Tamil Nadu schoolமுன்னுரை:

"அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான, தரமான கல்வியினை உறுதியளிப்பது மற்றும் வாழ்நாள் முழுமைக்குமான கல்வி வாய்ப்புக்களை முன்னெடுத்தல் ஆகியவற்றினை உறுதி செய்தல்" என உயர்ந்த கல்வி மேம்பாட்டு திட்டத்தினை தன் முன்னுரையில் சுமந்தபடி தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ இந்திய அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது.

Mahine learning, BigData, AI போன்றவற்றில் சமீப காலத்தில் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சிப் போக்கு அவை தொழில் மற்றும் வேலை வாய்ப்புக்களில் ஏற்படுத்திய தாக்கம் போன்றவற்றினை கணக்கில் கொண்டு, அவற்றினால் நேரடி மனித ஆற்றல் தேவைப்படும் துறைகளில் ஏற்படப் போகும் மாற்றங்களைக் கணித்து பல்துறை ஆற்றல் தேவைகளுக்கான நிலையை நோக்கி நகர வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது.

2040 ஆம் ஆண்டில் இந்திய கல்வியானது பிற எந்நாட்டையும் விட குறைவில்லா வகையில் இருக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு பழமையான இந்திய ஞான மரபினையும் பாரம்பரியத்தினையும் வழிகாட்டியாக ஏற்கிறது. அறிவு வேட்கை, மெய்யறிவு, நேர்மை போன்ற அடிப்படைக் கூறுகளை உயர்ந்த மனித நோக்கமாக கருதுகின்றதை தேசியக் கல்விக் கொள்கையின் முன்னுரை சுட்டுகின்றது.

தக்ஷசீலம், நாளந்தா, விக்ரமஷீலா, வல்லபி போன்ற பல்கலைக் கழகங்கள் பல்வேறு நாடுகளையும், பலதரப்பட்ட பின்னணியையும் கொண்ட மாணவர்களைக் கொண்டிருந்ததாக பறைச் சாற்றிக் கொள்கின்றது. அவை கல்வி, ஆராய்ச்சிக்கு மிகச் சிறந்த படிநிலைகளைக் கொண்டிருந்ததாகவும் அதுவே கல்வியில் சிறந்த சுஸ்ருதர் தொடங்கி திருவள்ளுவர் வரப்பட்ட பல அறிஞர்களை வளர்த்ததாகவும் கூறுகின்றது.

இதில் பல 'பின்புல'ங்களைக் கொண்ட மாணவர்களும், திருவள்ளுவரும் இந்த So called பாரம்பரிய இந்திய கல்வி அமைப்பில் எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. காலங்காலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட சமூகங்களை முன்னேற்ற கல்வியின் முக்கியத்துவத்தினை அழுத்தமாகப் பதிவு செய்கின்றது.

இதற்கு முந்தைய கொள்கைகள் நிறைவேற்றாமல் விட்ட கூறுகளைக் கவனம் கொள்ளும் இந்த கல்விக் கொள்கையின் நோக்கங்களாக நல்ல மனிதர்களை உருவாக்குவதாக கூறுகின்றது. அதற்காக அடிப்படைக் கொள்கைகளை வரையறுத்து முன்னுரையில் கூறப்பட்டுள்ளது. இந்திய மதிப்பீடுகளை நிலை நிறுத்தி இந்தியாவை அறிவுசார் வல்லரசாக்கும் நோக்கத்தினைக் கொண்டிருப்பதாக முன்னுரை பிரகடனப்படுத்திக் கொள்கிறது.

பகுதி 1 - பள்ளிக்கல்வி

பள்ளிக் கல்வியின் முதல் மாற்றமாக 10+2 கட்டமைப்பினை, 5+3+3+4 என்று மாற்றும் முடிவினை எடுக்கின்றது. அதாவது 3 வயது முதல் ஆரம்பகால கல்விக்கான அடித்தளம் ஆரம்பிக்கப்படும், இது ஏற்கனவே இருக்கும் மெட்ரிக் திட்டம் போன்ற அமைப்பினையோ, அல்லது அங்கன்வாடிகள் போன்ற விளையாட்டுப் பள்ளிகளையோதான் குறிப்பிடுகின்றது என்றாலும், இதில் அடிப்படை வேறுபாடு என்னவெனில் 3 வயதில் பள்ளி கல்வி என்பது கட்டாயமாக்கப்படுவதுதான்.

இது ஒரு வகையில் ஆரம்பகாலக் கல்வியை எல்லா தரப்பினருக்கும், குறிப்பாக சமூக- பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்குக் கொண்டு செல்ல உதவும். இந்த ஆரம்பகாலக் கல்வியானது, விளையாட்டு அடிப்படையினான செயல்பாடுகளைக் கொண்ட கற்பித்தல் முறை என்பதால் குழந்தைகள் மீதான கல்வி திணிப்பாக இருக்காது என நம்பலாம். அடிப்படை என்னறிவும் எழுத்தறிவு இல்லாத மாணவர்கள் தொடக்க வகுப்புகளில் இந்தியா முழுவதும் 5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இருப்பதால், அதனை 2025க்குள், பல படிகளாகக் கடக்க இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அடிப்படை எழுத்தறிவினை உறுதி செய்ய உள்ளூர் சமூகங்களும், பயிற்சிப் பெற்ற தன்னார்வலர்களும் பங்கேற்க நடைமுறைகள் எளிமைப்படுத்த போவதாக அறிவித்திருப்பது வெளிப்படையாக நல்லதாகத் தோன்றினாலும், ஏற்கனவே கட்டமைப்புடன் இலவச டியூஷன் என்ற பெயரில், பள்ளி மாணவர்களுக்கு சுலோகங்களுடன், வெறுப்புப் பிரச்சாரத்தினைச் சொல்லிக் கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ். போன்ற கட்டமைப்புடைய நிறுவனங்களுக்கு நேரடியாக பள்ளிக்குள்ளேயே நுழைய கேட்பாஸ் வழங்குவதாக முடியும்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டினைப் நிவர்த்தி செய்ய காலை உணவு, அல்லது நிலக்கடலை போன்ற உணவுகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றது. முறையான சுகாதார சோதனைகளை மேற்கொள்ளவும் சுகாதார அட்டைகள் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி பெற்றதை உறுதி செய்யவும் முடிவெடுத்திருப்பது தடுப்பூசிகள் என்ற பெயரில் இலவச சோதனை எலிகளாக மாணவர்களை பயன்படுத்துவார்களோ என்ற ஐயத்தினை ஏற்படுத்துகிறது.

பள்ளி இடை நிற்றல் சதவீதம் சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்களிலும், பெண்கள், மாற்றுப் பாலினத்தினரிடமும் அதிகமாக இருப்பதை கணக்கில் கொள்வதால் அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, முறைசார், முறைசாரா கல்வியினை வழங்க முடிவு செய்துள்ளது. தனியார் பள்ளிகளை ஊக்குவிக்க, அவற்றுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அறிவிப்பதும், தனியார் பள்ளிகளின் மாற்று மாதிரிகளை அனுமதிப்பதும் கல்வி வணிகத்தினை மேலும் ஊக்குவிப்பதில் சென்று முடியும்.

ஏற்கனவே கல்வி உரிமைச் சட்டம் 2009ஐ சரிவர கடைபிடிக்காத தனியார் பள்ளிகள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத, அதைப்பற்றி ஒரு சிறு குறிப்பினைக்கூட வழங்காத இந்தக் கொள்கையில் மேலும் தளர்வுகள் தனியார் பள்ளிகளுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

மேலும் பகுதி 3.7 ல் கற்றல் மேம்பாட்டுக்காக 'தன்னார்வலர்'களும் முன்னாள் மாணவர்களும் பள்ளிகளில் ஈடுபடுத்த முயல்வது பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் போல ஆசிரியர் பணிக்கு நுழைவுச் சீட்டாக அரசு அல்லது ஒரு பக்கச் சார்புடைய ஆட்களை உள்ளே நுழைக்கும் முயற்சியில் சென்று முடிவதுடன் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் மெத்தனம் காட்டும் போக்கில் சென்று முடியும்.

பள்ளி பாடத்திட்டமும் கற்பித்தலும்:

ஏற்கனவே சொன்னதுபோல் 5+3+3+4 என்ற அமைப்பில் அடித்தள ஐந்து ஆண்டுகள் விளையாட்டு கற்றலை உறுதி செய்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகள் எளிய புத்தகங்கள் வாசிப்பு, எழுதுதல் போன்றவற்றினைக் கொண்டுள்ளது, அடுத்த மூன்று ஆண்டுகள் அதாவது 5-8 தனித்தனி பாட ஆசிரியர்களைக் கொண்ட தொடக்க அறிவியல், கணிதம், கலை, மானுடவியல், போன்ற பாடங்கள் அடங்கியது.

கடைசி நான்கு ஆண்டுகள் பன்முக ஆய்வுகள் அடங்கிய நெகிழ்வுத்தன்மை கொண்ட, மாணவர்களே பாடங்களைத் தேர்வு செய்யும் முறை கொண்டது. 10ம் வகுப்புக்குப்பின் வெளியேறி தொழிற்கல்வி பயிலவும் வாய்ப்புகள் வழங்கப்படும். இவையெல்லாம் தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருப்பனவாக தோன்றினாலும் வட இந்திய மாநிலங்களில் இது ஒரு பெரும் மைல்கல்லாக கருதப்படலாம்.

