பகுதி 1: ஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன?

பகுதி 2: ஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்!

பகுதி 3: முக்கிய பிரச்சினையின்போது புறக்கணிக்கப்பட்ட இந்திய நலன்

பகுதி 4: ஆசிய நாடுகளின் வளர்ச்சி (சீனா - இந்தியா ஓர் ஒப்பீடு)

பகுதி 5: கடன் பொருளாதாரம் எனும் புதிய கண்டுபிடிப்பு

பகுதி 6: பூகோள அரசியலில் இந்தியா, ஆப்கானிஸ்தானின் முக்கியத்துவம்!

பகுதி 7

மக்களின் வாங்கும் திறன்

பொருட்களை விற்பதற்கான சந்தை, ஆயுத விற்பனைக்கான சந்தை, சீனாவைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் பூகோள ரீதியிலான முக்கியத்துவம், எரிபொருள் விற்பதற்கான மிகப் பெரிய சந்தை, மலிவாகக் கிடைக்கும் தொழிலாளர்கள் என எல்லா வகையிலும் இந்தியாவும், சீனாவைப் போன்றே உலக அரங்கில் எல்லா முக்கியத்துவத்துடன்தான் இருக்கிறது என சென்ற பகுதியில் பார்த்தோம். எனில் நாமும், அவர்களும் இதில் சமமாகத்தான் இருக்கிறோம் என நெஞ்சை நிமிர்த்த முடியுமா என்றால், அதற்கான எல்லா முகாந்திரமும் இருக்கிறது. ஆனால்... என்னய்யா மறுபடியும் இழுக்கிறீர்கள்? என அலுத்துக் கொள்ள வேண்டாம். கண்ணை மூடிக் கொண்டு கதைகளை நம்ப நாம் முட்டாள் மோடி பக்தர்கள் அல்லவே!

Modi with Xi Jinpingஇந்த அம்சங்களில் சீனாவையும், இந்தியாவையும் ஒப்பிடுவது மலையையும், மடுவையும் ஒப்பிடுவதைப் போன்றது. மறுபடியும் இந்தியாவை மட்டம் தட்டி உங்கள் சிவப்பு பாசத்தைக் காட்டுகிறீர்கள் எனக் குற்றம் சாட்டலாம். அப்படி எந்தப் பாசமும் இல்லை. அதற்காக உண்மையை இல்லை என்று கண்களை மூடிக் கொள்ளவும் முடியாது. முதலில் மக்களின் வாங்கும் திறனைப் பார்ப்போம். வாங்கும் திறனை, பொதுவாக அந்தந்த நாட்டின் மத்திய தர வர்க்கத்தைக் கொண்டே மதிப்பிடுகிறார்கள். PEW ஆராய்ச்சி நிறுவனம் ஒரு நாளைக்கு செலவு செய்யும் அளவைப் பொருத்து(டாலர்களில்) பின்வருமாறு வரையறுக்கிறார்கள். < $2 – வறுமையில் வாழ்பவர்கள் (poor), $2-10 – குறைவான வருமானம் உடையவர்கள் (low), $10-20 – கீழ் மத்தியதர வர்க்கம் (low-middleclass), $20-50 மேல் மத்தியதர வர்க்கம் (upper-middleclass), > 50$ பணக்கார்கள் (High).

நாடு

மொத்த மக்கள் தொகை

வறுமையில் வாழ்பவர்கள்(%)

$2 - Rs.143

குறை வருமானம்(%) $2-10 Rs.143-718

கீழ் மத்தியதர வர்க்கம்(%)

$10-20 Rs.718-1437

மேல் மத்தியதர வர்க்கம் (%)

$20-50 Rs.718-3594

பணக்கார்கள் (%)

