தன்மானத்தைப் பற்றியும், சுயமரியாதையைப் பற்றியும் அறியாத மனிதர்கள் ஒருநாளும் தாங்கள் செய்யும் எந்த ஒரு அருவருப்பான செயலுக்காகவும் அவமான உணர்ச்சியோ, குற்ற உணர்ச்சியோ கொள்வதில்லை மாறாக அவர்கள் தாங்கள் செய்யும் இழிவான செயலை எண்ணிப் பெருமிதம் கொள்கின்றார்கள். அந்தப் பெருமிதத்தின் ஊடாக சீழ்பிடித்த சனாதன தர்மத்தைக் கெட்டிப்படுத்தும் அயோக்கியத்தனத்தை அரங்கேற்றுகின்றார்கள்.

tn people honours scavengers koronaநாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைக்காக மட்டும் சில அரசுத் துறைகள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், அதில் காவல் துறையினர், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களின் பணிகள் மட்டும் தொடர்ச்சியாக அரசாலும், ஊடகங்களாலும் இன்னும் சில தனிப்பட்ட மனிதர்களாலும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எப்போதுமே கொண்டாட்ட மனநிலையானது சிந்தனையை தடைப்படுத்தி, வெற்றுக் கூச்சலுக்கும், அர்த்தமற்ற ஆர்ப்பரிப்புக்கும் இட்டுச் செல்கின்றது. அப்படித்தான் இந்த ஊரடங்கு பல பேரை உணர்ச்சி வசப்பட வைத்துள்ளது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து காவல் துறை சாதாரண மக்களிடம் எவ்வளவு மிருகத்தனமாகவும், அடாவடித்தனமாகவும் நடந்து கொண்டது என்பதற்கு நூற்றுக்கணக்கான காணொளிக் காட்சிகள் இருக்கின்றன. இவற்றில் பல காணொளிகள் காவலர்களாலேயே எடுக்கப்பட்டு பகிரப்பட்டவை ஆகும். மக்கள் மனதில் அச்சத்தை விதைக்க அரசு கையாண்ட உத்தி அது. இதில் சில விதிவிலக்கான காவலர்களும் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக காவல்துறை என்பது அரசின் அடியாள் படை என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள்தான் காவல் துறையை தலைக்குமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுபவர்கள். காவல் நிலையத்துக்கு எந்தப் பிரச்சினைக்காகவும் செல்லாதவர்களும், சினிமாவில் லட்சிய போலீசை அதிகம் தரிசிப்பவர்களும், அரசு என்றால் என்ன என்பதைப் பற்றிய குறைந்தபட்ச அறிவு கூட இல்லாதவர்களும்தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள். தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் காவல் நிலையத்துக்குச் சென்று வந்த யாருமே காவல் துறை பற்றிய பிரமிப்பில் இருந்து நிச்சயம் விடுபட்டிருப்பார்கள்.

இன்று அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களின் சேவைகளைப் பற்றி வானளவு புகழப்படுகின்றன. ஆனால் இன்றுள்ள சூழ்நிலையில் அவர்களின் சேவையைப் பற்றி புகழ் பாடுவதல்ல நமது வேலை. போதுமான பாதுகாப்புக் கவசங்களை வழங்காமல் அரசு அவர்களை நிர்க்கதியாய் கைவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 7 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையே தெரிவித்துள்ளது. மேலும் மிகக் குறைவான நபர்களுக்கே கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.

ஒரு பெரும் நோய்த் தொற்று ஏற்பட்டால் அதைக் கையாள எந்த வகையிலும் திராணியற்ற நிலைக்கு அரசு மருத்துவமனைகள் தள்ளப்பட்டிருக்கின்றன. அரசானது திட்டமிட்டே மருத்துவத் துறையை தனியார்மயமாக்கியதன் விளைவுதான் இது. காசிருப்பவன் ஆடம்பரமான தனியார் மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சை பெற்றுக் கொள்ள, சாமானிய உழைக்கும் மக்களோ வாழ்வா சாவா போராட்டத்திற்குத் தள்ளப்படுகின்றார்கள். எனவே மருத்துவப் பணியாளர்களுக்குப் போதுமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவும், அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தவும், தனியார் மருத்துவமனைகளை அரசுடமையாக்க குரல் கொடுப்பதும், அதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதுதான் காலத்தின் தேவையேயொழிய அரசு மருத்துவர்களைப் புகழ் பாடுவதல்ல.

