NPR எனும் மக்கள் குடியுரிமை பதிவேட்டுக்கான வேலை விரைவில் தொடங்க உள்ளது என்று தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி கூறி இருக்கிறார். அதுபோக தற்போது NPR பற்றி சில மேலதிக தகவல்களை, Instruction manual For Updation of National Population Register (NPRக்கான வழிகாட்டல்) என்று அரசுப் படிவத்தை வெளியிட்டிருக்கிறது.

அதிலிருந்து NPR என்னவென்பதையும், அது எப்படி நடைமுறைப் படுத்தப்படப் போகிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

muslims at npr verificationNPR என்பது புதிதாக உருவாக்கப் பட்டதல்ல. 2010ம் ஆண்டு NPR வீடு வீடாக எடுக்கப் பட்டிருக்கிறது. இதில் இந்திய மக்கள் 119 கோடி பேரது முழுமையான விவரங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதன் பிறகு, 2015 ம் ஆண்டு இந்தத் தகவல்கள் (ஆதாரின் மூலம்) மேம்படுத்தப் பட்டிருக்கிறது (Update).

அதனால் இது புதிதாக எடுக்கப்படப் போகும் தகவல்கள் அல்ல. ஏற்கனவே எடுக்கப் பட்டிருக்கும் தகவல்களை சரிபார்க்கவும், சில தகவல்களை மேலும் பெறுவதற்குமாக எடுக்கப்படும் கணக்கெடுப்பு தான் NPR. (NPRக்கான வழிகாட்டல், பக்.1)

சரி, இந்த NPRஐ புறக்கணித்தால் என்ன நடக்கும்? அதற்கான வழிமுறையும் இதில் தெளிவாக கொடுக்கப் படுகிறது.

பக்.13ல் கூறப்படுகிறது, “வீட்டில் உள்ளவர்களிடம் வேண்டிய தகவல்களைக் கேளுங்கள், அவர்கள் கொடுக்காத பட்சத்தில் அதன் முக்கியத்துவத்தை உணர வையுங்கள். அதற்கு மேல் எந்த முயற்சியும் பலனளிக்காமல் போனால் உள்ளபடி என்ன இருக்கிறதோ அதையே எழுதிக் கொள்ளுங்கள்.” என்று கூறப்பட்டு இருக்கிறது.

NPRக்கு தராததால் ஏற்படும் நிலை என்ன?

NPRல் எடுக்கப்பட்ட தகவல்கள் அடுத்த கட்டமாக குடியுரிமை சரி பார்க்கும் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். இந்த அதிகாரிகள் தரப்பட்ட தகவல்களை சரிபார்த்து, தகவல்கள் ஒத்துப் போகாத நிலையில் தனிப்பட்ட முறையில் சரியான தகவல்கள் கொடுத்து குடியுரிமையை நிரூபிக்கச் சொல்லி சம்மன் அனுப்புவார்கள்.

இதில் தகவல் கொடுக்காத அனைவருக்கும் குடியுரிமையை நிரூபிக்கச் சொல்லி சம்மன் வர வாய்ப்புகள் இருக்கிறது. எப்படியும், அப்போது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டி வரும்.

NRC க்கு என்ன ஆவணங்கள் தர வேண்டும்?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இதற்கான விளக்கத்தைத் தருகிறது. 2004ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின் படி, ஜூலை 1,1987க்கு முன் பிறந்தவர்கள் இந்தியாவில் பிறந்தோம் என்று நிரூபிக்க வேண்டும். 1987 -2004க்குள் பிறந்தவர்கள் தாங்கள் பிறக்கும் போது தங்கள் பெற்றோர்களில் ஒருவர் இந்தியராக இருந்தார்கள் என்று நிரூபிக்க வேண்டும்.

