1930 இல் பாரதிதாசனால் எழுதப்பட்ட தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு எனும் நூல் ம.நோயேல் என்பவரால் பதிப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளது. பாரதிதாசனின் படைப்புகள் குறித்துப் பேசுபவர்களும், பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் சொற்பொழிவுகளிலும் இப்படைப்பு பற்றிப் பேசியதில்லை என்றே சொல்லலாம். இதே ஆண்டு வெளிவந்த சஞ்சீவி பர்வதத்தின் சாரல் குறித்தும் கதர் ராட்டினப்பாட்டு குறித்தும் நிறையப் பேசியுள்ளார்கள். ஆனால் தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு குறித்து எவரும் பேசியதில்லை. விளிம்புநிலைப் படைப்பின் தோற்றுவாய் குறித்து எழுதும்போது கூட இப்படைப்பு பற்றிய பேசியுள்ளதாகக் குறிப்புகள் கிடைக்கவில்லை. பாரதிதாசனின் படைப்பாக்கத்தின் வழியான தாழ்த்தப்பட்டோர் சமூக சமத்துவத்திற்கான கருத்தியலின் கலகக்குரலை அடையாளப்படுத்தும் விதத்தில் இக்கட்டுரை அமைகிறது. 

bharathidasan on dalitவிளிம்புநிலை படைப்பாக்கத்தின் (Subaltern literature ) தேவையும் நோக்கமும் :

அனைத்து மொழி இலக்கியங்களின் தோற்றம் குறித்துப் பார்க்கும்போது இலக்கியங்கள் சமூக, பொருளாதார, பண்பாட்டு, அரசியல் காரணிகளின் விளைபொருளாகும். மேலும் இலக்கியப் படைப்பாக்கம் என்பது உளவியல் ரீதியானதாகும். படைப்பின் உளவியலுக்கும் படைப்பாக்க உளவியலுக்கும் ஒரு பொருத்தப்பாடு இருப்பது உண்மை. இவ்விரண்டுமே படைப்பாளியின் உளவியலோடு இணைகின்றது. ஒரு படைப்பினைப் படைப்பதற்குப் படைப்பாளிக்கு ஏற்படும் உந்துசக்தி, படைப்பு குறித்த பொருண்மை (Textual Meaning) ஆழ்மன வெளியில் உருவாகி, பின்னர் படைப்பாக உருவாகிறது. தான்பார்க்கும் எல்லா நிகழ்வுகளும் மனத்தினுள் சென்று ஏதோ ஒன்றை நாம் செய்ய வேண்டும் என்கிற நீதிமனத்தூண்டலால் படைப்பாக உருக்கொள்கிறது. இப்படி உருவான படைப்புகள், படைப்பின் நேர் தளத்தை வாசகனின் மனம் குறுக்குவெட்டு தளநோக்கில் பொருள்கோள் உருவாக்கப்படுகின்றன.

ஓர் இலக்கியம் உட்பட அனைத்துக் கலைஇலக்கியப் படைப்புகளின் தயாரிப்புகளின் தோற்றப்புள்ளியாக இருவேறு தளத்தில் நிகழ்கிறது. ஒன்று, கலை இலக்கியங்கள் யாவும் முற்போக்குத்தனமான புரட்சிகரமானவை. மற்றொன்று, பிற்போக்குத்தனமானவற்றை உள்ளடக்கியது. இவ்விருதள இலக்கியங்கள் எதன் பக்கம் நிற்கின்றன என்பதை வாசகனால் மட்டுமே அனுமானிக்கமுடிகின்றன. ஒரு படைப்பாளி ஆக்கப்பூர்வமான அறிவின் தேடலை மையப்படுத்தும்போது அது ஆக்கசக்தியின் இயங்கியலை வாசகன் தன் சூழலோடு பொருத்திப்பார்க்க உதவுகிறது. அந்தவகையிலேயே விளிம்புநிலைப் படைப்பாக்கம் சக்திவாய்ந்த கருவியாக அமைகிறது. சீர்திருத்தத்திலிருந்து சமூக மாற்றத்தையும் தெளிவாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியாக அமைவதற்குப் பாரதிதாசனின் தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு எனும் கவிதைநூல் அடித்தளமிட்டுள்ளது என்பதே உண்மை.

எண்பதுகளில் விளிம்புநிலை ஆய்வுகளும் படைப்பாக்கங்களும் மராட்டியச் சூழலில் ரணஜித் குகா மற்றும் விளிம்புநிலை ஆய்வாளர்களும், விளிம்புநிலை ஆய்வுகளில் அக்கறை கொண்டவர்களும், ஒன்றிணைந்து விளிம்புநிலை குறித்த மாநாடு ஒன்றை நடத்தியுள்ளார்கள். இதன் பிற்பாடே இந்திய, தமிழ்ச்சூழலில் விளிம்புநிலை ஆய்வுகள், படைப்புகள் உருவாகத் தொடங்கின. இம்மாநாட்டில் விளிம்புநிலை ஆய்வுகள் எழுத்துக்கள் என்பவை எவை? விளிம்பு நிலையினர் யார்? யார் எழுதுவது விளிம்புநிலை எழுத்துக்கள்? என்பன போன்ற பல வினாக்கள் எழுந்தன. இம்மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இன்றைய சூழலிலும் விளிம்புநிலை குறித்து பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பின்நவீனத்துவமே விளிம்பு பற்றி யோசித்தது. இதன் நீட்சியாகவே தலித்தியம், பெண்ணியம்; சமத்துவத்தைப் பேசுகின்ற இயக்கமாக உருவெடுத்தது.

