நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஏறக்குறைய 1071 பேர் பாதிக்கப்பட்டும், 29 பேர் உயிரிழந்தும் உள்ள சூழ்நிலையில் மத்திய அரசானது 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்திரவைப் பிறப்பித்து இருக்கின்றது. பல நாடுகளில் இப்படி மக்களை தனித்திருக்கச் செய்வதன் மூலமே நோய்த் தொற்றை கட்டுப்படுத்தி இருப்பதால், அதே முறையைக் கையாண்டு இந்திய அரசும் இந்த 21 நாட்கள் ஊரடங்கு உத்திரவை தீவிரமாக நடைமுறைப்படுத்தி இருக்கின்றது. நிச்சயமாக இதை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால் இப்படி 21 நாட்கள் ஊரடங்கு உத்திரவைப் பிறப்பிக்கும் முன் கோடான கோடி சாமானிய உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பற்றிய எந்தவித அக்கறையும் இன்றி தான்தோன்றித்தனமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எந்தக் காரணத்திற்காக ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டதோ அந்தக் குறிக்கோளையே சிதைக்கும் வகையில் மாறியிருக்கின்றது.

corona people in bus standஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன், இந்தியா முழுவதும் புலம்பெயர்ந்து பல்வேறு மாநிலங்களில் கூலிகளாக வேலை பார்க்கும் கோடிக்கணக்கான மக்கள் குறைந்த பட்சம் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள் என்று கூட இந்த அரசு கவலைப்படவில்லை. குறைந்த பட்சம் அதை உறுதி செய்திருந்தால் கூட இன்று நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கால்நடையாகவே பல நூறு கிலோ மீட்டர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள தங்களின் சொந்த இடங்களுக்குச் செல்லும் அவலம் ஏற்பட்டிருக்காது. ஆட்சியாளர்கள் எப்போதுமே தாங்கள் சார்ந்திருக்கும் வர்க்கத்தை மட்டுமே நினைவில் வைத்தே அனைத்து முடிவுகளையும் எடுக்கின்றார்கள். இந்த 21 நாட்கள் எந்தவித வேலையும் இல்லாமல், வருமானமும் இல்லாமல் வீட்டில் தனித்திருப்பதால் கொரோனாவில் இருந்து காப்பாற்றிக் கொண்டாலும் பட்டினியால் சாவதில் இருந்து நிச்சயம் தற்காத்துக் கொள்ள முடியாது என்பதுதான் உண்மை. பொதுவாகவே பட்டினி சாவுகளைப் பற்றி எந்தவித கூச்சமோ, குற்ற உணர்வோ நமது ஆட்சியாளர்களுக்கு எப்போதுமே இருப்பதில்லை என்பதை நாம் பார்த்துத்தான் வருகின்றோம்.

அமைப்பு சார்ந்த துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களைவிட, அமைப்புசாரா தொழிற்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையே இந்தியாவில் அதிகம். இந்தியாவில் 42 கோடி மக்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களாக இருக்கின்றார்கள். இவர்களுக்கு எந்தவித சமூகப் பாதுகாப்பு கிடையாது. தினம் தினம் உழைத்தால்தான் சோறு, இல்லை என்றால் அன்று பட்டினி கிடக்க வேண்டியதுதான். ஆட்சியாளர்கள் எந்த முடிவு எடுத்தாலும் முதலில் பாதிக்கப்படுவது இந்தச் சமூக பாதுகாப்பற்ற வர்க்கம் மட்டுமே.

ஏற்கெனவே இந்தியாவில் வரலாறு காணாத வேலைவாய்ப்பின்மை நிலவும் சூழ்நிலையில் இந்த ஊரடங்கானது மேலும் கோடிக்கணக்கான வேலை இழப்புகளை உருவாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகள், ஆட்டோமொபைல் உற்பத்தி, ஜவுளி உற்பத்தி, தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள், நகை விற்பனை, உணவு தொழில்கள், சுற்றுலாத் துறைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் என அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை இழக்க உள்ளனர். அரசு அறிவித்துள்ள இந்த 21 நாட்கள் ஊரடங்கால் மட்டும் சுமார் 9 லட்சம் கோடிக்கு மேல் வர்த்தக இழப்பு ஏற்படும் என கூறப்படுகின்றது.