ஆதார் கார்டு, பாஸ்போர்ட் போன்ற ஆதாரங்கள் குடியுரிமைக்கான ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என நிறைய நீதிமன்றத் தீர்ப்புகள் குறிப்பிடுகின்றன. இன்னும் அரசுத் தரப்பில் இருந்து என்ன ஆதாரங்கள் சமர்பிக்க வேண்டும் என்று தெளிவாகச் சொல்லவில்லை. (Firstpost 26.12.19)

முரண்பட்ட தகவலைக் கொண்ட NPR

ஏற்கனவே 2010ல் இந்திய அரசால் 119 கோடி மக்களிடமிருந்து NPR எடுக்கப்பட்டது. அதற்கு பிறகு 2015ல் ஆதார் கார்டு கொண்டு வந்த பிறகு NPR மேம்படுத்தப்பட்டது.

எடுக்கப்பட்ட தகவலை வைத்து குடியுரிமை அடையாள அட்டை தயாரிக்கும் முயற்சி மேற்கொள்ள முற்பட்ட போது, 2010ல் எடுக்கப்பட்ட NPR தகவலும், 2015ல் ஆதார் மூலம் எடுக்கப்பட்ட தகவலும் தரமற்றது, NPRயையும் ஆதாரின் தகவலையும் இணைக்க முடியாது; இரண்டுக்கும் இடையே ஏராளமான முரண்பாடுகள் இருக்கிறது என்றும் கூறி இந்த யோசனை கைவிடப்பட்டது. (Firstpost 26.12.19)

NRC நடைமுறைப் படுத்தும்போது ஏற்படும் சிக்கலும், கொடுமைகளும் என்ன?

இந்தியா முழுக்க NRC அமல்படுத்தப் போகிறோம் எனக் கூறி அதற்கான முதற்கட்ட வேலையான NPRஐ எடுக்கும் வேலையும் நாடு முழுக்கத் தொடங்க இருப்பதாக அறிவுப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா முழுக்க அமல்படுத்தப்படப் போகும் NRC செயல்முறை எப்படி இருக்கும் என்பதை அறிய நாம் அஸ்ஸாமில் NRCஐ செயல்படுத்திய விதத்தை வைத்து தான் புரிந்து கொள்ள முடியும். அஸ்ஸாமில் NRC பட்டியல் தயாரிக்கப்பட்டு, 19 லட்சம் மக்கள் சட்டவிரோதக் குடியேறிகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இதில் 7 லட்சம் மக்கள் முஸ்லிம்கள். தற்போது பாஜக கொண்டு வந்திருக்கும் CAA சட்டத்தின் மூலம் இந்த 7 லட்ச முஸ்லிம்கள் தான் தடுப்பு சிறைக்கு அனுப்பப் படுவார்கள்.

அஸ்ஸாமிற்கும், முழு இந்தியாவிற்குமான NRC செயல்முறை என்பது தேதி அடிப்படையில் (cut off date) மாறுமே ஒழிய, செயல்முறை அப்படியே தான் அமையும். நிர்வாக முறைகளில் எந்த மாற்றமும் இருக்காது. அதனால் அஸ்ஸாமில் NRC நிர்வாக முறை எப்படி இருந்தது என்று நாம் பார்க்க வேண்டும்.

அஸ்ஸாமில் நடைமுறைப்படுத்தப்பட்ட NRC செயல் முறை

அஸ்ஸாமில் NRC நடைமுறைப் படுத்துவதில் பல்வேறு ஊழல்களும், சிக்கல்களும், சதிகளும் நடந்தேறியது. 19 லட்ச மக்கள் NRC பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறாரகள் என்றால் அதில் பல்லாயிரக் கணக்கானோர் ஆவணங்கள் வைத்திருந்தும், நிர்வாகக் கோளாறுகளால் சட்டவிரோதக் குடியேறிகளாக மாற்றப் பட்டார்கள்.