சமூக நீதி, ஜனநாயகம், சமத்துவம் என்கிற தன்மையில் அயோத்திதாசப் பண்டிதர், காரல்மாக்ஸ், அம்பேத்கர், பெரியார், மகாத்மா பூலே, இரட்டைமலை சீனிவாசன், இமானுவேல் சேகரன் போன்றவர்கள் சமூக மாற்றத்தை விரும்பினார்கள். இச்சமூகச் சிந்தனையாளர்களான இவர்களின் வழியாக, வர்க்க விடுதலையோடு சாதியாதிக்கத்திலிருந்து விடுபட அமைப்பு ரீதியாக பல்வேறு போராட்டங்களையும் அறிவுசார்ந்த முன்வைப்புகளையும் மக்களை நோக்கிய சமூகக் களப்பணியும் செய்துள்ளதை வரலாற்றில் நாம் காணமுடிகின்றன. இதன் தொடர்ச்சியாக இன்றளவிலும் பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூக விடுதலையை மையப்படுத்தி முற்போக்குச் சிந்தனையாளர்கள் மக்கள் விடுதலைக்காகப் போராடி வருகிறார்கள்.

காலனிய ஆதிக்க சூழல் இந்தியா-தமிழகத்திற்குள் நவீனக்கல்வி, நவீன மருத்துவமுறை, நவீன வாழ்க்கை முறை என்பவை புதிதாக வந்தபோதும் சாதியத்தைத் தகர்க்கமுடியவில்லை. மேலும் பார்ப்பனியம் சாதியாதிக்கம், தீண்டாமை இவற்றை ஏற்படுத்தி உள்ளதைப் பார்க்க முடிகிறது. பிராமணர்களின் வர்க்க நலன்களைப் புராணங்களும் இதிகாசங்களும் பேசியுள்ளதை முதற்கண் விளிம்புநிலை ஆய்வுகளும் படைப்புகளும் கட்டுடைத்துப் புதுக்கருத்தியலை முன்வைக்கத் தளைப்பட்டன. காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட, கலை இலக்கியங்களின் வழியாகக் கலக உணர்வைச் செய்துவந்ததையும் பார்க்க முடிகிறது. காலனியத்தை எதிர்ப்பதற்குச் சாதிகளால் பிளவுண்டு இருக்கும் சமூகம் சாதியத்தை மறந்து சமத்துவத்தைப் பேணும்பொழுது காலனிய ஆதிக்கத்தை வேரறுக்க முடியும் என்கிற தன்மையில் இந்திய தேசியம் என்கிற ஒற்றைப் போர்வைக்குள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டிய சூழலும் இந்திய விடுதலையை ஒட்டி எழுந்துள்ளது.

இந்திய விடுதலை என்பது அனைவரும் ஒன்றிணைதல் மூலமாகத்தான் நிகழும் என்பதை எல்லோரும் உணர்ந்து அதன் பொருட்டே சாதி என்கிற உணர்வின்றி, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்கிற தன்மையில் இந்திய விடுதலைக்குச் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என எண்ணி இருந்ததை பாரதி, பாரதிதாசன் கவிதைகளில் பார்க்க முடிகிறது. படைப்பிலக்கியங்களில் நிகழ்ந்ததுபோல நாடகக் கலையின் வழியாக இந்திய விடுதலையை வெல்லவதற்குப் பல்வேறு கலைஞர்களும் ஒன்றிணைந்து தங்களின் கலைச் செயல்பாட்டினூடாக விடுதலைக்கான கலகக்குரலை முன்வைத்துள்ளார்கள். இருப்பினும் இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் பார்ப்பனியம் வலுவாக வேர்பிடித்து ஆழமாகப் படர்ந்து இன்றளவிலும் தன் முகத்தை வெவ்வேறு வடிவில் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

மனுவின் வழியாக வர்ண பேதத்தை உள்ளடக்கிய பார்ப்பனியத்தை, பெரியார் சமூகநீதி என்னும் கடப்பாரை கொண்டு தகர்த்தெறியச் செய்தார். இருப்பினும் பார்ப்பனியம் ஒடுக்கப்டோர்க்குள்ளும், சாதி இந்துகளுக்குள்ளும் நுழைந்து நிலவுடமைச் சமூகத்திலும் முதலாளித்துவ சமூகத்திலும் வெவ்வேறு முகங்களில் உருவெடுத்துள்ளது. இன்றைய சூழலில் சாதியத்தால் பிளவுபடுத்திப் பிரிவினைவாதத்தை முன்வைப்பது பார்ப்பனியத்தின் உள்ளார்ந்த நோக்கமாகும். நவீன முதலாளியமும் கூட சாதி, சமய பேதத்தை மாற்றி அனைத்துத் தளத்திலும் சந்தைக்கான நுகர்வியத்தை விரிவுபடுத்தினாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் பொது இடங்களில் துணிச்சலாக நடந்துகொண்டால் ஆதிக்க சாதியினரால் தாக்கப்படுவதுமுண்டு. இதற்குச் சான்றாக, தன் வீட்டுத் திண்ணையில் கால்மேல் கால்போட்டு செல்போன் பார்த்ததற்காக சாதி இந்துக்களால் தாக்கப்பட்டதையும், குடிசை வீடுகளில் வசித்து வந்தாலும் எல்லாவசதியும் இருக்கிறது என்று எண்ணும் சாதி இந்துக்களால் தலித் குடியிருப்புகளை சூறையாடுவதும், வீடுகளையும் தோட்டங்களையும் தீயிட்டுக் கொளுத்துவதும் நடந்தேறித்தான் இருக்கின்றன. பார்ப்பனியமும் சாதியமும் ஒன்றிணைந்த கோரமுகத்தை ஒடுக்கப்பட்டோர் மீது கட்டவிழ்த்தாலும் இதனை ஒடுக்கப்பட்டோர் உணர்வதகான முயற்சிகள் இன்றளவில் உருவாகி வருகிறது. இம்முயற்சியில் பாரதிதாசன் பார்ப்பனியத்தின் போலி முகத்தைக் கவிதைவழி தோலுரித்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட சமூகம் விடுதலையை நோக்கிய பயணத்தை அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், பெரியார், அம்பேத்கரின் சிந்தனைகளின் வழியாக மனத்திட்பம் பெற்று தன்னிலை உணர்தல் அதன்வழியாக சமூக விடுதலைக்காகச் சமர் இடுதல், கலகக் குரல் எழுப்புதல் என்கிற நோக்கில் பலர் விளிம்புநிலை எழுத்தாக்கங்களைப் பதிவு செய்ய முன்வந்ததன் விளைவால் இன்றளவிலும் விளிம்புநிலை ஆய்வுகளும் படைப்பாக்கங்களும் மாற்றுத்தளத்தை நோக்கிப் பயணிக்கின்றன. தலித் அல்லாதோர்களும் விளிம்புநிலைப் படைப்பாக்கங்களைப் படைத்து வருவது வரவேற்கதக்கதாகும். இதன்வழியாகவே தலித்துகளும் தங்களின் வாழ்வியலைத் தானே படைப்போம் எனும் குணநிலையில் பல ஆக்கங்கள் உருவாகிவருகின்றன. இதில் கவனிக்க வேண்டியவை என்னவெனில் பின்காலனியச் சூழலில் அடையாளத்தைத் தேடுதல் என்பது ஒவ்வொரு சமூகத்தின் சுயத்தை நிலைநாட்ட வேண்டுமே ஒழிய விளிம்புநிலையினர்களுக்குள் பிளவுபடுத்தும் வேலைகளை ஒரு போதும் நிகழக்கூடாது.

