1.சர்ச்சைக்குரிய சுவர் இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருசாரார், தங்கள் குடும்ப அட்டைகளை அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைத்தனர்..... , சர்ச்சைக்குரிய சுவற்றை இடித்து தங்கள் சமூகத்தை அரசு அவமதித்துவிட்டதைக் கண்டித்து ஒருசாரார் ஊரைவிட்டு வெளியேறி மலையடிவாரத்தில் வெட்டவெளியில் குடியேறினர்... ஊரைக் காலி செய்து மலையடிவாரத்தில் தங்கியிருந்தவர்கள் கொட்டும் மழையிலும் வெட்டவெளியிலேயே இருந்ததால் இன்னின்னாருக்கு சளி, இருமல். இத்தனைபேருக்கு காய்ச்சல்.... அரசாங்கம் தருவதற்கு முன்வந்த மருத்துவ சிகிச்சைகளை ஏற்க மறுப்பு... - இப்படியாக உத்தப்புரம் சுவர் இடிப்பை எதிர்ப்பவர்கள் மீது அனுதாபம் சுரக்குமளவுக்கு பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பதற்றத்தோடு வெளியாகும் செய்திகளின் பின்னுள்ள உண்மைதான் என்ன? அந்த சுவர் யாரால் எதற்காக எப்போது ஏன் கட்டப்பட்டது, இப்போது ஏன் எதற்காக யாரால் இடிக்கப்பட்டது? சர்ச்சை என்ற வார்த்தை இங்கே எதைக் குறிக்கிறது என்பவற்றைப் பற்றிய முழுமையான தகவல்களை இந்த ஊடகங்கள் மக்களுக்குத் தெரிவிக்கின்றனவா?

Uthapuramமேற்கு மகாராஷ்ட்ராவில் கொய்னா அணைக்கட்டின் காரணமாக இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட தலித்துகளும் மராத்தாக்களும் வேறொரு இடத்தில் குடியமர்த்தப்பட்டனர். தலித்துகள் வாழும் பகுதி பீம் நகர். மராத்தாக்கள் வாழும் பகுதி டேர். இரு சமூகத்தவருக்கும் பொதுவான சமுதாயக்கூடத்தை தலித்துகள் பயன்படுத்த முடியாத வண்ணம் மராத்தாக்கள் மதில்சுவர் எழுப்பி தடுத்துவிட்டனர். சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி நீதிமன்றம் மூலமாக சுவற்றுக்கு ஒரு சட்டப்பூர்வ ஒப்புதலையும் பெற்றுவிட்டார்கள். சுவற்றை இடிக்காவிட்டால் 14.04.2008 அம்பேத்கர் பிறந்த நாளன்று தாங்கள் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தலித்துகள் அறிவிக்க வேண்டியிருந்தது. (பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு விசயத்தில் கண்மூடித்தனமான உயர்சாதி மனேபாவத்தோடு செயல்பட்டாலும்) மிகவும் உள்ளொடுங்கிய கிராமமொன்றில் நடந்த அந்த தீண்டாமைக் கொடுமையை வெளிப்படுத்தி தலித்துகளுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் சுவற்றை இடிக்க வைத்ததில் ஆங்கில ஊடகங்களின் பங்கு பாராட்டுதலுக்குரியது. வலுவான மக்கள் இயக்கங்கள் இல்லாத இடங்களில் ஊடகங்கள் மக்களின் கண்ணிய வாழ்வுக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் ஊடகங்களும் துணைநிற்க முடியும் என்பதற்கு இது ஒரு சான்று.