ஆனால் இந்த மாறுபட்ட பாடத் திட்டத்துக்காக உள்கட்டமைப்பு மாற்றங்கள் தேவையில்லை என்று தெரிவித்திருப்பது முரண்பாடாக உள்ளது. அது, பள்ளிகளில் புதிய சாதனங்கள், கருவிகள் வாங்க அரசு நிதி அளிப்பதிலுருந்து விலகிக் கொள்ள விரும்புவதைக் காட்டும் அதே வேளையில் தனியார் பள்ளிகளுக்கு நெகிழ்வுத் தன்மையினை வழங்குகிறது.

பாடப்பிரிவு தேர்வு:

ஆண்டுதோறும் பல்வேறு பாடங்களைத் தேர்ந்தெடுப்பதில் நெகிழ்வுத் தன்மை வழங்கப்படுவதும், பாடங்களுக்குள், பாடம் சார்ந்த, சாராத மற்றும் இணைச் செயல்பாடுகள் அனைத்தும் ஒன்றாகக் கருதப்படும் என்ற அறிவிப்பும் நல்லதொரு பலனைத் தரும். பள்ளிப் பாடத்துடன் ஒரு பகுதியாக தொழிற் பாடங்களை இணைத்தல் என்ற முடிவு எந்தளவுக்கு மாணவர்களுக்கு பயன் தரப்போகின்றது.

மாணவர்களைக் குறிப்பிட்ட பாடங்களை, தொழில்களைத் தேர்ந்தெடுக்க நிர்வாகங்கள் நிர்பந்திக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம் போன்றவை தெரிவிக்கப்படவில்லை. விருப்பமுள்ள பாடப் பிரிவுகள் தீர்ந்துவிடும் பட்சத்திலோ, அல்லது யாரும் சேராதப் பிரிவிலோ விருப்பமற்ற பிரிவுகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்க நிர்பந்திக்கப்படும் நிலையைக் களைய என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற வழிகாட்டல் இல்லை. இவை எல்லாம் ஒரு சாராரை குறிப்பிட்ட தொழில்கள் நோக்கித் தள்ளும் முயற்சி எனும் ஐயத்துக்கு வழி வகுக்கின்றது.

மும்மொழிக் கொள்கை:

தாய்மொழி வழிக் கற்றலின் முக்கியத்துவத்தினை உணர்ந்து 'வாய்ப்புள்ள இடங்களில்' குறைந்தபட்சம் 5ம் வகுப்புவரையோ கூடுதலாக முன்னுரிமை வழங்கப்பட்டு 8ம் வகுப்பு வரையோ தாய்மொழி வழிக் கல்வியை வலியுறுத்துகிறது. ஆனால் 'வாய்ப்புள்ள இடங்கள்'/ 'வாய்ப்பில்லாத இடங்கள்' என்பதற்கான தெளிவான வரைமுறை இல்லை. தாய்மொழியில் படிப்பு சாதனங்கள் இல்லை என்றால், வீட்டு மொழிக்கும் கற்பிக்கும் மொழிக்கும் வேறுபாடு இருந்தால், என பல இடங்களில் 'வாய்ப்புள்ள இடங்கள்' எனும் பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒரு மொழி கற்கப்படவும், நன்றாக கற்பிக்கப்படவும் அது கற்பித்தல் மொழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டிருப்பது, தாய் மொழியையா அல்லது வேறு 'வாய்ப்பில்லாத இட'ங்களில் பயன்படுத்தப்படும் மொழியா என்று தெளிவின்மை உள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் அட்டவணை எட்டில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா மொழிகளுக்குமான பிராந்திய ஆசிரியர்களை நியமிக்க முதலீடுகளும் முயற்சியும் செய்யப்படும் என்று சொல்லப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாக கருத முடியும். அதுபோலவே மாநிலங்களுக்கிடையே இருதரப்பு ஒப்பந்தங்களின் மூலம் பரஸ்பர மொழிகளைக் கற்கலாம் என்பதும் மாநிலங்களுக்கிடையில் நல்ல பிணைப்பினையும், கலாச்சார பரிமாற்றத்துக்கு உதவலாம்.

ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளில் மாணவர்களின் தேர்வு பின்னுக்குத் தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. அல்லது பள்ளிகளில் பெரும்பான்மையான மாணவர்கள் தேர்வு செய்யும் மொழியினை மற்றவர்களும் படிக்கும்படி நிர்பந்திக்கப்படும் (ஆசிரியர் நியமனம், மற்றும் செலவீனங்களை மிச்சப்படுத்தும் நோக்கில்) வாய்ப்புகளும் உள்ளன. அவ்வாறு நிகழாமல் தடுக்க எந்த வழிகாட்டலும் இல்லை.

மேலும் கூடுதலாக பிரிவு 4.11ல் மக்கள், மண்டலம் மற்றும் கூட்டரசின் விருப்பம், அரசியலமைப்பு விதிகள், தேசிய ஒற்றுமை, பன்மொழி கற்றலின் அவசியம் ஆகியவற்றினை கணக்கில் கொண்டு மும்மொழிக் கொள்கை 'நெகிழ்வுத் தன்மையோடு' நிறைவேற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இரு மொழிகள் இருக்கும் வரை நெகிழ்வுத் தன்மைக்கு குறையில்லை என்று மேம்போக்காக சொன்னாலும் மேலே ஏற்கனவே சொன்னது போல இந்தியை மூன்றாம் மொழியாக படிக்க நிர்பந்திக்கும் வாய்ப்புக்கள் நிறைய உள்ளது.

நூறு மாணவர்கள் படிக்கும் இடத்தில் ஒரு மாணவன் மட்டும் வேறு மொழியினைக் கற்றுக் கொள்ள விரும்பினால் அந்த மாணவனை வலுக் கட்டாயமாக மற்ற 99 மாணவர்கள் மொழியைக் கற்க வைப்பதுதான் நடைமுறை. ஆனால் அந்த ஒரு மாணவனின் விருப்பமும் மதிக்கப்பட வேண்டியது. என்பதுதான் இங்கே நமது வாதம். இந்த கல்விக் கொள்கை வலியுறுத்துவதாக பிரகடனப்படுத்திக் கொள்வதும் அதைத்தான். ஆனால் அந்த தேர்ந்தெடுக்கும் உரிமை மறுக்கப்படாது என்பதற்கோ, மறுக்கப்படும் போது மாணவனுக்கு நீதி வழங்குவதற்கான நடைமுறையோ எதுவும் சொல்லப்படவில்லை.

இருமொழிகளமைந்த பாடப் புத்தங்கங்கள் தயாரிக்கும் முயற்சி வரவேற்கத்தக்க ஒன்று. இந்திய கலாச்சாரத்தினை புரிந்துக் கொள்ள செயல்வழி கற்றலிலோ அல்லது ப்ராஜெக்டாகவோ 'ஏக் பாரத், ஷ்ரேஸ்தா பாரத்' எனும் முன்னெடுப்பின் மூலம் இந்தியாவின் பல்வேறு மொழிகளுக்கிடையிலான ஒற்றுமையை உணர வைக்கப்படுமென சொல்லப்பட்டிருப்பதில், சமஸ்கிருதம் அல்லது வேறு செம்மொழி என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

அங்கு மட்டுமல்லாமல் பல இடங்களில் இதுபோன்றே குறிப்பிடப்பட்டுள்ளது, இதிலிருந்தே எந்த மொழியையும் திணிக்கும் எண்ணமில்லை என்ற அரசின் நேர்மைத் தன்மையை உணர முடியும்.

இதுபோலவே பகுதி 4.17ல் சம்ஸ்கிருத ஞான மரபின் பெருமைகளை அதன் ஒழிப்பு உச்சரிப்பு முறைகளை நூல்கள் மூலமாக கற்பிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அதுபோக எளிய பாடங்கள் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்படும் என்று சொல்லப் பட்டிருக்கின்றது. அதுபோக மற்ற செவ்வியல் மொழி இலக்கியங்களையும் விருப்பப் பாடங்களாக வழங்க சாத்தியங்கள் உருவாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகளுக்கு ஏதேனும் செவ்வியல் மொழியைப் படிக்க அதில் செயல்பாடுகள் செய்ய 6-12ம் வகுப்புக்களில் வாய்ப்புகள் வழங்கப்படும். இதுபோக கொரியா, ஜப்பான், ஸ்பானிஷ் போன்ற மொழிகளும் கற்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் இவையெல்லாம் குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை. ஏற்கனவே மூன்று மொழிகளுடன் இந்த இந்திய பாரம்பரியமற்ற மொழிகள் நான்காவது, ஐந்தாவது மொழிகளா என்பதெல்லாம் ஒன்றும் சொல்லப்படவில்லை. எனவே இவற்றின் நடைமுறைக்கான எந்த உறுதிப்பாடும் இல்லை.

