உலகச் செம்மொழிகளில் ஒன்றாகிய தமிழ்மொழி நம் தாய்மொழி என்பதில் நாம் பெருமைப்படுகின்றோம். அது நம் பிறப்புரிமை. ஆயினும் அந்தச் செம்மொழியின் மேம்பாட்டுக்கும் புழக்கத்துக்கும் பயனீட்டுக்கும் ஏற்பட்டு வரும் இடையூறுகளை நாம் களையாவிட்டால், அவற்றை வேறு யார் நீக்குவார் என்று எண்ணிப்பார்த்ததால், இந்தக் கட்டுரையை எழுத மனம் கொண்டேன். இன்று நம் சமுதாயம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, கணியத்திலும் போலிப்பழக்க வழக்கங்களிலும் அதிக ஈடுபாடு காட்டி வருவதைக் கண்கூடாகக் காண முடிகிறது.

வன்முறைகளை வளர்க்கும் சினிமா, வீட்டில் கூடப் பட்டுப்புடவைகளுடன் மகளிர் உலா வருவதாகக் காட்டும் குப்பைத் தொலைக்காட்சித் தொடர்கள், மொழிக்கொலை செய்யும் அயல்மொழிக்காரர்களின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் மிதமிஞ்சிச் செலுத்தி வரும் கவனத்தைக் குறைத்துக்கொண்டு, தங்கள் குடும்ப நன்மைக்கோ, சமூகத்தில் வசதி குறைந்தோரின் நன்மைக்கோ செலுத்தினால் அதனால் பயன்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அல்லவா? நம்மில் சிலர், ஆங்கிலப் பெயர்ச்சொற்களை எல்லாவற்றிலும் பயன்படுத்திப் பெருமைபடுகிறார்கள். ஆனால் அது ஒரு போலித்தன்மைதான் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். சோறு, அரிசி ஆகியவற்றை ரைஸ் என்றுதான் சொல்ல வேண்டுமா?

தமிழர்களிடம் பேசும்போதுகூட தமிழில் பேசக்கூடாதா? அயல்மொழியாளர்களிடம் ஆங்கிலத்தில் சொல்வது தவறு இல்லை. சோணாடு சோறுடைத்து என்று முதுமொழியே இருக்கும் போது, நாம் எதற்காக ரைஸ் என்று சொல்ல வேண்டும்? ஆங்கிலத்தில், முழுமையாகப் பேசமுடியாமல், முழுமையாக எழுதமுடியாமல், தமிழையும் கொசைப்படுத்தி திட்டமிட்டு எழுதியும் பேசியும் வரும் ஒரு சில கும்பல்களால்தான் இப்படிப்பட்ட செயல்பாடுகள் மிகுந்து வருகின்றன எனலாம். தமிழ் நாட்டில் இப்போது யாருமே வேலைக்குச் செல்வதில்லை போலும். ஏன் தெரியுமா? அவர்கள் அனைவருமே வொர்க் பண்ணப் போயிருக்கிறார்கள் என்று தான் சொல்லப்படுகின்றது.

இன்று, நம் மக்களில், குறிப்பாக, இளையர்களில் பலர், நைட், வொர்க், ஷ¥கர், மேடம், கோ-பிரதர், •பீலிங், ஜாப் உள்ளிட்ட பல சொற்களைத் தமிழ்ச் சொற்கள் என்று எண்ணித் தமிழர்களிடம் தமிழ் ஊடகங்களிடம் பேசுகிறோர்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இதற்கு சிலை தொலைக்காட்சிகளும் துணை போகின்றன. எந்தத் தொலைக்காட்சி என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவசியமிராது. காபி வித் அனு என்றுதான் தலைப்பு வேண்டுமா? ஆங்கில நிகழ்ச்சிக்கு வேண்டுமானால் அவ்வாறு பெயர் வைக்கட்டுமே.! “அதுவரை பிரேக்” என்று தான் சொல்ல வேண்டுமா? இடைவேளைக்குப் பிறகு நிகழ்ச்சி தொடரும் என்று கூறக்கூடாதா? ஆங்கில நிகழ்ச்சிக்கு அவ்வாறு பெயர் வைக்கட்டுமே’

தமிழ்ப்படங்களுக்குத் தமிழில்தான் பெயர் வைக்கவேண்டுமா என்று கேட்கும் அயல்மொழியாளர் பெருகி வரும் தமிழ்நாட்டு விந்தையை என்ன என்பது? கர்நாடகத்திற்குச் சென்று தமிழில் பெயர் வைக்க முடியுமா? அல்லது கன்னடத்தில்தான் பெயர் இருக்க வேண்டுமா என்று கேட்கமுடியுமா? நம் இளையர்கள் ஆங்கிலம் படிக்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. நன்றாகப் படிக்கட்டும். எல்லாத் துறைகளிலும் நம் இளையர்கள் முன்னேற்றம் கண்டால் நமக்குத்தானே பெருமை? ஆனாலும் ஆங்கிலத்தை முறையாகப் பேச வேண்டும், எழுத வேண்டும், அங்கும் இங்குமாக ஓரிரு ஆங்கிலச் சொற்களைப் பொருள் புரியாமல் பயன்படுத்திவிட்டு, ஆங்கிலத்தை அறிந்துகொண்டு விட்டதாகத் திரிவது யாருக்கும் நன்மை செய்யப் போவதில்லை.

