இன்று அனைத்துலக ஊடகங்கள், சமூக வலை தளங்கள் யாவும் பதற்றமும் பீதியும் நிறைந்த குரலில் உச்சரிக்கும் ஒரே பெயர் கொரோனா. கோவிட்-19 (COVID-19) என்னும் இந்தப் பெருந்தொற்று நோய்க் கிருமிக்கு முடிவுகட்ட வீட்டில் இரு, தனித்திரு, சமூக விலகல் கடைபிடி, வெளியே நடமாடாதே, முகக்கவசம் அணிந்திடு, அடிக்கடி கைகழுவு என்பது போன்ற மருத்துவ நல்லாலோசனைகள் ஒருபுறம் ஒலிக்க, இன்னொருபுறம், அரசு விழாக்கள் உள்ளிட்ட தேசிய / சர்வதேசிய அரசியல், பொருளியல், சமூகவியல் அமர்வுகள், ஒலிம்பிக் உள்ளிட்ட உலகளாவிய விளையாட்டுகள் சார்ந்த ஒன்று கூடல்கள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு விட்டன அல்லது ஒத்தி வைக்கப்பட்டு விட்டன. இவ்வாண்டு இப்படியான ஓர் அசாதாரண சூழலில் அமையவுள்ளது புரட்சியாளர் அம்பேத்கரின் -129 வது பிறந்த நாள் விழா. உலகம் போற்றும் ஓர் அரசியல் / சட்டவியல் / பொருளியல் / வரலாற்றியல் / சமூகவியல் / தத்துவவியல் அறிஞர், இந்திய அரசியல் சட்டச் சிற்பி, பட்டியலின - பழங்குடியின / ஒடுக்கப்பட்ட மக்கள் நலன் காக்க வந்த இரட்சகர் என்று போற்றப்படுவர் டாக்டர் அம்பேத்கர். அவரது பிறந்த நாளை வழக்கமான கொண்டாட்டங்கள் ஏதும் இல்லாமல் அமைதியான முறையில் அணுக வேண்டிய ஓர் அவல நிலைக்கு ஆட்பட்டுள்ளோம் இந்திய ஒடுக்கப்பட்ட / தலித் மக்களாகிய நாம். காரணம், கொரோனா என்னும் பெருந்தொற்று நோய்க் கிருமியின் தாக்கம் என்பது ஒரு சமூகத் தொற்றாக உருவெடுக்காமல் தடுக்க விதிக்கப்பட்டுள்ள சட்டம்-144ஐ சார்ந்த ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது.

ambedkar 216அம்பேத்கர் பிறந்த நாளும் தலித் மக்களும் :

 பன்னெடுங்காலமாக தங்களின் கரங்களைக் கவ்விப் பிடித்திருந்த அடிமை விலங்குகள் மேல் ஒரு சம்மட்டியாய் இறங்கி, அவற்றை நொறுக்கி எறிந்த கையோடு, தங்களைச் சுற்றிலும் சட்டம், சமூகம், அரசியல் சார்ந்த பாதுகாப்பு அரண்களை உறுதியாக எழுப்பியவர் என்று தலித் மக்களால் வணங்கப்படுபவர் அம்பேத்கர். ஒவ்வோர் ஆண்டும் அவரது பிறந்த நாளை அம்மக்கள் ஒரு பிரபலமான பண்டிகைபோல் கொண்டாடி மகிழ்கின்றனர் என்றால் அது மிகையாகாது. பாபாசாகேப் என்று வடநாட்டு மக்களாலும், அண்ணல் / புரட்சியாளர் என்று தமிழக மக்களாலும் செல்லமாக அழைக்கப்படும் அம்பேத்கரின் பிறந்த நாளை ஒரு குடும்ப விழாவாகவும், சமூகத் திருவிழா போலும் கொண்டாடும் வழக்கம் தலித் மக்கள் வாழும் குக்கிராமங்கள் வரைக்கும் இன்று வேரூன்றிவிட்டது எனலாம். 1990 - 91 களில் அமைந்த அம்பேத்கரின் பிறந்த நூற்றாண்டை முன்னிட்டு மத்திய - மாநில அரசுகளும், சமூக இயக்கங்களும் முன்னெடுத்த தலித் - பழங்குடியின மக்கள் மேம்பாட்டு நடவடிக்கைகள் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது அடித்தட்டு மக்களின் ஒரு கலாச்சார நிகழ்வுபோல் பலமாகக் காலூன்றுவதற்குக் காரணமாக அமைந்தது என்றும் சொல்லலாம்.