இங்கு அடையாளங்களை நுணுகிப் பார்ப்பது, அடையாளத்தை மீட்டெடுப்பது என்கிற தன்மைகளில் விளிம்புநிலை ஆய்வுகள் வர்க்க, இன விடுதலையை மையப்படுத்தி ஒன்றிணைவது நிகழாமல் தனித்தனியான விடுதலையைப் பேசுவதாக அமைந்து விடுகிறது. தோழமை சார்ந்து ஒன்றிணைந்து சமூகத்திற்குத் தேவையான கருத்தியலை முன்வைப்பதும் களப்பணியாற்றுவதும் ஏற்படாமல் போய்விடுவதோடு, இதனால் விளிம்புநிலை ஆய்வுகளும் விளிம்புநிலை படைப்புகளும் வளர்ச்சிக்கான தேக்க நிலையை உருவாக்கக்கூடும். படைப்பின் பொருண்மையை ஒட்டியே எல்லாப் படைப்பாளர்களும் விடுதலைக்கான குரல்களை மையப்படுத்தியே ஒரே நேர்கோட்டில் செல்லும்பொழுது பார்ப்பனிய முதலாளித்துவ மனோபாவங்களின் பொதுத்தளத்தை உடைத்தெறிந்து சமத்துவ சமுதாயத்தை நிலைநாட்ட முடியும். இவ்வாறு முப்பதுகளில் சமத்துவத்திற்கான கலகக் குரலை பாரதிதாசன் கொடுத்துள்ளார் என்பதை தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு படைப்பின் வழி அறிய முடிகிறது. 

தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு நூலின் நோக்கமும் அமைப்பும் :

தாழ்த்தப்பட்டோரின் சமத்துவத்தையும் விடுதலையையும் இலக்கியங்களின் வழியாக உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் ம.நோயேல் என்பவருக்குள் உதயமாகி, முதன்முதலாகத் தாழ்த்தப்பட்ட சமூகம் பற்றிய நூலை வெளியிட்டுள்ளார். இந்நூல் 1930-இல் வெளிவந்துள்ளது. இந்நூலின் பாடல்கள் அனைத்தும் மனுதர்மம் உருவாக்கிய சாதிய ஏற்றத்தாழ்வுக் கட்டுமானங்களின் மேல் கேள்வி எழுப்புகின்றன. ஒடுக்கப்பட்டோரின் நலன்சார்ந்த உயர்ந்த கருத்துகள் உள்ள இந்நூலின் அடிகள் ஒவ்வொன்றும் சுருங்கிய இரண்டடிக் குறள்போல் அமைந்து, விரிந்த கருத்தை விளக்குகின்றன. இந்நூலில் 110 பாடல்கள் இரண்டடியில் அமைந்த பாடல்கள் குதம்பைச் சித்தர் பாடல் மெட்டிலும், 30 பாடல்கள் நான்கடியிலும், 10 பாடல்கள் எட்டடியிலும், சகோதரத்துவம் எனும் தலைப்பில் அமைந்த ஐந்து பாடல்கள் ‘ஆடும் கூத்தை நாடச்செய்தாள் என்னை’ எனும் மெட்டில் நான்கடியில் ஐந்து பாடல்களைக் கொண்டுள்ளது. சேசு மொழிந்த தெள்ளமுது எனும் பகுதி சிங்கன், சிங்கி மெட்டில் அமைந்துள்ளது. “எளிய நடையில் தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு என்னும் இந்த நூலை பாரதிதாசன் இயற்றிக் காண்பித்தார்கள். கண்டதும் எனக்கு ஓர் ஆச்சரிய உணர்ச்சி உண்டாயிற்று. இந்நூலை அச்சிட்டுச் சொற்ப விலைக்குத் தந்து மக்கள் அனைவருக்கும் பயன்படுத்தவேண்டும் என முன்வந்தேன். இந்த இப்புத்தகத்தை மக்கள் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய நூல்கள் போல் பாராயணம் செய்து இதன் கருத்துக்களை அரிய ஆயுதமாகக் கொண்டு முன்னேற வேண்டும் என்பது எனது கருத்தாகும். ஆதலின் மக்கள் அனைவரும் இதைப்பெற்று வாசித்து நலம் அடைய வேண்டுகிறேன்.” எனத் தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு நூலை வெளியிட்ட ம.நோயேல் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூலின் வெளியிட்ட ம.நோயேல் அவர்களைப் பற்றி, “தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு என்னும் மிந்நூலைப் வெளியிட்டவர் திரு.ம.நோயேல் அவர்கள். தம் சகோதர ஜனங்களின் முன்னேற்றங் கருதி இப்புதுவை அதைச் சார்ந்த இடங்களில் உள்ள ஆதிதிராவிட சமூகத்தினர்களுக்கு ஆற்றிவரும் தொண்டு போற்றற்பாலது. பல்லாண்டாக இன்னார் சென்னை முதலிய இடங்களின்று பல பெரியவர்களைக் கொண்டு அடிக்கடி பொதுக்கூட்டங்கள் நடத்தி வந்திருக்கிறார்கள். மற்றும் வெளியூர்களில் நடைபெற்ற பல மாநாடுகள் பொதுக்கூட்டங்கள் தம் சகாக்கள் சகிதம் சென்று தமது நற்கருத்தை வெளியிட்டுச் சொற்பொழிவும் நிகழ்த்தி இருக்கிறார். உறங்கிக்கொண்டுள்ள ஆதிதிராவிட மக்கள் விழிப்படையும் வண்ணம் பல ஊர்களில் பெரியார் தோன்றி தாழ்த்தப்பட்டாரின் சமத்துவத்திற்காகப் போராடும் இந்நாளில், ஆதிதிராவிட மக்கள் முன்னேற்றத்துக்கான வழிகளில் மற்ற ஊர்வாசிகளினும் இன்னார் ஓர் வகையில் சிறப்புற்று விளங்கினார் என்பதும் கவனிக்கத்தக்கது.” என ம.நோயேல் குறித்து இந்நூலில் இராமகிருஷ்ணநாயகர் என்பவர் வெளியீட்டுச் சிறப்புரையாகக் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

