Ayudya from Thailand

(அயுத்யா, தாய்லாந்து)

இந்தியாவில் இருக்கின்ற அயோத்தியானது உண்மையானதல்ல, மெய்யான அயோத்தியானது நேபாளின் மேற்கு பீர்க்கஞ்ச்சில் அமைந்துள்ளது என நேபாளப் பிரதமர் கே.பிரசாத் ஷர்மா ஒலி ஒரு விவாதத்தை முன்னெடுத்துள்ளார். ‘சீதா இந்தியாவைச் சேர்ந்த இராமரைத் திருமணம் புரிந்ததாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. ஆனால் ராமர் இந்தியரல்ல, மாறாக அவர் நேபாளி.’ என பானு ஜெயந்தி விழா நிகழ்வில் அவர் தெரிவித்தார்.

இந்தியாவிலுள்ள இந்துத்துவ சக்திகள் கே.பி.ஒலியின் இந்தக் கருத்திற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் நேபாளின் அயோத்தியை தங்களுடையதாக்குவதின் மூலம், நேபாளின் மீது இந்தியவானது பண்பாட்டுத் தாக்குதல் செய்கிறதென மேலும் கே.பி.ஒலி தெரிவித்தார்.

எதார்த்ததில், இராமாயண ஆய்வாளர்கள் ஒலியின் கூற்றில் சர்ச்சைக்குரியவை என்று ஒன்றுமில்லாதது மட்டுமல்ல, ராமாயணத்தை விவரிக்கும் விளக்க வடிவங்களிலுள்ள பன்முகத் தன்மையை நினைவுப்படுத்துகிறது எனக் கருதுகின்றனர்.

எல்லாவற்றிலும் முதன்மையானது, இராமாயணம் வரலாறு இல்லை, அது புராண இலக்கியம். ஆகவே, மற்ற வரலாற்று ஆய்வினைப் போல, உள்ளது உள்ளவாறான வரலாற்று ஆய்விற்குப் பொருத்த முடியாது. “ஒரு வேளை நீங்கள் கட்டுக்கதையை வரலாற்றாக மாற்றினால், அது வரலாற்றுப் பிறழ்வு” என்கிறார் வரலாற்று ஆய்வாளர் கே.என்.பணிக்கர்.

நம்மிடமிருப்பது ஏராளமான ராமாயணப் பாடங்கள். ஆய்வாளர் ஏகே ராமானுஜத்தின் கட்டுரை தலைப்பானது ‘முன்னூறு ராமாயணங்களும் ஐந்து சான்றுகளும், மாற்றங்கள் குறித்த மூன்று எண்ணங்கள்'. ராமகதை மற்றும் பிற கட்டுரைகள் என்றறியப்படுகின்ற டாக்டர் கெமில் புல்க்கே அவர்களின் ஆய்வுப்பணியில் முன்னூறு ராமாயணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கிருந்து தான் ஏகே இராமானுஜம் அவர்கள் தனது பணிக்கான தலைப்பிற்கு உத்வேகம் பெற்றார்.

பன்முக கலாச்சாரங்களில் இருக்கும் வாய்மொழிக் கதை சொல்லும் மரபிலிருந்து மட்டுமல்லாது, அவர்களின் சித்திர வடிவத் தொடர்புகளிலிருந்தும் பல ராமாயணக் கதைகள் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன. தெலுங்கு மொழி பேசும் பகுதிகளின் நிலங்களில் மட்டும் ஒரு தெலுங்கு அறிஞர் ராமாயணத்தின் 1000 கதைகளைக் கண்டுபிடித்ததாக ஏகே.ராமானுஜன் தனது 'முந்நூறு ராமாயணங்கள்' நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்து, பௌத்த, சமண, தலித், ஆதிவாசி மற்றும் முஸ்லீம் மரபுகளிலும் வெவ்வேறு ராமாயணங்கள் காணப்படுகின்றன. அனைத்து ராமாயணங்களின் முக்கிய பண்பு என்னவென்றால், ராமாயணத்தில் என்ன கூறப்பட்டாலும் அது ஒரு தனிப்பாடலாக இருக்கவில்லை.

