அரசுப் பள்ளிகள் என்பவை அரசாங்கத்தின் நேரடி நிதி மற்றும் நிர்வாகத்தால் நடத்தப் படுபவை. இவற்றை அரசின் பள்ளிகள் என்று சொல்வதை விட, சாமானிய மக்களின் குழந்தைகளுக்கான பள்ளிகள் என்று சொல்வதே சாலப் பொருந்தும்.

govt school 360தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் இன்றைய நிலை என்ன? அரசாங்கம் போதுமான நிதியும் ஒதுக்காமல், நிர்வாகத்திலும் அக்கறையின்றி அரசுப் பள்ளிகளை கைவிட்டு விட்டது. அரசுப் பள்ளிகளில் கழிப்பறை உட்பட உள்கட்டமைப்பு வசதிகளை தன்னார்வலர்கள் செய்து தர முன்வர வேண்டும் என அரசே அறிக்கை விடுகின்றது. சில அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களே தங்கள் சொந்த செலவில் பல அடிப்படை வசதிகளை மாணவர் நலன் கருதி ஏற்படுத்தி கொடுக்கின்றனர்.

அனைத்து ஆசிரியர்களின் பொருளாதாரமும் இதுபோன்ற ஈடுபாட்டுடன் கூடிய பணிகளுக்கு போதுமானதாக இல்லை என்பதே உண்மை நிலை.

ஆனால் மக்களின் வரிப்பணம் உட்பட பெரும் பொருளாதார பலம் கொண்ட அரசாங்கம், கல்வி என்னும் சேவைக்கு போதுமான நிதி ஒதுக்க மனமின்றி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது. ஆனால் எல்லா பொருள் விற்பனையிலும் கிடைக்கும் கல்விக்கான cess வரியை மட்டும் வெளியே தெரியாமல் பதுக்கி விடுகின்றது.

இத்தகைய அரசின் அலட்சியப் போக்கால் பல பள்ளிகள் மூடப்பட்டு அரசின் உத்தரவுப்படி நூலகமாக மாற்றப்பட்டன என்ற செய்தியை நம் தினசரி நாளிதழ்களில் காணலாம்.

தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாத அருகமைப் பள்ளிகள் மூடப்பட்டு, அதற்குப் பதிலாக பள்ளி வளாகங்கள் என்ற பெரிய அளவிலான பள்ளிகள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. தங்கள் ஊரில் உள்ள அருகமைப் பள்ளிகள் மூடப்படும் சூழ்நிலை வந்தால், மாற்றுத் திறனாளி மாணவர்களும், மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மாணவர்களும் பல கிலோமீட்டர் தூரம் பயணித்து தான் நகரின் முக்கியப் பகுதியில் உள்ள பள்ளி வளாகங்களை அடைய முடியும்.

சாமானிய மக்களுக்கும் இலவசமாக தாங்கள் குடியிருக்கும் பகுதியின் அருகிலேயே பள்ளிகள் அமைத்து கல்வி கிடைக்கப் பாடுபட்ட நம் முன்னோர்களுக்கு இந்த அரசாங்கத்தின் பதில்தான் என்ன?

ஒரு பக்கம் அரசுப் பள்ளிகள் மூடப்படுவதும், மறுபக்கம் தனியார் நிறுவனப் பள்ளிகள் புற்றீசல் போல் திறக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.

அத்தகைய தனியார் பள்ளிகள் கல்வி சேவை ஆற்ற வேண்டும் என்று நினைத்தால் இலவசமாக கல்வி வழங்க முன்வர வேண்டும். அதற்குப் பெயர்தான் சேவை.

தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு போதுமான தகுதியும், திறமையும் இருந்தும் குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்காமல் மனித உழைப்பை சுரண்டுகின்றன தனியார் பள்ளிகளின் நிர்வாகங்கள்.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும், தோழியர்களும் காத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், பல பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரந்தரமாக இல்லாமல் செய்துவிட்டு, பல பள்ளிகளை மூடும் தவறான செயலையும் அரசாங்கம் சத்தமில்லாமல் செய்து வருகிறது.

தனியார் ஏஜென்சிகள் மூலம் தற்காலிக ஆசிரியர்கள் என்ற பெயரில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் பெரும் தொகையை டெபாசிட்டாக பெற்றுக் கொண்டு ஆள் நிரப்பும் வேலையும் சத்தமில்லாமல் நடந்து வருகிறது.

"போராடு, கல்வி பெறு, புத்தகத்தை கையில் எடு. அறிவு சேரும்போது ஞானம் வளரும்போது அனைத்தும் மாறிவிடும். வாசிப்பே விடுதலை" என்று போராட்டக் குரலுடன் இலவசக் கல்வி தந்த இந்தியாவின் முதல் ஆசிரியை சாவித்திரி பாய் வாழ்ந்த இந்நாட்டில், அதாவது இன்றைய டி‌ஜிட்டல் இந்தியாவில் அரசுப் பள்ளிகளை அதாவது வெகுஜன பாட்டாளி மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளைப் பாதுகாப்பதற்கே இன்று பெரும் அறநெறிப் போராட்டம் தேவைப்படுகிறது.

குடிப்பதற்கு யாரும் வரவில்லை என்று எந்த மதுபானக் கடையையும் மூடாமல், வீதிக்கு ஒரு கடைதிறக்கும் நம் அரசாங்கம், படிக்க மாணவர்கள் போதுமான அளவில் இல்லை என்று காரணம் கூறி அருகமைப் பள்ளிகளை மூடுவது சரியான நிர்வாகம் ஆகுமா என்ற ஒரு திரைக்கலைஞரின் கேள்வியே எஞ்சி நிற்கிறது.

அறத்தின் வழியில் அரசு செல்ல அங்குசம் தான் மக்கள் சக்தி என்பதால் நம் பள்ளியான அரசுப் பள்ளிக்கூடத்தை பாதுகாப்பது உழைக்கும் மக்களின் கடமை.

ஒரு நூலகம் திறக்கும்போது ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகிறது என்றால் அது சரி. இன்று ஒவ்வொரு அரசுப் பள்ளியும் மூடப்படும் போதும்...?

இந்தக் கேள்வி நம் அனைவருக்குமானது.

- சுதேசி தோழன், மாதவன் குறிச்சி.