இந்நூலின் நூலாசிரியர் பெயர் வெளி அட்டையில் பாரதிதாஸன் என்றும் உள்பகுதியின் முதல் தாளில் பாரதிதாசன் என்றும் அச்சாகியுள்ளதைப் பார்க்க முடிகிறது. இந்நூலினை வெளியிட்ட ம.நோயேல், வெளியீட்டுச் சிறப்புரை எழுதியுள்ள இராமகிருஷ்ணநாயகர், நூன்முகம் எழுதியுள்ள காசி.லக்சுமண் ப்ரசாத் ஆகியோர்கள் பாரதிதாசனின் பெயரை பாரதிதாஸன் என்றே பயன்படுத்தியுள்ளதை இந்நூல் வழியாக அறிய முடிகிறது. இதில் படைப்பாளரின் என்னுரை இடம் பெறவில்லை. 1930 இல் வெளிவந்த இந்நூலுக்கும் மின் நூலாக்கத்திற்கும் பாடல் அமைப்பிலும் பாடல் எண்ணிக்கையின் கணக்கீட்டிலும் வேறுபாடுகள் உள்ளதைப் பார்க்க முடிகின்றது. பாரதிதாசன் கவிதையின் இறுதியில் தனிச்சொல் பயன்படுத்தியுள்ளதும் மின்நூலாக்கத்தில் தனிச்சொல்லின்றி கவிதையாக அமைக்கப்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது.. (சான்றாக, சகியே வாழ்ந்தது எனும் தனிச்சொல் இல்லாமல் உள்ளதைக் கூறலாம்) மின் நூலாக்கத்தில் ஒருசில சொற்களும் விடுபட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. (பாடல் எண்: 125)

பாரதிதாசன் எனும் கவிதையாளுமையை வால்டுவிட்மனுடன் ஒப்புநோக்கி ஆராய்ந்துள்ள பேராசிரியர் தமிழவன் அவர்கள் பாரதிதாசனின் கவிவெளிப்பாட்டினை கீழ்க்கண்டவாறு விளக்கிச்செல்கிறார். “1930 - இல் அவரது 39 - ஆம் வயதில் தான் இருபதாம் நூற்றாண்டுத் தமிழிலக்கியத்துக்கு வேண்டிய கவித்துவ விழிப்புணர்வு அவருக்குள் முகிழ்க்க ஆரம்பித்துள்ளது. சொந்த சிந்தனை ஓர் ஆளுமையாகப் பாரதிதாசனிடத்தில் தோன்றியபோது அவர் எழுதிய முதல் கவிதை, தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு (1930 ஆம் ஆண்டு). தொடர்ந்து சஞ்சீவி பர்வதத்தின் சாரல் (1930) வெளிவருகிற போதும் அதாவது பாரதிதாசனின் 40 ஆவது வயதில்தான் அவருக்கான தனி சிந்தனையும் ஆளுமையும் மொழித் தைரியமும் ஏற்படுகின்றன. பாரதிதாசனைக் கவிஞர் அல்ல என்று கருதிய இலக்கிய விமரிசகர்கள் தமிழில் இருந்தனர். புதுக்கவிதை தோன்றியபோது புதுக்கவிதைபோல் இல்லாத பாரதிதாசன் கவிதைகள் மீது பலருக்குச் சந்தேகம் ஏற்பட்டது எதிர்பார்க்கக் கூடியதுதான். சி.சு.செல்லப்பாவுக்குப் பாரதிதாசன் கவிஞரல்ல. ஆனால் பலர் நூல்களும் கட்டுரைகளும் எழுதினாலும் பாரதிதாசனைக் கவிஞராக எல்லோரும் ஏற்கும் விதமாக அவை எழுதப்படவில்லை. இதே நிலைகூட வால்டு விட்மனுக்கும் ஏற்பட்டுள்ளதையும் அறிய முடிகிறது.” (தமிழவன் : 2015) எனக் கூறியுள்ள கருத்தின் வழியாக தொடக்கக்காலத்தில் பாரதிதாசனைப் படைப்பாளியல்ல என எதிர்நிலைப் படுத்தியுள்ளதை அறிய முடிகிறது. இது வானில் தோன்றும் சூரியனைத் தன்கண்களை மூடிக்கொண்டு தனக்குத் தெரியவில்லை என்றுரைப்பதற்கு ஒப்பாகும். பாரதிதாசனைச் சனாதன இந்து தர்மத்தைச் சுட்டெரித்த சூரியன் என்றுதான் சொல்லவேண்டும். ஆதலால் தானோ இவரை புரட்சிக்கவிஞர் எனப் புகழ்ந்துள்ளார்கள்.

