பொருட்களை விட்டுவிட்டு உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது மினிமலிசம்.

கூகுள் அதனை "உச்ச நிலை எளிமை" என்று மொழிபெயர்க்கிறது. அது என்ன உச்ச நிலை எளிமை?

நன்றாக சம்பாதித்துவிட்டு, சம்பாதிக்காதே என்று தத்துவம் பேசுவதா? பொருட்களை உபயோகித்துவிட்டு, அதனை உபயோகிக்காதே என்று அறிவுரை சொல்வதா?

நீ உபயோகித்துவிட்டு சொல்கின்ற அறிவுரையை நாங்கள் கேட்கத் தேவையில்லை. நாங்களும் அனுபவித்துவிட்டு தத்துவம் சொல்கிறோம் என்கிற எதிர்வினைகளும் வரும்.

life travelஆனால் அனுபவித்து வருகின்ற அந்த அறிவுரைகள், கடந்து வந்த கசப்புகளின் நிஜம். அலட்சியப்படுத்தலாம், இல்லை அவசியப்படுத்தலாம்.

அதிகமான பொருட்கள் = அதிகமான கவலைகள் 
குறைவான பொருட்கள் = குறைவான கவலைகள்

நான் சவுதியை விட்டுச் செல்வதற்காக, எல்லாவற்றையும் முடித்துவிட்டு கிளம்பியபோது, ஒரே ஒரு பெட்டி மட்டும்தான் எனக்காக இருந்தது, அந்த 6 வருட சவுதி வாழ்க்கையில்.

எனக்கு பொருட்களை அனுப்புவதற்கான செலவுகளும் மிச்சம். எப்படி அனுப்பப் போகிறோம் என்கிற கவலைகளும் மிச்சம்.

குறைவான உடைகள், கட்டில், டேபிள், லேப்டாப், கொஞ்சம் புத்தகங்கள் - அவ்வளவுதான் பொருட்களின் சேகரிப்பு அந்த 6 வருடத்தில். இதுபோல பல வருடங்களாக இருக்கின்றார்கள் வெளிநாட்டில்.

வேலை முடித்து வந்தால் கட்டில்தான் வீடு. அவர்கள் உலா வருவது கிச்சனில் - படுக்கையறையில் - அவ்வளவுதான். அவர்களுக்குத் தேவையான வாழ்க்கை முறை அவ்வளவுதான்.

தனது வாழ்க்கையின் 6 தசாப்தத்தில், 3 தசாப்த ஆண்டுகளை அந்த குறைவான வாழ்க்கை முறையில் கழிக்கின்றார்கள். அதுவே அவர்களுக்குப் போதுமானது.

வேலைக்குச் சென்ற இடத்திலேயே இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் போது, வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்டில் இப்படி முடியாதா என்ன?

வீடு, கார், ஆடம்பர பொருட்கள் என்று, பார்வைகளின் தேவைக்காக வாழ முயற்சிக்கிறோம். கடன் வாங்குகிறோம்.

எல்லா தேவைகளையும் பக்கத்து வீட்டுக்காரர்கள், எதிர் வீட்டுக்காரர்கள், உறவினர்களின் பார்வையில் பெரிதாய்த் தெரிய வேண்டுமென்பதற்காக செய்கிறோம்.

நம்முடைய அவசியமான தேவையில் அது வருகிறதா, அந்தத் தேவையை நிறைவேற்றாவிட்டால் உயிர் வாழவே முடியாதா என்கிற கேள்வியை கேட்டுப் பாருங்கள்.

பகட்டினை மற்ற பார்வைகளுக்கு புகட்டுவதற்காக கடன்படுகிறோம். ஆடம்பரங்கள் தற்காலிக மகிழ்ச்சியைத் தருகிறது.

ஆறு இலக்க சம்பளத்தில், எல்லாம் வாங்கி, தேவையில்லாமல் குவித்துவிட்டு, பின் அதனைப் பராமரிக்க ஒரு ஸ்டோர் ரூம். உபயோகிக்காத பொருளைப் பாதுகாக்க எதற்கு ஒரு அறை? வேடிக்கையாக இல்லை... ?

சிறு துரும்பும் பல் குத்த உதவும். எல்லாப் பற்களும் போன பிறகா..?

