உலகமெங்கும் கொரோனா நோய்த் தொற்று ஒரு காட்டாற்று வெள்ளமாக தன் பாதை எங்கும் பெரும் அழிவுகளை ஏற்படுத்திச் சென்று கொண்டிருக்கின்றது. உயிர் வாழும் உரிமை என்பது பணம் படைத்தவனுக்குத்தான் என்று விதி செய்து வைத்திருக்கும் முதலாளித்துவம், இன்று தன் ஆட்சியின் கீழ் வாழும் மக்களை நிர்க்கதியாய் அம்போவென விட்டிருக்கின்றது. தன்னை அழிவே இல்லாத கடவுள் என்று பிரகடனம் செய்த முதலாளித்துவம் தன் அரிதாரங்களை எல்லாம் களைந்து, அழுகி புழு பிடித்த அதன் உடலை துர்நாற்றத்தோடு உலகுக்கு காட்சிப்படுத்தி உள்ளது. இத்தனை நாளாக அதைக் கருவறையில் வைத்து பூசித்து வந்த அதன் துதிபாடிகள் கூட அதன் அருகில் செல்ல முடியாமல் அதை எப்படி கொன்று புதைப்பது என்று ஆலோசித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

corona migrant workers Mumbaiமுதலாளித்துவ சமூகத்தில் அரசு என்பது எப்போதும் முதலாளிகளின் ஏவல் நாயாகவே செயல்படும் என்பதை இன்று உலகெங்கும் உள்ள மக்கள் உணர்ந்து இருக்கின்றார்கள். முதலாளித்துவத்தின் தொட்டிலான ஐரோப்பா இன்று அதன் சவக்குழியாக மாறிக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவோ ஒரு பெரும் உள்நாட்டுப் போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டு இருக்கின்றது. குறைந்தபட்சம் தன்னை ஒரு மீட்பானாக நம்பி ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த கோடிக்கணக்கான மக்களுக்கு ஒருவேளை சோறு போட கூட வக்கற்று, அனைவரையும் பட்டினியாலும், நோயாலும் சாவதற்கு விட்டிருக்கின்றது.

மக்கள் அப்படி பட்டினியாலும், நோயாலும் சாக வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த உலக முதலாளிகள் மற்றும் அவர்களின் அடியாள் படையாக செயல்படும் ஆட்சியாளர்களின் விருப்பம் என்றால் அது மிகையாகாது. அரசானது மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, மருத்துவம், கல்வி, வீடு, வேலைவாய்ப்பு என எதையுமே தரத் துப்பில்லாமல் தன்னுடைய அனைத்து கடமைகளில் இருந்தும் விடுவித்துக் கொண்டு, தன் ஆட்சிப் பரப்பில் இருக்கும் உழைக்கும் வர்க்கத்தை முதலாளிகளுக்கு மூலதனத்தை பெருக்கித் தரும் வெறும் கூலி அடிமைகளாக மாற்றி உள்ளது. அதுவும் இந்தியா போன்ற 130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நாட்டில் உழைப்புச் சந்தையின் தேவையைவிட உபரியாக உள்ள மக்கள் தொகையை அரசே திட்டமிட்டு கழித்துக் கட்டிக் கொண்டு உள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய 9 பணக்கார குடும்பங்கள் நாட்டின் வளங்களில் 50 சதவீதத்தைக் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றன. 10 சதவீத பணக்காரர்களிடம் 80 சதவீத சொத்துக்கள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் 73 கோடி பேர் தீவிர வறுமை நிலையில் உள்ளனர். உலகில் அதீத வறுமை உள்ள நாடுகளின் பட்டியலில் நைஜீரியா, காங்கோவுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் இந்தியா உள்ளது என்கிறது ஒரு புள்ளி விவரம். இப்படி ஒருவேளை சோற்றுக்கு வக்கற்று கையேந்தி நிற்கும் பஞ்சை பராரிக் கூட்டம்தான், தன்னைக் காப்பாற்ற வல்ல கடவுள் என நினைத்து மோடி போன்றவர்களைத் தேர்ந்தெடுப்பது.

எந்த மக்கள் எல்லாப் பிரச்சினைகளில் இருந்தும் தன்னை மீட்கும் மீட்பராக மோடியைத் தேர்ந்தெடுத்தார்களோ, அந்த மக்களுக்கு மோடி கொடுத்தது வெறும் 5 கிலோ அரிசியும், பெண்களின் வங்கிக் கணக்கில் 500 ரூபாயும்தான். ஒரு வேளை பட்டினியால் செத்துப் போனால் அடக்க செலவுக்குக் கூட இந்தத் தொகை போதாது.