>$50 , >Rs.3594

அமெரிக்கா

0.327 billion

1.25

2.25

7.5

36.5

52.5

சீனா

1.386

0.93

59.58

29.96

9.65

0.78

ஜப்பான்

0.127

0.22

3.75

13

60.25

22.78

ஜெர்மனி

0.083

0

1

6.5

49.49

43.01

இந்தியா

1.339

24.49

72.18

2.61

0.63

0.09

இந்தோனேசியா

0.264

7.12

78.76

11.58

2.38

0.16

பாகிஸ்தான்

0.197

5.43

88.53

4.63

1.25

0.16

பிரேசில்

0.207

3.67

37.89

31.33

20.4

6.71

நைஜீரியா

0.191

56.47

41.73

1.49

0.29

0.02

பங்களாதேஷ்

0.165

17.77

79.11

2.63

0.44

0.05

(CSIS China Power Project | Source: Pew Research Center)

இந்த அட்டவணைப்படி சீனாவின் மத்தியதர வர்க்க அளவை அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் மத்தியதர வர்க்கத்துடன் ஒப்பிட்டாலோ, இந்தியாவின் வறுமையில் வாழ்பவர்களின் சதவீதத்தை மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிட்டாலோ, இரண்டுமே இந்த இரண்டிலும் மோசமாக இருப்பதாகத்தான் தோன்றும். ஆனால் மொத்த மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால், இந்த சதவீத ஒப்பீடு சரியானதாக இருக்காது என்பதைப் புரிந்து கொள்ளலாம். உதாரணமாக, இந்தியாவின் மத்தியதர வர்க்கம் 3%. எண்ணிக்கையில் இது 0.065 பில்லியன். கிட்டத்தட்ட ஜெர்மனியின் மொத்த மக்கள் தொகைக்கு இணையானது. ஆதலால், மக்கள் தொகையில் சமமாக உள்ள இந்தியாவையும், சீனாவையும், மக்களின் வாங்கும் திறனை அளவிட ஒப்பிடுவதே சரியானதாக இருக்கும். அப்படி ஒப்பிட்டால் சீனா, இந்தியாவை விட பத்து மடங்கு (30%) அதிகமான மத்தியதர வர்க்கத்தைக் கொண்டிருக்கிறது. அதாவது 0.416 பில்லியன். இது பொருளாதாரத்தில் உலகின் முதல் மற்றும் மூன்றாம் இடத்தில் இருக்கும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய இருநாடுகளின் மொத்த மக்கள் தொகைக்கு இணையானது. எனில் சீன சந்தையின் வாங்கும் திறன் இன்று உலகிலேயே மிகப் பெரியது.

இவ்வளவு பெரிய சந்தையைக் கொண்டிருப்பதாலேயே, மற்ற நாடுகள் இங்கே கடை விரிக்க வேண்டுமானால் எங்களின் விதிகளுக்கு கட்டுப்பட்டு மட்டுமல்ல, உங்கள் சந்தையையும் எங்களுக்குத் திறக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடுகிறார்கள் (bargaining power). மறுக்கும் நாடுகள் இவ்வளவு பெரிய சந்தையை இழக்க நேரிடும். எந்த நாடு இதனை விரும்பும் அல்லது நினைத்துப் பார்க்கும்? அதுவும் வளர்ந்த நாடுகளின் மக்கள் எல்லாம் வாங்கும் திறனை இழந்து நிற்கும் இந்த நேரத்தில்....