இப்படி 21 நாட்கள் எந்தவித வேலைவாய்ப்பும் இன்றி முடக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு எந்தவித பொருளாதார நிதியளிப்பும் இன்றி அவர்களை எல்லாம் பட்டினி கிடந்து சாகும் சூழ்நிலையை இந்த அரசு தற்போது உருவாக்கியுள்ளது. பெருமுதலாளிகளுக்கு லட்சக்கணக்கான கோடி வரிச்சலுகைகளை மகிழ்ச்சியோடு வாரி வழங்கும் இந்த அரசு அந்தப் பெருமுதலாளிகளுக்காக தொடர்ந்து உழைத்தே சாக நிர்பந்திக்கப்பட்ட கூலித் தொழிலாளர்களை பிச்சைக்காரர்களை அணுகுவது போன்றே அணுகுகின்றது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிதியுதவித் திட்டங்களை இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான பஞ்சைப் பராரிகளுக்கு ஒரு ஆண்டான் மனப்பான்மையில் இருந்து அறிவித்திருக்கின்றார். 

ஒரு தொழிலாளி என்றால் குறைந்த பட்சம் மனைவி, இரண்டு குழந்தைகள் என்று நான்கு பேராவது அவரைச் சார்ந்து வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். மாமி அறிவித்திருக்கும் இந்த ஐந்து கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு என்பதெல்லாம் ஐந்து நாளுக்குக் கூட தாக்குப் பிடிக்காது. எந்தவித வருமானமும் அற்ற இந்த 21 நாட்களில் மீதமுள்ள நாட்கள் எல்லாம் அவர்கள் பட்டினி கிடக்க வேண்டிய சூழ்நிலையே ஏற்படும். அது மட்டுமல்லாமல் பிரதமர் கிசான் சம்மான் மூலம் விவசாயிகளுக்கு வழங்குவதாக சொல்லப்பட்ட ரூ.6000 நிதி என்பது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதுதான். இதில் எந்தவித புதிய நிதியளிப்பும் இல்லை என்பதுதான் உண்மை.

ஊரடங்கு உத்திரவு அமுலில் உள்ள சூழ்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலியை 182ல் இருந்து 202 ஆக உயர்த்தப்படும் என்று சொல்வது எவ்வளவு பெரிய மோசடி. ஊரடங்கு காலத்தில் அவர்கள் எங்கே வேலைக்குப் போக முடியும்? அது மட்டுமல்ல ஜன்தன் திட்டத்தில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள 20.5 கோடிப் பெண்களுக்கு, மாதம் 500 வீதம் அடுத்த 3 மாதங்களுக்கு அவர்களின் குடும்ப செலவுக்காக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று மாமி சொல்கின்றார். மாமிக்கு மார்க்கெட் போகும் பழக்கம் இல்லாததால் ஒரு கிலோ தக்காளி, வெங்காயம், பூண்டு போன்றவை என்ன விலையில் விற்கின்றது என்பது நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உண்டக்கட்டி தின்றே உடல் வளர்த்தவர்கள் உழைத்து தின்பவர்களின் உயிரைப் பற்றி நிச்சயம் கவலைப்பட மாட்டார்கள் என்பதைத்தான் மாமியின் செயல்பாடுகள் காட்டுகின்றன.

இதுதவிர மருத்துவக் காப்பீடு என்ற பெயரில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆஷா அல்லது அரசு சுகாதாரப் பணியாளர்களுக்கு தலா 50 லட்சம் வரையிலான காப்பீடு, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பிணையில்லா கடன் வரம்பு 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தப்படுதல் என அனைத்துமே மிக மோசடியான ஏமாற்றுத் திட்டங்களே ஆகும்.

காரணம் கொரோனா பரவாமல் தடுப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் உழைக்கும் மக்களின் உயிர். ஏற்கெனவே உலகில் சமூக நலத்திட்டங்களை மிக மோசமாக செயல்படுத்தும் நாடாக இந்தியா இருந்து வருகின்றது. ஒவ்வொரு மணி நேரமும் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் 46 குழந்தைகள் இந்தியாவில் இறக்கின்றன. உலகில் கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 7 கோடியே 2 லட்சம் மக்கள் மிக மோசமான வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 38 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய குடும்பநலம் மற்றும் சுகாதார அமைப்பு (National Family and Health Survey) மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டுள்ள குழந்தைகளில் 72 சதவிகிதம் பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி செய்தியையும் தெரிவித்துள்ளது அந்தப் புள்ளி விவரம். உலகில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளில் 50 சதவிகிதக் குழந்தைகள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்கின்றன சமீபத்திய புள்ளி விவரங்கள். இதுமட்டுமல்ல ஏற்கெனவே இந்தியாவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை உலகமயமாக்கலுக்கு இந்திய ஆளும் வர்க்கம் பலி கொடுத்திருக்கின்றது. இந்த அடிப்படையில் இருந்துதான் நாம் மாமியின் திட்டங்கள் அனைத்துமே மாமியின் டிஎன்ஏவில் கலந்திருக்கும் உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரான சிந்தனையின் வெளிப்பாடு என்கின்றோம்.

