“நமது நாட்டில் சுயேச்சையாக உருவாக்கப்பட்டுள்ள தொழில் நுட்பத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்றால், நாடு காப்பாற்ற முடியாத புதைகுழியில் வீழ்ந்து துயரத்தில் ஆழ்ந்து விடும் என ஆய்வுக்குழு சுட்டிக் காட்ட விரும்புகின்றது. நிலக்கரி போன்ற படிம எரிபொருள்களின் இருப்பு முடிவற்ற நிரந்தரமல்ல என்பதையும் நாட்டின் எரிபொருள் தற்சாற்புக்கு அணு ஆற்றலை பயன்படுத்துவது தவிர்க்க இயலாதது என்பதையும் ஆய்வுக்குழு வலியுறுத்த விரும்புகின்றது. நாட்டின் நலனுக்கான நெடுநோக்கு கொள்கையும் தொழில்நுட்ப நிலையும் பல்வேறு எரிபொருட்களின் அடிப்படையிலான மின்னுற்பத்தி நிலையங்களைக் கட்டி உருவாக்குவதை கோருகின்றது. நிலமை இப்படியிருக்கும்போது அரசு அணு மின்னுற்பத்தியை உதாசீனம் செய்வது நாட்டின் ஆற்றல் தற்சார்பு எனும் நோக்கத்தை சமரசம் செய்வதாகும்.”

கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டின் “ஒளிமிகு” நலனுக்கு “ஆற்றல் தற்சார்பு”, “அணு மின்னாற்றல்” ஆகியவற்றின் இன்றியமையாமை குறித்து கிளிப்பிள்ளைகள் போல ஓயாது அலறி வருபவர்கள் சற்றே சிந்திக்க வேண்டும். அவர்கள் காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ அறிவிப்பாளர்களாக இருந்தாலும் சரி; இந்திய பெரு நிருவனங்களுக்கான ஊதுகுழல்களாக ஊடகங்களில் செயல்பட்டு வரும் மேதாவிகளாக இருந்தாலும் சரி; எந்த அரசு அணு ஆற்றலை உதாசீனம் செய்து நாட்டின் ஆற்றல் தற்சார்பை சமரசம் செய்தது? எந்த ஆய்வுக் குழு அரசை இந்த அளவு வன்மையாக இடித்துரைத்தது என்பதை அறிந்து கொள்வது நல்லதுதானே?

ஆற்றலுக்கான பாராளுமன்ற நிலைக் குழு (Paarlimentary standing committee on Energy) அணு மின்னாற்றல் திட்டம் - ஒரு மதிப்பீடு என்ற பெயரில் 1995 டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் ஓர் அறிக்கை சமர்பித்தது. அந்த அறிக்கையின் முடிவுகள்/ பரிந்துரைகள் என்ற பகுதியில்தான் மேலே கண்டவை இடம் பெற்றுள்ளன. குழுவின் தலைவர் ஜஸ்வந்த் சிங். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவ் சரன் மாத்தூர், முரளி தியோரா, விலாஸ் முத்தம்வார், பி.சி.சாக்கோ, பி. சங்கரானந், புபனேஷ்வர் காலிடா, Dr.நுவானிஹல் சிங் ஆகியோர் குழு உறுப்பினர்கள். இந்த இடித்துரைப்பை வாங்கியது, முன்னணி- கூட்டணி போன்ற சிக்கல்கள் இல்லாது 1991 -96 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி நடத்திய ஒரு கட்சி அரசுதான். தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங்தான் அப்போது “புதுப் பாதை சமைத்த” (Path Breaking) நிதி அமைச்சராகப் பணியாற்றினார் என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை.

அணு ஆற்றல் துறை (Department of Atomic Energy - DAE) 2000 ஆண்டிற்குள் 10,000 MW அணுமின் உற்பத்திக்கு வழி வகுப்பது என 1984 ஆம் ஆண்டே திட்டம் தீட்டியிருந்தது. பின்னர் இந்த இலக்கு 5,700 MW என அரசால் குறைக்கப்பட்டது (ஆனால் 2008 ஆம் ஆண்டுவரை நிறுவப்பட்டுள்ள அணுமின் நிலையங்களின் உற்பத்தித் திறன் 4,120 MW தான்). இது குறித்துப் பேசும்போதுதான் குழு மேலே உள்ள இடித்துரைப்பைக் கூறியது. இலக்கு குறைக்கப்பட்டதன் காரணம் என்ன? தற்போது “அணு ஒப்பந்த” ஆதரவாளார்கள் கூறுவது போல “அணுத்தனிமை”, “தொழில் நுட்பமின்மை”, “யுரேனியப் பற்றாக்குறை” ஆகியவைதான் காரணமா?