உத்தப்புரம் விசயத்தில் ஊடகங்கள் அப்படி ஒருபால் கோடாமையோடு நடுநிலையாக- அதாவது நியாயத்தின் பக்கம் நிற்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. செய்திகளின் நம்பகத்தன்மை, ஊடகத்துறையில் சாதி வகிக்கும் பாத்திரத்தை முன்வைத்தே தீர்மானிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில் உத்தப்புரம் பிரச்னை அணுகப்படுகிறது.. சுவர் எழுப்பப்பட்டதன் பின்னணியில் உள்ள சாதிப் பாகுபாட்டையோ, அதனால் தலித்துகள் அடைந்துள்ள அவமானவுணர்வையோ, அது இடிக்கப்படுவதில் உள்ள நியாயத்தையோ மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு பதிலாக சுவர் விரும்பிகளின் செய்திகளுக்கே கூடுதல் அழுத்தம் கொடுக்கின்றனர். வட்டார நிருபர்கள் தங்களது சாதிச் சாய்மானத்தை - தலித் எதிர்ப்பு நிலையை கைவிட்டுவிட்டு பிரச்னையை அணுக முன்வருவார்களேயானால் உத்தப்புரம் சுவரைப் போன்ற நூற்றுக்கணக்கான தீண்டாமைக் கொடுமைகளை வெளிக் கொணர முடியும்.

2. பெரும்பாலான கிராமங்களில் ஊர்க்கூட்டம் என்ற பெயரால் நடத்தப்படும் கட்டப்பஞ்சாயத்துகள் ஆதிக்கசாதியினரின் தேவைகளை நிறைவேற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. சுயேச்சையான அரசியல் பொருளாதார பலமற்று தமது வாழ்வாதாரங்களுக்கு ஆதிக்கசாதியினரை அண்டி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தலித்துகள் ஊர்க்கூட்டத்தின் பெயரால் எடுக்கப்படும் முடிவுகளுக்கு கீழ்ப்படிந்தேயாக வேண்டிய நிலையுள்ளது. எனவே, மதுரை மாவட்டம் பேரையூர் ஒன்றியத்திலுள்ள உத்தப்புரம் கிராமத்தில் 1990ல் தலித்துகளும் தலித்தல்லாதவர்களும் கூடிப் பேசி ஒருமனதாக எழுப்பிக் கொண்டதே அச்சுவர் என்று புதிதாக கிளப்பிவிடப்பட்டுள்ள தலபுராணமானது அப்பட்டமான பொய். தலித்தல்லாதவர்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்துகொண்டு நெருக்குகிறபோது அதற்கு உடன்படுவதைத் தவிர தலித்துகளுக்கு வேறு வழியிருந்திருக்கவில்லை என்பதே உண்மை.

ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியானதைப் போல அந்த சுவர் 600 மீட்டர் நீளமுள்ளது அல்ல என்றும் வெறும் 149 மீட்டர் நீளமேயுடையதென்றும் அதன் நீள அகலங்களின் துல்லியம் குறித்த சர்ச்சையும் கிளப்பிவிடப்பட்டுள்ளது. ஊரின் எந்த மூலையிலும் தலித்துகள் நுழைந்துவிடாதவாறு வளைத்து வளைத்து சுவர் கட்டப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வியை திசைதிருப்பவே இந்த நீள அகல ஆராய்ச்சி பயன்படுத்தப்படுகிறது. ஒரு வாதத்திற்காக 149 மீட்டர் மட்டுமே சுவர் கட்டப்பட்டிருப்பதாக வைத்துக் கொண்டாலும், தலித்துகளை ஊருக்குள் நுழைய விடாமல் தடுப்பது குற்றம்தானே? இதுபற்றி எந்த நடுநிலை நாளேடும் வாய் திறக்காதது என்?

இரவுநேரங்களில் மின்சாரம் பாய்ச்சப்படுவதாக சொல்லப்படுவதும் பொய்தான் என்கின்றனர் சுவர் விரும்பிகள். அப்படியானால் 17.04.08 அன்று ‘தி இந்து’ நாளிதழில் வெளியான புகைப்படம் எதை உணர்த்துகிறது? அன்றைய தினமே சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் தோழர் நன்மாறன் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசியபோது குறுக்கிட்ட மின்துறை அமைச்சர், மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும் மின் கம்பிகளை அகற்றிவிட்டதாகவும் தெரிவித்தது பொய்யா?