முப்பதுகளில் பாரதிதாசன் தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு எழுதியதை ஒட்டி சஞ்சீவி பர்வதத்தின் சாரல், சிறுவர் சிறுமியர் தேசிய கீதம், தொண்டர் வழி நடைப் பாட்டு, கதர் இராட்டினப்பாட்டு எனும் கவிதையாக்கங்களைத் தொடர்ந்து படைத்துள்ளார். இப்படைப்பாக்கப் பின்னணியைப் பார்க்கும்போது பாரதியுடனான நட்பு, காங்கிரசோடு இணைந்து செயல்பட்டமை முதலான காரணங்களால் இந்திய விடுதலை வழியான இந்தியதேசியப் பார்வை பாரதிதாசனுக்கு இருந்துள்ளதையும் அறிய முடிகிறது. இதன் பிற்பாடே தமிழ் இனம், மொழி, நாடு என்னும் மொழிவழியான தமிழ்த் தேசியப் பார்வை என்பதே சரியெனப்பட்டு பாரதி வழியிலிருந்து சற்று விலகி புதிய தடத்தில் செல்லத் துணிதல் பாரதிதாசனிடத்தில் உண்டாகியுள்ளதைப் பார்க்க முடிகிறது. இதற்குக் காரணம் பெரியாரின் சிந்தனை மேல் கொண்டுள்ள பற்றாகும். தமிழ்ச்சமூகத்தைப் பகுத்தறிவு வழி நடத்திடவும் தனித்தமிழ்ப் பற்றினை வெளிப்படுத்தும் விதமாகப் பாரதிதாசன் கவிதைகள் பல படைத்துள்ளார். இதற்குப் பல கவிதைகளைச் சான்றாக முன்வைக்கலாம். ஒரு பானைச் சோற்று ஒருசோறு பதமாக, ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் / மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ எனும் கவிதையைக் கூறலாம். பாரதிதாசனின் தமிழியக்கம், தமிழச்சியின் கத்தி, தமிழுக்கு அமுதென்று பேர், வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? போன்ற படைப்புக்கள் தமிழ்த்தேசிய அரசியலைப் பேசுகின்றன. இதனால் தான் இவரே “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை" எனப் பாடியுள்ளார்.

“சிங்களவர் பெரும்பான்மை யோரெனச் செப்பித்

தமிழர் உரிமையைத் தலை கவிழ்க்க

எண்ணும் எண்ணம் இழைக்கும் தீமைகள்

எவற்றையும் தமிழர் எதிர்க்க வேண்டும்

மானங் காப்பதில் தமிழ் மக்கள்

சாதல் நேரினும் தாழக் கூடாது

இவைகள் இலங்கைத் தமிழர் கொள்கைகள்!

யாவர் இவற்றை எதிர்ப்பினும் விடற்க!

வெல்க இலங்கைத் தமிழர்!

வெல்க தமிழே! மேவுக புகழே!" (பாரதிதாசன் கவிதைகள்)

எனப் பாரதிதாசன் இலங்கைத்தமிழரின் விடுதலைக்காவும் குரல்கொடுத்துள்ளார். ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகவிடுதலை என்பது ஈழத்தமிழரின் விடுதலையையும் உள்ளடக்கியது என்பதை இங்கு உள்ள தமிழர்கள் உணர வேண்டும் என்பதைப் பாரதிதாசன் கவிதை வழி முன்மொழிகிறார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பாவேந்தர் பாரதிதாசன் தமிழின விடுதலையோடு ஒடுக்கப்பட்ட சமூக விடுதலையையும் இணைத்துப் பார்க்கவேண்டிய தேவையை நமக்கு உணர்த்துகிறார். பாரதிதாசன் தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு படைக்கப்பட்ட காலத்தை ஒட்டி அவரின் செயல்பாட்டினை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

“1928 - தன்மான (சுயமரியாதை) இயக்கத்தில் பெரியார் ஈ.வெ..ராவுடன் இணைதல், பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொள்ளல்.

1929 - 'குடியரசு' 'பகுத்தறிவு' ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை எழுதுதல் குடும்பக் கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன் முதலில் பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புப் பெறுதல்.

1930 - பாரதி, புதுவை வருகைக்கு முன்னும் பின்னும் பாடிய சிறுவர் சிறுமியர் தேசியகீதம், தொண்டர் நடைப் பாட்டு, கதர் இராட்டினப்பாட்டு ஆகியவற்றை நூல் வடிவில் வெளியிடல்,தொடர்ந்து சஞ்சீவி பர்வதத்தின் சாரல், தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு நூல்களை வெளியிடல்.டிசம்பர், 10-ல் 'புதுவை முரசு' கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றல்.

1931 - புதுவை முரசு' (5-1-1931) ஏட்டில் செவ்வாய் உலக யாத்திரை கட்டுரை வரைதல், சுயமரியாதைச் சுடர் என்ற 10 பாடல்களைக் கொண்ட நூலைக் கிண்டல்காரன் என்ற பெயரில் வெளியிடல்.

1933 - மா. சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் நடை பெற்ற நாத்திக மாநாட்டின் பதிவேட்டில் 'நான் ஒரு நிரந்தரமான நாத்திகன்' என்று எழுதிக் கையெழுத்திடல்.