பணம் இல்லாத காரணத்தால்

சட்டவிரோதக் குடியேறிகளாக வெளிநாட்டுத் தீர்ப்பாயங்களால் அறிவிக்கப் பட்டவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க நீதிமன்றங்களை அணுக வேண்டும். நீதிமன்றங்களுக்குச் சென்று குடியுரிமையை நிரூபிக்க வேண்டுமென்றால் அதிக செலவு ஆகும். இதன் காரணத்தினாலேயே பல்லாயிரம் பேர் தங்கள் ஆவணங்களை நிரூபிக்க முடியாமல் போனது. (BBC 31.08.2019)

சட்ட விரோதக் குடியேறிகளாக அறிவித்தது அவர்களுக்கே தெரியாது.

பத்திரிக்கையாளர் ரோஹினி மோஹன் அவர்கள் அஸ்ஸாமில் நடைபெறும் NRC செயல்முறையை அறிந்து கொள்ள 500 வழக்குகளை எடுத்து ஆராய்ந்தார். அதில் 82% வழக்குகளில் நீதிமன்றம் சட்டவிரோதக் குடியேறிகள் என்றே தீர்ப்பளித்தது. அதில் குறிப்பிடப்பட்ட 78% மக்களுக்கு தாங்கள் சட்ட விரோதக் குடியேறிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறோம் என்ற தகவலே தெரியாது.

காவல் துறை அறிக்கையில், அவர்கள் காணாமால் போனவர்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறது. ஆனால், ரோஹினி அவர்கள் ஆராயும் போது அந்த மக்கள் அருகிலிருக்கும் கிராமங்களில் தான் வசிக்கிறார்கள் எனக் கண்டறிந்தார்.

ஒரு பத்திரிக்கையாளர் மேற்கொண்ட ஆய்வை அனைத்து அதிகாரமும் கொண்ட காவல்துறை மேற்கொள்ளவில்லை. (BBC 31.08.2019)

ஒருவேளை தற்போதைய NPRஐ புறக்கணிக்கும் போது குடியுரிமையை நிரூபிக்கச் சொல்லி அனுப்பப்படும் சம்மன் 2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட NPRல் உள்ள முகவரிக்கு அனுப்பப்படும். அப்படியான நிலையில் நமக்கே தெரியாமல் நமது பெயர் சட்டவிரோதக் குடியேறிப் பட்டியலில் இடம்பெறும்.

ஜனாதிபதி தொடங்கி இராணுவ வீரர்கள் வரை சட்ட விரோதக் குடியேறிகள்

சட்ட விரோதக் குடியேறிகள் பட்டியலில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் தொடங்கி இந்தியாவிற்காகப் போராடிய இராணுவ வீரர்கள் வரை இடம் பெற்றிருந்தார்கள்.

முஹம்மது சனாவுல்லாஹ் என்ற இராணுவ அதிகாரியும் சட்ட விரோதக் குடியேறியாக அறிவிக்கப்பட்டு Detention Camp எனும் தடுப்பு சிறையில் அடைக்கப் பட்டார். (BBC 31.08.2019)

அஜ்மல் ஹாக், 18 வயதில் இராணுவத்தில் இணைந்து 30 ஆண்டுகள் இந்திய இராணுவத்தில் பணியாற்றியவர். அவரை இப்போது சட்ட விரோதக் குடியேறி என அறிவித்து இருக்கிறார்கள். ஆனால், அஜ்மலிடம் தன் தந்தையின் பெயர் இடம்பெற்ற 1951 NRC பட்டியல், 1966 வாக்காளர் வரிசைப் பட்டியல் என எல்லாமும் இருக்கிறது. ஆனாலும் அஜ்மலுக்கு Detention Camp காத்திருக்கிறது.

அஸ்ஸாமில் கட்டப்பட்டுள்ள Detention Camp (தடுப்பு சிறை) எப்படி இருக்கும்?

NRC பட்டியலில் இல்லாதவர்கள் சட்டவிரோதக் குடியேறிகளாக அறிவிக்கப்பட்டு Detention Camp எனப்படும் தடுப்க்ச் சிறையில் வைக்கப்படுவார்கள். அப்படி அஸ்ஸாமில் இந்த சிறைகளுக்கு சென்றவர்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை ஊடகங்களிடம் கூறியிருக்கிறார்கள்.