தனிப்பட்டவர்கள் தமது சொந்த பட்டா நிலத்தில் தத்தமது பாதுகாப்புக்காக வீட்டின் பின்புறம் கட்டிக்கொண்ட மதிற்சுவர்களின் இணைப்புதானேயன்றி அது திட்டமிட்டு கட்டப்பட்டதல்ல என்றும் வாதிடப்படுகிறது. அவரவர் தம் விருப்பத்திற்கு வீட்டுக்குப் பின்னால் கட்டிக் கொண்டார்களென்றால், ஊர்க்கூட்டம் போடப்பட்டதும் சுவர் கட்டுவது குறித்து முடிவெடுத்ததும் அதில் தலித்துகளை மிரட்டி கையொப்பம் பெறப்பட்டதும் எதற்காக? அவரவர் நிலத்தில் கட்டிக்கொள்ளப்பட்டது என்றால் ஊர் புறம்போக்கில் பொதுப்பயன்பாட்டிற்கென அமைந்திருந்த பாதையை மறித்துக் கட்டியது யார்? அரசாங்க நிலத்தை ஆக்ரமித்து சட்டவிரோதமாய் சுவரெழுப்பிய அந்த குற்றவாளி தனிநபரா அல்லது உத்தப்புரம் பிள்ளைமார் அனைவருமா?

தவிரவும் இங்கு ‘பாதுகாப்புக்காக’ என்ற வார்த்தைப் பயன்பாட்டை கவனிக்க வேண்டியுள்ளது. நாடு முழுவதும் ஆதிக்கசாதியினரால் தலித்துகள் நாளும் நொடியும் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், உத்தப்புரத்தில் மட்டும் விதிவிலக்காக தலித்துகளால் ஆதிக்கசாதியினருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அளந்துவிடும் கதைகளை யார்தான் நம்புவது? திருடுவது, பெண்களிடம் வம்பாடுவது போன்ற குற்றங்களைச் செய்கிற சிலர் பிள்ளைமார் உட்பட எல்லாச் சாதியிலும் இருக்கிறார்கள். அப்படியிருக்க, உத்தப்புரம் தலித்துகள் அனைவரையும் திருடர்களாகவும் பெண்களை சீண்டுகிறவர்களாகவும் குற்றம் சாட்டி அவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவே சுவர் கட்டினோம் எனக் கூறுவதை ஏற்க முடியாது. ஒட்டுமொத்தமாக ஒரு சாதியையே குற்றவாளிகளாக சிறுமைப்படுத்தி குணச்சிதைவைப் பூசுவதும் தீண்டாமை வன்கொடுமையின் இன்னொரு வடிவமேயாகும்.

- இப்படி சுவர் கட்டிய குற்றத்தை மறைக்க அடுத்தடுத்து பல பொய்களை சுவர் விரும்பிகள் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்க, இவ்விசயத்தில் பல கட்சிகள் பெரிய பெரிய பிளாஸ்திரிகளை ஒட்டிக்கொண்டு வாய் திறக்காமல் கிடந்தன. இதில் ஆளுங்கட்சி - ஆளாத கட்சி, தலித் கட்சி - தலித்தல்லாதவர் கட்சி என்று எந்த பேதமும் இல்லை. உத்தப்புரத்தின் பிள்ளைமார் சாதிக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்குமான தனிப்பட்ட பிரச்னையாக இதை மாற்றிவிடப் பார்த்தன. அதேநேரத்தில், ஆதிக்கசாதியினரின் குற்றங்களை கண்டிக்கும் திராணியற்ற தமது அரசியல் கோழைத்தனத்தை மறைக்க, அரசியல் ஆதாயத்துக்காக தலித்துகளை தூண்டிவிடுவதாக மார்க்சிஸ்ட் கட்சி மீது புகார் கூறவும் அவை தயங்கவில்லை.. சுவற்றை இடிக்கச் சொல்வது அரசியல் ஆதாயத்துக்காக என்றால் அதுபற்றி கருத்து தெரிவிக்காமல் இருப்பதும் அரசியல் ஆதாயத்துக்காகத்தான் என்ற குறைந்தபட்ச தர்க்கத்தைக் கூடவா மக்களால் புரிந்து கொள்ளமுடியாது?