யாருக்கும் இருக்கக்கூடாத மற்றொன்று, தாழ்வு மனப்பான்மை. அண்மையில் கோயாம்புத்தூரில் ஓர் உணவகத்துக்குச் சென்றிருந்தேன். அந்தக் கடைக்காரரின் பையன், ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். தமிழில், தம்பி என்ன படிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ஆங்கிலத்தில்தான் பதில் சொன்னான். எனக்கு வியப்பாக இருந்தது. தமிழ் தெரியாதா தம்பி என்றேன். நான் இங்கிலீஷ் மீடியம் என்றான். அதைக்கேட்டு, அவனுடைய தந்தை ஒரு புன்னகை கலந்த பூரிப்பை வெளிப்படுத்தினார். ஆனால் நான் சற்று வேதனைப்பட்டேன். அந்தச் சிறுவயதிலேயே தாய்மொழியை அவனுக்குப் போதிக்காவிட்டால், அவனுக்கு வாழ்நாள் முழுவதும் அதைப் பற்றித் தெரியாமல் போய்விடுமே என்று அஞ்சினேன்.

என்னிடம் இருந்த சில மழலையர் பள்ளிப் புத்தகங்களைக் கொடுத்து விட்டு வந்தேன். மேடையில் எத்தனையோ முழக்கங்கள்! அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும் கொள்கைகள்! ஆனால் நம்மைப் பொறுத்த வரையில், தாய்மொழியைக் கட்டாயம் வீடுகளில் பேசவேண்டும். பெற்றோர், உடன்பிறந்தோர், உறவினர் இடையே தாய் மொழி பேசப்படாவிட்டால், அது எப்படி நம் மக்களிடையே பெரிய அளவில் வாழும் மொழியாக வளர்ச்சி காண முடியும்?

அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ்மொழி மாதத்துக்கு வருகை அளித்திருந்த ஜப்பானிய தமிழ் அறிஞர் ஹிரோஷிமாவும் ரஷ்ய தமிழறிஞர் அலக்சாந்தரும் எங்கள் ஒலி 96 புள்ளி 8 வானொலியில் தமிழ் பேசியதைக் கேட்டு உள்ளமெல்லாம் மகிழ்ந்தோம். இப்படி அயல் மரபுகளிலிருந்து வந்தவர்கள் எல்லாம் அழகாகத் தமிழ் பேசும்போது, தமிழர்களாகிய நாம் இன்னமும் பேசத் தயக்கம் காட்டுவது முறையாகப்படவில்லை. தொலைக்காட்சித் தொடர்களில் நம் மரபுகளுக்கு மாறாக நடைபெறும் நிகழ்வுகளை யார்தான் மாற்றப் போகிறார்களோ?

சமையல் நிகழ்ச்சிகளில் கூட இயல்பான எளிய அடுப்பங்கரைச் சொற்களைக் காணோம்! பானைக்குப் பதிலாக POT இடம்பெறுவது ஏனோ? கரண்டிக்குப் பதில் ஸ்பூன், பிஞ்சுச்சோளத்துக்குப் பதில் பேபி கோர்ன், காளானுக்குப் பதில் மஷ்ரூம், பொட்டேட்டோ, டுமாட்டோ எல்லாம் எப்படியோ நுழைந்து விட்டன. தமிழ் நிகழ்ச்சிகளில் தமிழ்ச் சொற்களைப்பயன்படுத்துவது பாவமான ஒரு செயலா என்ன?

திருவாட்டி பெனாசிர் புட்டோ சுடப்பட்ட காட்சியின்போது ஒரு தமிழ்நாட்டுத் தொலைக்காட்சியில் அவரின் Shoe-க்களும் அருகில் கிடந்தன என்று செய்தி வாசித்தவர் கூறினார். இங்குக் குறைகளை மட்டும் சொல்ல வேண்டும் என்பது என் நோக்கமல்ல. ஆனால், செம்மொழி நிலைக்கு உயர்ந்துள்ள தகுதிமிக்க நம் மக்கள், இப்படியே சென்று கொண்டிருந்தால், நாளைடைவில் என்ன ஆகும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

இத்துணை செய்தி இதழ்களும் மாத இதழ்களும் இணைய இதழ்களும் தமிழில் வந்துவிட்ட நேரத்திலும்கூட, இடைக்காலத்தில் நுழைந்துவிட்ட செருகல்கள், இன்னமும் தொடரத் தான் வேண்டுமா? உலகின் இணையத்தில் கூடுதலான பயன்பாடு நம் தமிழுக்குத்தான் என்பது உண்மையானால், கவர் ஸ்டோரி என்று எழுதப்படுவது தொடர வேண்டுமா? அட்டைக் கதை என்று போட்டுத் தகவல் வெளியிட்டால் அது யாருக்கும் புரியாமல் போய்விடுமா?

நம் மொழியை மேலும் பரப்புவதிலும் வளர்ப்பதிலும் நமக்கும் பங்கு உண்டு என்பதற்காகத் தான் இதை எழுதினேன். பிற மொழிகளைப் படிப்போம். அதே வேளையில் நம் மரபுகளைக் கொச்சைப்படுத்தாமல் மொழியை முறையாகப் பயன்படுத்துவோம். நம் மொழி நம் கண்ணுக்கு இணையானதல்லவா? அன்புக்கண்மணிகளே மொழி காப்போம். அது நமக்கு வரலாறு படைக்கும். 

- செ.ப பன்னீர்செல்வம், சிங்கப்பூர்