Detention Campல் இருந்து வெளிவந்த ஒரு நபர் சொல்கிறார், அங்கே 40 பேர் தங்கும் அளவுக்கு ரூம்கள் இருக்கும். ஆனால் அதில் 120 பேர் தங்க வைக்கப்பட்டு இருந்தார்கள். அடைக்கப் பட்டிருந்த அனைவரும் பெரும் மன அழுத்தத்தில் இருந்தார்கள். பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளையும் இந்த முகாம்களில் அடைத்து வைத்திருந்தார்கள்.

மனித உரிமை ஆர்வலர் ஹரிஸ் மந்திர் இரண்டு Detention Camp சென்று வந்த பிறகு இப்படி தெரிவித்தார், “மனிதர்களை மிகவும் கொடுமையாகத் துன்புறுத்தவும், மன அழுத்தத்தில் வைக்கவும் கூடிய இடம்” என்றார்.

இந்த Detention Camp அஸ்ஸாமுடன் மட்டும் நின்றுவிடப் போவதல்ல. 2014ல் மோடி ஆட்சியில் அமர்ந்ததும் அனைத்து மாநிலங்களும் அஸ்ஸாமைப் போல Detention Camp கட்ட வேண்டும் என்று கடிதம் எழுதி இருக்கிறார். இன்று அந்தத் திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கப்படுகிறது. (India Today 27.12.2019)

சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி அமைப்பின் அறிக்கை

அஸ்ஸாமில் NRC நடைமுறையில் எப்படி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆராய்ந்து ஒரு அறிக்கையை சமர்பித்திருக்கிறது அம்னெஸ்டி நிறுவனம். அதில், மக்கள் எந்தெந்த வகையில் அநீதி இழைக்கப்பட்டு இருந்தார்கள் என்று குறிப்பிடுகிறது. இதற்காக இது தொடர்பான 16 வழக்குகளை ஆய்வு செய்திருக்கிறது.

மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும், இதில் நீதிமன்றங்களின் பங்கு அதிகமாக இருக்கிறது. வழக்குகளை இழுத்தடிப்பதிலும், ஆராய்வதிலும் தொய்வும், அநியாயங்களும் நிகழ்ந்திருக்கிறது எனச் சொல்கிறது அறிக்கை.

வெளிநாட்டுத் தீர்ப்பாயங்களின் படி, புதிதாக தீர்ப்பாயங்களுக்கு ஆட்களை சேர்ப்பதற்காக நீதிமன்றம் அறிவித்திருந்தது. அவர்களுக்கான கல்வித் தகுதி, அனுபவம் என குறிப்பிட்ட அம்சங்களையும் வரையறுத்து இருக்கிறது. ஆனால், இந்த நடைமுறை யாவும் பின்பற்றப்படவில்லை.

இப்படி தீர்ப்பாயங்களில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தான் குடியுரிமையை முடிவு செய்யும் இடத்தில் இருப்பவர்கள். இவர்கள் மதரீதியாக, பொருளாதார ரீதியாக மக்களைப் பாகுபாடாக நடத்தினார்கள் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.

அஸ்ஸாமில் முஸ்லிம் பெண்களில் ஒரு பகுதியினர் திருமணத்திற்குப் பிறகு பேகம் என்று தங்கள் பெயருடன் இணைத்துக் கொள்கிறார்கள். இதனாலேயே பலர் தங்கள் குடியுரிமையை இழந்து இருக்கிறார்கள்.

அஸ்ஸாமில் நிகழும் கொடுமைகளை வகைப்படுத்தி தனது அறிக்கையில், “மக்கள் படும் இத்தகைய துன்பங்களால் அவர்கள் மன நிம்மதி இழந்து பைத்தியம் பிடித்தவர்களைப் போல் மாறி இருக்கிறார்கள். குடும்பங்களை விட்டும், நண்பர்களை விட்டும் தனியாகப் பிரித்து செல்லப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

தடுப்புக் காவலில் எத்தனை வருடம் இருக்க வேண்டும்?

முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இத்தகைய Detention campல் எவ்வளவு நாட்கள் இருக்க வேண்டும் என்று ஒரு தீர்ப்பில் கூறி இருக்கிறார், “Detention Campல் மூன்று வருடம் முழுமையாக இருந்தவர்கள் பிணையில் வெளிவர முடியும். ஆனால், அவர்கள் தங்கள் விவரங்கள் அனைத்தையும் தந்து விட்டுச் செல்ல வேண்டும். உறுதித் தொகையாக ஒரு லட்ச ரூபாய் பணமும் இரண்டு குடிமக்களின் சாட்சியமும் இருக்க வேண்டும்”.

இப்படி வெளியில் வர முயன்ற நபருக்கு இரண்டு இந்தியக் குடிமகன்களின் சாட்சி போதாது, அரசு வேலை பார்க்கும் குடிமகன்களின் சாட்சியே வேண்டும் எனப் பிணை மறுக்கப்பட்டது. (India Today 27.09.19)

ஆவணங்கள் இருந்தாலும் சிறையா?

சரியான ஆவணங்களை வைத்திருக்கும் நிலையிலும் கூட ஏதோவொரு காரணம் சொல்லி, Detention campல் அடைத்து வைக்கப் படுகிறார்கள். 65 வயதான துலால் பௌல் என்ற மனிதர் இந்த சிறையிலேயே இறந்து விடுகிறார். அவரது உடலை அவரது மகன் வாங்க மறுத்து போராட்டம் நடத்துகிறார்.

அப்போது அவர் குறிப்பிடும் போது, “என் தந்தையை மீட்கும் போராட்டத்தில் நான் இதுவரை 2 லட்சத்திற்கும் மேல் செலவு செய்திருக்கிறேன். என் தந்தையிடம் ஆவணமும் இருக்கிறது. ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

அரசின் உத்தரவுப்படி 1971க்கு முன் இங்கு வாழ்ந்ததாகக் காட்ட வேண்டும். என் தந்தையின் பெயரில் 1965-லேயே நிலம் இருக்கிறது. ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

என் தந்தையை இந்தியன் என்று அறிவித்தால் நான் உடலை வாங்குகிறேன்” எனப் போராடினார் அந்த மகன். (scroll 15.10.19)

தந்தை சிறையில், மகன் வீட்டில்... கணவன் சிறையில், மனைவி வீட்டில்...

அஸ்ஸாமில் Detention campல் அடைக்கப் படுகிறவர்கள் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவராக இருப்பதில்லை. ஒரு வீட்டில் தந்தை தன் குடியுரிமையை நிரூபிக்கிறார்; மகன் நிரூபிக்கவில்லை என்றால் சிறை. மகன் நிரூபித்து, தந்தை நிரூபிக்கவில்லை என்றால் தந்தைக்கு சிறை. கணவன் நிரூபிக்கிறார், மனைவி நிரூபிக்கவில்லை எனில் மனைவிக்கு சிறை.

இப்படி குடும்பங்களையே சிதைக்கிறது இச்சட்டம். இதில் CAA நடைமுறைப்படுத்திய பிறகு முஸ்லிம்களுக்கு மட்டும் Detention Camp என்றால் 7 லட்சம் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதல்ல. 7 லட்சம் முஸ்லிம் குடும்பங்கள் சீரழிவைச் சந்திக்கிறது என்று அர்த்தம். (scroll 15.10.19)

53 வருடங்களுக்கு முன் தாத்தா எங்கே ஓட்டு போட்டார்.. சொல்!