உதாரணமாக, பல ஆசிய நாடுகளில் எங்கெல்லாம் மாறுபட்ட ராமாயணக் கதைகள் பிரபலமாக உள்ளனவோ , அவைகள் அயோத்தி போன்ற இடப் பெயர்களும் கொண்டுள்ளன. தாய்லாந்திலும் ஒரு அயோத்தி உள்ளது. தாய்லாந்து மக்கள் இதை 'அயுத்யா’ என்று உச்சரிக்கின்றனர். அவர்களின் நம்பிக்கைகளின்படி, உண்மையான அயோத்தி தாய்லாந்தில் உள்ளது. தாய்லாந்து மக்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பெளத்த இராமாயணத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். சில குறிப்பிட்ட மரபுகளில், தசரத மன்னனின் தலைநகரம் வாரணாசி, அயோத்தி அல்ல.

இந்தோனேசிய மரபுகளில் அயோத்தி என்பது நாட்டுப்புற மாலைநேர வழிபாட்டின் ஒரு பகுதியாகும். இந்தியாவுக்கு வெளியே, இந்தோனேசியா, தாய்லாந்து, தைவான், மலேசியா, பூட்டான், இலங்கை, சீனா, பாகிஸ்தான், வியட்நாம், ஜப்பான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் ராமாயணங்கள் உள்ளன. இந்த நாடுகளில் உள்ள மக்கள் தங்கள் சொந்த நிலப்பரப்புகளையும் மரபுகளையும் கொண்ட ராமாயணங்களுடன் தொடர்பு படுத்துகிறார்கள், மேலும் ராமாயணத்தை அவர்கள் இந்தியாவில் நடந்த ஒரு கதையாகப் பார்க்கவில்லை.

இந்தியாவில் கூட ராமாயணம் தொடர்பான பல இடங்கள் உள்ளன. உதாரணமாக கேரளாவின் வயநாட்டிலுள்ள புல்பள்ளிக்கு அருகில் ஆசிரமம்கொல்லி என்ற கிராமத்தில் வால்மீகி ஆசிரமம் உள்ளது. புல்பள்ளியில் உள்ள ஜதயாட்டா கவ் கோயிலைச் சுற்றியுள்ள மக்களின் நம்பிக்கையின் படி, அந்தப் பகுதியில் பூமி பிளவுபட்டபோது சீதா பூமிக்குள் சென்றார். அவள் பூமிக்குள் செல்லும்போது, சீதாவின் தலைமுடியை ஸ்ரீராம் பிடித்துக் கொண்டதாகவும் தலை முடியானது அறுந்து போக அவள் உள்ளே சென்று விட்டதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். 'ஜடா' என்றால் தலைமுடி, 'அட்டா’ என்றால் அறுந்தவை என்று பொருள். புராண நம்பிக்கையின் படி அந்த சம்பவத்திலிருந்து ஜடயாட்டா கவ் என்ற பெயர் தோன்றியது என்று கூறப்படுகிறது.

அயோத்தியைப் போலவே, லங்கா என்ற பெயரும் சர்ச்சைக்குரியது. இந்திய அறிஞர் ஹஸ்முக் திராஜ்லால் சங்காலியாவின் கருத்துப்படி, லங்கா மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது. பண்டைய காலங்களில், இன்றைய இலங்கையின் பெயர் தம்ரபர்ணி. சங்காலியாவின் `ராமாயண ஆய்வுகள்’ என்ற நூலின் படி, விந்திய மலைத்தொடர்களைத் தாண்டிய எந்தவொரு பகுதியும் வால்மீகிக்குத் தெரியாது. ஹஸ்முக் திராஜ்லால் சங்காலியா ஒரு இந்திய சமஸ்கிருத அறிஞர் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் ஆவார். இந்தியாவில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நுட்பங்களின் முன்னோடியாக அறியப்படுபவர்.

சீதா மற்றும் ராம் இருவருக்குமிடையான உறவானது, நாட்டுப்புறவியலின் அடிப்படையில் பிராந்தியத்திலிருந்து பிராந்தியத்திற்கும், கலாச்சாரத்திலிருந்து கலாச்சாரத்திற்கும் மாறுபடுகிறது. பௌத்த ராமாயணத்தில், சீதா ராமனின் மனைவி அல்ல, அவள் அவனுடைய சகோதரி. இந்தியாவுக்கு வெளியே பல ராமாயணங்களில், சீதா ராவணனின் மகள். மலையாளக் கவிஞர் வயலார் ராமவர்மாவின் கவிதை, ராவணபுத்ரி (ராவணனின் மகள்) பிரபலமானது.