இதே போல மாநில அரசு தருவதாகச் சொன்ன 1000 ரூபாய் என்பதுகூட போதாமையே ஆகும். குறைந்த பட்சம் மாதம் 5000 ரூபாயாவது ஆறு மாதங்களுக்குக் கொடுக்க வேண்டும். மேலும் அம்மா உணவகத்தில் உணவு பெரும்பாலும் கிடைப்பதில்லை என்று கூறப்படுகின்றது. ஒவ்வொரு முறையும் சாப்பாட்டிற்கு ரூபாய் 5 கொடுக்க வேண்டும் என்பது இப்போது இருக்கும் சூழ்நிலையில் அனைவராலும் முடியாத காரியமாகும். அதே போல ஒரே சமயத்தில் 5 பேருக்கு மேல் செல்லக் கூடாது என்று போலீஸ் கெடுபிடி செய்வதால் அம்மா உணவகத்தைச் சார்ந்து இருக்கும் வடமாநிலத் தொழிலாளர்களும், வீடற்ற தொழிலாளர்களும் பெரும் இடர்பாடுகளுக்கு உள்ளாகி உள்ளனர்.

தமிழகத்தில் கிண்டி, கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மேல்மருவத்தூர், காஞ்சிபுரம், மதுரை, கோவை, திருப்பூர் என பல பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் இந்த திடீர் ஊரடங்கால் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமலும், அடுத்த வேலை சாப்பாட்டிற்கு வழியற்றும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றார்கள். இது போன்ற சமயங்களில் மாநில அரசானது அனைத்துத் தொழிலாளர்களையும் மாநில, மொழி, இன வேறுபாடுகளைக் கடந்து அவர்கள் உயிர் பிழைத்திருக்கத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இல்லை என்றால் ஊரடங்கு முடிவதற்குள் கொரோனா மரணங்களை விட பட்டினி சாவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகி விடும்.

corona kolkata police attack on youthஅதே போல கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ள காலப்பகுதியில், தமிழ்நாடு மாநில அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை தொற்றுநோய் சட்டம் 1897, பிரிவு 2ன் கீழ் ஊரடங்கு காலத்தில் உள்ள விதிமுறைகளை அரசு ஆணை (G.O No 152 Dated 23.3.2020) மூலம் வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்துத் தொழிலாளர்களுக்கும் (ஒப்பந்தம், தினக்கூலி, அவுட்சோர்சிங்) ஊரடங்கின் போது ஊதியம் முழுவதையும் முதலாளிகள் கொடுக்க வேண்டும் என (பகுதி H, 10) உத்திரவிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை அனைத்து தொழிற்நிறுவனங்களும் ஒழுங்காக நடைமுறைப்படுத்துகின்றதா என்பதை தீவிரமாகக் கண்கானிக்க வேண்டும்.

இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது, சாமானிய மக்களின் மீது காவல்துறை கட்டவிழ்த்து விட்டுள்ள மனிதத் தன்மையற்ற தாக்குதலாகும். வெறிபிடித்த மிருகங்கள் போல சாமானிய மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை இந்த அரசு உடனே நிறுத்த வேண்டும். மளிகைக் கடை, காய்கறிக் கடை, இறைச்சிக் கடை என அனைத்தும் திறந்திருக்க அனுமதி கொடுத்துவிட்டு, அதை வாங்க வெளியே வரும் மக்களை மிருகங்களைப் போல அடிப்பது என்பது காவல் துறையின் அராஜகப் போக்கையே காட்டுகின்றது. மனிதர்களை மனிதர்கள் போல சுயமரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்துங்கள், அடிமைகளைப் போல, விலங்குகளைப் போல நடத்தாதீர்கள் என்பதுதான் நமது கோரிக்கையாகும். அனைவரும் சேர்ந்தே இந்தக் கொடிய நோய்த் தொற்றை எதிர்கொள்ள வேண்டும் ஆனால் அதற்குள் எங்களை பட்டினியாலும், காவல் துறையின் குண்டாந்தடிகளாலும் சாகடித்து விடாதீர்கள்.

- செ.கார்கி