மாணவர்களுக்கான மதிப்பீட்டினை மாற்றியமைத்தல்:

பழைய மனப்பாட முறைக்குப் மாற்றாக பல பரிமாணங்கள் கொண்ட 360 டிகிரி அறிக்கை அமைக்கப்படுவது நல்ல முன்னெடுப்பு. இது குறித்தான விவரங்கள் பெற்றோர்களோடும் பகிரப்பட்டு மாணவரை வகுப்பறையிலும் வீட்டிலும் எவ்வாறு ஆதரிப்பது என்ற தகவல்களை வழங்குதல் என்பது நகர்ப் புறங்களில் வெற்றிகரமான முன்னெடுப்பாக இருக்கலாம்.

ஆனால் கிராமப்புறங்களிலும், கல்வியறிவற்ற, அல்லது தொழில்நுட்ப அறிவற்ற பெற்றோர்களுக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்தும். மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளால் கிராமங்களுக்கும் நகரங்களுக்குமான இடைவெளி அதிகரிக்கும்.

கோச்சிங் முறையை வன்மையாக சாடி தீவுகளை மாற்றியமைப்பதில் தேவையை உணர்ந்துள்ளது. மனப் பாடத்துக்கு பதில் திறன்களை மதிப்பளித்து சோதிக்கும் வகையில் தேர்வுகள் எளிமைப்படுத்தப்படும். மேலும் ஏற்கனவே தமிழகத்தில் இருந்து கைவிடப்பட்ட improvement முறை, அதாவது விரும்பினால் ஒருமுறை எழுதிய தேர்வினை மீண்டும் எழுதி மதிப்பெண் உயர்வு பெறுவதன் மூலம் பொதுத் தேர்வுகளுக்கான உயர் மதிப்புகளை குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. இது மீண்டும், கோச்சிங் முறைக்கு வழிகோலும் என்ற புரிதலும், கல்வியில் ஓராண்டினை வீணாக்க 'வசதி' உள்ள மாணவர்களுக்கே இது பயன் தரும் என்பதோ கவனிக்காமல் விடப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களின் முன்னேற்றத்தினைக் 'கண் காணிக்க' 3,5 மற்றும் 8ம் வகுப்புகளிலும் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு குழந்தைகளுக்கு அழுத்தங்கள் கொடுக்கும் தேர்வுகளை நீக்கி எளிமையான கற்றல் வேண்டும் இந்த காலகட்டத்தில் சரியான முடிவாக கருத இயலவில்லை

NTA:

தேசிய தேர்வு நிறுவனம் என்றொரு அமைப்பு அமைக்கப்பட்டு அதன் மூலம் தேர்வுகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பு கொஞ்சம் சிக்கலானது மட்டுமல்லாது மோசமான அறிவிப்பு. இது ஒரு புது மாதிரியான தேர்வு. மேலும் இளங்களைப் பட்டதாரிகளின் சேர்க்கைக்கு மற்றும் ஊக்கத் தொகைகளுக்காக NTA மதிப்பெண்கள் பயன்படும் என்பதால், இனி ஏற்கனவே உள்ள CAT தேர்வுக்கான பயிற்சி மையங்கள் போன்று NTA தேர்வுக்கான பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். கோச்சிங் முறை மீண்டும் நிலை நிறுத்தப்படும்.

மீத்திறன் மிக்க மாணவர்களுக்காக புதிய வழிமுறைகளை உருவாக்கம் செய்வதில் கவனம் செலுத்தி அவர்களுக்காக சிறப்புப் பிரிவு பி.எட் படிப்பில் சேர்க்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மேலும் மாணவர்களின் கற்றல் குழுக்கள் உருவாக்கம், அதற்கான உபகரணங்கள் போன்றவை நல்ல முன்னெடுப்பு. கோடைகால உண்டு உறைவிட நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதும் சமுக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு நல்லதொரு அனுபவமான அமையும். அதேபோல் ஒலிம்பியாட் போட்டிகளைத் தேசமெங்கும் நடத்துவதும் IIT, NIT போன்ற நிறுவனங்களின் சேர்க்கையில் பயன்படுத்துவதும் வரவேற்கத்தக்கதே.

இணையமும் ஸ்மார்ட் போன்களும் இணைக்கப்பட்ட பிறகு இணைய வலி கலந்துரையாடல்களும் நிகழ்வுகளும் நடத்தலாம் என்ற பார்வையையும், டிஜிட்டல் கற்பித்தல் என்ற பார்வையையும், நீண்டகால செயல்திட்டமாக கருத முடியும். இருப்பினும், மாணவர்களின் இயல்பான பள்ளி, வளாக நடைமுறைகள் மற்றும் மனிதர்களுக்கு இடையேயான அன்பு பரிமாற்றம் போன்றவை பள்ளி காலங்களில் அவசியம். அதுவல்லாத பட்சத்தில், தன்னம்பிக்கையற்ற மனிதர்களுடன் பழகும் திறமையற்ற (introvert) சமூகம் உருவாகும் சிக்கல் உள்ளது.

ஆசிரியர்கள்:

ஆசிரியர்களின் உன்னதமான பணிக்காக கற்பித்தல் மற்றும் சேவை தகுதியை உயர்த்த வேண்டும் என முழங்கியபடி, அதற்காக நாடு முழுவதும் 4 வருட பி.எட் படங்களுக்கான கல்லூரிகள் தொடங்க உறுதியளிக்கிறது தேசிய கல்விக் கொள்கை. கிராமப்புறங்களை மையப்படுத்திய நோக்கோடு. கிராமப் பின்புறத்திலிருந்து வரும் மாணவர்களுக்கும், கிராமங்களுக்கு பணியேற்று செல்லும் ஆசிரியர்களுக்கும் கூடுதல் சலுகைகள் வழங்கப் போவதாக அறிவிக்கிறது.

மாணவர்களின் கற்றலுக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி ஆசிரியர் இட மாற்றங்கள் தவிர்க்கவியலாத சூழலில் மட்டும் நிகழும் என்று அறிவிப்பது மேலும் சிக்கல்களை உருவாக்கும். நிர்வாக ரீதியான வளர்ச்சிக்கோ, ஆசிரியரின் தனிப்பட்ட வளர்ச்சிக்கோ இந்த முடிவு நல்லதில்லை. மேலும் தவிர்க்க முடியாத சூழல் என்பதற்காக தெளிவான வரையறை இல்லாததால் இந்த முடிவு நீர்த்துப் போவதற்கோ அல்லது நடைமுறை சிக்கல்களை உண்டாக்கவோ வாய்ப்புகள் அதிகம்.

வேலைவாய்ப்பின் போது, TET மதிப்பெண்களையும் NTA மதிப்பெண்களையும் கணக்கில் கொள்ளப் போவதாக அறிவிப்பது, கிராமப்புற இளைஞர்களுக்கு எப்படி நன்மை புரியும். கிராமப்புற மாணவர்களுக்காக சிறப்பு கல்லூரிகளை அமைத்தாலும் இதுபோன்ற தேர்வாணையங்கள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் (மதிப்பீட்டுத் தேர்வுகள் என்ற பெயரில் இருந்தாலும்) சமூக பின்னடைவு கொண்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மேலும் பின்னடைவாக அமையும்.

அடுத்ததாக தொழிற்பயிற்சிக்கு 'மாஸ்டர் பயிற்றுநர்கள்' நியமிக்க திட்டமிடுவது குறித்த சரியான வழிகாட்டுதல்கள் இல்லை. அவர்களுக்கான பயிற்சி பாடத்திட்டம் குறித்த ஒழுங்குமுறை இல்லை. ஒருவேளை உள்ளூர் பாடத்திட்டம் என்பதால் அதை பள்ளிகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்ற திட்டமாயிருந்தால், அதில் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது.

சிறிய பள்ளி ஆசிரியர்கள் இனி பெரிய பள்ளிகளின் ஒரு பகுதியாக இயங்கும் வாய்ப்பினைப் பெறுவார்கள் என்ற நாக்கில் தேன் தடவிய அறிவிப்பு சிறு பள்ளிகளுக்கான மூடுவிழாவின் தொடக்கம். மேலும் பள்ளி வளாகங்களை மேம்படுத்த ஆலோசகர்கள், சமூக சேவகர்கள் (ஸ்வயம் சேவகர்கள்) போன்றோரை பள்ளி வளாகத்துக்குள் நுழைப்பது யாருக்கு சாதகமான பலன்களைக் கொடுக்கும் என்பது கண்கூடு.

ஆசிரியர்கள் பிற நிர்வாக வேளைகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்ற அறிவிப்பு ஒரு வகையில் நல்லதாக தோன்றினாலும், நிர்வாக வேலைகளுக்கென தனியாக நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்களா? அது தலைமையாசிரியர் போன்ற நிர்வாகத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் 'வேலையைக் குறைத்தல்' என்ற பெயரில், பள்ளிகளுக்கும் இரு அதிகார மையங்கள் உருவாவதையும், கல்விச் சூழல் கெடுவதர்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தும் என்பதையும் அரசு கணக்கில் கொள்ளவில்லை.

CDP:

ஆசிரியர்களுக்கான தொழிற்சார் மேம்பாட்டுக்கான பல்வேறு படிநிலைகளில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படுவதும் அதற்காக தனி இணைய தளங்களை உருவாக்குவதும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும், மேலும் ஆசிரியர்கள் தங்கள் அணுகு முறைகளையும் நுணுக்கங்களையும் பகிர இவற்றினைப் பயன்படுத்தலாம். மேலும் ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 50 மணிநேரம் இதுபோன்ற பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்பது கற்பித்தலை மேம்படுத்த உதவும்.