சுவற்றை இடி அல்லது இடிப்போம் என்ற முழக்கத்தோடு மார்க்சிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் 2008 ஏப் 29 அன்று இரண்டாயிரம் பேருடன் ஆர்ப்பாட்டம் நடத்தியபோதும்கூட கட்சிகளிடம் எந்த அசைவும் இல்லை. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பகுதியாக கலந்துகொண்ட உத்தப்புரம் தலித்துகளின் உணர்வுகளை, அவர்களின் ஏகோபித்த தலைவராய் அன்றுவரை இருந்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமியால்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. உத்தப்புரம் கிராமத்தோடு தனக்கு கடந்த பத்தாண்டுகளாக தொடர்பிருப்பதாகவும், ஆறேழுதடவை அங்கு போய் வந்திருப்பதாகவும், தன்னிடம் இந்த சுவர் பற்றி யாருமே புகார் சொல்லவில்லை என்றும் கூறியதோடு, சுவற்றைக் கட்டியுள்ள பிள்ளைமார் சாதியினர் ஆதிக்கசாதியினரிலேயே மிகவும் மிதமானவர்கள் என்றும் நற்சான்று வழங்கினார் கிருஷ்ணசாமி.

அத்தோடு அவர் நிற்கவில்லை. தன்பாட்டுக்கு நின்று கிடக்கும் சுவரை இடிப்போம் தகர்ப்போம் என்று அரசியல் ஆதாயத்துக்காக சில கட்சிகள் தலித்துகளை தூண்டிவிடுகின்றன. அவர்கள் பின்னால் சென்றுவிடாதீர்கள் என்று தலித்துகளை எச்சரிக்கவும் செய்தார் கிருஷ்ணசாமி. சாதிய மோதல்கள் முடிவுக்கு வந்து இணங்கி வாழும் இந்த நேரத்தில் சுவர் பிரச்னையை எழுப்பினால் பிற சாதியினர் ஒன்று சேர்ந்துகொண்டு தலித்துகளை தனிமைப்படுத்திவிடுவார்கள் என்பதே அவர் தினத்தந்தியிலும் டெக்கான் கிரானிக்களிலும் கொடுத்த பேட்டியின் சாரம்.

கிருஷ்ணசாமியின் இந்த எச்சரிக்கை நமக்கொன்றும் புதிதல்ல. ஒடுக்குமுறையை ஒடுக்குமுறை என்று உணர்ந்து எதிர்க்காதவரை, இணங்கி வாழ்வதாக தோற்றம் காட்டுவதில் சிக்கலொன்றும் இல்லைதானே? சாதியொடுக்குமுறை இருப்பதாக கேள்வியெழுப்பும் போதெல்லாம் ‘எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை, தாயாப்புள்ளையா கூடிக்குலாவி வாழ்கிறோம்’ என்பதான வசனங்களை எவ்வளவு காலமாக கேட்டுக் கொண்டிருக்கிறோம்?

Prakash Karat in Uthapuramஎதிர்த்தால் தலித்துகளை தனிமைப்படுத்திவிடுவார்கள் என்ற கிருஷ்ணசாமியின் அச்சம் நியாயமானதுதான். ஆனால் பயந்தே கிடந்தால் எப்போதுதான் எதிர்ப்பது? எதிர்த்துப் பேச அஞ்சியிருந்தால் இமானுவல் சேகரன் என்ற தியாகி கிடைத்திருப்பாரா? தலித்துகளின் பெருமைக்குரிய முன்னோர்களில் ஒருவரான வீரன் சுந்தரலிங்கம் கையில் பளபளக்கும் வாளை வெறும் அட்டைக் கத்தியாக குறுக்கும் அதிகாரம் தனக்கில்லை என்பதை கிருஷ்ணசாமி உணர வேண்டும். அடித்தால் திருப்பி அடி என்ற ஆவேச முழக்கமெல்லாம் சுவற்றில் எழுதப்படும் வெற்று வாசகங்களாக தேய்ந்துபோனால் தலித்துகள் எப்போதுதான் சுயமரியாதையோடு வாழத் தொடங்குவது என்பது பற்றி, மீசையை முறுக்கி போஸ் கொடுப்பதிலேயே பொழுதைக் கழிக்கும் பிற தலித் தலைவர்களும் சற்றே யோசிக்க வேண்டியுள்ளது.