பண்டைய துருக்கியில் கோத்தானின் ராமாயணப் பதிப்பின் படி, சீதா, ராம் மற்றும் லட்சுமணன் இருவரின் மனைவி. அந்த பிராந்தியத்தில், இதுபோன்று ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் மரபு உள்ளது. சீதாவின் திருமணத்தை மேற்கோள் காட்டி அவர்கள் அத்தகைய மரபினை நியாயப்படுத்துகிறார்கள்.

இந்தோனேசிய ராமாயணத்தின் ஹிகாயத் ஸ்ரீராம் கதைகளில், ராமும் லக்ஷ்மனும் பிரார்த்தனை செய்வார்கள் என்பது அல்லாஹ்விடம் தான். இந்தோனேசியாவின் ஹிகாயத் ராமாயணத்தில் ஆதாம் நபி, முகமது நபி, அலி, ஜிப்ரில் மற்றும் பல கதாபாத்திரங்கள் உள்ளன .

பண்டைய சமண மொழியில் எழுதப்பட்ட பௌமசாரியாவைப் பொருத்தவரை, இராவணன் லெட்சுமணனால் கொல்லப்பட்டார், இராமனால் அல்ல. லெட்சுமண் செய்த வதைக் குற்றத்தினால், அவர் நரகம் சென்றதாகவும் பௌமசாரியா குறிப்பிடுகின்றது.

ஆதிவாசி ராமாயணங்களைப் பொருத்தவரை, ராம் அவர்களின் ஆதிவாசி கடவுள்களுக்கு மேலானவர் ஒன்றும் இல்லை. வயநாட்டில் உள்ள ஆதியாராமாயனத்தின் கூற்றுப்படி, ஆதிவாசிக் கடவுள்களான மல்லப்பன், சித்தப்பன் மற்றும் நெஞ்சப்பன் ஆகியோர் ராமரை அவரது குழந்தையை கைவிட்டதற்காக கோத்ரா நீதிமன்றத்தில் கேள்வி எழுப்புகிறார்கள், தனது மனைவி சீதாவையும் கைவிட்டதற்காக ஆதிவாசி கடவுளர்கள் ராமரைக் கேள்வி கேட்கிறார்கள்.'குழந்தைகளை கவனிப்பது பெற்றோரின் கடமையா’, ஆதிவாசி கடவுளர்கள் ராமரிடம் கேட்கிறார்கள்.

சுருக்கமாக, இது நம்மிடம் உள்ள ஒரு ராமாயணம் அல்ல, ஆனால் பல ராமாயணங்கள், பல ராமர்கள், பல சீதாக்கள் மற்றும் பல லட்சுமணர்கள். நம்பிக்கை அமைப்புகளின் இந்த பன்முகத் தன்மையை ஓர் ஒற்றை ராமாயணக் கதையாகக் குறைப்பது ஒரு பெரிய ஆபத்து. இது பல்வேறு கலாச்சார மரபுகளின் பல மற்றும் மாறுபட்ட ஆக்கப்பூர்வமான கைவினைகளை அழிக்கும் முயற்சியாகும்.

எனவே, அயோத்தி நேபாளத்தில் இருப்பதாக நேபாளி இந்துக்கள் நம்பலாம். இந்தியாவில் உள்ள இந்துக்கள் இந்தியாவில் இருப்பதாக நம்பலாம். அது தாய்லாந்தில் இருப்பதாக தைஸ் நம்பலாம். ஒன்று மட்டுமே சரியானது என்று வாதிடுவது மற்றவர்களின் நம்பிக்கை அமைப்புகளின் மீதான ஆக்கிரமிப்பு.

மலையாள மூலம் : டாக்டர்.அஜீஸ் தருவானா

ஆங்கிலத்தில் : கே.பி.சசி | தமிழில் : சாருவாகன்

ஆங்கில மூலக்கட்டுரை :

https://countercurrents.org/2020/07/monolithic-concept-of-ramayana-is-anti-ramayana/?fbclid=IwAR1WBR4pVAZ_2JxF6fAU96IqLSdhYa5ckb4PbX1qSdIBNTXyDMlPaBhcv1E