up muslim victim hasanஹாஜி ஹமீத் ஹசன், 72 வயது முதியவர் உத்திரப் பிரதேசத்தின் முசாபர் நகரில் குடியிருந்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கு கொண்டதன் காரணமாகவே, இவரது சொத்துகள் சூறையாடப்பட்டு நிர்க்கதியாய் நிற்கிறார். இதைச் செய்ததெல்லாம் ரவுடிக் கும்பல் அல்ல. நம் நாட்டின் காவல்துறை அதிகாரிகள்.

இரவு 11 மணிக்கு வீட்டின் கதவுகள் வேகமாக தட்டப்பட்டிருக்கிறது. திறக்காமல் பயத்துடன் வீட்டினுள் இருந்திருக்கிறார்கள். அதற்குள்ளாகவே வீட்டின் கதவை உடைத்து உள் நுழைந்திருக்கிறார்கள் காவல் அதிகாரிகள்.

உள்ளே நுழைந்த பிறகு, வீட்டில் இருந்த அனைத்தையும் கண்டபடி உடைத்து எறிந்திருக்கிறார்கள். நாற்காலி, பாத்திரங்கள், ஃபிரிட்ஜ், வாசிங் மெசீன், பாத்ரூமில் இருக்கும் குழாய் உட்பட அனைத்தையும் உடைத்து 72 வயதான ஹசனையும் கீழே தள்ளி விட்டதில் அவர் காலில் காயம் ஏற்பட்டது.

அவரை அடித்து, கீழே தள்ளிய காவல்துறை அதிகாரிகள் "முஸ்லிம்களுக்கு இரண்டு இடம் தான் இருக்கிறது. ஒன்று பாகிஸ்தான், இல்லையென்றால் கபர்ஸ்தான்" என்று மிரட்டி இருக்கிறார்கள்.

ஹசனின் மனைவி பாத்திமாவும், அவரது பேத்திகளான ருகையா பர்வீன் மற்றும் முபாஷிரா பர்வீன் இருவரும் வீட்டினுள் சென்று ஒளிந்திருந்தும், அவர்களையும் மிகக் கேவலமான வார்த்தைகளில் பேசியிருக்கிறார்கள்.

up muslim victim hasan with marriage invitationsஅத்தோடு தனது பேத்திகளின் திருமணத்திற்காக ஹசன் சேர்த்து வைத்திருந்த நகைகளையும், ஐந்து லட்ச ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள் காவல் துறை அதிகாரிகள்.

ஹசனின் மகன் முஹம்மது ஷாஹிதையும் அதிகாரிகள் இழுத்துச் சென்றிருக்கிறார்கள். ஷாஹிதை காவல் நிலையத்தில் பார்த்தபோது, தன்னை இழுத்துச் சென்று கையில் துப்பாக்கியைக் கொடுத்து அதைப் பிடித்திருப்பது போல போட்டோ எடுத்துக் கொண்டதாக தந்தையிடம் கூறியிருக்கிறார்.

"எனது இரு பேத்திகளுக்கும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இப்போது எங்கள் சொத்துகளையும், நகைகளையும் கொள்ளை அடித்துச் சென்று விட்டார்கள்" என்று அழுது கொண்டே சொல்கிறார் 72 வயதான ஹசன்.

"மோடியோ 'பேட்டி பெச்சாஆ' என்று மேடைகளில் பேசுகிறார். ஆனால் அவரது காவல்துறை அதிகாரிகள் எங்கள் வீட்டுப் பெண்களின் வாழ்வாதாரத்தையே அழிக்கிறார்கள்.

சுதந்திரம் பெற்ற போது ஜின்னாவின் பூமி வேண்டாம் என்று என் தந்தை காந்தியின் இந்தியாவைத் தேர்ந்தேடுத்தார். ஆனால் இன்று நாங்கள் ஒதுக்கப்படுகிறோம்" என்று வேதனையுடன் கூறுகிறார் ஹசன்.

up muslim cars burntஅப்பகுதியைச் சேர்ந்த காங்கிரசின் முன்னாள் எம்.பி சைதுஸமான் சயீத் "வெள்ளிக் கிழமைக்குப் பிறகு நடைபெற்ற வன்முறையில் காவல்துறையினருடன் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களுடம் இணைந்து செயல்பட்டனர். இதில் தனது பண்ணை வீட்டில் இருந்த நான்கு கார்கள் தீயிட்டு எரிக்கப்பட்டிருக்கிறது" என்று கூறுகிறார். இதனை, பாதுகாப்புக்கு அங்கிருந்த ராம் என்பவரும் உறுதி செய்திருக்கிறார்.

உத்திரப் பிரதேசத்தில் அதிகாரிகள் எந்தளவுக்கு முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை நிகழ்த்துகிறார்கள் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சான்று.

- அபூ சித்திக்