ஜனார்தன் சதாசிவ் ரன்பிஸ்:

 உலகிலேயே முதன் முதலாக புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளை பொது இடத்தில் கொண்டாடி மகிழ்ந்த ஜனார்தன் சதாசிவ் ரன்பிஸ் இப்போது நினைவுக்கு வருகிறார். ஓர் அம்பேத்கரிஸ்டாக, சமூக செயற்பாட்டாளாராக விளங்கிய ஜனார்தன் 1928 ஆம் ஆண்டில் புனே நகரில் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாட்ட மரபை துவக்கி வைத்த முதல் மனிதராவார். அவ்வகையில் இன்று, உலகமே கொண்டாடி மகிழும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆளுமையின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடி அம்மரபின் துவக்கத்துக்கு வித்திட்டவர் என்ற பெருமை அவருக்குண்டு. துரதிர்ஷ்டவசமாக ஜனார்தன் சதாசிவ் ரண்பிஸே குறித்த வேறெந்தத் தகவல்களும் கூகுளின் (Google) கைவசம் கூட இல்லை என்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. மற்றபடிக்கு அவர் மராட்டிய மாநிலத்தவர் என்பதால் அம்மொழியிலான அம்பேத்கர் குறித்த வரலாற்றுப் பதிவுகளில் ஜனார்தன் பற்றியப் பதிவுகள் ஏதும் கிடைக்கக்கூடும்.

 வடமாநில மக்கள் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி என்றும் பீம் ஜெயந்தி என்றும் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல்-14ஐ கொண்டாடி வருகின்றனர். அந்நாளில் தேசமெங்கிலுமுள்ள அண்ணலின் பல்லாயிரக்கணக்கான சிலைகளுக்கு மாலைகள் அணிவித்தும், மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், விண்ணதிர ஜெய்பீம் முழக்கங்கள் எழுப்பியும் மகிழ்வார்கள். அவரது பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மும்பை-சைத்ய பூமி மற்றும் அவர் பௌத்தம் தழுவிய நாக்பூர்-தீக்ஷ்சா பூமி ஆகிய இடங்களில் அம்பேத்கரிஸ்டுகள், அறிவுஜீவிகள், அரசியல் தலைவர்கள், பட்டியலின / பழங்குடியின / ஒடுக்கப்பட்ட மக்கள், ஊடக நண்பர்கள் என லட்சக் கணக்கான மக்கள் திரண்டு வந்து அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவதுண்டு.

அம்பேத்கர் பிறந்த இடம் பீம் ஜன்ம பூமியானது:

 அம்பேத்கர் பிறந்த இடமான மஹொவ் (MHOW)வில் 1991 ஆம் ஆண்டு அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மண்டபம் கட்ட மத்திய பிரதேச மாநில அரசு முன் வந்தது. அம்மாநில முதல்வர் சுந்தர்லால் பட்வா அம்பேத்கர் பிறந்த நாளன்று அடிக்கல் நாட்ட, கட்டிட கலை நிபுணர் E.D.நிம்காட் என்பவர் முன்னின்று மிக அழகான வடிவமைப்போடு கட்டி முடிக்க 2008 ஆம் ஆண்டு அம்மண்டபம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. சைத்ய பூமி, தீக்ஷ்சா பூமி வரிசையில் பீம் ஜன்ம பூமி என்னும் பெயரில் 4.2 ஏக்கர் பரப்பளவு கொண்ட அம்மணிமண்டபமும் இணைந்து நிற்க, அம்பேத்கரின் பிறந்த நாளன்றும், நினைவு நாளன்றும் லட்சகணக்கான மக்கள் திரளும் ஒரு புனிதமான இடமாக இன்று விளங்குகிறது அதுவும். கரோனா கட்டுப்பாடுகளால் இந்த ஆண்டு அப்படியான கூடல்களுக்கு வாய்ப்பு அற்றுப்போய் புனிதத் தளங்களுக்கு நிகரான மதிப்பும் மரியாதையும் பெற்றுள்ள இம்மூன்று இடங்களும் வெறிச்சோடி நிற்கப் போகின்றன என்பதை நினைக்கும் போதே நெஞ்சு கனக்கிறது.