National Professional Standards for Teachers:

பகுதி 5.17ல் பள்ளி ஆசிரியர்களின் வேலை உறுதித்தன்மை மீது மாபெரும் இடியை இறக்குகிறது. ‘tenure track’ என்ற பெயரில் ஆசிரியர்கள் பதவியமர்த்தப்பட்ட பிறகு ஒரு குறிப்பிட்ட காலம் நிரந்தரமற்ற தொழிலாளிகளாக பணியாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகின்றனர்.

ஏற்கனவே எழுதிய NTA மற்றும் TET தேர்வுகள் போதாதென்று மேலும் பதவிக்காலத்திலும் அவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுவது, ஆசிரியர்களின் மன அழுத்தத்தினை அதிகரிப்பதுடன், அவர்களின் ஜனநாயக செயல்பாடுகளை மறைமுகமாக ஒடுக்கும் கருவியாகும்.

மேலும் இந்த ‘tenure track’க்கு குறிப்பிட்ட காலம் எதுவும் நிர்ணயிக்கப்பாடாததால் குறைந்த சம்பளத்தில் நிரந்தரமற்ற பல தொழிலாளர்கள் உருவாகும் நிலை உண்டாகும் இது பிற பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் உள்ள apprentice முறையை ஒத்ததாகும். இது ஆசிரியர் தொழிலானது மேலும் சீர்குலைவுகளை அடைவதற்கும், ஆசிரியர்கள் பணியிடங்கள் சம்பளம் குறைவான பயிற்சி ஆசிரியர்களால் மாறி மாறி நிரப்பப்பட்டு மாணவர்கள் கல்வி கெடுவதற்கும் வழிகோலும்.

சிறப்புக் கல்வியாளர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்குமான கூடுதல் கவனம் மிக்க பள்ளிகள் உருவாக்கப்படும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளும், வகுப்புகளும் நடத்தப்பட்டு specialized ஆசிரியர்கள் உருவாக்கப்படுவது இதுபோன்ற மாணவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது.

ஆசிரியர் கல்வியை பல்கலைக் கழகங்களுக்கு மாற்றுவது, அதன் பன்முகத் தன்மையை மேலும் விரிவுபடுத்த உதவும். 4 ஆண்டு, 2 ஆண்டு, 1 ஆண்டு என பல வகையில் (கல்வித் தகுதியை பொறுத்து) பி.எட் படிப்புகள் வழங்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபோக ஸ்பெஷல் ட்ரெய்னர்ஸ் என்ற பிரிவில் சேர்க்கப்படும் உள்ளூர் தொழில் பயிற்றுனர்களுக்கு குறுகியகால பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதுமுள்ள தரமற்ற கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சமமான அனைவரையும் உள்ளடக்கிய கல்வி:

கல்விதான் சமத்துவத்தையும், சமூக நீதியையும் அடைய ஆகப்பெரும் கருவி என்ற புரிதலோடு அனைவரையும் மேனிலைப் பள்ளி படிப்பினை எட்ட வைக்க இருக்கும் இடைவெளியினை கணக்கில் கொண்டு அதை நிரப்ப வேண்டியத் தேவையை தே.க.கொ.2020 வலியுறுத்துகிறது.

இதேபோல் வரலாற்று ரீதியான புள்ளி விவரங்களில் பட்டியலின, பழங்குடி மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களின் மேனிலைக் கல்வி விகிதம் வெகுவாக குறைவதை கவலையோடு சுட்டிக் காட்டுகிறது. அவர்களுக்காக சிறப்புத் திட்டங்கள் வகுப்பது வரவேற்க்கத்தக்கது.

மேலும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப ஊக்கத்தொகை, உதவித்தொகை மற்றும் மிதி வண்டிகள் வழங்குவது போன்ற திட்டங்கள் தமிழகத்துக்கு பழக்கமானவைதான் என்றாலும் வாடா மாநிலங்களுக்கு இவையெல்லாம் வரப் பிரசாதமாக அமையும்.

குறைபாடுகள் உள்ள குழந்தைகள் மீது தனி கவனம் செலுத்தும் வண்ணம் அவர்களின் பெற்றோர்களுக்கும் உதவும் முடிவும் வரவேற்கத்தக்கது. இதுபோக கல்வியில் பின்தங்கிய மண்டலங்களை வளர்த்தெடுக்க சிறப்பு கல்வி மண்டலங்கள் உருவாக்குவது, பழங்குடியின மாணவர்களுக்கு NCC பயிற்சிகள் வழங்குவது போன்றவை சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆசிரியர்கள், 'சமூக சேவகர்களால் புதிய பாடத்திட்டம் கொண்டுவர எடுக்கும் முயற்சிகள். பாடத் திட்டத்தில் ஏதேனும் சார்புடைய பகுதிகளை நீக்குதல், 'அனைத்து சமூகங்களுக்கும்' பொருந்தும் பாடங்களைச் சேர்த்தல் என்பனவெல்லாம் அரசு தான் விரும்பும் பாடங்களை மாணவர்களுக்கு திணிக்க செய்யும் முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது.

அடுத்ததாக பகுதி 7.1ல் சிறு பள்ளிகளின் புள்ளிவிவரம் கொடுக்கப்பட்டு பின்பு அவற்றினை அருகிலுள்ள பெரிய பள்ளியின் ஒரு அங்கமாக செயல் படவைக்கத் திட்டமிடப்படுவது, சிறு கிராமங்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மாணவர்களுக்கான பள்ளிகளை மூடுவதற்கான ஒரு முன்னோட்டமே.

இதற்கான வளங்களைப் பகிர்தல், சேர்ந்து குழுவாக செயல்படுதல், cluster போன்ற அலங்கார வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும் இது அடிப்படையில் என்ன விளைவினை உருவாக்கும் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே. அடுத்ததாக அரசு, தனியார் பள்ளிகளுக்கான புரிந்துணர்வுடன் இரு பள்ளிகளும் இணைந்து தொடர்பு கொண்டு, தங்கள் வளங்களைப் பகிர்ந்து கொண்டு செயல்பட திட்டமிடுவது, தனியார் பள்ளிகளுக்கே பலனாக முடியும்.

மேலும் வளப்பகிர்வு எங்கிருந்து எங்கே நிகழும் என்பது நடைமுறையில் காண்பதுதான். பலன்களை தனியார் பள்ளிகள் அறுவடை செய்வது இனி நிறுவனமயமாக்கப்படும். மேலும் வளங்களைப் பகிர்தல் என்ற பெயரில் சிறப்பு வாய்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார்பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டு அரசுப் பள்ளிகள் கைவிடப்படும் நிலை உருவாகும்.

'சமூக அக்கறையுள்ள' பள்ளிகளை ஊக்குவிக்கவும் நன்மைபயக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்கிறது தே.க.கொ2020. லாப நோக்கில் செயல்படும் தனியார் பள்ளிகள்மீது நடவடிக்கை எடுக்க அதற்கான தணிக்கை முறைகளை நெறிப்படுத்த திட்டங்களை முன் வைக்கிறது.

தன்னிச்சையான கட்டணங்களிலிருந்து பெற்றோர் காக்க வெளிப்படையான அமைப்பினை நிறுவுவதும் கறாரான தணிக்கை நடவடிக்கைகள் செய்வதும் உபரி வருமானங்களைக் கல்வி சார்ந்த முதலீடுகளில் செய்ய நிர்பந்திப்பதும் திட்டமாக சொல்கின்றது. NAS மற்றும் SAS என்ற புதிய மதிப்பீடுகள் வழங்குவதெல்லாம் தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதாகவும் குழந்தைகளை அது போன்ற பள்ளிகளுக்குத் தள்ளுவதாகவுமே சென்று முடியும்.

பகுதி 2 - உயர்கல்வி

தரமான பல்கலைக் கழகங்களை உருவாக்குவதில் தற்போதுள்ள சிக்கல்களைப் பட்டியலிட்டு, இந்திய மொழிகளில் பாடங்களை பயிற்றுவிக்கும் உயர்கல்வி அமைப்பை நோக்கி நகரும் தேவையை வலியுறுத்துகிறது தே.க.கொ2020. மேலும் சிறந்த ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதியளிக்க National Research Foundation என்ற அமைப்பினை உருவாக்க திட்டமிடுகிறது.

இந்த அமைப்பு ஏற்கனவே ஆய்வுகளுக்கு நிதியினை வழங்கும் பல்கலைக்கழக மானிய குழுவின் அதிகாரத்தினைப் பறிப்பதாக அமையும். அடுத்ததாக 'பரோபகார' சிந்தனையுடைய தனியார் பல்கலைக் கழகங்களின் மூலம் அடித்தட்டு மாணவர்களுக்கான கல்வியை வழங்கும் திட்டம் கல்வி உதவித் தொகை, ஊக்கத்தொகை போன்றவற்றில் அரசாங்கத்தின் பங்குகளையும், பொறுப்புகளையும் படிப்படியாக குறைக்கச் செய்யும் முதல் முயற்சியாக கருதலாம்.

