ஈழத்தமிழர்களின் இரத்தத்தாலும், வியர்வையாலும் பெரும் பொருளாதார வளர்ச்சி பெற்ற இலங்கை எனும் சிறிய நாடு இன்று வளர்ச்சிக்கான காரண கருவையே வேரறுக்கும் அவலத்தை அரங்கேற்றி வருகிறது சிங்கள நாடு என்ற போர்வையில். ஈழத்தமிழர்கள் தங்களுக்கான வாழ்வுரிமையை நிலைநாட்ட மேற்கொண்ட அமைதி முயற்சி தோல்வியை தழுவியதையடுத்து, ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் குதித்து பல வகையிலும் தங்கள் தாய், தங்கை, உற்றார், உறவினர் என அனைவரும் கண்ணெதிரே கொல்லப்படும் அவலமும், சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் சூழலும் ஏற்பட்டு உள்ளது.

tirumavalavanசுமார் நாற்பது வருடங்களாக நடந்த வரும் இந்த ஆயுதம் தாங்கிய போராட்டத்தையும், அவர்களுக்கான சுதந்திர கோரிக்கைகளையும் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிய இந்திய அரசு அன்றன்றுள்ள அரசியல் சூழ்நிலைகளையும், அரசியல் தலைவர்களின் உறுதி;யையும் பொறுத்து அமைவது சோகத்தின் ஒரு முனையென்றால்... முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதையடுத்து, ஈழத்தமிழர்களுக்கான சுதந்திர வேட்கைக்கு உற்ற துணையாக விளங்கி வந்த தமிழக தலைவர்களின் உதவிகளும், செயல்பாடுகளும் தடம்மாறி இங்குள்ள அரசியல் தலைவர்களின் அரசியல் சதுரங்க விளையாட்டிற்கு பகடை காயாக பயன்படுத்தப்பட்டு வருவது சோகத்தின் மறுமுனையாகும்.

ஈழத்தமிழர்கள் அங்கே வெட்டிக் கொல்லப்படும் அவலநிலையை தமிழகத்தில் பா.ம.க., மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழர் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட ஒரு சில கட்சிகள், அமைப்புகள் மட்டுமே தடுத்து நிறுத்த தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. என்றாலும் இந்திய மற்றும் தமிழக அரசியல் சூழலில் அவைகள் பெரிதுபடுத்தப்படாமலேயே இருந்தன.

இந்நிலையில் தான் புதுக்கோட்டையில் கடந்த பெப்ருவரி 29, மார்ச் 1, 2 ஆகிய 3 நாட்கள் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது மாநில மாநாட்டில் நிறைவேற்றிய 200க்கும் மேற்பட்ட தீர்மானங்களில் ஒன்றான முதல் நாள் மாநாட்டு தீர்மானத்தில்,

“இலங்கையில் வாழும் தமிழர்கள் அங்குள்ள அனைத்து மக்களின் நியாயமான உணர்வுகளையும், அவர்களது ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கப்படத்தக்க வகையில் சுயாட்சி அதிகாரமுடைய மாநில அந்தஸ்து வழங்குவதற்கான பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண்பது தான் இப்பிரச்சனை தீர்விற்கு ஒரே வழியாகும்” என கோரிக்கை விடுத்தது.

தீர்மானத்தை வலியுறுத்தி கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்த தினத்தன்று தமிழக தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டத்தை கூட்டணிக்கான களம் அமைக்கும் தளம் என விமர்சித்தவர்களுக்கு பெப்ருவரி மாதத்திலேயே நிறைவேற்றிய தீர்மானத்தின் வெளிப்பாடு எனத் தெரியாதது தனிக்கதை.

தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் முதல் லெட்டர் பேட் கட்சிகள் வரை இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்காவிட்டால் தமிழின துரோகியாக சித்தரிக்கப்படுவோம் என பயந்து தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க முனைந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டத்தின் வெளிப்பாடு தான் என்று சொன்னால் அது மிகையல்ல. சுமார் ஒண்ணரை ஆண்டு காலமாக இலங்கையில் பாதிக்கப்படும் ஈழத்தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்ப பல்வேறு வகையிலும் முயற்சி மேற்கொண்ட பழ.நெடுமாறனின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டாதோடு, அவரது செயல்பாட்டை மத்திய, மாநில அரசுகள் சட்டவிரோதமானது என விமர்சித்து தடை விதித்தது.