1934 - இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் ஈ.வெ.ரா பெரியார் தலைமையில் நடைபெற்றது”. (www.tamilvu.org)

noel preface for bharathidasan on dalitதாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு எழுதிய காலக்கட்டத்தில் பாரதிதாசனின் இலக்கியப் படைப்பாக்கச் செயல்பாடுகளைப் பார்க்கும்போது சமூகநீதி சார்ந்த கொள்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டதையும் பார்க்க முடிகிறது. திராவிடர் கழகம் தோற்றத்திற்குப் முன் பெரியார் காங்கிரஸில் இணைந்து பல சீர்திருத்தங்களையும் செய்துள்ளதைப் போன்று பாரதிதாசனும் கதர் ஆடைஅணிதல் மற்றும் சமூகத்தில் நிலவும் மூடத்தனத்தை ஒழிக்கவும் பெரியாரோடு இணைந்து செயல்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. இப்பின்புலத்தில்தான் பாரதிதாசன் தாழ்த்தப்பட்டோர் சமூகநீதிக்காக இலக்கியப் படைப்பைப் படைக்க முற்பட்டுள்ளார். “தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாகக் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார். பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.” (தமிழ் விக்கிப்பீடியா) கவிதைப் படைப்பாக்கத்தில் தனது அரசியல் பார்வையை முன்வைத்துள்ளார் பாரதிதாசன். இது பகுத்தறிவு, சுயமரியாதையை உள்ளடக்கிய சமூகநீதி சார்ந்த தமிழ்த்தேசியமாக மலர்ந்து தமிழ்மணம் வீசுகின்றதை உணர முடிகிறது.

பாரதியின் மறைவுக்குப் பின்னும் பாரதிதாசன் காங்கிரஸ் இயக்க உறுப்பினராகத் தொடர்ந்தார். காங்கிரஸ் கட்சியைப் பாரதியார் வாழ்த்திக் கவிதைகள் எழுதியதில்லை. ஆனால் பாரதிதாசன் எழுதியிருக்கிறார். காங்கிரஸ் என்பதை 'தேச மகா மன்றம்” என்று அவர் தமிழ்ப்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது. பாரதியின் காலத்தில் காங்கிரசின் பெரும் தலைவராகக் காந்தி வளர்ச்சி கண்டிருக்கவில்லை. ஆனால் பாரதிதாசன் காலத்தில் காந்தி காங்கிரசை வழி நடத்திச் செல்லும் தலைவராகத் திகழ்ந்தார். 1920ம் வருடம் ஆகஸ்ட் 2ம் தேதி, வாழ்நாள் முழுவதும் கதர் அணியப் போவதாக உறுதி எடுத்துக் கொண்ட காந்தி, 1921 முதல் அது தொடர்பான பிரசாரத்தைத் துவக்கினார். ஒத்துழையாமை இயக்கம் முடிவுக்கு வந்த பிறகு அந்த இயக்கத்தின் போது கிடைத்த எழுச்சியைத் தக்க வைத்துக் கொள்ள, வளர்க்க, கதர் இயக்கத்தை ஆரம்பித்தார். அந்த இயக்கத்தைப் பிரசாரம் செய்ய எழுதப்பட்டதுதான் இந்த கதர் ராட்டினப் பாட்டு. கதர் இயக்கம் வேகம் பெற்ற போது பாரதியார் உயிருடன் இல்லை. அந்த இழப்பைப் பாரதிதாசன் நிறைவு செய்தார். பாரதிதாசனின் கவி வாழ்வின் முக்கிய கட்டத்தில் எழுதப்பட்ட இந்த நூல் அவரது காந்தி பக்தி, பாரதியின் மீதுள்ள விசுவாசம், விடுதலைப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்கு, கதரியக்கத்தில் அவருக்குள்ள நம்பிக்கை, அவரது இலக்கியப் பயிற்சி, இசை அறிவு ஆகியவற்றுக்கு ஒரு முக்கிய சாட்சி. (மாலன் : 2003) இதன்வழியாக பாரதிதாசனின் கவிதைகள் (கதர் ராட்டினப்பாட்டு) இந்திய விடுதலைக்குத் துணைநின்றதை அறிய முடிகிறது. கதர் ராட்டினப் பாட்டு எழுதிய காலத்ததை ஒட்டியே தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு படைத்துள்ளார் பாரதிதாசன்.

தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு கவிதைகளின் கருத்தாக்கம் :

உயர்த்தப்பட்ட சமூகமாக தங்களைக் கருதிக் கொள்வோர் உயர்வு தாழ்வினைக் வேதம் வழிக் கட்டமைத்த கருத்தியல் பிற்போக்குத்தனமானது. அதிலிருந்து விடுபட்டு அனைவரும் சமத்துவமாக இன்பமாக வாழ வேண்டும் எனத் தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டின் முதல் பாடல் அமைந்துள்ளது. ‘சமூகத்தில் தாழ்வென்றும் உயர்வு என்றும் வேதம் கொள்வதால் மனிதர்களிடம் இன்ப வாழ்வு எப்படி உண்டாகும்’ எனக் கேள்வியை எழுப்புகிறார் பாரதிதாசன். பிறப்பால் உயர்வு தாழ்வு பேசும் சமூகம் எக்காலத்திலும் சிறந்து விளங்க முடியாது என்று கூறுகிறார். இந்திய விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒற்றுமையாய் சமநோக்கு வேண்டுமென்பதை விரும்புகிறார் பாரதிதாசன். சமநோக்கு இல்லாத நிலத்தில் எவ்வாறு சுதந்திரம் உண்டாகும் என்றும் சாதி பேதமற்ற ஒற்றுமையான சமூகத்தால் தான் இந்தியச் சுதந்திரம் சாத்தியமாகும் என்பதையும் பாரதிதாசன் அறிவார்ந்த உணர்தலின் வெளிப்பாடாகத் தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு கவிதையைப் படைத்துள்ளதை அறிய முடிகிறது.

