"என்னமோ நாட்டுல பொருளாதாரம் மந்தமா இருக்கு, .எல்லாமே தேங்கிப் போச்சுனு டிவில நிறைய பேசிக்குறாங்களே... அது என்னப்பா பிரச்சனை?" என்று டீக்கடையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த கட்சிக்காரரிடம் பேச்சுக் கொடுத்தார் அந்த காய்கறி வியாபாரி.

modi 280"அது பெரிய கதை. அதை முழுசா கேக்கணும்னா இன்னைக்கு உன் பொழப்பு கெட்டுப் போகும். பரவாயில்லையா?"

"கெட்டுப் போறதுக்கு புதுசா என்ன இருக்கு? ஏற்கனவே பொழப்பு கெட்டுத்தான் தெருத் தெருவா வண்டி தள்ளிக்கிட்டு இருக்கேன். நீ சொல்லுப்பா கேட்போம்" என்றார் வியாபாரி.

"கார் கம்பெனிக்காரன் நெறைய கார்களை தயாரிச்சு வச்சுருக்கானாம். ஆனா சரியா விக்க மாட்டேங்குதாம்! ரியல் எஸ்‌டேட்டுக்காரனுக்கு கட்டுன வீடு விக்க மாட்டேங்குதாம்! பேங்குகாரனுக்கு கடன் வசூலாக மாட்டேங்குதாம்! அட..அஞ்சு ரூபா பிஸ்கட்டைகூட விக்க முடியலைனு எல்லாப் பயலும் புலம்புறாங்க! இப்படி பெரிய கம்பெனிகள்ல உற்பத்தி பண்ணுன எதுவுமே விக்காம கம்பெனிகள்ல தேங்கிக் கிடக்குதாம்! இதுதாம்பா பிரச்சனை" என்று சுருக்கமா சொல்லி முடித்தார் கட்சிக்காரர்.

"வியாபாரம்னா முன்னே பின்னே இருக்கத்தான் செய்யும். இது ஒரு பிரச்சனையா? ஒரு நேரம் நல்லா விக்கும். ஒரு நேரம் சுத்தமா போனியே ஆகாது. வியாபாரத்துல இதெல்லாம் சகஜம்தானப்பா...!"

"இது உன்ன மாதிரி தள்ளுவண்டியில காய்கறி விக்குறவன் பிரச்சனை கிடையாது. கோடிக்கணக்குல முதல் போட்டு தயாரிச்சவனுக்கு பொருள் விக்கலைனா, போட்ட முதலீடு எல்லாமே முடங்கிப் போயிரும்ல. அடுத்து எப்படி அவன் தொழில் செய்ய முடியும்? விரலுக்கேத்த வீக்கம் இருக்கத்தான செய்யும். அவனுக்கும் பல பிரச்சனை இருக்குப்பா..."

"இப்போ, நீ 5000 ரூபா கந்து வட்டிக்கு வாங்குனா தினம் 50 ரூபாய்னு ஈஸியா கட்டி முடிச்சுருவ. அவன் 500 கோடி, 1000 கோடினு பேங்குல லோன் வாங்கியிருப்பான். இப்படி பொருள் விக்கலைனா எப்படி அவனால கடனை கட்ட முடியும்? வட்டியும் தாறுமாறா எகிறிடும்ல? எதையும் யோசிச்சுப் பேசனும்" என்றார் கட்சிக்காரர்.

"சரி உன் வழிக்கே வர்றேன்... வியாபாரம் குறையுதுனா, ‘நான் சொல்ற விலைக்குதான் வாங்கணும்னு’ வீம்பா நிக்கக் கூடாது. வர்ற விலைக்கு வித்துட்டு அசலை கைப்பத்துறதுதான் புத்திசாலித்தனம்! சிலநேரம் நட்டம் கூட வரும். அதுக்குப் பயந்தா தொழில் செய்ய முடியாது! அதை விட்டுட்டு பொருளு விக்கலைனு புலம்புறதுல என்னய்யா நியாயம் இருக்கு?"

"யாருக்கு என்ன வேணும் எவ்வளவு வேணும்னு வீடுவீடா கேட்டுட்டு வந்தா இவன் கம்பெனி ஆரம்பிச்சான்? இல்லைல....! கிராக்கியா விக்கும்போது நல்ல லாபம் பாத்திருப்பான்ல.... இப்போ கொஞ்சம் விலையைக் குறைச்சு வித்தா என்னய்யா நட்டம் வரப் போகுது? என்று மடக்கினார் வியாபாரி.

"எல்லாத்தையும் உன் காய்கறி வியாபாரம் மாதிரியே பார்க்கக் கூடாதுப்பா."