மோடியின் நிரந்தர நண்பர்களான அந்த 10 சதவீத பணக்காரக் குடும்பங்களின் செல்வத்தில் மோடி கை வைக்கவில்லை. இந்திய வங்கிகளில் இருந்து 8.5 லட்சம் கோடி மக்கள் பணத்தை சுருட்டிய பெருமுதலாளிகளிடம் தன் வீரத்தைக் காட்டி அந்தப் பணத்தை வாங்கி இன்று ஒருவேளை சாப்பாட்டிற்கு வழியற்று நிற்கும் மக்களுக்குக் கொடுக்க மோடிக்குத் திராணியில்லை. அன்று ரிசர்வ் வங்கியில் உபரியாக இருந்த 1.76 லட்சம் கோடியை விட்டு வைத்திருந்தால் கூட ஒரு கணிசமான தொகையை நாட்டு மக்களுக்குக் கொடுத்திருக்கலாம்.

மோடி அப்படி செய்திருக்கலாம், இப்படி செய்திருக்கலம் என்று நாம் அபிலாசைப்படலாம். ஆனால் சாமானிய மக்களை தன்னுடைய இந்துத்துவப் பாசிச அரசியலுக்கு பயன்படும் ஓட்டுவங்கியாக மட்டுமே பார்க்கும் மோடியால் அவர்களுக்கு அதிகபட்சமாக கொடுக்க முடிந்தது 5 கிலோ அரிசியை மட்டும்தான்.

பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசானது, தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களிடம் அரக்கத்தனமாக ஏன் நடந்து கொள்கின்றது என்பதை பெரும்பான்மை மக்களால் இன்று புரிந்து கொள்ள முடியவில்லை. அதற்குக் காரணம் இன்று பெரும்பான்மையான மக்கள் கார்ப்ரேட் கட்சியின் உறுப்பினர்களாகவோ, சாதிய, மதவாத, இனவாதக் கட்சியின் உறுப்பினர்களாகவோ இருப்பதுதான். இது போன்ற கட்சிகள் ஒருநாளும் தனது கட்சி அணிகளை வர்க்கப் பார்வையில் வளர்த்தெடுப்பவை கிடையாது. அதனால் இது போன்ற உதிரி சீரழிவுவாத கட்சியில் இருக்கும் நபர்கள் இன்று தாங்கள் படும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும், சிறுபான்மையின மக்கள்தான் காரணம் என்றோ, மலையாளியும், கன்னடனும், தெலுங்கனும், பீகாரியும் தான் காரணம் என்றோ, இல்லை கடவுள் குத்தம்தான் காரணம் என்றோதான் புரிந்து கொண்டு இருப்பார்கள். ஒரு நாளும் அதானி, அம்பானி, டாட்டா, வேதாந்தா போன்ற பெருமுதலாளிகளும் அவர்களின் நலனுக்காக ஆட்சி செய்யும் இந்த அமைப்பு முறையும்தான் காரணம் என்று அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.

வர்க்க சமரசத்துக்கு உள்ளாகி, முதலாளிகளிடம் பிச்சை எடுத்தோ, அவர்களின் மேலான கருணையை எதிர்பார்த்தோ வாழ வேண்டும் என்பதுதான் அதுபோன்ற உதிரிக் கட்சிகளின் சித்தாந்தமே. அதனால்தான் அரசு கோடிக்கணக்கான மக்களை உள்நாட்டிலேயே அகதிகள் போல ஒரு பெரும் இடப்பெயர்ச்சிக்கு ஆளாக்கிய போதும், நடந்து நடந்தே நெஞ்சு வெடித்து சாகவிட்ட போதும், பசியால் கண்கள் மயங்கி மூர்ச்சையாக்கிய போதும் இந்த ஜனக்கூட்டம் புழு பூச்சிகளைப் போல அதை எல்லாம் சகித்துக் கொண்டு கடந்து சென்று கொண்டு இருக்கின்றது. ஆனால் இந்த நிலமை தொடர்ந்து நீடிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

உலகத்தில் பசியைவிட வன்முறையைப் போதிக்கும் ஆசிரியன் வேறு யாருமில்லை. பசி எதை வேண்டுமானாலும் செய்ய வைக்கும். இந்திய உணவுக் கழகத்தில் (எப்சிஐ) 10 கோடி டன் உணவு தானியங்களை வைத்துக் கொண்டு புழுக்களும் எலிகளும் தின்றுகொண்டிருக்க, பசியால் சாகும் சாமானிய மக்களுக்கு அவர்களின் தேவைக்குத் தராமல் வெறும் ஐந்து கிலோ அரசியைக் கொடுத்து, ‘முடிந்தால் வாழு, இல்லை என்றால் சாகு’ என்று விட்டிருக்கும் இந்தக் கூட்டத்திற்கு எதிராக மக்கள் நிச்சயம் வீதிகளில் இறங்கிப் போராடும் நாள் வெகு தொலைவில் இல்லை.