தீண்டாதகாதவர் எனத் தீண்டாமையை ஏற்றுக்கொள்ளப்பட்ட சாதி இந்துக்களையும் பார்ப்பனியம் தீண்டாதவர்களாகப் பார்த்தபோதிலும் தாழ்த்தப்பட்டோரை ஒடுக்குவதும் தீண்டாமையை வேண்டுவதும் எவ்வாறு நியாயமாகும் என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஆரியர்கள் வந்த பின்னரே இங்கு முரண்பாடுகள் தோன்றியது என்றும், கள்ளம் கபடம் நிறைந்து வெள்ளை உள்ளம் காட்டி வெறும் வாக்கியம் காட்டிப் பேசும் பிராமணர்களைக் கடிந்து பேசுகிறார் பாரதிதாசன். குழந்தைக்குக் கனி தந்து பின்னால் காதுகுத்துவது போல ஆரியர்கள் நயவஞ்சக மிக்கவர்களாக மனுவின் அடிப்படையில் வர்ணபேத பிற்போக்குத்தனத்தைப் பரவச் செய்தவர்கள் ஆரியர்கள் என்றும், இவர்கள் தமிழர்கள் மேல் நலம் விரும்பமாட்டார்கள் என்றும், இவர்கள் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டு வந்தவர்கள் என்றும், வெளியிலிருந்து தமிழகத்திற்கு வருகைதந்த பூர்வீகமற்ற வந்தேறிகள் ஆரியர்கள் என்றும் தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு கவிதைகள் வழியாகப் பாரதிதாசன் முன்வைத்துள்ளார். ஆதலால்தான் பாரதிதாசன் ஆரியர்களை மிலேச்சர் என்று குறிப்பிடுகிறார். மிலேச்சர் குறித்த குறிப்பு சங்க இலக்கியமான முல்லைப்பாட்டில் (65-66) பார்க்க முடிகிறது.

சமூக சமத்துவத்தை நோக்கியே பாடலின் தொடக்கம் அமைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. இன்பந்தரும் சமத்துவத்தைப் பேணுவதால்தான் இங்கு சுதந்திரம் உண்டாகும் என்று கூறுவது இந்தியவிடுதலை என்பது ஒடுக்கப்பட்டோரின் விடுதலையையும் மையப்படுத்தி உள்ளது என்பதைப் பார்க்க முடிகிறது.

புவியிற் சமூகம் இன்பம்

பூணல் சமத்துவத்தால் (பா.எ.1)

தாழ்வென்றும் உயர்வென்றும்

சமூகத்திற் பேதங்கொண்டால்!

வாழ்வின்பம் உண்டாகுமோ? (10)

பிறப்பி லுயர்வுதாழ்வு

பேசும் சமூகம் மண்ணில்

சிறக்குமோ சொல்வாயடி

இதந்தரும் சமநோக்கம்

இல்லா நிலத்தில் நல்ல

சுதந்தரம் உண்டாகுமோ -- சகியே

சுதந்தரம் உண்டாகுமோ(25)

 சமத்துவம் இல்லாத இடத்தில் எவ்வாறு சுதந்திரம் உண்டாகும் எனப் பாரதிதாசன் கேள்வி எழுப்புகிறார்.

“தீண்டாமை என்னுமொரு பேய் – இந்தத்

தேசத்தினில் மாத்திரமே திரியக்கண்டோம்.”

 “அற்பத் தீண்டாதார் என்னும்

அவரும் பிறரும் ஓர்தாய்

கர்ப்பத்தில் வந்தாரன்றோ -- சகியே

கர்ப்பத்தில் வந்தாரன்றோ? ” (40)

தாழ்த்தப்பட்டோர் உயர்த்தப்பட்டோர் என்போர் அனைவரும் தாய் வயிற்றில் பிறந்தவர்கள் இதில் தீண்டாமை என்பதெல்லாம் எதற்கு? என்கிறார் பாரதிதாசன். இது தாய்வழிச் சமூக உருவாக்கத்தில் ஈன்று புறந்தரும் தாய்மை என்போர் ஒன்றே என்பதைக் காட்டுகிறது. அதிகாரப்பூர்வமாக, இந்தியா 1947 இல் சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் பெற்ற இந்தியாவில் சாதியத்தால் உண்டான தீண்டாமை புரையோடிப் போன நோய்மையாய் வடிவம் கொண்டுள்ளது. இந்தியா அரசியலமைச்சட்டத்தில் தீண்டாமை பாவச்செயலாகவும் வன்கொடுமையாகவும் ஏட்டளவிலேயே இருந்தது. இந்தியாவின் ஏகத்துவ சமூக கட்டமைப்பில் ஒடுக்கப்பட்டோரை அடிபணியச் செய்தல் மற்றும் உழைப்பைச் சுரண்டுதல், வரலாற்றின் அவலங்களை எப்போதும் மாற்றத்திற்குள் உண்டுசெய்யவில்லை. இருக்கின்ற அமைப்பின் மாற்றத்தைச் சனாதனம் விரும்பவில்லை. ஜனநாயகத்திற்கு எதிராக இருக்கும் பார்ப்பனியம் சனாதனத்தை முன்வைத்தது. பார்ப்பனிய முன்வைப்புக்களைப் பாரதிதாசன் கவிதை வழி உடைத்துள்ளார்.

வெள்ளை யுடம்புகாட்டி

வெறும் வாக்கு நயம்காட்டிக்

கள்ளங்கள் செய்தாரடி -- சகியே

கள்ளங்கள் செய்தாரடி! (75)

பிள்ளைக்குக் கனிதந்து

பின்காது குத்தல்போல் தம்

கொள்கை பரவச் செய்தார் (80)

ஆரியர்கள் பாசாங்கு செய்பவர்கள், வெள்ளை உடம்பு படைத்தவர்கள் ஆனால் வெள்ளை உள்ளம் இல்லாதவர்கள் என்பதைத் தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு காட்டுகிறது.