அதேபோல சீனாவில் வறுமையில் வாடும் மக்களின் சதம் வெறும் 1%. இந்தியாவிலோ 25%. அந்த அளவு மக்களின் வாழ்நிலை இங்கே கொடுமையானதாக இருக்கிறது. இந்தியர்களின் மிகக் குறைந்த மாத வருமானம் Rs.4500 ($62), உயர்ந்த அளவு வருமானம் 143,000 ($1989), சராசரி வருமானம் 32,200 ($448). இதன்படி சராசரியாக ஒரு நாளைக்கு 1072 ரூபாய் ($15) என வருகிறது. ஆனால் உண்மையில் இந்த அளவு சம்பாதிப்பதில்லை. 2014 அரசின் புள்ளி விபரப்படி இது வெறும் 272 ரூபாய் தான். அதனாலேயே 25% மக்கள் இன்னும் வறுமையில் வாழ்கிறார்கள். ஆனால் சீன அரசின் புள்ளி விபரப்படி சீனர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 32 டாலர்கள் சம்பாதிக்கிறார்கள். அதாவது நம்மைப்போல் இருமடங்கு. அங்கே குறைந்த அளவு வருமானமும் நம்மைப் போல் இருமடங்கு என்று கொண்டால், அது 9000 ரூபாய் (125 டாலர்கள்), ஒரு நாளைக்கு 4 டாலர்கள். வரையறைப்படி, வறுமையில் வாழ்பவர்கள் ஒரு நாளைக்கு செலவிடும் அளவான 2 டாலர்கள் என்பதை கிட்டத்தட்ட எல்லா சீனர்களும் கடந்து விடுகிறார்கள். ஆதலால் சந்தை என்று வந்தால் சீனா, உலகின் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண். நாம் வெறும் துரும்பு மட்டுமே. இப்படி சொன்னால் கொஞ்சம் இளப்பமாகத் தெரியும். எனவே, உலக பொருளாதாரத்தை தாங்கி நிற்கப் பயன்படும் பல ஆணிகளில் ஒன்று என கவுரமாக சொல்லிக் கொள்ளலாம்.

இந்த வருமான புள்ளிவிபரம் இன்னொரு சேதியையும் சொல்கிறது. தொழிலாளர்கள் உருவாக்கும் பொருட்களின் மதிப்பைப் பொருத்தே, அவர்களின் வருமானம் அதிகரிக்கும். வெறும் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தும் தொழிலாளியின் வருமானம் எந்த வகையிலும் உயர்வதில்லை. அதனாலேயே ஏங்கல்ஸ் ஒரு சமூகம் எந்த வளர்ச்சி நிலையில் இருக்கிறது என்பதை நிர்ணயிப்பது குடும்பத்தின் வளர்ச்சியும், உழைப்பின் வளர்ச்சியும் என்கிறார். வெறும் உயிர் வாழ்வதற்கான பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தும் கருவிகளைக் கொண்டு நிர்ணயிக்கச் சொல்லவில்லை (அரசு குடும்பம் தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம் - முதல் முன்னுரை). எனில் சீனர்களின் உழைப்பின் வளர்ச்சி அல்லது தனித் திறன் நம்மைவிட இரு மடங்கு அதிகரித்திருக்கிறது, அதுவும் புரட்சிக்குப் பிறகான இரண்டு மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு.

சீனா மற்ற வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் ஒப்பிடத்தக்க அளவு வளர்ந்திருக்கிறதா என்று பார்த்தால், நிதி மூலதனத் தலைநகரமாம் நியூயார்க்கில் வேலை செய்யும் ஒரு தொழில்முறையாளர் (professional) ஒரு மணி நேரத்திற்கு 25.2 டாலர்களும், சீனாவின் தொழில் நகரான ஷாங்காயில் உள்ளவர் 5.4 டாலர்களும், இந்தியாவின் நிதி மூலதனம் விளையாடும் மும்பையில் உள்ளவர் 2.3 டாலர்களும் ஊதியமாகப் பெறுகின்றனர். எனில் சீனா இன்னும் செல்ல வேண்டிய தூரம் வெகு தொலைவு என்பதைப் புரிந்து கொள்ளலாம். சீனர்களே வெகு தொலைவு என்றால் நாம்? இந்த கேள்விக்கு பின்னர் பதில் தேடுவோம். இதற்கு இந்திய கம்யுனிஸ்டுகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தால், இந்தியா உற்பத்தியில், தொழில் துறையில் வளர்ந்து முதலாளித்துவமாக மாறிவிட்டது. ஆகவே இனி சோசலிசமே தீர்வு என்கிறார்கள். ம்ம்ம்ம்... அவர்களது முயற்சியில் வெற்றி பெற நமது 'வாழ்த்துக்களை' கூறிவிட்டு மேற்கொண்டு நகர்வோம்.