"நான் காய்கறி விக்குறேன். அவன் கார் விக்குறான். நான் தெருத்தெருவா அலைஞ்சு விக்கிறேன். அவன் கம்பெனி ஆரம்பிச்சு, சொந்தமா பொருளைத் தயாரிச்சு விக்குறான். அவ்வளவுதான். மத்தபடி ரெண்டும் வியாபாரம்தானே....!"

நாலு தெரு சுத்தி காய் விக்குறவன் நம்மகிட்ட எடக்கு மடக்காக பேசுறானே என்ற கோபத்தில் கட்சிக்காரரும் கொஞ்சம் சூடாகி விட்டார்!

"கார் கம்பெனினா அவன் ஆயிரம் பேருக்கு வேலை குடுக்குறான். உன்னால முடியுமா? கம்பெனிக்கு நட்டம்னா அந்த ஆயிரம் பேருக்கும் வேலை இல்லாம போயிரும். இப்படி 10 கம்பெனி மூடிட்டு போயிட்டா என்ன ஆகும்னு யோசிச்சுப் பாரு! வேலையில்லாமல் போறவனுக்கு, அவன் குடும்பத்துக்கு என்ன வழி சொல்றது?"

"அண்ணே...வேலைக்காரன இங்க எதுக்கு இழுக்குற? கம்பெனிக்கு தகுதி பார்த்துத்தான் ஆளு எடுக்குறான். சொல்ற வேலையை அவன் செய்றான். செஞ்ச வேலைக்கு இவன் கூலி கொடுக்குறான். கம்பெனிக்கு பொருள் விக்காததுக்கும், வேலைக்காரனுக்கும் என்னண்ணே சம்பந்தம் இருக்கு? வியாபாரத்துல பிரச்சனைனா அதைப் பத்தி மட்டும் பேசுங்க."

"நீ காய்கறி விக்குறதுக்கு வரியா கட்டுற? கம்பெனிக்காரன் கொள்முதல்வரி, உற்பத்திவரி, விற்பனை வரி, வருமான வரினு ஒவ்வொண்ணுக்கும் வரி கட்டுறான் தெரியுமா? இந்த வரியினாலதான் பொருளுக்கு விலை கூடுது. விலை அதிகமாகும்போது வியாபாரம் குறையுது.! தயாரான பொருளே விக்காம கிடக்கும்போது மறுபடியும் கம்பெனியை எப்படி நடத்த முடியும்? நீயே சொல்லுப்பா?"

"இதுக்கு நாம என்னணே செய்ய முடியும்.... விவசாயி வரி கட்டாமலா உரம் மருந்து வாங்குறான்? ஏன் நீயும் நானும் வாங்குற பொருளுக்கு அரசாங்கம் வரி போடாமலா இருக்குது?"

"நம்ம சம்சாரி தக்காளி பயிர் பண்றான். மார்க்கட்டுல ஒரு சமயம் 40 ரூபாய்க்கு விக்குது. திடீர்னு ஒரு ரூபாய்க்கும் விக்குது! அய்யய்யோ ஒரு ரூபாய்க்கு விக்குதேனு என்னைக்காவது விவசாயத்தை விட்டுட்டு விவசாயி ஓடியிருக்கானா? இல்லைல! 40 ரூபாய்க்கு விக்கும்போது லாபம் கிடைச்சுச்சேங்குற திருப்தியோட அடுத்த விவசாயத்தை பாக்குறதில்லையா. அப்படி இவனுகளையும் தொழில பண்றான்னு விட வேண்டியதுதானே! இதுக்குப் போயி எதுக்கு ஊரைக் கூட்டி ஒப்பாரி வைக்கனும்? இதுதான் என்னோட கேள்வி."

"இப்படி குதர்க்கமா பேசுனா எப்படி? உனக்கெல்லாம் புரிய வைக்க முடியாதுப்பா." என்று சலித்துக் கொண்டார் கட்சிக்காரர்.

"இப்போ இவ்வளவு பேசுறீங்களே... நம்ம விவசாயிக டெல்லியில போயி அம்மணமா உருண்டாங்களே... அன்னைக்கு உனக்கு என்னடா பிரச்சனைனு கேட்க அங்கே ஒரு நாதியும் இல்லை! இன்னைக்கு பத்து கம்பெனிக்காரனுக்கு சிக்கல் வந்ததுக்கு, ஏண்டா நாடே கொந்தளிக்குதுனு கேட்டா அது குதர்க்கமா? சரி.... நீ வெவரமான ஆளு...இந்தப்
பிரச்சனையை எப்படி சரி பண்ணலாம்னு நீயே ஒருவழி சொல்லுணே. நான் கேட்டுக்கிறேன்" என்றார் வியாபாரி.

"இதுக்கு நான் என்னப்பா சொல்ல முடியும்? அந்த மோடி பயதான் இதுக்கு பதில் சொல்லணும். போ...அவன்கிட்ட போயி கேளு!"