அஸ்ஸாமைச் சேர்ந்த சாமினா பிபிக்கு குடியுரிமை மறுக்கப் பட்டிருக்கிறது. காரணம் என்ன தெரியுமா? 1966ல் அதாவது, 53 வருடங்களுக்கு முன் தன் தாத்தா அஸ்ஸாமில் எங்கு வாக்களித்தார் என்று சொன்னால் குடியுரிமை என்று சொல்லப்பட்டது. சாமினா பிபிக்கு அது தெரியாததால் சட்ட விரோதக் குடியேறி என அறிவிக்கப் பட்டிருக்கிறார்.

இதே போல் அஸ்ஸாமைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்கையும் சட்ட விரோதக் குடியேறி என அறிவித்து இருக்கிறார்கள். எதற்குத் தெரியுமா? தன் தாத்தாவின் பெயரான அஃபர் அலி (Afer ali)யை அபர் அலி (Aper Ali) என்று சொல்லி விட்டார். ஒரு எழுத்தை தவறாகச் சொன்னதால் சட்ட விரோதக் குடியேறி ஆக்கப்பட்டிருக்கிறார். இதுபோல் பல நூறு வழக்குகள் இருக்கிறது. (Firstpost 26.12.19)

Detention Camp பராமரிக்கப்படும், ஆனால் அதற்கு நிதி ஒதுக்க மாட்டோம்

Detention campல் அடைக்கப்படும் குழந்தைகளின் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று இது தொடர்பான வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பணீதரன் அறிவுறுத்தி இருக்கிறார். அதோடு, முகாம்கள் சுத்தமாக இருக்க வேண்டும், நீர், மின்சாரம் என வசதிகள் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களும் உள்ளன. ஆனால், இவை எதற்கும் உள்துறை அமைச்சகம் நிதி ஒதுக்கவில்லை. (Firstpost 26.12.19)

RSS இயக்கும் NRC

அஸ்ஸாமில் NRC அதிகாரிகளாகவும், தலைவர்களாகவும் நியமிக்கப்படுபவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் NRC செயல்முறையில் உட்புகுந்து ஆவணங்கள் வைத்திருப்போரையும் சட்ட விரோதக் குடியேறிகளாக மாற்றும் வேலையைச் செய்தார்கள்.

NRC மூலம் கொடுமைகளை அனுபவிக்கும் சிலரது வாழ்க்கைப் பக்கங்கள்

மொய்னால் முல்லாவின் சோகக் கதை

32 வயதுள்ள மொய்னால் முல்லா அஸ்ஸாமிய அரசால் சட்டவிரோதக் குடியேறி என அறிவிக்கப் பட்டுள்ளார். முல்லாவின் மனைவி, மூன்று குழந்தைகள், பெற்றோர்கள் என அனைவருக்கும் குடியுரிமை கிடைத்த பிறகும் முல்லாவிற்கு மட்டும் மறுக்கப்பட்டு இருக்கிறது.

முல்லாவிடம் தன் தந்தை 1938ல் வைத்திருந்த நில ஆவணம் இருக்கிறது. 1966ல் , 1970ல் வாக்காளர் வரிசையில் முல்லாவின் தந்தையின் பெயர் இருக்கிறது. 1951 NRCல் முல்லாவின் தந்தையின் பெயர் இருக்கிறது. ஆனால், இந்த ஆவணங்கள் எதுவும் உறுதித் தன்மையுடன் இல்லையென நிராகரிக்கப் பட்டிருக்கிறது.

2010ல் இந்தியர், இன்று இல்லை: 59 வயது சமத் அலி

2010ல் வெளிநாட்டு தீர்ப்பாயத்தால் இந்தியர் என்று அறிவிக்கப் பட்டிருந்தவர் சமத் அலி. ஆனால், தற்போது அவரை சட்டவிரோதக் குடியேறி என அறிவித்திருக்கிறார்கள்.

இவர் சமர்பித்த ஆவணங்களில் எழுத்து வேறுபாடு இருந்ததால் இப்படி அறிவிக்கப் பட்டதாக கூறப் பட்டிருக்கிறது. Samad Ali என்பதற்கு பதிலாக Samat ali என்று எழுதப்பட்ட காரணத்தால் குடியுரிமை பறிக்கப் பட்டிருக்கிறது.

