கொரோனா நோய்த் தொற்றைக் கையாள்வதில் இந்த அரசு பெரும் தோல்வியைத் தழுவி இருக்கின்றது. ஜெயலிதாவின் மறைவுக்குப் பின்னால் சில நாட்களில் ஆட்சியை இழந்து விடுவார் என அரசியல் நிபுணர்களால் ஆரூடம் சொல்லப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய விசுவாசத்தை லேடிக்குப் பதிலாக மோடிக்கு மாற்றிக் கொண்டதால் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். இந்தியாவில் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டு அடிபண்ந்தால் எப்பேர்ப்பட்ட குற்றச்சாட்டில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் என்பதற்கு நம் சம காலத்தின் வாழும் சாட்சியாக எடப்பாடி மாறிப் போனார். லேடி இருந்தபோது எதை எல்லாம் தமிழ்நாட்டில் நுழைய விடாமல் தடுத்தாரோ, அதை எல்லாம் செயல்படுத்த தமிழ்நாட்டை அகலமாகத் திறந்து வைத்து இருகரம் கூப்பி மோடியை வரவேற்றார். ஜெயலலிதாவின் ஆட்சியில் பொத்திக் கொண்டு இருந்த பார்ப்பன குள்ளநரிக் கூட்டமெல்லம் எடப்பாடி ஆட்சியில் ரோட்டுக்கு வந்து ஊளை இட ஆரம்பித்தது.

எடப்பாடி, மோடியை மட்டுமல்லாமல் எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்கள் பொறுக்கித்தனமாக நடந்துகொள்ளும் போது அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் இருந்து தரமான பால் பாக்கெட் தர உத்திரவிடும் வரை தன்னுடைய அடிமை விசுவாசத்தின் பரப்பளவை விரிவாக்கிக் கொண்டார். அவரைப் பொருத்தவரை தன்னுடைய ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள ஒரே வழி பார்ப்பனியத்தையும், பார்ப்பனர்களையும் அனுசரித்து அரவணைத்துப் போவதுதான்.

சரி, இப்படி அடிமையாக இருந்து எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன அப்படி பெரிய நலத்திட்டங்களை மத்திய அரசிடமிருந்து இதுவரை பெற்றுக் கொடுத்து இருக்கின்றார் என்று பார்த்தால், தமிழ்நாட்டை மொத்தமாக அடமானம் வைத்து தன்னுடைய முதலமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொண்டதையும், அதிகார ஊழல் முறைகேடுகளில் இருந்து இதுவரை தப்பித்ததையும் தவிர எதையுமே செய்ததில்லை.

edappadi palanisamy 600வயிற்றுப் பசிக்காக அடிமையாக இருக்கும் கூட்டம் கூட ஒருநாள் அதை மாற்றுவதற்குக் கிளர்ந்தெழும். ஆனால் பணத்திற்காகவும், பதவிக்காகவும் அடிமையாக இருக்கும் கூட்டம் ஒருபோதும் தன்னுடைய இயல்பை மாற்றிக் கொள்வது கிடையாது. அது போன்றவர்கள் வரலாறு முழுக்க கைக்கூலிகளாகவும், காட்டிக் கொடுப்பவர்களாகவுமே இருந்துள்ளார்கள்.

பாசிச ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்த எடப்பாடியின் ஆட்சியில் தமிழர்கள் பொருளாதார ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாவும் பெரும் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் தாங்கள் நினைத்த அனைத்து கேடுகெட்ட திட்டங்களையும், பார்ப்பன பயங்கரவாதத் தாக்குதல்களையும் செய்ய வேண்டும் என்றால், ஒன்று தாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும். ஆனால் அதற்கான அடிச்சுவடு கூட இல்லாதபோது, எடப்பாடி போன்ற ஓர் அடிமையை வைத்து அதை எல்லாம் சாதித்துக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் இன்றுவரையிலும் எடப்பாடியின் ஆட்சி தப்பிப் பிழைத்துக் கொண்டு இருக்கின்றது. மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, நீட், உதய் மின்திட்டம் என அனைத்திலுமே தமிழகத்தின் நலன்கள் காவு வாங்கப்பட்டன.

பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற்பயிற்சி பெற நடைபெற்ற தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அடியோடு புறக்கணிக்கப்பட்டு, வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே (300 பேர்) நியமிக்கப்பட்டார்கள். அதே போல கோவை, சென்னை உள்ளிட்ட ரயில்வே அலுவலகங்களில் நடைபெற்ற 2600 நியமனங்களில் 2300 பேர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே நியமிக்கப்பட்டு, மத்திய அரசுப் பணிகளில் இந்தி பேசும் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் அளவுக்கு தமிழர் விரோதம் தாண்டவம் ஆடியது.

கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாக்கிய ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதில், பல்லாயிரக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்தன. குமரி மாவட்ட மீனவர்கள் 162 பேர் உள்பட 204 மீனவர்கள் உயிரிழந்தனர். ஒக்கி புயலால் உண்டான பாதிப்புகளை சீர் செய்யும் பொருட்டு மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு ரூ.13520 கோடி நிவாரணம் கேட்டது. ஆனால் சாகவாசமாக பாதிப்புகளைப் பார்வையிட குமரி வந்திருந்த பிரதமர் மோடி, தமிழக அரசுக்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வெறும் ரூ.280 கோடி முதல்கட்டமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் குமரி மாவட்ட மறுசீரமைப்புக்கு தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ.558 கோடி நிதி கேட்டது. ஆனால், மத்திய அரசு ரூ.40 கோடி மட்டுமே ஒதுக்கியது. அதே போல 2018-ம் ஆண்டு தென்மாவட்டங்களைத் தாக்கிய கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடியை மட்டுமே அறிவித்தது

தற்போது கொரோனா பிரச்சினையிலும் அதே அணுகுமுறையைத்தான் மத்திய அரசு கடைபிடிக்கின்றது. கொரோனா நிதியாக தமிழக அரசு முதல் கட்டமாக 3500 கோடி ரூபாயும், அடுத்த கட்டமாக 4500 கோடி ரூபாயும் கேட்ட நிலையில், மத்திய அரசு வெறும் 510 கோடி ரூபாய்தான் தமிழகத்துக்கு ஒதுக்கியது. அதுமட்டுமல்ல ரேபிட் டெஸ்ட் கருவிகளை மாநிலங்கள் நேரடியாகக் கொள்முதல் செய்யக் கூடாது என்று உத்திரவு போடும் அளவிற்கு மாநில உரிமைகளின் மீது மத்திய அரசு காறி உமிழ்ந்திருக்கின்றது.

இப்படி ஒவ்வொரு முறையும் மாநில அரசு கேட்கும் நிதிக்கும், மத்திய அரசு ஒதுக்கும் நிதிக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருந்தாலும், இதுவரை மத்திய அரசுக்கு எதிராக தன்னுடைய சுட்டுவிரலைக் கூட நீட்டிப் பேசத் திராணி இல்லாதவராகவும், இப்படி தமிழ்நாட்டு மக்களை காவு வாங்கத் துடிக்கும் மோடி கும்பலை மயிலிறகால் வருடி விடும் நபராகவுமே எடப்பாடி பழனிசாமி இருக்கின்றார். ஒவ்வொரு மாநிலமும் ஊரடங்கை சுயமாக முடிவெடுத்து அறிவிக்கும்போது, அதைக்கூட மாநில மக்களின் நலன் சார்ந்து சொந்தமாக முடிவெடிக்கத் தைரியம் இல்லாதவராகவே பழனிசாமி இருக்கின்றார்.

இவை எல்லாவற்றையும்விட மிகக் கொடுமையானது கொரோனா தொற்று கட்டுப்பாடற்று பெருகிக் கொண்டு இருக்கும் இந்தச் சூழ்நிலையில் சாராயக் கடையை திறந்துவிட்டு, எவன் எக்கேடு கெட்டு நாசமாய்ப் போனால் நமக்கென்ன, கஜானாவுக்குப் பணம் வந்தால் போதும் என நினைத்ததுதான். 40 நாட்களுக்கும் மேலாக எந்தவித வேலைவாய்ப்புகளும் இன்றி ஒட்டுமொத்தமாக மக்களையும் முடக்கி, வருமானத்திற்கு வழியற்று செய்துவிட்டு, கொஞ்சம் கூட கூச்சமோ, குற்ற உணர்வோ இல்லாமல் சாராயக் கடையைத் திறந்து, ஏற்கெனவே பசியால் வயிறு எரிந்து செத்துக் கொண்டு இருந்தவர்களை எல்லாம் சாராயத்தால் வயிறு எரிய வைத்து சாகடிக்கத் துணிந்த செயல் ஒன்றே இந்த அரசு எவ்வளவு இரக்கமற்றது என்பதைப் புரிந்து கொள்ள உதவும்.

தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை கேட்டு வாங்க முடியவில்லை, கொரோனா நிவாரணமாக கேட்ட தொகையையும் கேட்டு வாங்க முடியவில்லை. தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தி அமைச்சகத்துடன் இணைக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. வழக்கம் போல இதையும் தடுத்து நிறுத்த இந்த முதுகெலும்பு இல்லாத அரசால் முடியாது. இப்படி எதற்குமே கையாலாகாத ஓர் அரசு எதற்காக இருக்க வேண்டும்? எடப்பாடி பழனிசாமியும் அதிமுக அடிமைகளும் மட்டும் தமிழ்நாட்டில் செழிப்பாக சீரும் சிறப்புமாக வாழ்ந்தால் போதுமா? சாமானிய மக்கள் நாயினும் கீழான ஒரு வாழ்க்கையைத்தான் வாழ வேண்டுமா? தமிழகத்தை கொரோனா அழிக்கப் போகின்றதோ இல்லையோ, எடப்படியும் அவரது பரிவாரங்களும் நிச்சயம் அழிக்காமல் விடமாட்டர்கள் என்பதைத்தான் நடப்பு நிலைமைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

- செ.கார்கி