உயர்கல்வி நிலையங்களின் மறுசீரமைப்பு:

தற்போதுள்ள தனித்தனி திறன்வாய்ந்த கல்வியை அளிக்கும் உயர்கல்வி நிறுவனங்களை பல்வேறு படிப்புகளையும் வழங்கும் பல்கலைக்கழகங்களாக மாற்றும் முயற்சி, இதுபோன்ற தனித்திறன் சார்ந்த பல்கலைக்கழகங்களின் திறன்கள் நீர்த்துப்போகச் செய்யக்கூடும். ஆனால் அரசாங்கம் இதற்கு எடுத்துக்காட்டாக பழங்கால பல்கலைக் கழகங்களையும் அவை வழங்கிய பலதரப்பட்ட கல்வியையும் முன்வைக்கிறது.

ஆனால் இன்றைய உலகின் தேவைகளில் ஒவ்வொரு specialized படிப்பிற்கும் தனி அமைப்பும், நிர்வாகமும், பல்கலைக் கழகங்களும் இருத்தலே அந்தந்த துறையின் சிறப்பான வளர்ச்சிக்கு வழிகோலும், மாறாக ஒரே குடையின் கீழமைந்த பல துறைகள் என்பது பல்கலைக் கழகங்களின் திறன் குடக்கத்துக்கு இட்டுச்செல்லும்.

கல்வி நிறுவனங்கள் சமுதாயத்துடன் தொடர்பினை ஏற்படுத்துதல், சேவை போன்றவற்றுடன் பள்ளிக் கல்விக்கும் உதவவேண்டும் என்ற வழிகாட்டுதல் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்கும். மேலும் 2030க்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அல்லது மாவட்ட அருகாமையிலும் உயர்கல்வி நிறுவனம் அமைக்கப்படும் என்ற திட்டம் தமிழகத்தில் பல்லாண்டுகாலம் முன்பே நிறைவேற்றப்பட்டது.

அதேபோல் வாழ்நாள் முழுவதும் கல்வி கற்கும் வாய்ப்புக்களை வழங்க திறந்தவெளி, தொலைதூர கல்வி மூலம் இணையவழிக் கல்வி மூலமும் வழங்க முடிவெடுத்திருப்பது, பிட்ஸ் பிலானி, ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களை, எந்த வித கட்டமைப்பு தேவைகளும் இன்றி (0 investment) கல்வி நிறுவனங்களாக்குவதில் சென்று முடியும்.

மேலும் இதுபோன்ற நிறுவனங்களின் போட்டியால் பட்டம் பெறுவோரின் கல்வித்தரம் குறையும் வாய்ப்புள்ளது. ஒற்றை கல்விப் புலத்தினைக் கொண்ட உயர்கல்வி நிறுவனங்கள் படிப்படியாக அகற்றப்படும், அல்லது பல புதிய கல்வித் துறைகளை அறிமுகம் செய்யப்படும் என்பது பொறியியல் பல்கலைக் கழகங்கள், தமிழ் பல்கலைக்கழகங்கள் போன்ற அமைப்புகளின்மீது நடத்தப்படும் தாக்குதல். மேலும் ஏற்கனவே கூறியதுபோல் இது செறிவின்மையை உருவாக்கும்.

முழுமையானக் கல்வி என்பது ஆய கலைகளான அறுபத்து நான்கு கலைகளைக் கற்பது என்று அறிவிக்கிறது தே.க.கொ2020. மீண்டும் பழங்கால கல்வியைத் துணைக்கிழுத்து 'அதுபோன்ற' அறிவுசார் கல்வியை மீண்டும் இந்திய கல்வியில் கொண்டு வரவேண்டும் என்ற தன் அவாவினை வெளிப்படுத்துகிறது.

ஆனால் அனைத்து கலைகளும் கற்றாலும் (முன்னோர்கள் கூட) ஒவ்வொருவரும் அவரவர் தனித் தன்மைகளிலேயே சிறந்து விளங்குவர். எடுத்துக்காட்டு சுஸ்ருதர் - மருத்துவம், ஆர்யபட்டர் - வானியல். எனவே அனைத்து வாய்ப்புகளையும் அறிமுகப்படுத்தும் இடமாக பள்ளிக்கல்வி இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்ட திறன் சார்ந்த படிப்புகளில் கவனம் செலுத்த அல்லது மேலும் வளமையடைய உயர்கல்வி பயன்பட வேண்டும் என்பதையும் தே.க.கொ 2020 கவனத்தில் கொள்ள மறுக்கிறது. அதனால்தான் பள்ளி மாணவர்களுக்கு தொழிற் பயிற்சியும் உயர்கல்வி மாணவர்களுக்கு பல்துறை பயிற்சியும் வழங்கவேண்டும் என்று முன் வைக்கின்றது.

இதுபோன்ற திறன் சார்ந்த அடித்தளம் இல்லாததாலேயே அந்த காலத்து 'புகழ்பெற்ற' பல்கலைக்கழகங்களான நாளந்தா, தஞ்சசீலம் போன்றவை அனைத்து வாய்ப்புகளும் இடமளிப்பவையாக இருந்தன என்ற வரலாற்றுப் பார்வையும் இதில் இல்லை. இசை தத்துவம், வரலாறு கலாச்சாரம் மொழி போன்றவற்றினை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இணைத்து, அதன் மதிப்புருக்களை பட்டங்களோடு வழங்கும் முயற்சி மாணவர்களின் சுமையை மேலும் கூட்டுவதாக அமையும்.

அடுத்ததாக உயர் கல்விப் பயிலும் மாணவர்களை பகுதிநேர பணியாளர்களாக நியமிக்கும் முடிவு குறைந்த செலவில், அல்லது செலவேயில்லாமல் கல்வி நிறுவனங்களுக்கு பணியாளர்களை அமர்த்தவும், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாத நிலையை உருவாக்கவும், வேலையின்மைக்கும் வழிகோலும்.

முதுநிலைப் பாடத் திட்டங்களில் மொத்த கல்வியாண்டு 5 என்று ஆகும்படி 3 வருட இளங்கலை படித்தவர்களுக்கு 2 ஆண்டுகளும், 4 வருட இளங்கலை படித்தவர்களுக்கு 1 ஆண்டும், அல்லது ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுகலை பட்டமும் வழங்க முடிவெடுத்திருக்கிறது. மேலும் M.Phil படிப்பினைக் கைவிடுவதாக அறிவிக்கிறது. எனவே முதுகலை முடித்தவர்கள் நேரடியாக (கூடுதல் துறைசார்ந்த பயிற்சிகள் ஏதுமின்றி). நேரடியாக முனைவர் பட்டத்துக்கு பயிலலாம். ஆனால் அதற்கும் முன்பே கூறப்பட்டது போல் NTA மதிப்பெண்கள் தேவைப்படலாம்.

அடுத்ததாக உயர்க் கல்வியில் மாணவர்களுக்கான கற்றல் சூழலை ஆய்வு செய்கிறது. உயர்கல்வி நிறுவனங்களில் கற்றல் சூழல் மாணவர்களுக்கு சாதகமாகவும், அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விதத்திலும் இருக்குமாறு செய்ய முயற்சிகள் எடுக்கிறது.

தேர்வுகளின் அதீத தாக்கத்தினைக் குறைத்து விரிவான மதிப்பீடுகளை கல்வி நிறுவனங்கள் வழங்க முன்னெடுப்புகள் செய்யப்படுவதாக தே.க.கொ2020 கூறுகிறது. பின்தங்கிய பிரிவினர் உயர்கல்வி நிறுவனங்களில் சந்திக்கும் உளவியல் சிக்கல்களை நிவர்த்தி செய்ய, மேலும் கல்வி மற்றும் தொழில் சார்ந்த ஆலோசனைகளை வழங்க வழிகாட்டிகள் அமைப்பதாக அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.

‘internationalization at home’ என்ற முன்னெடுப்பில் உள்நாட்டு பாரம்பரிய மொழி, மருத்துவம் மற்றும் மக்கள் பற்றிய ஆய்வுகள் செய்ய புதிய துறைகள் துவங்குகிறது. அனைவருக்கும் பொருந்தும் செலவில் உயர்தர கல்வியினை வழங்கி 'விஷ்வ குரு'வாக இந்தியாவை முன்னெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்கிறது.

மேலும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் இந்திய மாணவர்கள் பயிலவும், வெளிநாட்டு மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் பயிலவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதனால், ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனங்களிலும் 'பன்னாட்டு மாணவர் அலுவலகம்' அமைக்கப்படும் என்று கூறுகிறது.

இதேபோல வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் அயல்நாடுகளில் இந்திய பல்கலைக்கழக வளாகங்கள் அமைக்க ஊக்குவிக்கப்பது போன்ற நடவடிக்கைகள் கல்வியை விரிவு படுத்துவதோடு இந்திய பல்கலைக்கழகங்களின் தரத்தினையும் உயர்த்த உதவும்.

தேசிய உதவித்தொகை இணையதளம் விரிவுபடுத்தப்படுவது வெளிப்படையான நடைமுறைக்கு வழிகோலுவதோடு உதவி பெறுவதிலுள்ள சிக்கல்களைக் களைய உதவும். அதேநேரம் தனியார் நிறுவனங்களை உதவித் தொகைகள் வழங்க ஊக்குவிக்கும் நடவடிக்கை ஏற்கனவே கூறியது போல் அரசாங்கம் தன பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளும் முடிவு.