சட்டவிரோதம் என விமர்சித்த தமிழக அரசு இன்று அதே காரியத்தை செய்ய தமிழக மக்களிடம் உதவி கேட்டு அறைகூவல் விடுத்துள்ளது இலங்கை தமிழர்களின் அலவநிலையை தாண்டிய தமிழகத்தின் ஒரு அரசியல் அவலமாக கருத வேண்டி உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் மின்தடை மற்றும் அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு திமுக அரசின் மீது மக்களிடையே பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியது. இந்த நிலை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தொடரும் பட்சத்தில் தேர்தல் முடிவுகள் நிச்சயமாக ஆளும் கட்சிக்கு பாதகமான முடிவையே தரும் என்ற எண்ணம் திமுக கூட்டணியில் இல்லாத பிற அரசியல் கட்சிகளிடையே மகிழ்ச்சியை தந்தன.

இந்நிலையில் தான் ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் பற்ற வைத்த உண்ணாவிரதத்தீ உலக தமிழர்கள் அனைவரையும் ஒரு சேர திரும்பிப் பார்க்கச் செய்தன. தொடர்ந்து நாளொரு கட்சியும், அமைப்புகளும் மறியல், ஆர்ப்பாட்டம் என்றதோடு சிறைவாசிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டதும், திரைத்துறையினர் இராமேஸ்வரத்தில் போராட்டம் மேற்கொண்டதும் தமிழக அரசியலை உலுக்கி வருகிறது.
தமிழக அரசியலில் கொழுந்துவிடும் ஈழத்தமிழர் விவகாரம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மோசமான மின்தடை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு பேச்சை மறைத்து வருவது, நாளை நமது வெற்றிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற தமிழக அரசியல் கட்சிகளிடையே நிலவும் அச்சம், அப்பாவி ஈழத்தமிழர்களுக்கு சிங்கள அரசின் மீதுள்ள அச்சத்தைவிட மிகப் பெரியது.

ramadoss_karunaniஎன்றாலும் ஈழத்தமிழர்களுக்காக ஒருபுறம் தமிழக மக்களிடையே கவலை ரேகை ஓடினாலும், மின்தடை, விலைவாசி உயர்வு என்ற தனிமனித நேரடி பாதிப்பு தொடர்ந்தால் நிச்சயம் அது தேர்தலில் எதிரொலிக்குமன்றி செய்திகளின் முக்கியத்துவம் மாறுபடுவது, எந்தவகையிலும் அவர்களின் தனிமனித பாதிப்பை கலைத்துவிடாது என்பதே உண்மை.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய மதிமுகவைச் சேர்ந்த வைகோ மற்றும் கண்ணப்பன், “தனித்தமிழ்நாடு போராட்டம் வலுக்கும்” என பேசியது, பிரிவினைவாத பேச்சு எனக்கூறி சிறையில் அடைக்க வைத்தது. தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக பேசிய குற்றத்திற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல்.திருவாவளவன் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரை கைது செய்யாமல் வைகோவை கைது செய்தது அரைகுறை நடவடிக்கை என அதிமுக தலைவி செல்வி.ஜெயலலிதா கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

செல்வி.ஜெயலலிதாவின் அறிக்கையை ஏற்று தொல்.திருமாவளவனை தவிர்த்து திரைப்பட இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீரை மட்டும் கைது செய்த தமிழக முதல்வர் கலைஞரின் நடவடிக்கை அவருக்கே உரிய அரசியல் விளையாட்டு என்றே சொல்ல வேண்டும்.

இன்றைய நிலையில் தொல்.திருமாவளவன் கைது நிலுவையில் உள்ளது கூட்டணி தர்மம். ஈழத்தமிழர்களுக்கு உதவுங்கள் என துண்டேந்தி வரும் தமிழக முதல்வரிடம் யாராவது மின்தடை, விலைவாசி உயர்வை ஞாபகப்படுத்தினால், விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசிய குற்றத்திற்காக, காங்கிரஸின் வேண்டுகொளை(!) ஏற்று, தொல்.திருமாவளவன் கைது செய்யப்படலாம்.

மேலும் சீமான், அமீரின் கைது விவகாரம் எந்தவகையில் ஈழத்தமிழர்களை காப்பாற்றப் போகிறதென்பது தெரியாது. ஆனால்; அமீர் கதாநாயகனாக நடித்து வரும் படமும், சீமானின் அடுத்த படைப்பும் தமிழக திரைச்சந்தையில் நல்ல விலை போகும் என்பது நிதர்சன உண்மை. ஆக விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பேசுவதென்பது காங்கிரஸின் வேண்டுகோள், தமிழக அரசியல் சூழல் ஆகியவற்றை பொருத்தே அமைகிறதே ஒழிய தடை செய்யப்பட்ட இயக்கத்தை பற்றி பேசுவது தவறு என்ற மத்திய அரசின் சட்ட விதிகள் முன்னெடுக்கப்படவில்லை.