200 ரூபாய் லஞ்சம் கொடுக்காததால் சட்ட விரோதக் குடியேறி

துஃபாசுல் இஸ்லாம், சைக்கிளில் குழந்தைகளின் துணிகளை விற்கும் வியாபாரி. ஒருநாள் காவல் நிலையத்தில் இருந்து இஸ்லாமை அழைத்திருக்கிறார்கள். 200 ரூபாய் லஞ்சம் தரச் சொல்லி இருக்கிறார்கள். இவர் மறுத்ததும் ரேகைகளை வாங்கிக் கொண்டு, இனி உனக்கு குடியுரிமை இல்லை என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.

அடுத்து சில நாட்களில் வீட்டிற்கு குடியுரிமையை நிரூபிக்கச் சொல்லி தீர்ப்பாயத்தில் இருந்து கடிதம் வந்திருக்கிறது. எந்த வசதியும் இல்லாத இஸ்லாம் தனது குடியுரிமையை நிரூபிக்க இதுவரை ஒன்றரை லட்ச ரூபாய் செலவளித்து இருக்கிறார்.

200 ரூபாய் லஞ்சம் தராததால் குடியுரிமை இழந்து, நீதிமன்றத்தில் தன் ஆவணங்களுடன் நிரூபிக்க லட்சங்களை செலவழித்து காத்திருக்கிறார் இஸ்லாம்.

முஸ்லிமா இருந்தா நீ சட்டவிரோதக் குடியேறி

NRC நடைமுறையில் பாதிக்கப்படும் முஸ்லிம் பெண்களின் நிலை மிக மோசம், அதில் ஒருவர் தான் சமீனா பிபி.

சமீனா தனது குடியுரிமையை நிரூபிக்க தன் தந்தையின் பெயர் அடங்கிய 1951 NRC, 1966ல் உள்ள வாக்காளர் வரிசைப் பட்டியல், தன் திருமணச் சான்றிதழ் ஆகியவற்றை சமர்பித்திருந்தார். ஆனாலும், தன் தாத்தா 1966ம் ஆண்டு எந்த இடத்தில் வாக்களித்தார் என்பதைச் சரியாக சொல்லாத காரணத்தால் குடியுரிமையை இழந்திருக்கிறார்.

சமீனாவின் கணவர் தீர்ப்பாயத்தின் அதிகாரியை அணுகும் போது, “முஸ்லிம்கள், நீங்கள் எவ்வளவு ஆவணத்தை வேண்டுமானாலும் எடுத்து வாருங்கள்... உங்களை பங்களாதேசிற்கு அனுப்பியே தீருவேன்” என்று கூறியிருக்கிறார்.

சமீனாவின் இரண்டு குழந்தைகளும் NRC பட்டியலில் இருந்து விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள்.

நிர்கதியான சஃபீனாவின் குடும்பம்

குடும்பத்தில் குழந்தைகள் இந்தியர்கள், கணவர் இந்தியர்; ஆனால் அந்தப் பெண் மட்டும் சட்ட விரோதக் குடியேறி. இதுதான் சஃபீனாவின் கதை.

சஃபீனா தன் பெற்றோரின் 1966, 1970 வாக்காளர் வரிசைப் பட்டியலை சமர்பித்தும் சட்ட விரோதக் குடியேறி என அறிவிக்கப் பட்டிருக்கிறார். சமீனா ஏழைக் குடும்பமாக இருக்கும் நிலையிலும் ஒன்றரை லட்ச ரூபாய் செலவழித்து இருக்கிறார்கள். ஆனாலும் பலன் இல்லை.

சஃபீனாவின் மூத்த மகன் தன் அம்மாவின் நிலையறிந்து அதனையே யோசித்து மனநிலை தவறி, வீட்டில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார். அவரது மூத்த மகனின் மருத்துவ செலவுக்கு மட்டும் ஒரு லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால், கையில் காசு இல்லை எனப் புலம்பிய நிலையிலும் எப்போது Detention Campக்கு இழுத்துச் செல்லப்படுவோம் என்று பயந்த நிலையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் சஃபீனா.