உயர்கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் ஆசிரியர் மாணவர் உரையாடல்களை அதிகப்படுத்தவும் உறுதியேற்கிறது தே.க.கொ2020. உயர்கல்வி நிறுவனங்களிலும், ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட மாட்டாது என்ற அறிவிப்பு நடைமுறை சிக்கல்களை உண்டுபண்ணும்.

மேலும் இங்கும் ஆசிரியர் சேர்க்கையில் ‘tenure-track’ என்ற முறையினைக் கையாள முடிவு செய்திருப்பது பெரும் பாதக அம்சம். நிரந்தர பதவிக்காக நிறுவனம் மற்றும் சமூகத்துக்கான சேவைகள் போன்ற கணக்கீடுகளெல்லாம் ஆசிரியர் சமூகத்தினை வளாகத்துக்குள்ளும்,

வெளியேயும் ஜனநாயக நடவடிக்கைகளிலிருந்து தள்ளிவைக்க செய்யும் மறைமுக நடவடிக்கைகளாகவும். இதனால் கல்விச் சூழல் பாதிக்கப்பட்டு அதன் தாக்கத்தால் மாணவ சமுதாயம் அடிமைகளாக வெளிவரும் வாய்ப்புகள் உள்ளன.

உயர்கல்வி நிறுவனங்களின் தலைமைத்துவ பதவிகள் காலியாக இருக்காது என்று சொல்லும் அதே நேரத்தில் ஏற்கனவே பதவியில் இருப்பவர்களை சிறிது காலம் நீட்டிப்பது என்ற முயற்சி, அரசாங்கத்துக்கு சாதகமானவர்களுக்கு பதவி நீட்டிப்பு என்ற எல்லையில் சென்று முடியும்.

அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான உயர்கல்வி:

சமூக பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை உள்ளடக்கியவாறு உயர்கல்வி வழங்க தே.க.கொ2020 உறுதி பூண்கிறது. பொதுவான சிக்கல்களான வழிகாட்டுதல், பொருளாதார சிக்கல்களைக் கலைவதோடு சில பாடப் பிரிவுகளின் மோசமான வேலைவாய்ப்பு நிலைகளைக் களைய முன்முயற்சிகள் மேற்கொள்கிறது.

இதற்காக சமூக பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் கல்விக்காக அதிக நிதி ஒதுக்குதல், சேர்க்கைக்கான இலக்குகளை நிர்ணயித்தல், பாலின சமநிலையை மேம்படுத்துதல், ஊக்கத் தொகைகள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. ஆனால் தனியார் மற்றும் பொது உயர்கல்வி நிறுவனங்களில் குறிப்பாக IIT, போன்ற அமைப்புகளில் இட ஒதுக்கீட்டினை கறாராக அமல்படுத்துவது பற்றி ஒன்றுமே சொல்லப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

மேற்கூறிய நடவடிக்கைகளை உயர்கல்வி நிறுவனங்கள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மேலும் கட்டமைப்பு மற்றும் பாடத் திட்டத்தை மேம்படுத்தவும், இரு மொழிகளில் கற்பிக்கவும் ஏற்பாடு செய்வது, பாகுபாட்டுக்கும் துன்புறுத்தலுக்கு எதிரான கறாரான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்றவற்றை வலியுறுத்துகிறது. ஆனால் பட்டங்களுக்காக வேலைவாய்ப்பினை நிறுவனங்கள் எப்படி நிவர்த்தி செய்யும் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆசிரியர் கல்வி:

2030 ஆண்டுக்குள் ஆசிரியர் தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வியாக நான்கு வருட பி.எட் தேர்ச்சியை அமைக்கும் முடிவானது, ஏற்கனவே பட்டயப் படிப்பு பெற்றவர்களின் எதிர்காலத்தினையும், பட்டயப் படிப்பு பிரிவினையும் கல்லூரிகளையும் கைகழுவும் செயலாகும். அவர்களுக்கான வழிகாட்டுதல்கள் எதுவும் சொல்லப்படவில்லை. மாறாக பி.எட் தர நிர்ணயத்தில் கவனம் செலுத்துகிறது.

முனைவர் பட்டம் பயிலும் மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்ற நடைமுறை மற்றுமொருமுறை சம்பளமற்ற பணியாளர்களை உருவாக்குவதுடன், ஒருவருடத்தின் பின்பு அவர்கள் கற்றலுக்கு திரும்புவதால், ஆசிரியர்களின் நிலைத்தன்மையற்ற தன்மையால் உயர்கல்வி மாணவர்கள் கல்வித்திறம் பாதிக்கப்படும் என்ற தே.க.கொ2020ன் முந்தைய வழிகாட்டுதல்களை முரணாக உள்ளது.

தொழிற்கல்வி:

குழந்தைப் பருவக் கல்வியிலிருந்தே தொழிற்கல்வி பெறுவதால் உயர்கல்விகளில் தொழில் சார்ந்த கல்விகள் சுமூகமாலை இணைக்கப்படும் என்ற பார்வை ஒருசார்பானது. மேலும் தொழில்கல்வியை மேல்நிலைப் பள்ளிகளில் படிப்படியாக அமல்படுத்த திட்டங்கள் மேற்கொள்கிறது. இதற்கு காரணமாக 19-24 வயதுடையோரின் முறையான தொழிற்கல்வி அறிவு பெற்றோரின் விகிதம் 5% மட்டுமே உள்ளதை சுட்டிக்காட்டுகிறது.

அதற்கு பள்ளி கல்வியில் தொழிலைத் திணிக்க வேண்டியதில்லை. கல்லூரி அளவில் தொழில் கல்விகளை வழங்க உரிய திட்டங்கள் அமைத்தால் போதுமானது. மாறாக பள்ளியிலேயே தொழிற்கல்வி கற்றல் என்பது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

எடுத்துக்காட்டாக 10வது படிக்கும் மாணவன் விவசாய அறிவு பெறுகிறான் என்ற பட்சத்தில் அவன் குடும்பத்தின் பொருளாதார சிக்கல்கள் குறுக்கிட்டால் பள்ளியில் படிப்பை நிறுத்தி விவசாயத்துக்கு திரும்பும் நிலை ஏற்படும். இது மேலும் பள்ளி இடை நிற்றலை அதிகரிப்பதுடன், முந்தைய இலக்குகளை விரோதமாக அமையும்.

தேசிய ஆராய்ச்சி நிறுவனம்:

ஆராய்ச்சிக்கு அதிக முதலீடு செய்யவேண்டிய முக்கியத்துவத்தினை வலியுறுத்துகிறது தே.க.கொ2020, தற்போது இந்தியா எதிர்கொள்ளும் எல்லாவித சிக்கல்களுக்கும் தீர்வளிக்க ஆராய்ச்சி தேவைப்படுகின்றது. NRF என்ற அமைப்பின்மூலம் ஆராச்சிகளை முறைமைப்படுத்தவும், நிதி வழங்கவும் திட்டமிட்டுள்ளது. ஆனால் நிதி வழங்கலில் போட்டித் தன்மை இருக்கும் என்ற நிலைப்பாடு நிதிக் குறைப்பேயன்றி வேறெதுவும் இல்லை.

உயர்கல்விக்கான ஒழுங்குமுறைகள்:

உயர்கல்விக்கான ஒழுங்குமுறையை அமைக்க HECI என்ற தன்னாட்சி அமைப்பினை உருவாக்குவதோடு, அதன் கீழே நான்கு தன்னாட்சி அமைப்புகளை முறைப்படுத்தல், அங்கீகாரம், நிதி,, மற்றும் தர நிர்ணயத்துக்காக அமைக்கிறது. இது தனித்தனியான பிரிவுகளை நீக்கும் முடிவு, உச்சபட்ச அதிகாரமுடைய ஒன்று, அல்லது ஒரு குழுவான அமைப்புகளை உருவாக்கி கல்வி நிர்வாகத்தில் ஏகாதிபதியமான போக்கிற்கு இட்டுச்செல்லும்.

கல்வி வணிகம்:

கல்வி வணிகத்தினைத் தடுக்க எல்லா நிறுவனங்களையும் 'லாப நோக்கமற்ற' நிறுவனம் என்று அறிவித்தால் போதுமானது என்று அரசு கருதுகிறது. வணிக ரீதியான செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கும் என்று பெயரளவில் அறிவித்தாலும், நடைமுறையில் அவை கொண்டுவரும் சிக்கல்களை கையாளும் வழிகாட்டுதல்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

கட்டண நிர்ணயங்களை முறைப்படுத்த வலுவான அமைப்பு தேவைப்படுவதையோ அல்லது ஒழுங்குபடுத்தப்படுவதையோ. மறைமுக கட்டணங்கள் தடுக்கப்படுவதையோ உறுதிப்படுத்தவில்லை. மேலும் தங்கள் பாடத் திட்டத்துக்குத் தகுந்தாற்போல் கட்டணங்களை தனியார் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ள வழிவகை செயகின்றது. இவையெல்லாம் கல்விக் கொள்ளைகள் நிறுவனமயமாக்கப்பட்ட வகையில் நடக்க உதவி செய்யும் கூறுகளாகும்.