அம்பேத்கர் நூற்றாண்டும் தலித் இலக்கியமும் :

 அம்பேத்கர் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக அம்பேத்கரிய அரசியல் சித்தாந்தம் சார்ந்த விவாதங்கள், கலந்துரையாடல்கள், கருத்தியல் மோதல்கள் வெகுமக்களின் கவனங்களை ஈர்க்கும் அளவுக்கு பரவலாக நடந்தேறின. இன்னொருபுறம் ஆக்ரோசமாக மேலெழுந்த தலித் இலக்கியம் வரலாற்றுப் பக்கங்களில் தனக்கென இருந்த சிறப்பான இடத்தை சுட்டிக் காட்டியவாறு, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் நோக்கிய தன் பயணத்தில் குறுக்கிட்ட அரசியல் / சமூகவியல் இடர்ப்பாடுகளை அம்பலப்படுத்தியது. மேலும் ஆய்வுக் கட்டுரைகள், கதைகள், கவிதைகள், நாடகங்கள், விமர்சனங்கள் என பல்வேறு வடிவங்களில் வஞ்சிக்கப்பட்ட வரலாற்று வடுக்களுடன், அதிகார மையங்களை நோக்கிப் பாய்ந்தது தலித் இலக்கியம். சாதிய கட்டுமானங்களின் தகர்ப்பில் எழும் சமுதாய விடுதலை அல்லாத அரசியல் / பொருளாதார விடுதலை சமத்துவ / சகோதரத்துவ சமுதாயம் படைக்கப் பயன்படாது என்ற அம்பேத்கரின் அரசியல் சிந்தனையை நினைவுபடுத்தத் தவறவில்லை அவ்விலக்கியம். இப்படி கலை, இலக்கியம், அரசியல் என அனைத்துத் தளங்களிலும் கலகக் குரலாக வெளிப்பட்ட தலித்திய செயல்பாடுகள் டாக்டர் அம்பேத்கர் புகழ் புழங்கும் பரப்பானது மேலும் விரிவுபட செயலாற்றின.

அம்பேத்கர் நூற்றாண்டியொட்டிய அரசியல் சமூகவியல் செயல்பாடுகள்:

 உலகமே வியக்கும் வண்ணம் நீண்டதோர் அரசியல் சாசனம் வடிவமைத்து வழங்கி இந்திய இறையாண்மைக் கோட்பாட்டை அர்த்தப்படுத்திய அம்பேத்கருக்கு 1990 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது அறிவித்து கௌரவித்தது மத்திய அரசு. அதே ஆண்டு 12-4-1990ல் பாராளுமன்ற அவையில் ஓவியர் திருமதி ஜிபா அம்ரோவி வரைந்து, பி.ஆர்.அம்பேத்கர் விசார் மஞ்ச் என்ற அமைப்பால் கொடையளிக்கப்பட்ட அம்பேத்கரின் (ஏழு அடி மூன்று அங்குல உயரமம், நான்கு அடி மூன்று அங்குல அகலம் (7'.3'' x 4``3'') ) முழு உருவப்படம் அன்றைய பிரதமர் வி.பி.சிங் அவர்களால் நிறுவப்பட்டது. ஏப்ரல்-14 1990 முதல் ஏப்ரல்-14 1991 வரைக்குமான ஓராண்டு காலத்தை டாக்டர் அம்பேத்கர் நினைவைப் போற்றும் வகையில் சமூக நீதி ஆண்டாக (Year of Social Justice) கடைபிடிக்கவும் அழைப்பு விடுத்தது மத்திய அரசு. மேலும், அண்ணலின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவம் பதித்த 125 ரூபாய் / பத்து ரூபாய் நாணயங்களும், தபால் தலைகளும் வெளியிட்டதுடன், 2015 ஆம் ஆண்டு அவரது பிறந்த நாளை பொது விடுமுறை நாளாக அறிவிக்கும் ஆணை வெளியிடப்பட்டது. அம்பேத்கர் நுற்றாண்டை முன்வைத்து மத்திய அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் என அரசு சார்ந்த நிறுவனங்களில் அதுவரைக்கும் நிரப்பப்படாமல் இருந்த பட்டியலின-பழங்குடியினர் பிரிவு பணியிடங்கள் எஸ்சி / எஸ்டி ஸ்பெசல் டிரைவ் ரெக்ரூட்மெண்ட் மூலம் நிரப்பப்பட்டன. அன்றைக்கிருந்த ராஜீவ் அரசு மேற்கொண்ட இந்நடவடிக்கை ஆயிரமாயிரம் தலித் இளைஞர்கள் மத்திய அரசு சார்ந்த பணிகளில் சேர்ந்து பயன்பெற்றனர். இவ்வாறான அரசியல், சமூகவியல் செயல்பாடுகள் அம்பேத்கர் என்னும் அடையாளத்தை குக்கிராமத்து சாமானியர் வரைக்கும் கொண்டு சேர்த்தன.

