அன்பு மகனே சுஜித்...

அந்த மரணக் குழிக்குள் உன் இறுதி மூச்சு அடங்கும்போது நீ அனுபவித்த மரண வேதனையை நானும் உணர்கிறேன் மகனே..!

கரைவேட்டி களையாமல் தரைமேல் நடமாடிய பேர்வழிகளும், நீ மரணித்த குழியை ஐந்து நாட்களும் ஒளிபரப்பி விளம்பர வருவாய் அள்ளிய மீடியாக்களும், தங்கள் முகத்தை வேறு திசைகளுக்கு திருப்பிக் கொண்டு போய்விட்டார்கள் மகனே....

sujith in coffinஓய்வெடு மகனே சுஜித்! 

உன் இறுதி மூச்சின் வெப்பம், தூக்கமிழந்த எங்கள் கண்களை எரிக்கிறது. எப்படியடா கண்ணயர முடியும்? என்ன சொல்லி அழுவது? என்றைக்கு தீரும் இந்த வேதனை? எதை நினைத்து நாங்கள் சமாதானம் அடைவது?

அருமை மகனே சுஜித்து... 

நீ ஒரு விவசாயி பெற்றெடுத்த மகன் என்பதால், இந்த நாட்டின் விவசாயிகளைப் போலவே உன் மரணமும் அமைந்து விட்டதே மகனே! உன்னைப் போலவேதான் இன்று விவசாயிகளும் மரணக் குழிக்குள் மூச்சு விடமுடியாமல் திணறிக் கொண்டு கிடக்கிறார்கள்.

உனக்கு நடந்தது போலவே அமைச்சர்களும், அதிகாரிகளும் விவசாயிகளைக் காப்பாற்ற ஓடி வந்தார்கள்.

குழிக்குள் கிடக்கும் அவர்களை உயிருடன் மீட்கப் போவதாக பேசினார்கள்., நாங்களும் நம்பினோம்...

பசுமைப் புரட்சி, வெண்மைப்புரட்சி, இரண்டாம் பசுமைப்புரட்சி, நவீன விவசாயம், என்று பெரிய எந்திரங்களைக் கொண்டு வந்து இறக்கினார்கள்...

ஆனால் அவையெல்லாம் 20 அடியில் இருந்த உன்னை 40, 80 அடிகளுக்கு தள்ளி விட்டதைப் போல, விவசாயிகளையும் மரணக்குழிக்குள் மேலும், மேலும் தள்ளி விட்டதே தவிர காப்பாற்றவில்லை! 

உனக்கு குழிக்குள் ஆக்ஸிஜன் செலுத்தியது போல, விவசாயிகளுக்கு சில காலம் உர மானியம், கடன் சலுகை எல்லாம் கொடுத்தார்கள். பிறகு சில டாக்டர்களும், நிபுணர்களும் வந்து விவசாயிகளின் ‘உயிருக்கு ஆபத்தில்லை’ என்று கூறிவிட்டதால், அந்த மானியங்களை எல்லாம் இப்போது ரத்து செய்து விட்டார்கள். 

ஆனாலும் விவசாயிகள் மரணக் குழியில் இருந்து இன்னமும் மீளவில்லையே என சிலர் கவலை தெரிவித்தனர்...

உலகிற்கே உணவளித்தவன் செத்துக் கொண்டிருக்கிறான் என மீடியாக்கள் பலரும் நீலிக் கண்ணீர் வடித்தனர்.

வேறு வழியின்றி அரசாங்கம் தீவிரமாக யோசித்து, மரணக் குழியின் பக்கத்தில் புதிய குழியைத் தோண்டி அதன் வழியாக விவசாயிகளை மீட்டு விடலாம் என முடிவெடுத்தார்கள்....

பயிர்க் காப்பீடு, வருடத்திற்கு 6000 ரூபாய், பென்ஷன் திட்டம், கிராமப்புற வேலை உறுதித் திட்டம், முதியோர் பென்ஷன் என குழிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே போனார்கள்.. பிறகு அதிநவீன ரிக் வண்டி மூலம் மொத்தத்தையும் ஊத்தி மூடினார்கள்... 

உன் கையை இறுக்கிப் பிடித்திருந்த ஏர்லாக் கருவிபோல, 20 கிலோ இலவச அரிசியை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறது எங்கள் உயிர்!

உன் சாவு எங்களைப் பயமுறுத்துகிறது மகனே....

உன் உடலைப் போலவே நாங்களும் அழுகி முடைநாற்றம் வீசிய பிறகுதான் மீட்கப் படுவோமோ? 

இரண்டு லட்சம் விவசாயிகள் இதுபோல மரணக் குழியில் சிக்கி இறந்திருக்கிறார்கள் மகனே...

ஓய்வெடு மகனே சுஜித்!

ஒவ்வொரு சாவையும் நேரலையில் ஒளிபரப்புவார்கள். குழிக்குள் தள்ளி விட்டவனே கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்து பிணத்திற்கு மாலை போடுவான். கூடவே கொஞ்சம் சில்லறைகளையும் விட்டெறிந்துவிட்டு போவான். ஆனால் காப்பாற்றும் வேலையை மட்டும் கடைசி வரை செய்யவே மாட்டார்கள்!

நம்மைப் போன்ற விவசாயிகளின் சாவை - அழிவை ‘வளர்ச்சியின் அறிகுறி’ என்று நாம் ஆட்சியாளர்கள் கொண்டாடுகிறார்கள் மகனே...

இவர்களா நம்மைக் காப்பாற்றப் போகிறார்கள்? இவர்களிடமா நம் சாவுக்கு நீதி கிடைக்கப் போகிறது?

'நான் இறந்து விட்டேன், கருப்பு கண்ணீர் அஞ்சலிகளோடு என் மரணம் கரைந்து விட்டதே' என்று கலங்காதே மகனே.....

நீ உயிரற்ற பிணமாகி விட்டாய். நாங்கள் உயிருள்ள பிணங்களாக நடமாடுகிறோம்!

நம் பிணங்களுக்கு உயிர் இல்லைதான். ஆனால் உரமாகும் வல்லமை உண்டு! காலம் கனியும் மகனே... அன்று ஒவ்வொரு சாவுக்கும் கணக்கு தீர்ப்போம். அதுவரை நீ அமைதியாக ஓய்வெடு!

இப்படிக்கு,
உன் அப்பா விவசாயி.

- தேனி மாறன்