உயர்கல்வி நிறுவனங்களின் தலைமையை நியமிக்க ஒரு ஆளுநர் குழு அமைக்க முடிவெடுத்திருக்கிறது. இதுவே நாடு முழுவதுமிருக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் தலைமையை நியமிக்கும் பொறுப்பினை ஏற்கிறது. இந்நடவடிக்கை மாநில உரிமைகளைப் பறிப்பதுடன் எல்லையற்ற அதிகாரத்துடன் மத்திய அரசுக்கு விசுவாசமானவர்களை நியமித்து கல்வி நிலையங்களில் ஒரு சார்பானோரை நியமிக்கும் போக்குக்கு வழிவகுக்கும்.

பகுதி 3 - கூடுதல் முக்கிய கவனப் பகுதிகள்

தொழிற்கல்வி:

ஏற்கனவே பார்த்ததுபோல விவசாய, சட்டம், மற்றும் பிற தொழில் சார்த்த பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் எல்லா வகையான கல்வி பிரிவுகளும் ஏற்படுத்தப்படும் என்ற முடிவு பல்கலைக் கழகங்களின் தரத்தினை குறைப்பதுடன் சிறிய கல்வி நிறுவனங்களின் அழிவுக்கு வழிவகை செய்யும்.

இதுபோன்ற நடவடிக்கைகளால் பெரும் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் வளர்ந்து சிறு கல்வி நிறுவனங்களை நசுக்கும். கிராமப்புற சிறு உயர்கல்வி கல்லூரிகளின் அழிவால் அதை சார்ந்துள்ள மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

விவசாய கல்லூரிகளின் சேர்க்கை சதவீதம் மிக குறைவாக இருப்பதை கவலையுடன் சுட்டிக்காட்டும் தே.க.கொ2020 அதற்கு காரணமான பிற காரணிகளான விவசாயப் பொருட்களின் விலை நிரந்தரமின்மை, இடைத் தரகர்களின் தலையீடுகள்,, விவசாய நிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக அழிக்கப்படுதல் போன்றவை குறித்த பார்வையில்லாமல், தொழில்நுட்பம் குறித்த அறிவை வளர்ப்பதும் ஆராய்ச்சிகளுக்கு திட்டமிடுவதுமாகவே கொள்கைகள் அமைந்திருக்கின்றன.

சட்டப் படிப்புகளில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்பட வேண்டிய தேவையை வலியுறுத்துவது நல்ல அம்சம். இது படிப்படியாக மாநில நீதிமன்றங்களுக்கு வழக்காடு மொழியாக மாநில வழக்கு மொழியைப் பயன்படுத்தும் நிலைக்கு முன்னேறலாம்.

மேலும் மருத்துவத் துறையில் எந்த பிரிவினைப் படிப்பவர்களும், அது AYUSH அல்லது அலோபதி, பரஸ்பரம் மற்ற பாடங்கள் பற்றிய அடிப்படை அறிவினைப் பயிற்றுவிக்கும் முடிவும் வரவேற்கத் தக்கதே.

வயது வந்தோர் கல்வி:

ஏற்கனவே இருக்கும் தேசிய எழுத்தறிவு இயக்கம் (தமிழகத்தில் அறிவொளி இயக்கம்) நாடு முழுவதும் எழுத்தறிவினை அதிகப்படுத்தியதை குறிப்பிட்டு அதுபோன்ற தேவை இன்னும் இருப்பதனை தே.க.கொ2020 வலியுறுத்துகிறது. இதுவும் முன்பு போலவே தன்னார்வலர்களால் கற்பிக்கப்படும் கல்வி முறையாக இருக்கும் என்று அறிவிக்கிறது.

அதன் ஐந்து அம்சங்களில் வெறும் எழுத்தறிவு மட்டுமல்லாது வாழ்க்கைத் திறன், தொழில் திறன், மற்றும் தொடர்கல்வி என்ற குறிக்கோள்களை இணைத்து செயல்படுகிறது. மேலும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பரவலாக இவ்வியக்கத்தினை கொண்டு செல்லும் முடிவும் வரவேற்கத்தக்கது.

அதுபோலவே கற்பவர்களோ கற்பிப்பவர்களோ எளிதில் தொடர்பு கொள்ளுமாறு /பதிவு செய்துக் கொள்ளுமாறு அமைப்பாக்கப்பட்ட முறையில் நிரந்தர அமைப்பினை உருவாக்கியிருக்கலாம். அவ்வாறாயின், இதுபோன்ற தன்னார்வலர்களுக்கான நிதி, கட்டமைப்பு போன்றவற்றில் அரசாங்கத்தின் அனுமதியும், முறைப்படுத்தலும் இருக்கும்.

மாறாக, ஏற்கனவே இருக்கும் கல்வி நிறுவனங்களின் ஒரு பகுதியாக வயதுவந்தோர் கல்வியை இணைப்பது இந்த அமைப்பை மேலும் சிக்கலாகும், சில இடங்களில் முறை கேடுகளுக்கு வழிவகுக்கும்.

வாசிக்கும் பழக்கத்தினை விரிவுபடுத்த புத்தகங்கள் எளிதாக கிடைக்கும் வண்ணம் கல்வி நிறுவனங்களில் நூலகங்களை அமைப்பது. அவற்றில் எல்லாவித நூல்களும் கிடைக்கச் செய்வது போன்ற நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது.

அதுபோலவே டிஜிட்டல் நூலகங்கள் அமைத்து வாசிப்பு பழக்கத்தையும், தளத்தையும் விரிவுபடுத்துதல் நல்ல முன்முயற்சி. ஆனால் பள்ளி வளாகங்களை நூலகங்களையும், ICT - equipped அறைகளாக மாற்றுவது நல்ல முயற்சி என்றாலும் அவற்றினை 'மற்ற சமூக கூடலுக்காக' பயன்படுத்தலாம் என்ற அணுகுமுறை பள்ளிக்குள் பள்ளி செயல்பாடற்ற வேண்டத்தகாத நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்குவதிலும். உள்ளூர் அரசியல் தலையீடுகளிலும் சென்று முடியும்.

இந்திய மொழிகள், கலை மற்றும் கலாச்சாரம்:

ஒவ்வொரு மொழியும் கலாச்சாரத்துடன் தொடர்புடையது,மேலும் மொழியில் சீரிய வடிவம் கலைகள், இவை மூன்றும் ஒன்றோடொன்று கலந்துள்ளன கலாச்சாரத்தினை பாதுகாக்க, அதன் மொழிகளை போற்றி பாதுகாக்க வேண்டும் என்று தி.க.கொ2020 வலியுறுத்துகிறது.

இந்தியாவில் அழிந்த, அழிந்து வரும் மொழிகளை காக்க நடவடிக்கைகளை மேற்கில்லாதது குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கிறது. இதனால் மொழிகளைக் காப்பதற்கும் அவற்றினை பள்ளிக்கல்வி நிலைகளில் பயிற்று மொழியாக்குவதற்கும் நடவடிக்கை எடுப்பது நல்ல விஷயம்.

புதிய சொற்களைக் கொண்ட சொற் களஞ்சியத்தினை உருவாக்குவதிலும், மொழியாகராதிகள் செய்வதிலும் இதுவரையிருந்த சுணக்கத்தினை சுட்டிக்காட்டி அதை சரிசெய்ய முயல்கிறது. மொழியில் கலைகளை வளர்த்தெடுக்க உள்ளூர் கலைஞர்கள் எழுத்தாளர்களுடன் சேர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க செய்யும் முயற்சிகளும் நல்ல பலனைக் கொடுக்கும்.

இதற்கெனவே இரட்டை பட்டன்களை பி.எட் படிப்பில் வழங்குவது மொழியியல் வல்லுனர்களாக ஆசிரியர்களை வளர்த்தெடுப்பது போன்ற முயற்சிகளும், வளாகத்துக்குள் கலைஞர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. ஆனால் இதுபோன்ற அமைப்புகளுக்கு முறைமைப்படுத்தப்பட்ட ஒரு நிறுவனம் இல்லை என்பதில் சிக்கல்கள் நிறைந்துள்ளது.

பள்ளிகள் தன்னிச்சையான கலைஞர்களை பணியமர்த்துமா? அவ்வாறு பணியமர்த்தப்படும் கலைஞர்களுக்கு தனி பயிற்சிகள் அளிக்கப்படுமா? பணியமர்த்தப் படுபவர்களுக்கான ஊதியத்திற்கு என்ன முறைமைப்படுத்தப்பட்ட வழிவகை என்பது போன்ற கேள்விகள் எதற்கும் பதில் இல்லை.

மொழியறிவுக்கென்று அருங்காட்சியகம், மாணவர்களை நாடு முழுவதுமுள்ள 100 சுற்றுலாத் தலங்களை தேர்ந்தெடுத்து அனுப்புவது என்பது போன்ற முன் முயற்சிகளுக்கு நிதி உதவி பற்றி எந்த குறிப்பும் கொடுக்கப்படவில்லை. மொழி பெயர்ப்புகளுக்காக IITI என்ற நிறுவனத்தினை நிறுவி அதன்மூலம் ஒழுங்கமைக்க முயல்வது நல்ல முயற்சி.

