ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் விஜயதசமி அன்று, "கும்பல் படுகொலை என்ற சொல்லாடலைப் பயன்படுத்திட வேண்டாம். அது திட்டமிட்டு வெளிநாடுகளைச் சார்ந்தவர்களினால் உபயோகப் படுத்தப்படும் குற்றச்சாட்டு" என்றார் .

23/10/2019 அன்று, 2017 ம் ஆண்டு குற்றங்களின் அடிப்படையில் மாநிலங்களை வரிசைப்படுத்தியது 'தேசிய குற்ற ஆவணக் காப்பகம். பல்வேறு குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிட்ட அறிக்கையில் 56,011 வழக்குகளினால் முதலாம் இடத்தில் உத்திரப் பிரதேசமும், 31,979 வழக்குகளினால் இரண்டாமிடத்தில் மராட்டியமும், 30,992 வழக்குகளினால் மூன்றாமிடத்தில் மேற்கு வங்கமும், மத்தியப் பிரதேசம் (29,778) நான்காம் இடத்திலும், இராஜஸ்தான் (25,993), அசாம் (23,082) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன.

agitaion against mob lynchingபாஜக தங்கள் ஆட்சியின் செயல்பாடுகளை இத்தகைய ஆவணங்களின் மூலம் பறைசாற்றுகின்றது. ஒரு வேளை முந்திய தினமான 21/10/2019 அன்றோ, அதற்கு முன்போ இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தால் ஹரியானா - மராட்டியம் மாநிலத் தேர்தல்களில் பாஜகவின் 'டப்பா டான்ஸ்' ஆடியிருக்கும்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எனத் துவங்கி பல்வேறு குற்றங்கள் அடிப்படையில் இந்த அறிக்கை வெளிவந்தது. ஆனால் கும்பல் படுகொலை பற்றிய அறிக்கைகள் இதில் வெளியிடப் படவில்லை. ஒருவேளை இதனையும் சேர்த்து வெளியிட்டால், இன்னும் எண்ணிக்கைகள் அதிகரிக்கும் என்ற அச்சமோ... என்னவோ?

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் இல்லாத அறிக்கைகளைக் குறித்து மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர், ஜூலை 2018-ம் ஆண்டு மாநிலங்களவையில், "மத்திய அரசாங்கத்திடம் கும்பல் வன்முறைகள் குறித்து எந்தத் தரவும் இல்லை; ஏனெனில். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இந்தத் தரவுகளைத் திரட்டவில்லை" எனக் கூறினார்.

அரியானாவில் இப்படிப்பட்ட குற்றவாளிக்கு பாஜக தேர்தல் சீட் வழங்கியிருக்கும் போதும், அரசியல் பின்புலத்துடனே ஒவ்வொரு குற்றவாளியும் கும்பல் படுகொலையினை நிகழ்த்தியிருக்கும் போதும் அரசு அதிகாரிகள் எப்படி இதனை பதிவு செய்திடுவர்?

- நவாஸ்