4 லட்சம் செலவழித்தும் தடுப்புச் சிறையில் இருக்கும் மனோவரா பெவா

மனோவரா பெவா என்ற வயதான பெண்மனியை திடீரென அதிகாரிகள் வந்து இழுத்துச் சென்று தடுப்பு சிறையில் (detention camp)ல் அடைத்து விட்டார்கள். பெவாவின் மகன் யூனுஸும், மகள் நஜுமா-வும் எவ்வளவோ முயன்றும் தன் அம்மாவை மீட்க முடியவில்லை.

பெவா தன் தந்தையின் 1951 NRC பட்டியலை சமர்பித்திருக்கிறார். தனது 4ம் வகுப்பு பள்ளிச் சான்றிதழையும் சமர்பித்திருக்கிறார். ஆனால் தனது தாயாரின் பெயரைப் பற்றி குறிப்பிடவில்லை என அவரது குடியுரிமை மறுக்கப் பட்டிருக்கிறது.

இதுவரை 4 லட்ச ரூபாய் வரை செலவு செய்தும் எந்தப் பயனும் இல்லை. இத்தனைக்கும் பெவாவின் மகன் யூனுஸ் வீட்டிற்கு வெளியே டீக்கடை நடத்தி மாதம் 4000 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறார்.

இறுதியாக வெளியான NRC பட்டியலில் யூனுஸின் பெயரும் இல்லை, நஜ்மாவின் பெயரும் இல்லை. இருவரும் Detention camp-க்கு எப்போதும் அழைத்துச் செல்லப்படலாம் என்ற பயத்தில் உள்ளனர்.

தாத்தாவின் பெயரை தப்பாக எழுதியதால் குடியுரிமை கிடையாது

30 வயதான அபூபக்கர் சித்திக் தனது தாத்தாவின் பெயரின் ஒரு எழுத்தை தவறாகக் கூறியதால் குடியுரிமை மறுக்கப்பட்டு தடுப்புச் சிறையில் இருக்கிறார். ஆனால், அவரது மனைவியும், அவரது மூன்று சிறு குழந்தைகளும் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

மூன்று சிறு குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லும் வயதில் அம்மாவுடன் இணைந்து பீடி சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். தினமும் சல்மா (9), ஃபாரூக் (5), சுலைமான் (4) மூன்று குழந்தைகளும் ஒரு நாளைக்கு 500 பீடியாவது சுற்ற வேண்டும் என தினசரி வேலை செய்து தன் தந்தைக்காக காத்திருக்கிறார்கள்.

பீடி சுற்றும் தொழிலாளிகளாக மாற்றப்படும் குழந்தைகள்

அஸ்ஸாமில் NRC பட்டியலில் இடம்பெறாமல் பெற்றோர்களில் ஒருவர் தடுப்பு சிறைக்கு இழுத்துச் செல்லப்பட்ட பிறகு, அவர்களின் குழந்தைகள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு பீடி சுற்றும் தொழிலாளிகளாக மாறுகிறார்கள்.

ஒரு நாளைக்கு 1200 பீடிகள் சுற்றினால் மாதம் 2500 ரூபாய் சம்பாதிக்க முடிகிறது. அதனால் அதனைச் செய்கிறோம் என்கிறார்கள் குழந்தைகள்.

முஸ்லிம்களின் வாழ்க்கையே சிதைந்திருக்கிறது

ஒரு இனப்படுகொலைக்கு நிகரான கொடூரம் அஸ்ஸாமில் நிறைவேறி இருக்கிறது. குடும்பங்கள் சிதைக்கப்பட்டு நிர்க்கதியாய் தெருவில் நிற்கின்றன. இந்த நிலையை இந்தியா முழுக்க உருவாக்கவே இத்திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப் பட்டிருக்கிறது.

- அபூ சித்திக்