காவல் துறையை விடவும், மருத்துவப் பணியாளர்களை விடவும் இன்று நாட்டில் அதிகம் பூஜிக்கத்தக்க மனிதர்களாக துப்புரவுப் பணியாளர்களே மாற்றப்பட்டு இருக்கின்றார்கள். பல இடங்களில் துப்புரவுப் பணியாளர்கள் கெளரவப்படுத்தப்பட்டதாக செய்திகள் புகைப்படத்துடன் வருகின்றன. மலர்தூவி மரியாதை செய்வது, அவர்களின் கால்களைக் கழுவி பூசை செய்வது, அவர்களுக்கு சீர் கொடுப்பது என பலவாறாக இது செய்யப்படுகின்றது. தமிழக காவல் துறை இன்னும் ஒருபடி மேலே போய் காவல் துறையின் மாநில உயர் மட்டக் காவல்துறைத் தலைவர், பிரதமர் மற்றும் மாநில முதல்வர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிற GUARD OF HONOUR எனப்படும் உயரிய மரியாதையை தூய்மைப் பணியாளர்களுக்குக் கொடுத்தது.

ஊடகங்களோ எந்தவித விமர்சனமும் இன்றி இதை ஒரு கெளரவிக்கும் நிகழ்வாக சித்தரிக்கின்றன. ஆண்டாண்டு காலமாக இந்திய சனாதன சமூகத்தின் நாற்றமெடுத்த மலத்தையும், குப்பையையும் அள்ள நிர்பந்திக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களின் அன்றாட உயிர்வாழ்வதற்கான போராட்டத்தை புனிதப்படுத்துவது என்பது அவர்களை அதிலேயே இருத்தி வைப்பதற்கான அயோக்கியத்தனமான செயலாகும். தன்னுடைய கழிவுகளை அள்ளுவதற்கு கூச்சமே இல்லாமல் இன்னொரு மனிதனை கட்டாயப்படுத்தும் மேட்டிமை சாதித் திமிரின் இன்னொரு வடிவம்தான் புனிதப்படுத்துதல் என்பது.

தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்று சொல்லி ஊருக்கு வெளியே சேரிகளில், மனிதர்கள் வாழ எந்தவிதத் தகுதியும் அற்ற, சுகாதரக் கேடான இடத்தில், விலங்குகளைவிட இழிவாக வாழ அவர்களை நிர்பந்தித்துவிட்டு, இன்றும் கூட அவர்களோடு அன்னம் தண்ணீர் புழங்க மறுத்து, பொதுச் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்திருப்பவர்கள்தான் எந்தவித குற்ற உணர்வும், கூச்சமும் இன்றி துப்புரவுப் பணியை தெய்வ காரியமாக சித்தரிப்பவர்கள்.

இன்று அந்த மக்களுக்குத் தேவை சாதிய இழிவில் இருந்தும், ஆண்டாண்டு காலமாக செய்து வரும் இழி வேலையில் இருந்தும் விடுதலை பெறுவதுதான். உங்களின் பாராட்டுக்களும், பஜனைகளும் எந்த வகையிலும் அந்த மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் சாதிய இழிவை நீக்க உதவாது.

tn people honours scavengers korona 1கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் இந்தச் சூழ்நிலையில் கூட எந்தவிதப் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல்தான் அந்த மக்கள் பணி செய்து கொண்டிருக்கின்றார்கள். சானிடைசர்கள், முகமூடி, காலணிகள் மற்றும் கையுறைகள் போன்ற பாதுகாப்புக் கருவிகள் அந்த மக்களுக்குப் போதுமான அளவு வழங்கப்படவில்லை. இதனால் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு மற்றவர்களைவிட அவர்களுக்குதான் அதிகம்.

அரசானது எப்போதுமே துப்புரவுப் பணியாளர்களை மனிதப் பிறவிகளாக மதிப்பது கிடையாது. காரணம் இந்திய அரசானது எப்போதுமே சனாதன தர்மத்தை கடைபிடிக்கும், சாதியவாதிகளின் நலன் காக்கும் அரசாகவே இருந்து வருகின்றது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரயாக்ராஜ் சென்ற மோடி அங்கு கும்பமேளாவில் கங்கையில் நீராடி வழிபாடு மேற்கொண்டார். இந்த வழிபாடுகளுக்குப் பின்னர் கும்பமேளாவை சிறப்பாக சுத்தம் செய்த 5 துப்புரவுத் தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் பாதங்களை மோடி கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது இந்தியா முழுவதும் பெரிய அளவில் ஊடகங்களில் விளம்பரமும் செய்யப்பட்டது. துப்புரவுத் தொழிலாளர்கள் மீதான மோடியின் அன்பும் பாசமும் விதந்தோதப்பட்டது.