கட்சிகள் தான் இப்படியென்றால் வாழும் சமத்துவப் பெரியாரின் ஆட்சி சுவர் பிரச்னையை எவ்வாறு அணுகியது என்று பார்ப்போம். தமிழக மக்களின் பிரச்னை என்றால் பிரதமருக்கு ஆறஅமர கடிதம் எழுதுவதும், தமது குடும்ப விசயமென்றால் பதறியடித்து ஃபேக்ஸ் அனுப்பிவிட்டு நேரடியாய் ஆளம்புகளையும் ஏவிவிடுகிற ராஜதந்திரியை முதல்வராகப் பெற்றிருக்கிற இம்மாநில அரசாங்கத்தின் நடவடிக்கை சுவர் பிரச்னையை மேலும் மேலும் சிக்கலாக்கியது. களஆய்வில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் 2008 பிப்ரவரி 22 அன்றே இப்பிரச்னையை மார்க்சிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுவிட்டன. அரசின் தரப்பில் அசைவில்லை.

மார்ச் 25 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தி ஆட்சியரிடம் கோரிக்கை மனு தரப்பட்டது. நடவடிக்கை இல்லை. ஏப்ரல் 17ம் தேதி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டது. மின் இணைப்புதான் துண்டிக்கப்பட்டதேயன்றி சுவர் விசயத்தில் நடவடிக்கை இல்லை. சுவரை இடிக்குமாறு சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தும், மாநிலக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியும் கூட பலனில்லை. ஏப்ரல் 29ம் தேதி ஆர்ப்பாட்டத்துக்கும் அசரவில்லை. ஆறப்போட்டு ஊறப்போட்டு, ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்று இழுத்தடிப்பின் மூலம் தீவிரத்தை நீர்த்துப்போக வைக்கமுடியுமா என்ற ரீதியிலேயே பிரச்னை அணுகப்பட்டது. கோடநாடு எஸ்டேட் விசயத்தில் காட்டுகிற வேகத்திலும் விவேகத்திலும் இத்துனூண்டு காட்டியிருந்தால்கூட ஒரு தீர்வை எட்டியிருக்க முடியும்.

தீண்டாமையைக் குற்றமாக அறிவிக்கும் சட்டம் அமலில் உள்ள இந்த நாட்டில் இவ்வளவு வெளிப்படையாக தீண்டாமையை அறிவிக்கும் வகையில் சுவரெழுப்பிய பிள்ளைமார்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்திருக்க வேண்டும், சுவற்றையும் இடித்துத் தள்ளியிருக்க வேண்டும். சாதிகளைக் கடந்து ஒரு சமூகமாக இணங்கி வாழ்வதை உத்திரவாதப்படுத்தியிருக்க வேண்டும். அதுவும் முடியாதபோது இந்த நாட்டின் அரசியல் சட்டம் முன்மொழிகிற சமத்துவத்தை மதிக்காத குற்றத்திற்காக அவர்களது குடியுரிமையை ரத்து செய்து அவர்களிடமிருந்து குடும்ப அட்டைகளை அரசாங்கம் பறிமுதல் செய்திருக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலிலிருந்து அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டிருக்க வேண்டும். நாட்டின் இயற்கை மற்றும் பொதுவளங்களையும் நிதியாதாரங்களையும் பயன்படுத்துவதிலிருந்து அவர்கள் முற்றாக விலக்கிவைக்கப்பட்டிருக்க வேண்டும். மொத்தத்தில் தீண்டாமையை கடைபிடிக்கிற அவர்கள் இச்சமூகத்தின் எல்லா முனைகளிலும் தளங்களிலும் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது சாதிவெறி என்னும் மரபுரீதியான மனநோயால் பீடிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் மனநல மருத்துவமனையிலாவது சிகிச்சைக்கு சேர்த்திருக்க வேண்டும். ஆனால் இதில் எதுவொன்றையும் செய்கிற சொரணையும் அரசியல் உறுதிப்பாடும் ஆட்சியாளர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இல்லாது போய்விட்டது.