“சாதி உயர் வென்றும், தனத்தால் உயர்வென்றும்,

போதாக் குறைக்குப் பொதுத்தொழிலா ளர்சமுகம்

          மெத்த இழிவென்றும், மிகுபெரும்பா லோரை எல்லாம்

          கத்தி முனைகாட்டிக் காலமெல்லாம் ஏய்த்துவரும்

          பாவி களைத்திருத்தப் பாவலனே நம்மிருவர்

          ஆவி களையேனும் அர்ப்பணம்செய் வோம்!” (பாரதிதாசன், புரட்சிக்கவி)

          நால்வருணங் கள்விதித்தார் நாட்டார்கள்; சொன்னவற்றில்

மேல்வருணம் கோல்கொண்டு மேதினியை ஆள்வருணம்

          நீயன்றோ பெண்ணே! நினைப்பை யகற்றிவிடு! (பாரதிதாசன், புரட்சிக்கவி)

          காதல் நெருப்பால் கடலுன்மேல் தாவிடுவேன்

சாதிஎனும் சங்கிலிஎன் தாளைப் பிணித்ததடீ! (பாரதிதாசன், புரட்சிக்கவி)

ரத்தவெறி கொண்டலையும் நால்வருணம் ஏனிரங்கும்? (பாரதிதாசன், புரட்சிக்கவி)

பாரதிதாசனின் தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டில் மட்டும் சமத்துவத்தைப் பேசியதோடு நின்றிடவில்லை. முப்பதுகளுக்குப் பிற்பாடு படைத்த புரட்சிக்கவி போன்ற படைப்புக்களில் பார்ப்பனிய எதிர்ப்பின் வழி சமூகநீதியைப் பேசியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.

தீண்டாமை ஒப்புகின்றார்

தீண்டாரிடம் உதவி

வேண்டாமல் இல்லையடி (55)

தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்கள் தாழ்த்தப்பட்டோரிடத்தில் அடிமைத்தொழிலை மட்டும் ஏன் எதிர்பார்க்கிறார்கள். அடிமைப்படுத்தி உழைப்புச் சுரண்டல் கண்டிக்கப்படக் கூடியதாக இதன்வழி அறிய முடிகிறது.

           நல்ல தமிழர் சற்றும்

             நலமற்ற ஆரியர்தம்

          பொல்லாச்சொல் ஏற்றாரடி (85)

            பண்டைத் தமிழர்தம்மைக்

            கழுவேற்றிக் கொன்றாரடி (140)

          நான்கு பிரிவும் பொய்ம்மை

            நான்குள்ளும் பேதம் (375)

            தாழ்வில்லை உயர்வில்லை

            சமமென்ற நிலைவந்தால்

            வாழ்வெல்லை காண்போமடி -- சகியே

            வாழ்வெல்லை காண்போமடி! (437)

பாரதிதாசன் பாடியுள்ளதற்கு முன்னோடியாக ஒடுக்கப்பட்ட சமூகப்பெண் உத்திரநல்லூர் நங்கை பாடியுள்ளதிலிருந்து உடல்களில் பேதமில்லை. இதில் என்ன உயர்வு தாழ்வு என்கிற பேதம் எனக் கேள்விக்கணையை எழுப்புகிறார்.

“சந்தனம் அகிலும் வேம்பும்

தனித்தனி வாசம் வீசும்

அந்தணர் தீயில் வீழ்ந்தால்

அதன் மணம் வேறதாமோ?

செந்தலைப் புலையன் வீழ்ந்தால்

தீமணம் வேறதாமோ?

பந்தமும் தீயும் வேறோ?” (பாய்ச்சலூர்ப் பதிகம்)

சந்தனம், அகிலும், வேம்பும் இவைகளைத் தீயிடும்போது வாடை வேறுபடும். ஆனால் அந்தணர்களின் பிணத்தை எரிக்கும் போது அகில், சந்தனம் வாசமா வரும். புலையர் பிணம் எரியும்போது நாறுமோ அவ்விரு பிணத்தின் வாடை வேறுபடுமோ? எனப் பார்ப்பனிய சனாதனத்திற்குச் சவுக்கடி கொடுக்கிறார் நங்கை.

வேதத்தின் அடிப்படையில் பிரிவினையை உண்டாக்கி, பண்டைய தமிழரைக் கொன்ற ஆரியக் கூட்டத்தைச் சாடுகிறார் பாரதிதாசன். பாரதிதாசனின் தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு தாழ்த்தப்பட்டோர் சமூக விடுதலையை மையப்படுத்திப் பேசுவதோடு தீண்டாமை ஒழிப்பு, வர்ணபோதத்தை ஒழித்தல், ஆரியர்களின் சூழ்ச்சியை அறிதல், மதமாற்றம் வழியாகச் சாதிய ஏற்றத்தாழ்வு மறையும் என்கிற நம்பிக்கை, தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குள் செல்வதற்கான உரிமையை நிலைநாட்டல் எனும் சமூக சமத்துவத்தின் வழி விடுதலை அமைத்திட பாரதிதாசன் எண்ணினார். 15ஆம் நூற்றாண்டில் உத்திர நல்லூர் நங்கை (வேறுபெயர் - உத்திரகோச மங்கை) எழுதிய பாய்ச்சலூர்ப் பதிகத்தில் இடம்பெற்றுள்ள வர்ணாசிரம எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, பார்ப்பன சடங்கு சம்பிரதாயங்களை எதிர்த்தல், தீண்டாமையை எதிர்த்தல் எனும் கலகக் குரலோடு பாரதிதாசனின் தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு பொருந்திப் போகிறது.

துணை நூல்கள் :

  1. பாரதிதாசன், 1930, தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு, புதுவைக் கலாநிதி அச்சுக்கூடம், புதுவை.
  2. தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு, 2010, இணையக் கல்விக் கழகம், மின்நூல். (www.tamilvu.com)
  3. தமிழவன், 2015, பாரதிதாசனைக் கவியாக நிலைநாட்டும் முயற்சி : பாரதிதாசனும் வால்ட் விட்மனும் (http://tamizhavan.com/blog/?p=47)
  4. மாலன், 2003. (tamilheritage.org)
  5. http://www.tamilvu.org/ta/library-l9210-html-l92100hs-146401 

- ம.கருணாநிதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர்.-625 514