சரி! தொழிலாளியின் ஊதியம் மிகக் குறைவாக இருக்கும் போது எப்படி இங்கே வீடுகளில் நவீன பொருட்கள் நிரம்பிக் கிடக்கிறது, இந்தியாவின் ஜிடிபி எப்படி உயர்கிறது என்பதற்கான பதிலும் கடன் பொருளாதாரம்தான். வங்கிகள் நுகர்வுக்கும் உள்கட்டுமானத் துறைக்கும் மிக அதிக அளவில் கடன் கொடுத்ததாலேயே இந்த இரண்டும் சாத்தியமானது என்பதை இதனை சமீபத்தில் மின்னம்பலத்தில் புள்ளிவிவரங்களுடன் ரகுநாத் என்பவர் நிறுவி இருக்கிறார். ஏனெனில் ஜிடிபி = தனியார் நுகர்வு + நிகர முதலீடு + அரசின் முதலீடு + அரசின் செலவு (GDP = private consumption + gross investment + government investment + government spending + (exports – imports)). இதில் இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது என்பது குறித்தெல்லாம் கவலைப் படுவதில்லை. இப்படி கொடுத்த பணமெல்லாம் திரும்ப வராமல் வாராக்கடனாகி இந்தியா இப்போது தத்தளித்துக் கொண்டு நிற்கிறது.

நம்மைப் போலவே மற்ற நாடுகளும் உதாரணமாக சீன அரசும் இதேபோல உள்கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்கிறது. அங்கே ஏன் இது போன்ற சூழல் உருவாகவில்லை என்றால், அப்படி முதலீடு செய்த சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் அனைத்தும் பெருமளவு உற்பத்தி, பொருளாதார நடவடிக்கைக்கு பயன்பட்டு, போட்ட முதல் வட்டியுடன் திரும்ப வந்து விடுகிறது. இங்கே அப்படி எந்த உற்பத்திப் பெருக்கமும் இல்லாதால் வாராக் கடனாகிப் போகிறது. ஆக இந்தியா அடைந்த வளர்ச்சியும், நமக்குக் கிடைத்திருக்கும் வசதி வாய்ப்பும் பெருமளவு கடனால் வந்ததே தவிர, நமது உழைப்பின் வளர்ச்சியால், உற்பத்திப் பெருக்கத்தால் வந்தது அல்ல. அதனால் உலக அளவில் இந்திய சந்தையின் முக்கியத்துவம் மட்டுப்படுத்தபட்டது மட்டுமல்ல, நிச்சயமற்ற, எப்போது வேண்டுமானாலும் வீழ்ச்சியடையும் சந்தையும் கூட.

சந்தை என்ற அளவில் தான் இந்தியாவின் முக்கியத்துவம் குறைவு (இல்லை என்று கூறவில்லை). இந்த இந்திய பெருங்கடலில் எண்ணெய் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்லும் பகுதியில் இருப்பதிலாவது இது தனித்துவம் கொண்டிருக்கிறதா என்று பார்ப்போம்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மிக அருகிலேயே பல துறைமுகங்களைக் கொண்டிருப்பதால், இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்யும் செலவு சீனாவை ஒப்பிடும் போது குறைவு. அதனாலேயே எண்ணெய் சுத்திகரிப்பு செய்து, ஏற்றுமதி செய்யும் ரிலையன்ஸ் குழுமம், அந்தத் தொழிலில் வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதும் எளிது. சீனா பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியாவை விட அதிக தொலைவு கடல் பயணம் செய்ய வேண்டியது மட்டுமல்ல, பல நாடுகளின் கடல் எல்லைகள் வழியாகவும் செல்ல வேண்டும். அப்படி செல்லும் பாதையில் இந்தியா இருப்பதாலேயே அமெரிக்கா, இந்தியாவை கூட்டு சேர்த்துக் கொள்ள விரும்புகிறது.