நிதி வெட்டுதான் முக்கியமான காரணம்

கடுமையான நிதிப் பற்றாக்குறைதான் இலக்கு குறைக்கப்பட்டதற்கு முக்கியமான காரணம் என குழு கண்டறிந்து தெரிவித்துள்ளது. உண்மையில் 8 ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் ஒதுக்கப்படவேண்டிய தொகையான ரூ 14,400 கோடிக்குப் பதிலாக வெறும் ரூ 4,119 கோடிதான் அளிக்கப்பட்டுள்ளது.

10,000 MW மின்னுற்பத்தி எனும் இலக்கு குறைக்கப்பட்டதன் விளைவுகள் என்ன, என்பதை ஆய்வுக்குழு அறிய முற்பட்ட போது, DAE பின்வரும் விளைவுகளைப் பட்டியலிட்டுள்ளது:

1. இந்திய அணுமின்னாற்றல் திட்டம் பெரிதும் அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் (Pressurised Heavy Water Reactor - PHWR) என்பதை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவில் கிடைக்கும் யுரேனியத்தை சிக்கனமாகப் பயன்படுத்தி முன்னேற்றம் காண இதுதான் சரியான வழியென்பதுதான் இதற்குக் காரணம். இந்திய அணுவாற்றல் துறை 220 MW மற்றும் 500 MW திறன் கொண்ட PHWR அணு உலைகளை உள்நாட்டுத் தொழில் நுட்பதைக் கொண்டே உருவாக்கியிருந்தது. இந்திய அணுவாற்றல் துறையின் வல்லுனர்களும் பொறியாளர்களும் 30 ஆண்டுகளுக்கும் மேலான தங்களது கடும் உழைப்பு, ஆழமான ஆய்வு, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய வடிவமைப்புப் பணிகள் ஆகியவற்றின் மூலம் இதனை சாதித்திருந்தனர்.

அணு மின்நிலையங்களை வடிவமைப்பது, கட்டமைப்பது, இயக்குவது ஆகிய சகல பணிகளையும் முழுமையாக சொந்தமாக நிறைவேற்றும் திறன் கொண்ட மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதுதான் நிலை. யுரேனியம் வெட்டியெடுக்கும் வேலைகள், அதனைச் சுத்திகரித்து அணு உலைகளுக்குத் தகுந்த எரிபொருளாக மாற்றுவது, எரிபொருள் மறு சமைப்பு, கதிரியக்க கழிவுகளைக் கையாள்வது ஆகியவற்றுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை எல்லாம் ஏற்படுத்தி நாட்டின் இலக்கை அடைவதற்கான அடிப்படைகளை DAE தன் வசம் கொண்டிருந்தது. சில வசதிகள் இலக்கை அடைவதற்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்டும் இருந்தன. மிகக் கடுமையான உழைப்பாலும் மிகுந்த பொருட் செலவிலும் அமைக்கப்பட்ட இந்த நிலையங்கள் இன்று முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

2. புதிய அணு மின்நிலையங்கள் நிறுவப்படவில்லையென்றால், தற்போது மொத்த மின்சார உற்பத்தியில் சுமார் 2.5% ஆக மட்டுமே இருக்கும் அணுமின்சாரத்தின் பங்கு மேலும் குறைந்துவிடும். உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவில்லை யென்றால் மிகுந்த முனைப்பான அணு ஆற்றல் திட்டங்களைக் கொண்டுள்ள சீனா, கொரியா போன்ற நாடுகளைக் காட்டிலும் பின்தங்கி விடும் நிலை உருவாகும். உண்மையில் 1998 ஆம் ஆண்டு அப்போதைய பாராளுமன்ற நிலைக் குழுவின் தலைவரான காங்கிரஸ் கட்சியின் கெ. கருணாகரன் முன்னாள் பேசிய DAE தலைவர் Dr.ஆர்.சிதம்பரம் தமது துறையின் துயரத்தை மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்:

“தற்போது நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியில் அணு மின்சாரத்தின் பங்கு என்பது சுமார் 3% தான். 8 ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் போது அணுமின் நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி என்ன எனப் பார்க்கவேண்டும். ஆண்டிற்கு சுமார் 100 MW அளவில் மின்நிலையங்களை அமைப்பதற்குத்தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே 10,000 MW அளவில் அணு மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என அறிய விரும்புபவர்கள் 10,000 ஐ 100 ஆல் வகுத்துப் பார்க்க வேண்டும்! எனவே எங்கள் துறையின் முன்னேற்றம் இன்மை என்பது பற்றாக்குறையான நிதி ஒதுக்கீட்டால்தான் தானே யொழிய தொழில் நுட்ப பற்றாக்குறையால் அல்ல.” ( ஆற்றல் குறித்த பாராளுமன்ற நிலைக்குழு , ஜூலை 1998 இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை)

ஆண்டிற்கு 100 MW அளவிற்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்து அணு ஆற்றல் நிறுவனங்களை பயன்படுத்தாது பின்னடைவிற்கு வழி வகுத்த குற்றத்தைச் செய்தது யார் என காங்கிரஸ் கட்சி பதிலளிக்குமா?

நிபுணர்களின் கருத்துகள்

பாராளுமன்ற நிலைக் குழு டிசம்பர் 1995 ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கைக்கு மீண்டும் வருவோம். 2000 ஆம் ஆண்டில் 10,000 MW என்ற அணுஆற்றல் இலக்கைக் கைவிட்டது குறித்து அணு ஆற்றல் ஆணையத்தின் முன்னாள் தலைவரான Dr.ராஜா ராமன்னா அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர் அளித்த பதில் பின்வருமாறு:

2000 ஆம் ஆண்டில் 10,000 MW என்ற திட்டத்திற்கு அரசு அளிக்க வேண்டிய நிதி ஆதாரங்களை அளிக்க முடியவில்லை என்பதால்தான் இந்தக் கேள்வி முன்வந்துள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லையென்றே நான் நினைக்கின்றேன்; அதனால்தான் அணுவாற்றல் துறை தனது திட்டங்களை நிறைவேற்றக் கோரப்பட்டுள்ளது; திட்டக் குழு தான் ஒதுக்கவேண்டிய நிதி ஆதாரங்களை அளிக்கவில்லை; இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை; போதுமான நிதியை ஒதுக்கினால் 2000 ஆம் ஆண்டிற்குப் பதிலாக 2010 ஆம் ஆண்டிற்குள் 10,000 MW அணு மின்சாரம் என்பது சாத்தியமான இலக்குதான். இந்த திட்டத்தைக் கட்டாயம் ஆதரித்து நிறைவேற்ற வேண்டும். ஏனெனில் இது (அழுத்தப் பட்ட கனநீர் உலைகள்) நாம் மிகவும் நுண்மான் நுழைபுலம் பெற்ற தொழில் நுட்பத்தின் அடிப்படையிலானது; அத்தோடு அது மிகவும் நவீனமானதும் ஏற்கனவே நாம் வெற்றிகரமாக கையாண்டதுமாகும்.”

10 ஆண்டுகளுக்குப் பின் தனது “சட்ட மேதைகளை” முன்னிறுத்தி இந்தியா வெளிநாட்டு தொழில் நுட்பத்தை இறக்குமதி செய்வது தேவை என்று காங்கிரஸ் கட்சி வாதாடும் என Dr.ராஜா ராமன்னா எதிர்பார்த்திருக்க மாட்டார். அதே பாராளுமன்ற நிலை குழுவிடம் தனது கருத்துகளைக் கூறிய மற்றொரு நிபுணரான என்.சீனிவாசன் கூறிய கருத்துகள்:

“முழுமையான உதாசீனம் எனச் சொல்லும் அளவிற்கு நிதிப் பற்றாக்குறையில் ஆழ்த்துவது என்பதாகவே அணு மின்னாற்றல் குறித்த அரசின் அணுகுமுறை உள்ளது. கிடைக்கும் நிதி ஆதாரத்திற்கு ஏற்ற வகையில் திட்டங்களை நிறைவேற்றும் கால அளவை நீட்டிப்பதால் திட்டங்களின் செலவு பல மடங்கு அதிகரித்து விடுகின்றது. எனவே திட்டங்களுக்கான செலவு எனக் கூறப்படுவது உண்மையான விலையல்ல; அது செயற்கையாக அதிகரிக்கப்பட்ட விலையாகும். எனவே அணுமின் நிலையங்களை அமைப்பதில் உள்ள பொருளாதார சாத்தியம் பற்றிய விவாதங்களில் கூறப்படும் புள்ளி விவரங்கள் சரியானதல்ல. அரசு தரப்பில் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நீண்டகால உறுதிப்பாடு இல்லாத காரணத்தால் இதில் பங்குபெரும் நிறுவனங்கள் முனைப்பிழந்து விடுகின்றன. அவை எதிர்காலத்தில் இது போன்ற திட்டங்களை நிறைவேற்றும் சாத்தியங்கள் குறித்து சந்தேகம் கொள்கின்றன. இதனாலும் திட்டங்களுக்கான செலவு அதிகரித்து விடுகின்றது.

இந்த திட்டங்களில் பங்கு பெறுவதற்காக அணு உலைகளின் பாகங்களை உருவாக்குவதற்கான எந்திர வசதிகளை நிறுவிய நிறுவனங்கள், நிச்சயமின்மை காரணமாக தாம் நிறுவிய வசதிகளை வேறு நோக்களுக்காக மாற்றி அமைத்துவிட்டன. தொடர்ந்து திட்டங்களை நிறைவேற்றுவதற்கான உறுதி அரசிடம் இல்லையென்றால் 40 ஆண்டுகளாக அரும்பாடுபட்டு உருவாக்கிய தொழில் நுட்பங்களை மீட்க இயலாது நாம் இழந்துவிடும் அபாயம் உள்ளது.”

21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் அணு மின்சாரம் என்பது குறித்து இந்த வல்லுனர் தீர்க்கமான (அமெரிக்காவின் பார்வைக்கு மாறான..) பார்வை கொண்டிருந்தார். என்.சீனிவாசன் குழுவிடம் கூறிய கருத்து:

“இந்த முக்கியமான தொழில் நுட்பத்தை உயிரோட்டமாக வைத்திருப்பதாகவும் நாட்டின் ஆற்றல் தேவைகளை ஒட்டியதாகவும் அதனோடு ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் இருக்கக் கூடிய ஒரு குறைந்த பட்ச வளர்ச்சியுள்ளதாக அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கான அணுஆற்றல் கொள்கை வகுக்கப்பட வேண்டும். இருக்கின்ற தொழில் நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதாகவும் அணு உலைகளின் முக்கியமான சாதனங்களை மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்வதன் மூலம் உற்பத்தி முறைகளின் குறைகளைக் களைந்து மேம்படுத்துவதாகவும் இந்த கொள்கை இருக்க வேண்டும். 2020 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியில் சுமார் 10% இருக்குமாறு 20,000MW அணுமின்சார உற்பத்திக்கு வழி வகுப்பது சாத்தியமே. அறிவுபூர்வமான நிதி ஒதுக்கீடு சரியான திட்டமிடல் ஆகியவற்றோடு இந்த திட்டத்தை தளராது தொடர்வதற்கான உளப் பூர்வமான உறுதியோடு அரசு இருத்தல் தேவை.”

மற்றொரு வல்லுனர் சி.வி.சுந்தரம். இவர் அணு ஆற்றல் ஆய்வுக்கான இந்திரா காந்தி மையத்தின் முன்னாள் இயக்குனர். இவர் குழுவிடம் அளித்த தனது அறிக்கையில் இதனை மேலும் விரிவாக விளக்கியுள்ளார்:

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் முதல் ஐம்பது ஆண்டுகளுக்குள் நாட்டின் மொத்த மின்ணுற்பத்தியில் சுமார் 10 அல்லது 15%க்கு அணு மின்னுற்பத்தியை உயர்த்துவது சாத்தியமான ஆனால் சவால்களை உள்ளடக்கிய குறிக்கோள்தான். 2015 அல்லது 2020 ஆம் ஆண்டிற்குள் சுமார் 10,000 MW அல்லது 15,000MW அளவில் PHWR அடிப்படையிலான அணு உலைகளை நிறுவ வேண்டும். இந்த அளவு அணு உலைகள் இருந்தால் 2020 ஆம் ஆண்டிற்குப் பின் அதிவேக ஈனுலைகள் (Fast Breeder Reactors) மூலமாக மின்னுற்பத்தியைத் தொடர்வதற்குப் போதுமான புளூட்டோனியத்தை உற்பத்தி செய்வது சாத்தியமாகும். (அதிவேக ஈனுலைகளுக்கு புளூட்டோனியம் தேவை. புளூட்டோனியம் இயற்கையில் கிடைப்பதில்லை. யுரேனியம் பயன்படுத்தும் அணு உலைகளில்தான் புளூட்டோனியம் கிடைக்கும். - மொழிபெயர்ப்பாளர்)