சமாதானப் பேச்சுவார்த்தை என்ற பெயரால் தங்களை தாஜா செய்யவே நிர்வாகம் முயற்சிக்கிறது என்பதை புரிந்துகொண்ட பிள்ளைமார்கள் மிகுந்த இளக்காரத்தோடும் செருக்கோடும்தான் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருக்கிறார்கள். தீண்டாமையை கடைபிடிப்பதை தங்களது பிறவி உரிமைகளில் ஒன்றாகக் கோருகிற அவர்களுக்கெதிராக கடுமை காட்டாததன் விளைவு, சுவர் இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் தமது குடும்ப அட்டைகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் துணிவைக் கொடுத்துள்ளது.

நாட்டின் அவமானச் சின்னங்களில் ஒன்றாக இருக்கும் அந்த தீண்டாமைச் சுவரை பார்வையிட்டு காறியுமிழ மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் 07.05.2008 அன்று உத்தப்புரத்திற்கு வருவதாய் அறிவிக்கப்பட்ட நிலையில், அதுவரை மந்தகதியில் இருந்த நிர்வாகம் சற்றே பதற்றமடைந்து களமிறங்கியது. 05.05.08 அன்றிரவு பெரும் எண்ணிக்கையிலான போலிசாரை கிராமத்திற்குள் இறக்கி 06.05.08 காலையில் இருபதடி சுவற்றை இடித்து பொதுப்பயன்பாட்டுக்கான ஒரு பாதையை நிறுவியுள்ளது.

3. ‘இடிக்கப்பட்டது உத்தப்புரம் சுவர். தலித்துகள் புழங்குவதற்கான பொதுப்பாதை நிறுவப்பட்டுவிட்டது...’ என்ற செய்தியைக் கேட்டதும் புதுதில்லியிலுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் எல்லோருக்கும் இனிப்பு வழங்கப்பட்டதாய் கேள்விப்பட்டேன். ஊர் முழுவதையும் வளைத்து வளைத்து எழுப்பியுள்ள சுவற்றில் வெறும் இருபது அடியை இடித்ததற்கா இவ்வளவு கொண்டாட்டம் என்று தோன்றியது. ஆனால் சுவற்றைக் கட்டிவைத்திருந்த சாதிவெறியர்கள் இந்த இருபதடி இடிப்புக்குக் காட்டிய எதிர்வினையைக் கண்ட பிறகுதான், அந்த சுவற்றிலிருந்து ஒரேயொரு ஒற்றைச் செங்கல்லை உருவியிருந்தாலும்கூட அது கொண்டாடப்பட வேண்டிய வெற்றியே என்பது உறைத்தது.

Uthapuram Dalitsஏற்கனவே அறிவித்திருந்தபடி தோழர் பிரகாஷ் காரத் 07.05.08 காலை உத்தப்புரம் வந்து சுவர் இடிக்கப்பட்ட பகுதியில் பொதுப்பயன்பாட்டுக்காக போடப்பட்டிருந்த புதிய பாதையையும் இன்னும் எஞ்சியிருக்கிற சுவற்றையும் பார்வையிட்ட பிறகு ஊர் மந்தையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தலித்துகளிடையே உரை நிகழ்த்தினார். தங்களுக்கென்று அமைக்கப்பட்டிருந்த புதியபாதையில் நடப்பதில் ஏற்படும் சுதந்திரவுணர்ச்சியை அனுபவிக்கும் பேரார்வம் கண்ணில் பொங்க காத்திருந்த அந்த உத்தப்புரம் தலித்துகளோடு சேர்ந்திருந்த அந்தப் பொழுதை வாழ்வின் உணர்ச்சிமயமானதொரு திருப்பமாகவே உணர்கிறேன்.