நாம் உற்பத்தியில் சீனாவைப் போன்று சிறந்து விளங்காதாதால், இந்த இருப்பிடம் சார்ந்த பலனைப் பெறுவதில்லை. சீனாவின் ஏற்றுமதி, இறக்குமதியைக் கண்காணிக்க நம்மை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் அமெரிக்கா இந்த இருப்பிடத்தின் பலனைப் பெற நினைக்கிறது. சீனாவிற்கு வெகுதொலைவில் அமெரிக்கா உள்ளதால், போர் என்று வந்தால், அமெரிக்க ராணுவ போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் எரிபொருள் நிரப்பிக் கொள்ளவும், இவை பழுதுபட்டால் சீரமைக்கவும், பக்கத்து நாடான இந்தியா வசதியானது. மற்ற அமெரிக்க அணிநாடுகளான ஜப்பான், தென்கொரியா ஆகியவை சீன ராணுவத்தின் தாக்குதல் எல்லைக்கு மிக அருகில் இருக்கின்றன. அதனால் இந்தத் தேவைக்கு, அமெரிக்கா இந்தியாவுடன் பல ராணுவ ஒப்பந்தங்களைப் போட்டிருக்கிறது. அதோடு நம்மை கொம்பு சீவி விட்டு, சீனாவிற்கு எதிராக நிறுத்தப் பார்க்கிறது. சரி இதனால் நமக்கு என்ன பயன்? ஒரு அடியாள் பெரிய ரவுடிக்கு வேலை பார்த்தால் என்ன நன்மையோ அதே நன்மைதான். இதனால் சில உற்பத்தி, தொழில்நுட்பம், முதலீடு, சந்தை சார்ந்த சலுகைகளை இந்திய நிறுவனங்களுக்கு கிடைக்க வாய்ப்பிருந்தாலும், அது எந்த அளவு வேலை வாய்ப்பை உருவாக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதோடு இப்படி மற்றொரு நாட்டிற்குப் பயன்படும் இந்த இருப்பிடம் சார்ந்த முக்கியத்துவம் உண்மையில் பெருமைப்படத் தக்கதா? கூடவே அதனால் ஏற்படும் பின்விளைவுகள் மற்றும் பாதிப்புகளையும் கணக்கில் கொண்டே முடிவுக்கு வர வேண்டும்.

அடுத்து ஆயுத சந்தையைப் பார்ப்போம். சவுதிக்கு அடுத்தபடியாக மிக அதிக அளவில் இந்தியா ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது. அதனால் ஆயுத ஏற்றுமதி செய்யும் நாடுகளான அமெரிக்கா, ரசியா, பிரான்சு, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இந்திய ஆயுத சந்தையைக் குறிவைத்து ஆயுதம் விற்க போட்டி போடுகின்றன. இப்படி ஒரு முக்கியத்துவம் இருக்கிறதே என்று நாம் பெருமைப்படவா முடியும்?