முடிவுரை:

 சாதி-மத, மொழி, கலை-கலாச்சாரம் என பல்வகை வேறுபாடுகள் நிறைந்த தேசத்தை ஒரு குடையின் கீழ் ஆளும் வல்லமை மிக்கதோர் அரசியல் சாசனம் வரைந்தளித்தவர் அம்பேத்கர். அவர் வரைந்த அரசியல் சட்டம் ஆட்சி செய்வதாலேயே உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு என்னும் அந்தஸ்துப் பெற்று விளங்குகிறது இந்தியா. பொருளாதாரப் பிரிவுக்கான நோபல் பரிசு பெற்ற டாக்டர் அமர்த்யா சென் என் பொருளியல் சிந்தனையின் தந்தை ( Ambedkar is the father my economics ) அம்பேத்கராவார் என்று அறிவித்ததும், "ரூபாயின் சிக்கல்" என்னும் அவரது பொருளியல் நூலின் வழிகாட்டுதல்படி உருவானது இந்திய ரிசர்வ் வங்கி என்பதுமே அவரது பொருளியல் சிந்தனை வளத்துக்கு சாட்சியாக விளங்குகிறது.

 லண்டன், அமெரிக்கா, கனடா, ஹங்கேரி, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற உலக நாடுகள் உருவச் சிலைகள் நிறுவி அறிவுலகப் பேராளுமையான அம்பேத்கருக்கு மரியாதை செலுத்திவர, சொந்த தேசம் அவரது பிறந்த நாள்-நினைவு நாளில் மட்டுமே ஒரு சடங்கு போல கூடி அவரது உருவப் படங்களுக்கும், சிலைகளுக்கும் மாலை அணிவிப்பது என்பதோடு முடித்துக்கொள்கிறது. அம்பேத்கருக்கு உரிய மரியாதை செலுத்துவது என்பது அவரது அரசியல், சமூகவியல், பொருளியல் சிந்தனைகளை செயலாக்கம் பெற செய்வதில் இருக்கிறது என்பது ஒருபுறம் இருக்க, இந்தக் கொரோனா என்னும் நோய்த் தொற்று கிருமி அந்த சடங்குத் தனமான நிகழ்வுக்கும் முற்றுப் புள்ளி வைத்துவிட்டது இந்த ஆண்டு. அம்பேத்கர் வேருடன் வேராக அறுத்தெறிந்துவிட நினைத்த சாதி-மத வெறி என்னும் நோய்க்கிருமிமுன் இந்தக் கொரோனா ஒரு தூசு என்பதை நினைவுபடுத்தி, அந்த நச்சுக் கிருமியை வெல்வதற்கு மருத்துவ நல்லாலோசனைகளின்படி ஒன்று கூடாமலும், தனித்திருந்தும், விலகியிருந்தும், வீட்டுக்குள் இருந்தும் அம்பேத்கரின் 129 வது பிறந்த நாளைக் கொண்டாடுவோம். தலித் மக்களின் கடவுளுக்கு நிகரான அம்பேத்கரின் 130வது பிறந்த நாளை பெரும் பண்டிகைபோல் கொண்டாட இப்போதே தயாராகுவோம்.

- வெ.வெங்கடாசலம்