"எதுக்குணே இவ்வளவு கோவிக்குற? நாம என்ன நம்ம ரெண்டு வீட்டு பிரச்சனையவா பேசுறோம். நாட்டு நடப்பைத் தானே பேசுறோம்" என்று கட்சிக்காரரை சமாதானம் செய்தார் வியாபாரி. சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, கட்சிக்காரரே தொடர்ந்து பேசினார்.

"கார், கட்டுன வீடு, இன்சூரன்சு, ஸ்பேர் பார்ட்ஸ்னு ஆரம்பிச்சு இட்லி தோசை வரை எல்லாத்துக்கும் ஜிஎஸ்டி வரியை போட்டு வச்சிருக்காரு மோடி.! இதனால எல்லா பொருள் விலையும் எக்கச்சக்கமா ஏறிப்போச்சு. பல சின்ன கம்பெனிகளும் தொழில் செய்ய முடியாம இழுத்து மூடிட்டாங்க. இப்போ மாத சம்பளம் வாங்குறவங்க கிட்டயே பணப்புழக்கம் குறைஞ்சு போச்சு. இதுனாலதான் காரும், வீட்டுமனையும் விக்காம தேங்கிக் கிடக்கு. இந்த வரிகளை முழுசா காலி பண்ணிட்டா, அல்லது குறைச்சுட்டா விலையும் தானா குறைஞ்சிரும். விற்பனையும் அதிகமாகும். இதை மட்டும் செஞ்சு குடுத்தா போதும்னு கவர்மெண்ட்டு கிட்ட கம்பெனிக்காரங்க கேக்குறாங்க.!"

"சரி..அதுக்கு கவர்மெண்ட் என்ன சொல்லுது?"

"இருக்குற வரியை குறைக்கிறோம். ஏற்கனவே இருக்குற வரிபாக்கியையும் கேட்டு தொந்தரவு செய்ய மாட்டோம். எல்லாத்தையும் சுமூகமா பேசி தீர்த்துக்குவோம் அப்படினு கம்பெனிகார்களிடம் சொல்லீட்டாங்க.! அப்புறம், முடங்கிப் போன முதலீட்டுக்கு ஈடாக பேங்க்குல இருந்து கூடுதல் கடன் வசதி செய்து தர்றதாவும் சொல்லீருக்காங்க.! இதுக்கு மோடி, ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாயையும் ஒதுக்கிட்டாரு!"

"கம்பெனிக்காரன் ஒண்ணு கேட்டா கவர்மெண்டு ஒன்பது கொடுக்குது! ஒரு வழியா கம்பெனிக்காரன் பிரச்சனை முடிஞ்சிருச்சு.! சரி...இப்போ காரு, வீடு, பிஸ்கட் வாங்குறதுக்கு நாட்டுல எல்லாரும் ரெடி ஆயிட்டாங்களா? அவங்க என்ன கேக்குறாங்க? அதையும் நாம பாக்கணும்ல."

"வரி குறையும்போது விலையும் குறையும்ல. வாங்குறவனுக்கு விலை குறைவா கிடைச்சா வேணாம்னு சொல்வானா! அப்படி வாங்குறவங்களுக்கு பேங்க்குல தாராளமா கடன் கொடுக்குறோம்னு சொல்லி இருக்காங்க.!"

"ஓஹோ... விக்கிறவனுக்கு வரிச் சலுகை! கடன் சலுகை! - அதை வாங்குறவனுக்கு கடன் உதவியா...! அடேங்கப்பா.......இந்த மோடிக்குதான் எவ்வளோ பெரிய மனசு!  வாங்குறவன் கடன்பட்டே ஆகணும், கடன் பட்டால்தான் வாங்கவே முடியும்னா என்ன பொழப்புடா இது? விவசாயிக்கு கடன் தள்ளுபடி செய்யனும்னா.. முடியவே முடியாதுனு சொல்றாங்க. விவசாயக் கடனுக்கு இருந்த 4% வட்டியை 11% ஆக கூட்டிட்டாங்க! ஆனா பெரிய கம்பெனிக்காரனுக்கு மட்டும் லட்சம் கோடிகளை சலுகையா கொடுக்குறாங்க! இதுக்கு மட்டும் எங்கிருந்து இவனுகளுக்கு பணம் வருதுனு தெரியலயே! எனக்கொரு சந்தேகம்ணே...இந்த மோடி நாட்டு மக்களுக்கு பிரதம மந்திரியா இருக்குறாரா? இல்ல இந்த கம்பெனிகளுக்கு மேனேஜர் வேலை பார்க்குறாரா?"

பதிலேதும் சொல்லாமல் ஒரு அசட்டுச் சிரிப்புடன் எழுந்து நடக்கத் தொடங்கினார் அந்த கட்சிக்காரர்.

- தேனி மாறன்