2025 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிவேக ஈனுலைகளின் பங்கு சீராக அதிகமாக்கப்படலாம். இந்த திட்டத்தை அமுல்படுத்தினால் இந்திய அணு ஆற்றல் துறையின் நடைமுறை அனுபவமும், தன்னம்பிக்கையும் போதுமான அளவு வளர்த்தெடுக்கப்படும். இது 21 ஆம் நூற்றாண்டின் பின் ஐம்பது ஆண்டுகளில் மிகவும் நெகிழ்ச்சியானதும் தற்சார்பானதுமான ஆற்றல் திட்டங்களை அமுல்படுத்துவதை சாத்தியமாக்கும்.” இந்த வல்லுனர்கள் யாரும் இந்தியாவின் அணுத்தனிமை குறித்தோ அல்லது தொழில் நுட்பமின்மை குறித்தோ பேசவில்லை என்பதைக் கவனிக்கவும். அவர்கள் கேட்டதெல்லாம் போதுமான நிதி ஒதுக்கீடும் சரியான திட்டமிடலும்தான். பத்தாண்டுகளுக்குள் அமெரிக்க ஜனாதிபதியும், செனட்டர்களும், கார்ப்பொரேட் நிறுவனங்களும் இந்தியாவின் சூழல் மாசற்ற ஆற்றலுக்கான பாதையைத் தீர்மானிப்பார்கள் என இந்த நிபுணர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.

யுரேனியத்தின் கதை என்ன?

ஊடகங்களில் அணு ஒப்பந்தத்தை சாமர்த்தியமாக விற்பனை செய்ய முயலும் விற்பனை பிரதிநிதிகள் யுரேனியப் பற்றாக்குறை என்பதை தலைப்புச் செய்தியாக ஆக்க முனைகின்றனர். அவர்கள் கவனிக்க வேண்டும். 1998ஆம் ஆண்டு பாராளுமன்றக் குழுவிடம் Dr.சிதம்பரம் கூறியது பின் வருமாறு:

“...நம்மிடமுள்ள யுரேனியத்தின் அளவு சுமார் 1.2 பில்லியன் டன் (1200 கோடி டன்!) நிலக்கரிக்குச் சமமாகும். அதிவேக ஈனுலைகளைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதில் வெற்றிகரமாக இருந்தால் இது 100 பில்லியன் டன் (10000 கோடி டன்!) நிலக்கரிக்குச் சமமாகும். இதன் தொடர்ச்சியான எரிபொருள் சுழற்சியை சாதித்தால் நம்மிடம் 600 - 1000 பில்லியன் டன் நிலக்கரிக்கு சமமான எரிபொருள் இருக்கும். ஆனால் இதற்கான தொழில் நுட்பம் மிகவும் சிக்கலானதும், மிகுந்த ஆய்வு மற்றும் மேம்பாட்டு (R&D) பனிக்கான தேவை உள்ளதுமாகும்.”

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி ஆண்டிற்கு சுமார் 400 மில்லியன் டன்கள். இது இந்தியாவின் மின்னுற்பத்தியில் 50% ஐ தருகிறது என்னும்போது, 1200 மில்லியன் நிலக்கரிக்குச் சமமான யுரேனியத்தை வைத்துக் கொண்டு 3% மின்னுற்பத்திதான் செய்ய முடியுமா? இந்த யுரேனிய கையிருப்பெல்லாம் எங்கே சென்றது? புஷ் கொண்டு சென்றுவிட்டாரா!