மற்றொரு விஷயத்தை இங்கே ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் விடுதலை புலிகளுக்கான தடையை நீக்க வலியுறுத்துவதென்பது சற்று கடினமான ஒன்று. ஆனால் விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட போது இரங்கற்பா எழுதிய தமிழக முதல்வர் பாரதீய ஜனதா ஆட்சிக் காலத்தில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க என்னவித முயற்சியை மேற்கொண்டார் என்பதை ஈழத்தமிழர்கள் மீது பற்றுக் கொண்ட தமிழக தலைவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்காக இலங்கை அரசிற்கு எதிராக போராடும் விடுதலை புலிகள் தங்கள் போராட்ட உதவிகளுக்கு இந்தியாவில் தளம் அமைக்க கூடாது என காங்கிரஸ் அரசுகள் தடை விதிக்கலாமே ஒழிய அங்கே ஆண்டாண்டு காலமாக அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசிற்கு எதிராக போராடும் விடுதலை புலிகளின் செயல்பாட்டிற்கு ஆதரவாக தமிழகத்தில், தமிழர்கள் பேசுவதென்பதே குற்றம் எனக் கூறுவது கருத்துச் சுதந்திரத்திற்கும், எண்ணச் சுதந்திரத்திற்கும் தடை விதிக்கும் சர்வாதிகார செயலாகவே அமையும்.

ஈழத்தமிழர்களுக்கான ஆதரவும், விடுதலைப் புலிகளுக்கான ஆதரவும் வேறுவேறாக பிரித்து பார்க்க வேண்டும் எனக் கூறுவது இந்திய சுதந்திர போரையும், காந்தியையும் பிரித்து பார்க்கும் வகையிலான நகைப்பிற்குரிய விஷயமாகும் என நான் படித்தது இங்கே நினைவிற்கு வருகிறது.

“இலங்கை தமிழர் பிரச்சனையில் இருவேறு பக்கங்கள் உள்ளன என்பதை தெளிவுற உணர வேண்டும். சுயநிர்ணய உரிமைக்கான தமிழர்களின் போராட்டம் என்பது ஓர் புறம். ஆயுதம் தாங்கியவர்கள் மறுபுறம்” என ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின்பும் கூட காங்கிரஸ் கட்சிகளின் நிலைப்பாடுகள் விடுதலை புலிகள் ஆதரவு விவகாரத்தில் சூழலிற்கு ஏற்ப உயர்த்தியும், அடக்கி வாசித்தும் வருகிறது. ஆனால் ஜெயலலிதாவின் நிலைப்பாடு விடுதலை புலிகள் எதிர்ப்பு என்ற ஒரே நிலைப்பாடாகவே உள்ளது. இது ஒரு வகையில் மற்ற கட்சிகளின் இரட்டை வேடத்துடன் ஒப்பிடும் போது பாராட்டப்பட வேண்டிய செயலாகும். ஆனால் ஜெயலலிதா மட்டுமல்லாது அவர் சார்ந்த, அவரின் கருத்துக்களையொத்த கருத்துக்கள் கொண்ட மற்ற கட்சியினரும், அரசியல் பார்வையாளர்களும், விமர்சகர்களும் ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் விடுதலை புலிகளன்றி தீர்;வு பெறுவதென்பது சாத்தியமல்ல என்பதை உணர வேண்டும்.

ஈழவிடுதலை போராட்டத்தில் விடுதலை புலிகளின் செயல்பாடுகள் மட்டுமே இன்றைய தமிழக அரசியல் தலைவர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. அதையும் தாண்டி ஈழத்தமிழர்களுக்கான விடுதலை என்பது விடுதலை புலிகளை மையமாக வைத்து பேசித் தீர்க்கப்பட வேண்டிய விஷயம் என்ற நிதர்சன உண்மையை விடுதலை புலிகள் எதிர்ப்பாளர்கள் உணர வேண்டும்.

இது ஒருபறம் இருக்க மற்றொரு புறம், இன்றைய புதிய பொருளாதார சந்தை என்பது வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் ஒன்றையொன்றை ஏதாவதொரு வகையில் சார்ந்து அல்லது கிட்டத்தட்ட அடிமைப்பட்டு வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை குறிப்பிடலாம். எனவே இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு என்பது இலங்கை, இந்திய, தமிழகத் தலைவர்கள் மற்றும் விடுதலை புலிகள் கொண்ட குழுவினிடையே உள்ள பேச்சுவார்த்தையாக அமைய வேண்டுமே ஒழிய, ஆயுத சந்தையில் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும், வல்லரசு மமதையில் திரியும் அமெரிக்காவின் சுயலாப பாதையில் இலங்கை பேச்சுவார்த்தையை பயணம் செய்ய விடாது பார்க்க வேண்டியது இந்தியாவின் முக்கிய பணியாகும்.

- எஸ்.கோவிந்தராஜன், பத்திரிக்கையாளர்