ghulam mohammad bhat kashmirகுலாம் முஹம்மது பாட் ஜூலை 17 அன்று இராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு ஆகஸ்ட் 5ல் பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு இவரை காஷ்மீருக்கு வெளியில் உத்திரப் பிரதேச சிறைக்கு மாற்றினார்கள்.

பாட், ஜூலையில் சிறைக்கு செல்வதற்கு முன்பே மாலை நேரத் தொழுகையில் எல்லோரையும் அழைத்து "எனக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. நான் கைது செய்யப்படலாம். நான் உங்களுக்கு ஏதேனும் தீங்கு விளைவித்திருந்தால் அதனை மன்னித்து விடுங்கள்" என்று திரும்பி வர முடியாது என்பது போலப் பேசியிருக்கிறார்.

அவர் நினைத்தது போலவே இராணுவம் அவரை சடலமாக மீண்டும் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறது. ஜமாத்தே இஸ்லாமியின் உறுப்பினராக இருந்த பாட், இராணுவத்தினால் எண்ணற்ற முறையில் அழைத்துச் செல்லப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறார். ஒருமுறை இவரை அழைத்துச் சென்று காலில் கிரிக்கெட் பேட்டைக் கொண்டு இராணுவத்தினர் அடித்ததினால் சரியாக நடக்க முடியாமல் போனது.

பாட்டின் மகன் ஹனீப்பிற்கு டிசம்பர் 20ம் தேதி "உங்கள் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை அதனால் உத்திரப் பிரதேஷ் சென்று அழைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறியிருக்கிறார்கள். "உடனே உத்திரப் பிரதேசம் சென்று அழைத்து வரும் அளவுக்கு குடும்பத்தில் எந்த வசதியும் இல்லை. நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்" என்று கூறியிருக்கிறார் ஹனீஃப்.

அடுத்த நாள் காலையில் காவல் துறையினர் போன் செய்து "இன்றைக்கு (21.12.19) காலை 9.00 மணிக்கு விமானத்தில் டிக்கெட் உங்களுக்கு போடப்பட்டிருக்கிறது. அதில் சென்று அழைத்து வாருங்கள்" என்று கூறியிருக்கிறார்கள்.

அதன் படி, உத்திரப் பிரதேசம் சென்றவரை நேராக பிணவறைக்கு அழைத்து சென்று "இது உங்கள் தந்தையா?" என அடையாளம் காட்டச் சொல்லியிருக்கிறார்கள். தன் தந்தை எப்படி இறந்தார் என்று கேட்பதற்குக் கூட எனக்கு பயமாக இருந்ததால் எதுவும் பேசாமல் திரும்பி விட்டேன் எனக் கூறுகிறார் ஹனீஃப். தன் தந்தை நேற்றே (20.12.19) இறந்து விட்டதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

காஷ்மீரின் சொந்த கிராமத்திற்கு அவரை அழைத்து வந்த பிறகு அவரது இறுதிச் சடங்கு கட்டுப்பாடுகளுடன் நிறைவேற்றப்பட்டது. வெளியூர்வாசிகள் யாரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

அவரது உடலைக் கழுவியவர்கள், அவரது உடலில் இரண்டு இடங்களில் பலத்த காயம் இருந்தது என்று கூறுகிறார்கள். உடல் புதைக்கப்பட்ட பிறகு பாட்டின் குடும்பத்தினர் தன் தந்தை இறப்பிற்கான காரணத்தை அறிய காவல் நிலையத்தை அணுகிய போது எந்தத் தகவலும் கொடுக்கப்படவில்லை. மாறாக இயல்பான மரணம் தான் என்று மிரட்டப்பட்டிருக்கிறார்கள்.

“காலில் உள்ள காயத்தைத் தவிர அவருக்கு உடலில் எந்தப் பிரச்சனையுமில்லை” என்று கூறுகிறார் பாட்டின் மனைவி.

சிறையில் அடைக்கப்பட்டு எந்த அறிவிப்பும் இல்லாமல், சடலம் கிடக்கிறது வந்து எடுத்துச் செல்லுங்கள் என்று சொல்லும் அளவுக்கு காஷ்மீரக மக்களுக்கு உரிமை கொடுக்கப்படுகிறது.

ஆங்கிலேயரின் காலனியாதிக்கத்தில் கூட இப்படி 140 நாட்களுக்கு மேலும் 70 லட்சம் மக்கள் வாழும் தேசம் முடக்கப்பட்டிருக்காது; இத்தகைய கொடுமைகள் நடைபெற்றிருக்காது. அது அத்தனையும் தற்போது மோடி ஆளும் தேசத்தில் நடக்கிறது.

- அபூ சித்திக்