நாட்டின் அடுத்து ஏற்படப் போகும் கடுமையான நெருக்கடி நிச்சயம் பெரும் வேலை இழப்புகளை உருவாக்கப் போகின்றது. ஏற்கெனவே 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகின்றது. ஆனால் மக்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் எந்த ஒரு முதலாளியும் தன்னுடைய லாபத்தில் ஒரு பைசா குறைவதைக் கூட பொறுத்துக் கொள்ள மாட்டான். அதனால் தொழிலாளர்களைக் குறைத்து, சம்பளத்தை வெட்டி, அதிக நேரம் தொழிலாளர்களைப் பிழிந்தெடுக்க முதலாளி துடிப்பான். இப்போதே மோடி அரசு தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்த சதித் திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் வருகின்றன.

இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் கொரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் 50 கோடி பேர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என ஆக்ஸ்பார்ம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைவிட மிக மோசமான நெருக்கடி ஏற்படும் என்றும், சில நாடுகள் 30 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. மேலும் இந்த நெருக்கடி தீவிரமடைந்தால் 43.4 கோடி முதல் 92.2 கோடி மக்கள் கொடுமையான வறுமைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே நாட்டாமை செய்து வந்த அமெரிக்கா, வல்லரசுத் தகுதியை இழந்து 75 வருடங்கள் பின்னோக்கி செல்லப் போகின்றது என பொருளாதார அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள். இப்போதே அமெரிக்க மக்கள் ஒருவேளை சோற்றுக்கு கையேந்தும் நிலைக்கு வந்து விட்டனர். மக்கள் நலத் திட்டங்களுக்கு அதிகம் நிதி ஒதுக்குவதாக கொண்டாடப்பட்ட ஐரோப்பிய பாணி சமூக ஜனநாயகம் கூட இன்று தன் மக்களைக் காப்பாற்ற வக்கற்று, ஏறக்குறைய 75000க்கும் மேற்பட்ட மக்களை கொரோனாவுக்கு பலி கொடுத்து இருக்கின்றது. மருத்துவமனைகளில் போதுமான மருத்துவ உபகரணங்கள் இன்றியும் வென்டிலேட்டர்கள் இன்றியும் அவை தடுமாறி வருகின்றன.

கொரோனா நிச்சயமாக ஏற்கெனவே சமநிலையற்று இருக்கும் செல்வப் பங்கீடுகளை இன்னும் மோசமான இறுதி நிலைக்கே எடுத்துச் செல்லப் போகின்றது. உலகில் சிறுபான்மையான நிதியாதிக்க கும்பல்கள் முன்பைவிட இன்னும் மூர்க்கமாக தொழிலாளர்களை சுரண்டவும், அவர்களை கொடிய வறுமையில் தள்ளி சாகடிக்கவும் முற்படும். மோடி, டிரம்ப் போன்ற முதலாளித்துவத்தின் காப்பாளர்கள் தங்களால் முடிந்த மட்டும் இந்தப் பாசிச நிலையை பெரும் அடக்குமுறையைக் கையாண்டு செய்து முடிப்பார்கள்.

இன்று உலகப் பாட்டாளி வர்க்கத்தின் முன் இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளது. ஒன்று மோடி, டிரம்ப் போன்ற பாசிஸ்ட்களை ஏற்றுக் கொண்டு அவர்களால் கட்டமைக்கப்படும் அசமத்துவ உலகில் வேலையை இழந்து, பட்டினி கிடந்து, மண்டியிட்டு உயிர் விடத் தயாராக இருப்பது. இல்லை என்றால் இந்தப் பாசிஸ்ட்களை எதிர்த்து பாட்டளி வர்க்கத்தின் முன்னணிப் படையான கம்யூனிட் கட்சியின் பின்னால் அணி திரண்டு இந்த மனிதகுல விரோத சக்திகளை முறியடித்து, பாட்டாளி வர்க்க அரசை அமைப்பது.

உங்களுக்கு வேலை வேண்டும் என்றால், தரமான இலவச மருத்துவம் வேண்டும் என்றால், உங்கள் குழந்தைகள் உலகத் தரமான கல்வியை இலவசமாகப் பெற வேண்டும் என்றால், இந்த மனித சமூகம் நாகரிமான பண்பாட்டு நிலையை எய்த வேண்டும் என்றால், உங்களின் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், மக்களைக் கொல்லும் முதலாளிகளின் மீது அரசின் கரங்கள் இறுக வேண்டும் என்றால், நீங்கள் கம்யூனிஸ்ட்களை ஆதரித்தே ஆக வேண்டும். உங்களுக்கு வேறு மாற்றே இல்லை. இந்த உலகில் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் சமூக அரசியல் பொருளாதாரம் சார்ந்த அனைத்து நோய்களுக்குமான தடுப்பூசி கம்யூனிசத்திடம் மட்டுமே உள்ளது.

- செ.கார்கி