ஏன் நாம் மட்டும்தான் வாங்குகிறோமா, மற்ற நாடுகளும் வாங்கத்தானே செய்கிறார்கள் எனக் கேட்கலாம். உண்மைதான். சீனா கூட ரசியாவிடம் இருந்து போர் விமானங்கள், விமான எதிர்ப்பு சாதனங்களை இறக்குமதி செய்கிறது. அவர்கள் இறக்குமதி செய்யும் ஆயுதங்களைக் கவனித்தால், தங்களிடம் உள்ள தொழில்நுட்ப பற்றாக்குறையை அல்லது இருக்கும் ஆயுதத்திற்கும், தேவைக்கும் உள்ள இடைவெளியை சரி செய்யவே வாங்குகிறார்கள். உதாரணமாக சீனா சொந்தமாக விமான எதிர்ப்பு அமைப்பை உருவாக்கி இருக்கிறது. அதன் துல்லியமும், சீனாவை நோக்கி வரும் ஏவுகணையை இடைநிறுத்தும் தொலைவும் ரசியாவின் S400 உடன் ஒப்பிடும் போது குறைவு. அதோடு இதுவரை அது போரில் பயன்படுத்தப் படாததால் அதன் நம்பகத்தன்மை கேள்விக்கிடமானது. இந்த இடைவெளியை இட்டு நிரப்பவே அவர்கள் இந்த ஆயுதத்தை இறக்குமதி செய்கிறார்கள். அதுமட்டுமல்ல, மிகக் குறுகிய காலத்தில் ரேடார்களால் கண்டறிய முடியாத போர் விமானங்கள், போர்க் கப்பல்கள் என அமெரிக்காவை எட்டிப் பிடிக்க எத்தனிக்கிறார்கள். நாமோ இன்னும் ரசியாவிடம் இருந்து காலாவதியான நீர்மூழ்கிக் கப்பல்களை வாடகைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

'அவர்களின் பொருளாதார பலத்தினால்தான் இதனைச் செய்ய முடிகிறது. இந்தியா அதன் முன்னால் ஒன்றுமில்லை என்று நீங்களே கூறுகிறீர்களே' என்று வாதாடலாம். நம்மைவிட மிகச் சிறிய நாடான ஈரான் சொந்தமாக ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை (Bevar 372) உருவாக்கி இருக்கிறதே! இது எந்த அளவு போரில் பயன்படத் தக்கது என்பதெல்லாம் தெரியாது என்றாலும், குறைந்தது ஒரு சொந்த அமைப்பை உருவாக்கும் திறனை, அடிப்படையைக் கொண்டிருக்கிறார்களே... சீனா மற்ற நாடுகளின் ஆயுதங்களைப் பார்த்து பிரதி (காப்பி) எடுக்கிறது அல்லது தொழில்நுட்பத்தைத் திருடுகிறது என பொதுவாகக் கூற முற்படலாம். ஏவுகணை என்ற சிந்தனையும், செயல்வடிவமும் முதன்முதலில் உருவானது இந்தியாவில் தானே. திப்பு சுல்தான் உருவாக்கி இங்கிலாந்துக்கு எதிராகப் பயன்படுத்திய ஒன்றை எடுத்துச் சென்றுதானே மேலும் அதனை வளர்த்தெடுத்து இருக்கிறார்கள். எனில் அவர்களும் காப்பி அடித்திருக்கிறார்கள் என்று சொல்லலாமா?. அப்படியே இன்று அதனை உருவாக்கும் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குக் கொடுத்தாலும், அவ்வளவு வேகமாக நம்மால் உருவாக்கிவிட முடியுமா அதற்கான அடிப்படை நம்மிடம் இருக்கிறதா என்றால் ரசியா கொடுத்த எஞ்சின் தொழில்நுட்பத்தில் அதற்கான ஒற்றைப் படிக அலகை (single crystal blade) உருவாக்க முடியாமல் போனதே! அந்த அளவு தான் ஆயுத தொழில்நுட்பத்தில் இந்திய 'வல்லரசு' இருக்கிறது.

சந்தை என்ற வகையில், பூகோள ரீதியிலான இந்தியாவின் முக்கியத்துவம் இந்த அளவில்தான் இருக்கிறது. எண்ணெய் சந்தை என்ற வகையில் இந்தியாவின் முக்கியத்துவத்தை வேறொரு இடத்தில் விரிவாகப் பார்ப்போம். இப்போது மீண்டும் ஆப்கானிஸ்தான் போருக்குத் திரும்பி அதன் தொடர்ச்சியில் நடந்த உலக நிகழ்வுகளுக்குத் திரும்புவோம்.

(தொடரும்)

- சூறாவளி