உலக முழுவதும் தன் சூழலியல் குறித்தான பேச்சினால் அறியபட்ட நபராக உருமாறி இருக்கின்றார் "கிரேட்டா தன் பெருக்".

உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசு, ஓசோன் படலத்தில் ஓட்டை போன்ற வார்த்தைகள் நாம் அதிகம் கேள்விப்படும் வார்த்தைகள் தான். ஆனால் அதுகுறித்த எதிர்வினைகள் இன்னமும் போதிய அளவில் ஏற்படாது போயிருப்பதற்கு நாமும் தான் காரணம்!

greta thunberg and trumpகாரணங்களை மட்டுமே சொல்லிடாமல் சுற்றுச்சூழல் தீங்குகளிலிருந்து காக்க தன்னால் என்ன செய்யலாம் என்றிருக்கையில், தன் பள்ளிப்படிப்பை துறக்கலாம் என முடிவு செய்து, பள்ளிப் படிப்பையே நிறுத்திவிட்டு போராட்டங்களைத் துவங்கி, தற்போது உலக நாடுகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாணவர்கள் ஒன்று திரண்டு வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டங்களை சுற்றுச் சூழலுக்காக அமைத்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் 16 வயது கிரேட்டாவின் போராட்ட குணமும் சமூக அக்கறையுமே!

இது மிகவும் ஆச்சரியப்படத் தக்க ஒன்றுதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனியாக தன் ஸவீடன் நாட்டில் துவங்கி, தற்போது 156 நாடுகளைச் சார்ந்த மாணவர்களோடு நியூயார்க் நகரத்தில் மாபெரும் பேரணியினை நடத்தி பிரமிக்க வைத்துள்ளாள்.

ஹவூடி மோடி நிகழ்ச்சியில் "டிரம்ப் - மோடியுடன்" ஒரு சிறுவன் "செல்பி" எடுத்துக் கொண்டது எப்படி மீடியாக்களின் வெளிச்சத்திற்கு ஆட்பட்டு நிமிடத்திற்கு நிமிடம் ஒளிபரபப்பட்டது. மாறாக, "டிரம்ப்" தன்னைக் கடந்து செல்லும்போது கிரேட்டா அவரை முறைத்துக் கொண்டு பார்த்த வீடியோ சமூக வலையதளங்களில் டிரண்டிங் ஆன பின்பு தான் வழக்கம் போல மீடியாக்களின் பார்வைக்கு வந்தது; பின்பு அவளின் ஐநா மன்ற உரையும் வந்தது.

டிரம்ப் உட்பட உலகத் தலைவர்கள் அனைவரையும் தன் அனல் ததும்பும் கேள்விகளாலும் "உங்களை நாங்கள் மன்னிக்கவும் மாட்டோம், நம்பவும் மாட்டோம்" என்ற வார்த்தைகளினாலும் துளைத்து விட்டாள் சிறுமி கிரேட்டா!!!

"கிரேட்டாக்கள்" ஸ்வீடனில் மட்டும் பிறக்கவில்லை! தமிழகத்திலும் பிறந்தாள் "ஸ்னோலின்" என்ற பெயருடன்.

தூத்துக்குடியில் தன் பொருளாதார வயிற்றை நிரப்ப அப்பாவிகளை புற்றுநோயினால் மடிய வைக்கும் "ஸ்டெர்லைட்" ஆலைக்கு எதிரான 99 நாட்கள் போராட்டத்தின் இறுதி வடிவான ஆட்சித் தலைவர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் திட்டமிட்டு வாயில் ஸ்னைப்பரால் சுடப்பட்டுக் கொல்லபட்டாள்.

அன்று மட்டும் ஸ்னோலின் கொல்லப்படாது போயிருப்பின், நிச்சயம் அவளும் உலகத்திற்கு ஒரு 'கிரேட்டா தன்பெருக்'கைப் போல அடையாள காணபட்ட சுற்றுச்சூழல் ஆர்வலராக மாறியிருப்பாள்!

ஜனநாயக மாண்புகளை(!) உலகத்திற்கே முன்மாதிரியாகத் தரும் இந்திய தேசம் தன் கிரேட்டா 'ஸ்னோலினையும்' விட்டுவிடவில்லை. ஏன் அதன் தேசத்தந்தை காந்தியையும் விடவில்லை. அவரும் ஸ்னோலினைப் போல கார்ப்ரேட் அடிவருடிகளின் துப்பாக்கிகளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள இயலாது போனார்.

மாறாக வலதுசாரித் தத்துவங்களினால் நிரம்பிய / வளர்ச்சிக்கு எதனையும் செய்யலாம் என்ற கொள்கையுடன் செயலாற்றும் மேற்கத்திய தேசம் இந்த 'கிரேட்டா தன் பெருக்' குரல்களையும் செவிமடுக்கின்றது , பேச வாய்ப்பும் அளிக்கின்றது - நெருக்கடியாக இருப்பினும் சரி! வெறுப்பாக இருப்பினும் சரி!

- நவாஸ்