இந்த பூமியில் ஒவ்வொரு அடியை எடுத்து வைப்பதற்கும் ஒரு தலித் போராட வேண்டியிருக்கிறது என்ற உண்மையை உணர்த்துகிறவர்களாக அவர்கள் வெயிலிலே தகதகத்துக் கொண்டிருந்தார்கள். (கூட்டத்திடலுக்கு அருகேயிருந்த ஒரு சுவற்றில் ‘சமத்துவப்போராளி’ என்ற பட்டத்துடன் மருத்துவர் கிருஷ்ணசாமியின் படம் போட்ட சுவரொட்டி ஒட்டப்பட்டதைக் கண்டதும் எனக்கு தாளமுடியாத சிரிப்பு. அன்று காலையில் மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய சரத்குமாரைப் பார்த்து அவரது தொண்டர்கள் ‘சமத்துவ நாயகன்’ என்று கோஷம் எழுப்பியபோதும் எனக்கு இதேமாதிரியான சிரிப்பு வந்து தொலைத்தது).

இதுவரை பபுள்கம் மென்றுகொண்டிருந்த அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் சுவர் இடிப்புக்குப் பிறகு வாய் திறந்தன. அரசியல் ஆதாயத்திற்காக மார்க்சிஸ்ட்டுகள் சுவர் பிரச்னையை எடுத்திருப்பதாகப் பொருமினார்கள். அடப்பாவமே, கட்சி என்பது அரசியல் ஆதாயத்திற்காகத்தான் இயங்குகிறது என்ற புரிதலில்லாமல் இருக்கிறார்களே... ஒருவேளை பொருளாதார ஆதாயத்திற்கென்று இருப்பதுதான் கட்சி என்று இவர்கள் தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ?

கம்யூனிஸ்ட்கள் தலித்துகள் பிரச்னையை முன்வைத்துப் போராடுவதில்லை என்று குற்றம் சாட்டுவதும், தலித்துகள் பிரச்னையை முன்வைத்து கம்யூனிஸ்ட்டுகள் போராடும்போது மிகுந்த மனத் தொந்தரவுக்குள்ளாகி, தமக்குப் பாத்தியப்பட்ட ராஜ்ஜியத்துக்குள் அந்நியர் நுழைந்துவிட்டதைப் போன்ற அசூயை உணர்வுக்கும் அச்சவுணர்வுக்கும் ஆட்பட்டு குதர்க்கமான சந்தேகங்களை எழுப்புவதுமாகிய பலவீனத்திலிருந்து தலித் முரசு போன்ற பத்திரிகைகளும் விடுபட வேண்டியிருக்கிறது. இம்மாத தலையங்கத்தில், சுவர் பிரச்னையை மார்க்சிஸ்ட் கட்சிதான் கையிலெடுத்துப் போராடுகிறது என்று சொல்வதற்குக்கூட அதற்கு மனம் வரவில்லை. சிலர் என்றே குறிப்பிடுகிறது. எல்லாவற்றுக்கும் மதமாற்றமே தீர்வு என அது இந்த தலையங்கத்திலும் குறிப்பிடுகிறது.

தலித்துகள் எந்த மதத்துக்குள் ஓடி ஒளிந்து கொண்டாலும் அவர்களை தலித்துகளாகவே பிறர் பார்க்கின்றனர் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள அது தயாராயில்லை. சரி, தலித்துகள் பௌத்தத்தை தழுவிவிட்டதாகவே வைத்துக்கொள்வோம். அப்போது சுவற்றைக் கட்டியவர்களே அதை இடித்துவிடுவார்களா? கிருஷ்ணசாமிக்கு ஆரோக்கியமான மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. உத்தப்புரம் சுவர் போன்ற பல தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக தலித் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களை இடதுசாரிகள் ஆதரிக்க வேண்டும் என்று பரந்த ஒற்றுமைக்கு அறைகூவல் கொடுத்திருக்கிறார். அந்த சுவற்றை இடிக்க இடதுசாரிகள் நடத்தியப் போராட்டத்தை தான் ஏன் ஆதரிக்கவில்லை என்பது பற்றி அவர் எப்போதாவது சொல்வார் என்று நம்புவோமாக. சுவர் பற்றிய எல்லா உண்மைகளும் வெளியாகிவிட்ட நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்போதுதான் ‘உண்மையறியும்’ குழுவை நியமித்திருக்கிறது. இனிமேல் அது கண்டறியப் போகும் புதிய உண்மைகளை வரவேற்க நேரமிருப்பவர்கள் காத்திருக்கவும்.