ஆனால் இதுபோன்ற நிறுவனங்கள் மூலம் தனது சம்ஸ்கிருத திணிப்பை நிறுவனமயமாக்கப்பட்ட வகையில் செய்ய முயல்வது ஆபத்தானது. கலாச்சாரத்தில் பெரும் பங்களித்ததாக கூறிக் கொண்டு சமஸ்கிருதத்துக்கு தனியாக சிவப்புக் கம்பளம் விரிக்கும் செயலினை அரசு செய்வது ஒரு சார்புடையது.

மேலும் சமஸ்கிருதத்தை பள்ளி கேள்விகளில் மட்டுமன்றி உயர்கல்விகளிலும் பயிற்றுவிக்க முயல்வது, மேலும் சமஸ்கிருதத்தினை புனிதத்தன்மை உடைய மொழியாக நிறுவ முயல்வது என அரசின் வேட்கை வெளிப்படுகிறது.

நாடு முழுவதும் சமஸ்கிருதம் பயின்ற பி.எட் ஆசிரியர்களை நியமிக்க முயல்வது மற்ற மொழிகளுக்கும் கலாச்சாரத்துக்கும் செய்யும் துரோகம். இதுபோலவே மற்ற மொழிகளும் கருதப்படும் என்று வார்த்தைகளில் சொன்னாலும் சமஸ்கிருதத்துக்கு அதிக அழுத்தம் கொடுத்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

வேலைவாய்ப்புக்காக தகுதியாக 'இந்திய மொழிகளில்' சிறந்து விளங்குபவர் என்ற கூடுதல் தகுதியை சேர்ப்பது இந்தி பேசாத மாநிலங்களுக்கு செய்யும் துரோகம். ஏனென்றால் இதுபோன்ற அலங்கார வார்த்தைகளில், 'இந்திய மொழிகள்' என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் அது கடைசியில் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் வந்து முடியும் என்பது இதுவரை கண் கூடாகக் கண்டது. மேலும் நிர்வாகம் சார்ந்த வேலை வாய்ப்புகளை மொழியியல் கொண்டு அளப்பது முட்டாள்தனமான முடிவு.

தொழில்நுட்பத்தின் பயன்பாடு:

தகவல் தொழில் நுட்பத்துறையில் இந்தியா பெரும் பங்களித்து வருவதை கணக்கில் கொண்டு அதுபோன்ற தொழில் நுட்பத்தினை கல்வியில் பயன்படுத்துவது எப்படி என்ற திட்டமிடல் செய்கிறது தே.க.கொ2020. அதற்காக National Educational Technology Forum என்ற தன்னாட்சி அமைப்பினை உருவாக்கி தற்போதைய தொழில்நுட்பமான AIஐ பயன்படுத்தி கற்றல்/கற்பித்தல் நிகழ்வுகள் மேம்படுத்தப்படவும், புரிந்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கிறது.

இதுபோன்ற தொழில்நுட்ப பயன்பாடுகள் கல்வி அமைப்பு மேம்படவும். மாணவர்களின் சரியான தரமிடலுக்கும் உதவும். உயர்கல்வி நிறுவனங்களில் AI மற்றும் மற்றொரு துறை என பட்டப் படிப்புகளை வழங்குவது நல்ல முடிவு. இதுபோலவே வேண்டாத தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அதன் விளைவுகள் குறித்த கையேடு வெளியிடுவதும் கல்வி மட்டுமன்றி சமூகத்துக்கும் பயன்படும்.

மேலும் இணைய வழிக்கல்வி பரிசோதனை முறையில் மேற்கொள்ளப் போவதாக தே.க.கொ2020 கூறுகிறது. ஆனால் அதற்கு முன்பாக சமமான பயன்பாட்டினை உறுதி செய்ய சாதனங்கள் வலைதள இணைப்பு போன்றவை அனைவருக்கும் கிடைப்பதை முன் நிபந்தனையாகக் கொள்ள வேண்டும். இணைய கற்றலுக்கான சில முன்னேற்பாடுகளை சோதனை அடிப்படையில் பரிந்துரை செய்கிறது.

பள்ளி மற்றும் உயர்கல்வியில் மின்கல்வி தேவையை கவனிக்க தனி அமைச்சகம் உருவாக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதுபோன்ற கல்வி முறை உயர்கல்வியில் பயன்படுத்தப்படலாம், ஆனால் பள்ளிகளில் பயன்படுத்துவது மாணவர்களின் மீதான அழுத்தத்தினை அதிகரிக்கும்.

செயல்படுத்துதல்:

செயல்படுத்துதலில் முதலில் மத்தியக் கல்வி ஆலோசனை குழுவினை அமைத்து அதன் அதிகாரத்தினை வலுப்படுத்த பரிந்துரை செய்கிறது தே.க.கொ2020. ஆனால் இதுபோன்ற அமைப்புகள் மாநிலங்களின் கல்வி கொள்கை முடிவுகளில் தலையிட்டு விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தவும்.

அதிகாரம் பொருந்திய ஏகாதிபத்திய அமைப்பாக உருவாகவும் வாய்ப்புள்ளது. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தினை 'கல்வி அமைச்சகமாக' (மீண்டும்) பெயர்மாற்றம் செய்வது வரவேற்கத்தக்க முடிவு. ஏனெனில் மாணவர்களை வளங்களாகவும், வேலைச் செய்ய பொருத்தமான தயாரிப்புகளாகவும் கருதும் முறை மாற்றப்பட வேண்டியது.

நிதி:

ஜிடிபியில் கல்வித் துறையில் அரசின் முதலீடு 4.43% மட்டும் இருப்பதை தே.க.கோ2020 கவலையுடன் எடுத்துரைக்கிறது. அதை 6 சதவீதமாக உயர்த்த மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட உறுதியளிக்கிறது. மேலும் மழலையர் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை நிதிப் பயன்பாட்டுக்கான முக்கிய பகுதிகளை கோடிட்டுக் காட்டுகிறது.

குறிப்பாக சமூக பொருளாதார பின்னடைவுடைய பிரிவினருக்கு உரிய வகையில் நிதி ஒதுக்குவதும் அது முறைமைப்படுத்தப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது. கல்வி தேவைகளுக்கு தனியார் நிதி திரட்டலில் ஈடுபட பொதுக் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கிறது. ஆனால் இதுபோன்ற 'அனுமதி'கள் பிற்காலத்தில் கட்டாயமாகவும், பின்பு இலக்கு நிர்ணயம் செய்தும், பின்பு கொஞ்சம் கொஞ்சமாக நிதி திரட்டும் பொறுப்பினை கல்வி நிறுவனங்கள் மீதும் சுமத்தும் திட்டங்களை திணிக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு திணிக்கப்படும் பொறுப்பு கடைசியில் மாணவர்கள் மீதும் சுமத்தப்படலாம். மேலும் இதுபோன்ற நிதி திரட்டலில் முறைகேடுகள் நிகழவும் வாய்ப்புள்ளது.

முடிவுரை:

மொத்தத்தில் தேசிய கல்விக் கொள்கை சில முக்கியமான விரும்பத்தக்க மாற்றங்களை, முன்னெடுப்புகளைக் கொண்டிருந்தாலும், சில தெளிவற்ற ஏட்டளவிலான அறிவிப்புகள் மூலமும், சிக்கல் மிகுந்த நடைமுறைகளை கணக்கில் கொள்ளாமலும் வெளிவந்ததால் குறைபாடுகளோடு தேங்கி நிற்கிறது.

மேலும் அதிகாரம் மையப்படுத்தப்பட்ட அமைப்பு, மொழி திணிப்பு போன்ற தேவையற்ற அறிவிப்புகள் மாநில நலன்களுக்கு எதிரானது மட்டுமல்லாமல் இயல்பாகவே மாணவர் நலனுக்கும் எதிரானது. மொழிக் கொள்கை குறித்த அறிவிப்புகளை செயல் படுத்துவதற்கு முன்பு விமர்சிக்க முடியாது என்றாலும். கொள்கையில் அரசில் (சமஸ்கிருதத்தை முன்னிறுத்தும்) உள்ளார்ந்த வேட்கை வெளிப்படுகிறது.

மேலும் கல்வியில் சமத்துவத்தை நிலை நாட்டவும் பின்தங்கிய வகுப்பினரை முன்னேற்றவும் கடைபிடிக்கப்பட வேண்டிய இடஒதுக்கீட்டு முறையை கறாராக செயல்படுத்துவது பற்றி ஒற்றை வார்த்தைகூட இல்லாதது பெரும் ஏமாற்றத்தினை அளிக்கிறது.

அனைவருக்குமான கல்வி, அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, சமத்துவமான கல்வி போன்றவையெல்லாம் பொதுக் கல்வி முறை மூலமே நிறைவேற்ற முடியும். தனியார் கல்வி என்ற முறையே சமத்துவமின்மையையின் வெளிப்பாடுதான். ஆனால் இந்த கல்விக் கொள்கை தனியார் கல்வியை ஊக்குவிக்கும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இதுபோன்ற முரண்பாடுகளை சுமந்துள்ளதால் கல்விக் கொள்கை எதிர்பார்த்த சாதகமான விளைவுகளை தரக்கூடிய ஒன்றாக இல்லை. மாறாக எதிர்மறை விளைவுகளையே பெரும்பாலும் சுமந்துள்ளது.

- சத்யா