ஆண்டு 2005க்கும் 2008க்கும் இடையில் கற்ற புதிய கல்வி

1991 - 1996 ஆம் ஆண்டுகளில் அணு ஆற்றல் திட்டத்தைக் கிடப்பில் போட்டபோது காங்கிரஸ் கட்சிக்கு அணு ஆற்றலின் முக்கியத்துவம் தெரியாதா? இந்த கால கட்டத்தில் சில காங்கிரஸ்காரர்கள் தாபோல் திட்டத்தில் என்ரான் நிறுவனத்தின் ரெபெக்கா மார்க் அம்மையார் கூறியதுபோல “பாடம்” பெற்றுக் கொண்டிருந்தனர். இப்போதும் கூட இவர்கள் அணு ஆற்றல் குறித்த திடீர் ஞானோதயம் பெற்றதும் ஜார்ஜ் புஷ் அமெரிக்க ஆற்றல் கொள்கை 2005 எனும் சட்டத்தில் கையெழுத்திட்டதும் தற்செயல்தான் என நாம் நம்ப வேண்டும் என நினைக்கின்றனர். இந்த சட்டம், பல ஆண்டுகளாக வாங்குவோர் இல்லாது ஈ ஓட்டிக்கொண்டிருந்த அமெரிக்க அணு நிறுவனங்களுக்கு அரசு உதவுதற்கான மார்க்கமாகவே கொணரப்பட்டது. அமெரிக்காவின் எடுபிடிகளும் அமெரிக்க அடிமைகளான ஊடகப் புள்ளிகளும் இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதில் அக்கறை காட்டுவதை நாம் புரிந்து கொள்ளலாம்.

வெஸ்டிங் ஹவுஸ், GE போன்ற அமெரிக்க பகாசுர நிறுவனங்கள் இந்த ஒப்பந்தம் மூலம் பெரும் பயனை அடையப்போகின்றன என்பது வெளிப்படை. அமெரிக்க இந்திய வர்த்தக மன்றம் (US - India Business Council - USIBC) இந்த வர்த்தகம் சுமார் 150 பில்லியன் டாலர் (சுமார் 15,000 கோடி டாலர் அதாவது 6,00,000 கோடி ரூபாய்!) என மதிப்பிட்டுள்ளது. ஆனால் 1996க்கு முந்தைய காங்கிரஸ்காரர்கள் தங்கள் மன மாற்றத்தை விளக்கியாக வேண்டும். 1996ல் அணு ஆற்றல் கொள்கையை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் (“pruning of nuclear power”) எனப் பேசியவர்கள் 2006ல் அணு ஆற்றல் மகத்துவம் குறித்த (“idolising of nuclear renaissance”) மனமாற்றம் பெற்றது எப்படி என கூறியாக வேண்டும். காங்கிரஸின் புதுமுகங்களுக்கு (“Johny come lately”) இது பிரச்சினை அல்ல. ஆனால் திருவாளர். மன்மோகன் சிங் அவர்களே நீங்களும் ஊடகங்களில் உள்ள உங்கள் ஆலோசகர்களும் அப்போது எங்கே இருந்தீர்கள்? இதனை நீங்கள் இந்திய மக்களுக்கு விளக்க கடமைப்பட்டுள்ளீர்கள். எப்படி விளக்குவீர்கள் திருவாளர் பிரதமர் அவர்களே?

மன்மோகன் சிங் அமெரிக்க ஜனாதிபதியிடம் சென்று இந்திய அரசு அமெரிக்காவுடனான அணுவாற்றல் கூட்டுறவு, வின்வெளி ஆய்வுக் கூட்டுறவு, தேசப் பாதுகாப்புக் கூட்டுறவு ஆகியவற்றில் கொணர்ந்துள்ள முன்னேற்றங்களை மிகவும் மகிழ்ந்து விளக்கி ஒப்பித்துள்ளார் என ஊடகங்கள் கூறுகின்றன. இதனைச் செய்த மன்மோகன் சிங் அணு ஆற்றல் குறித்து 1991-96 ஆம் ஆண்டுகளில் அவரது கருத்து என்ன? 2005-2008 ஆண்டுகளில் அவரது கருத்து என்ன? மன மாற்றத்தின் காரணம் என்ன என்பதை இந்திய மக்களிடம் விளக்க கடமைப்பட்டுள்ளார் என்பது சரிதானே?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் திபங்கர் முகர்ஜி பியூப்பில்ஸ் டெமாகிரஸி இதழில் (20/07/08) எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

- தமிழில்: ப.கு.ராஜன்.