ஆனால் துப்புரவுப் பணியாளர்கள் மீதான மோடியின் பாசம் அவர்களின் நிலையை மாற்றுவதற்கான சிறு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை. மாறாக மோடி அரசுக்கு முன்பாக, மலம் அள்ளும் தொழிலாளிகளின் மறுவாழ்வுக்கு ஒதுக்கப்பட்ட 580 கோடி நிதியை 5 கோடியாகக் குறைக்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 12 கோடிக்கும் அதிகமாக புதிய கழிவறைகளைக் கட்டியுள்ளதாக மத்திய அரசு பெருமை பட்டுக்கொண்டாலும் அந்தக் கழிப்பறைகள் பெரும்பாலும் தண்ணீர் வசதி செய்யப்படாதவை ஆகும். இதனால் அந்தக் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் கூடுதல் பணியும் மலம் அள்ளும் தொழிலாளர்கள் மீதே விழுந்துள்ளது. நாடு முழுவதும் 56,000 பேர் இன்னும் கையால் மலம் அள்ளுவதாக இந்திய அரசே சொல்கிறது. இதன் பொருள், தடை செய்யப்பட்ட உலர் கழிவறைகள் இன்னும் இந்தியாவில் உள்ளன என்பதுதான்.

கழிவுநீர்த் தொட்டியை சுத்தப்படுத்தும்போது 2018-ம் ஆண்டில் 105 பேரும், 2019-ம் ஆண்டு 110 பேரும் பலியாகியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் இது போன்று 1760 பேர் இறந்துள்ளனர் என்றும், அதில் தமிழ்நாட்டில் மட்டும் 226 பேர் இறந்துள்ளனர் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. சட்டப்படி, இவ்வாறு மலம் அள்ளும் தொழிலாளர்கள் இறந்தால் அவர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால் அரசாங்கமானது இதைக்கூட கொடுக்க மறுக்கின்றது என்பதுதான் உண்மை. மனிதக் கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதைத் தடுக்கும் சட்டம் 2013-ன் படி அத்தகைய தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அரசாங்கம் கல்வி உதவித் தொகை அறிவித்துள்ளது. ஆனால், அது இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

துப்புரவுப் பணியாளர்களின் உண்மையான வாழ்நிலை இவ்வாறு இருக்கையில், அதை மாற்றுவதற்கான எந்த முன்கையையும் எடுக்காமல் “தங்களின் உயிரை பணயம் வைத்து அவர்கள் பணி செய்வதால் அதைப் பாராட்டுகின்றோம்” என்பது கடைந்தெடுத்த பிழைப்புவாதமாகும். உண்மையில் அவர்கள் விருப்பப்பட்டு இந்தப் பணியை செய்யவில்லை என்பதும், அவர்கள் மீது இந்தப் பணி திணிக்கப்பட்டுள்ளது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையிலேயே துப்புரவுப் பணி புனிதமானது என்று நீங்கள் கருதினால் நீங்களும் அந்தப் பணியை செய்யுங்கள், உங்கள் பிள்ளைகளையும் அந்தப் பணியில் சேர வற்புறுத்துங்கள், அவர்களோடு அன்னம் தண்ணீர் புழங்குங்கள், பெண் கொடுத்து பெண் எடுங்கள். தலித் என்ற ஒரே காரணத்துக்காக சாதி ஆணவப் படுகொலை நிகழும் போது வீதிக்கு வந்து களமாடுங்கள். இதை எல்லாம் செய்துவிட்டு துப்புரவுப் பணியின் மகத்துவத்தைப் பற்றி பரப்புரை செய்யுங்கள். அப்படி செய்யாமல் துப்புரவுப் பணியாளர்களின் காலைக் கழுவும் உங்களின் செயல் கேடுகெட்ட அயோக்கியத்தனம் என்றே சொல்வோம்.

- செ.கார்கி