வேலை செய்யுங்கள், தேவையானதை வாங்குங்கள், உபயோகியுங்கள், செத்துப் போங்கள். (Work - Buy - Use - Die)

ஒரு முறை உழவர் சந்தையில் ஒரு பெண், வெண்டைக்காய் 350 கிராம் வாங்கிவிட்டு, 50 கிராம் அதிகமாக எடுத்த துண்டுகளை வைத்து விட்டார்கள். அவரது கணவர் 50 கிராம்தானே என்று சொன்ன பொழுது, அது தேவையில்லை என்று வைத்து விட்டார்கள்.

நான் இங்கே சில சமயம் கணக்கு பார்க்காமல் வாங்கிவிட்டு கெட்டுப்போய்விட்டது என்று குப்பையில் கொட்டியிருக்கிறேன். நாம் எவ்வளவு வீணடிக்கிறோம் ?

நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள், நபிகள் தொழும்போது தனது இரண்டு கால்களையும் மடக்கிக் கொள்வார்கள். தொழுது முடித்தவுடன் கால்களை நீட்டிக் கொள்வார்கள் என்கிற அளவுக்குத்தான் அவர்களின் வீடு.

அவர்கள் இந்த உலக வாழ்வை நிரந்தரமாக நினைக்காதவர்கள் என்பதால் அவ்வாறு வாழ முடிந்தது.

அதற்காக அந்த அளவுக்கெல்லாம் நாம் இருக்கச் சொல்லவில்லை, இருந்தாலும் பெரிய பெரிய வீடுகள், அந்தஸ்துக்காக கட்டிவிட்டு இப்பொழுது அந்த வீட்டில் வாழ்வதற்கு எவரும் இருப்பதில்லை.

பெரும்பாலான வீடுகளில் முதியவர்கள் தனிமையில்தான் வசிக்கின்றார்கள்.

வீடு என்பது செங்கற்களால் கட்டப்பட்டதல்ல, உறவுகளால் சொந்தங்களால். குறைவான சதுர அடியில் உள்ள வீட்டில் உள்ள தொடர்பு, பெரிய வீடுகளில் இருப்பதில்லை.

அந்த வீட்டைப் பராமரிக்கவே, காலம் முழுவதும் சம்பாதித்துக் கொண்டேயிருக்க வேண்டும். ஒரு காலகட்டத்தில் அந்த வீட்டில் நீங்கள் தனியாக வாழப் போகின்றீர்கள்.

காலம் முழுவதும் ஓடி ஓடி சேகரித்துவிட்டு இறுதிக்காலத்தில் சேர்த்து வைத்ததையே சுமைகளாக நினைக்கிறார்கள்

சூப்பர் மார்க்கெட்டுக்குப் போய் பொருட்கள் வாங்குவதற்கும், அண்ணாச்சி கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

முதலானது, நீங்கள் காண்பது, உங்களுக்குத் தேவையானது என்று உங்களுக்குள் திணிக்கப்படுவதை வாங்குகின்றீர்கள்.

இரண்டாவது, நீங்கள் உங்களுக்குத் தேவையானது மட்டும் வாங்குகின்றீர்கள்.

மினிமலிசம் என்பது கஞ்சத்தனத்தின் இன்னொரு வடிவமல்ல. உங்களுக்குத் தேவையானவற்றை பெருக்கிக் கொள்வதுதான் மினிமலிசம். ஆம் தேவையானதை மட்டும்.

நாம் முக்கியமாக மிக முக்கியமாக கருதுபவைகள் எல்லாம் இறந்த பிறகு செல்லாதவைகளாகிவிடும்.

நாம் இப்போது சேகரித்து வைத்திருக்கும் மிக முக்கிய நினைவுகளாக வைத்திருக்கும் பொருட்களும் அப்படியே. ஒருநாள் செல்லாதாவை ஆகிவிடும்.

செல்லாமல் பயனில்லாமல் போகக்கூடிய பொருட்களையா இப்படி பாதுகாத்து வைத்திருக்கிறோம்?

நம்முடைய நினைவுகளாக எவரோ ஒருவர் அவற்றை சேகரித்து வைத்திருப்பார்கள் எனில் அப்படிப்பட்ட மனிதர்களை சம்பாதிப்பது வரம். ஆனால் இறந்தவர்களின் பொருட்களை அபசகுனமாக நினைக்கிறார்கள் என்பதே யதார்த்த நிலை

மினிமலிசம் பற்றி இஸ்லாம் ஏற்கனவே நபிகளின் வாழ்க்கை மூலமாகவும், அவர்களின் நடவடிக்கைகள் மூலமாகவும், குர் ஆன் வசனங்கள் மூலமாகவும் சொல்லியிருக்கிறது

''மனிதன் எத்தகையவன் என்றால் பொருளைச் சேமித்து அதனைக் கணக்கிட்டு தன்னிடமே வைத்துக் கொண்டான். நிச்சயமாக தனது பொருள் தன்னை இவ்வுலகில் நிரந்தரமாக்கி வைக்கும் என அவன் நினைத்துக் கொண்டான்.'' (திருக்குர் ஆன்–104:2) வீண் விரயம்

25:67. இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும் இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.

