந்தார், இவர் 2018 இல் பொய் செய்திகளை வெளியிட்டு வகுப்புவாதப் பகைமையை ஊக்குவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் ஆவார். 

முழுவதும் நனைந்த பின்னால் முக்காடு தேவையில்லை என்ற நிலைபாட்டை பேஸ்புக் நிர்வாகம் எடுத்துள்ளது. முதலாளிகளில் நேர்மையான முதலாளி, அநியாயமான முதலாளி என்று எவருமில்லை. வர்த்தக நலம் சார்ந்து இயங்கும் ஒரு நிறுவனம் ஒருநாளும் மக்கள் நலன் சார்ந்து இயங்க முடியாது. பணம்தான் எல்லாவற்றையும் முதலாளித்துவ உலகில் தீர்மானிக்கின்றது. இதற்குப் பேஸ்புக் மட்டும் விதிவிலக்கல்ல.

உங்களுக்கு நினைவிருக்கலாம் மோடி பேஸ்புக் தலைமையகத்தில் தன் தாயை நினைத்து கண்ணீர்விட்டு கதறிய காட்சி. அது தன்னுடைய தாயை மட்டும் நினைத்து கதறிய கதறல் அல்ல, தன்னைப் போன்ற எதுக்கும் உதவாத ஒரு சங்கியே தேர்தலில் வெற்றி பெற உதவிய மார்க் சக்கர்பெர்கை நன்றியோடு நினைத்துக் கதறியது.

மக்களின் மீது சமூக வலைதளங்கள் பெரும் செல்வாக்கு செலுத்தும் ஒரு காலத்தில் அதுவும் ஜியோ நிறுவனம் இந்திய தொலைதொடர்புத் துறையை பெருமளவு கபாளிகரம் செய்திருக்கும் காலத்தில் பேஸ்புக்கும் ஜியோவும் கைகோர்த்திருப்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தியல்ல. இவர்கள் மக்களை மூளைச் சலவை செய்ய சங்கி கும்பலுடன் ஒன்றுபட்டு சதித் திட்டத்துடன் களமிறங்கி உள்ளனர்.

மூளையற்ற சங்கி கும்பல் பேஸ்புக் நிறுவனத்தையும் மோடியின் வாழ்நாள் அடிமை முகேஷ் அம்பானியின் ஜியோவையும் தனது கைப்பாவையாக மாற்றி தனது நச்சுப் பரப்புரைகளை கட்டவிழ்த்துவிட்டு மக்களை முட்டாளாக்கி தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் அதன் மூலம் நாட்டைப் பார்ப்பன பயங்கரவாதத்தின் பிடியிலும், முதலாளித்துவ பயங்கரவாதத்தின் பிடியிலும் இருந்து மீள முடியாத புதைகுழியில் தள்ளவும் தீர்மானகரமாக செயல்பட்டு வருகின்றது. இடது சிந்தனையாளர்களான நம்முடைய பணி இந்தப் பாசிச கூட்டணியை சமூக ஊடகங்களைத் தாண்டி பொதுவெளியிலும் அம்பலப்படுத்தி முறியடிப்பதுதான்.

- செ.கார்கி