மினிமலிசத்தை எந்த அளவுக்குப் பேண வேண்டும் என்பதை நபிகளின் இந்தப் போதனையில் தெரிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறும் போது. ''உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒரு துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம்" என்று அறிவுருத்தினார்கள்.

கீழே விழுந்த உணவுப் பொருட்களைக் கூட, அது அசுத்தப்படாமலிருந்தால், வீண்விரயம் செய்யாமல் சாப்பிட வேண்டும் என்றிருக்கும்போது நாம் தினமும் உணவினை எப்படி வீணடிக்கிறோம்?

வீண் விரயங்கள் வாழ வந்தவர்களுக்கிடையே பொறாமைகளை அதிகரிக்கிறது. சிலர் பொருள் ஈட்டுவதற்கான சூழ்நிலைகள் எளிதாக இருக்கிறது. சிலருக்கு அதுவே மிகவும் கடினமாக இருக்கிறது.

தங்களிடம் உள்ள பணத்தால் தேவைக்கு அதிகமாக ஆடம்பரத்திற்காக அவர்கள் வாங்கும் பொருட்கள் இல்லாதவர்களுக்கு செல்லக்கூடிய பங்கினைத் தடுக்கிறது. இது சமநிலையை என்றுமே கொடுப்பதில்லை.

சமநிலை இல்லாத சூழலில் பொருள் ஈட்ட இயலாதவர்கள் மற்றவர்கள் மீது கோபம் வருகிறது. எப்படியாவது அதனை அடைந்துவிடவேண்டும் என்று குறுக்கு வழியைத் தேடுகிறது.

ஆக திருட்டு நடப்பதற்கும், கொள்ளை நடப்பதற்கும் காரணம் இல்லாதவர்கள் அல்ல.. இருப்பவர்கள்தான்.

பொருட்களைக் குறைத்துப் பாருங்கள். மன நிறைவு கிடைக்கும்.

அவசியமாக அந்தப் பொருள் தேவைப்படுகிறது, உபயோகமாக இருக்கும் என்று கருதினால் வாங்குங்கள் இல்லையென்றால் தவிர்த்து விடுங்கள்.

ஒவ்வொரு சமுதாயத்தினரும் வெவ்வேறு விதமான சோதனைகளைக் கடந்து வந்திருக்கின்றார்கள். இந்த சமுதாயத்தின் சோதனையே செல்வம்தான்.

சென்னை வெள்ளம், கஜா புயல் போன்ற இயற்கைப் பேரிடர் நேரங்களில் மக்கள், துணிகளையும் பொருட்களையும் நிவாரணத்திற்கு அளித்து உதவி செய்தார்கள்.

அவையெல்லாம் அவர்களுக்குத் தேவையில்லாததாகப் போய்விட்டது. தனக்குத் தேவைப்படுவதை, தாம் விரும்புவதை தர்மமாய் கொடுப்பதற்கும், தேவையில்லாததை கொடுப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு .

தேவைக்கேற்ப வாங்குங்கள், தேவைக்கேற்ப செலவு செய்யுங்கள், தேவைக்கேற்ப சிந்தனை செய்யுங்கள், தேவைக்கேற்ப பேசுங்கள். தேவைக்கேற்ப எழுதுங்கள்.
இந்தப் பதிவு கூட மினிமலிசம் தாண்டிச் சென்றுவிட்டது.

நீங்கள் இடையில் ஒரு நிலையில் இருக்கலாம், ஆனால் RIP நிலையை நோக்கியே பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

இறுதிப் பயணத்திற்கு வரப் போகும் அந்த நாலுபேரை கூகுளிலா தேடுவீர்கள்? வேண்டுமானால் உங்கள் மரணத்தை லைவ் செய்து, லைக் போடச் செய்யலாம்.

பொருட்களுக்கு கொடுக்கும் மதிப்பை மனிதர்களுக்குக் கொடுங்கள்.

- ரசிகவ் ஞானியார்