சுவர் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலித்தல்லாதவர்கள் ஊரை காலிசெய்துவிட்டு மலையடிவாரத்திற்கு சென்று காற்றிலும் மழையிலும் வெயிலிலும் குளிரிலும் வெட்டவெளியிலேயே குழந்தைக் குட்டிகளோடு தங்கியிருப்பதாக ஊடகங்கள் புலம்பத் தொடங்கின.

1989 சாதிக் கலவரங்களையொட்டி தலைமறைவாகி திருப்பூருக்கு ஓடிப்போய் கொஞ்சம் பசையுள்ளவர்களாக வளர்ந்திருக்கும் உத்தப்புரம் பிள்ளைமார் திருப்பூரிலிருந்து திரட்டிக்கொண்டு வந்திருக்கும் ஆட்களின் துணையோடு தலித்துகளின் தோப்புகளை ஆக்கிரமித்து அங்குதான் பிள்ளைமார் அனைவரும் தங்கியிருக்கிறார்கள் என்ற உண்மையைச் சொல்ல எந்த ஊடகமும் தயாரில்லை.

தாக்குதலுக்கான முன்தயாரிப்போடு கத்தி கபடா அருவாக்கம்பு போன்ற ஆயுதங்களை திரட்டிக் கொண்டு வந்துள்ள அவர்களைத் தடுத்தால் பிரச்னை வேறுவகையாக திசைதிரும்பிவிடும் என்ற நன்னோக்கில் தலித்துகள் அமைதி காத்து வருகின்றனர் என்பதையும், தங்களது தோப்புகளை மீட்டுத் தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்திருக்கிறார்கள் என்பதையும்கூட தெரிவிக்க ஊடகங்கள் முன்வரவில்லை. தலித்துகளின் மூச்சுக்காற்று பட்டால்கூட தீட்டு பாய்ந்துவிடும் என்று அலட்டிக்கொள்கிறவர்களுக்கு, தலித்துகளின் தோப்புகள் இப்போது புனிதச்சோலையாய் தெரிகிறது போலும்.

07.05.08 நாங்கள் சென்றிருந்தபோது உத்தப்புரத்தில் தலித்தல்லாதவர்கள் வீடு அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன. தன் பிதிரும் பிள்ளைகளும் வனவாசம் போயிருக்கிற விசயம் தெரியாமல் ஒரேயொரு மூதாட்டி மட்டும் எல்லோரும் தன்னை விட்டுவிட்டு எங்கோ போய்விட்டார்களென புலம்பிக் கொண்டிருந்ததது. ஊரை விட்டுப் போனாலும் போவோமே தவிர தீண்டாமையைக் கைவிட முடியாது என்கிற சாதியாணவத்தில் திளைத்திருக்கிற பிள்ளைமார்கள், கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து தங்களைக் காப்பாற்ற ‘மகாத்மாவே எழுந்து வாரீர்’ என்று சுவரொட்டி வெளியிட்டிருந்த கேவலத்தையும் கண்டோம். காந்தி இருந்திருந்தால் இவர்கள் மீது காறித் துப்பியிருப்பார்.

வனவாசத்தில் இருக்கும் அவர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்க 09.05.2008 அன்றுதான் பாரதீய ஜனதா கட்சியினர் நுழைந்துள்ளனர். இன்னும் சில தினங்களுக்குப் பின், இந்த சுவர் யாராலும் கட்டப்பட்டதல்ல, அது 5 லட்சத்து 13 ஆயிரத்து 743 வருடங்களுக்கு முன்பு தனக்குத்தானே சுயம்புவாக உருவானது என்ற புதிய கதை ஒன்று கிளம்புவதற்கான வாய்ப்புமுள்ளது. ஏனென்றால் நாட்டில் எந்த கட்டுமானம் எப்படி உருவானது, அதை இடிக்கலாமா கூடாதா என்பதற்கான நாள் தேதி நட்சத்திரம் பற்றிய சகல தஸ்தாவேஜூகளும் தங்களிடம் இருப்பதாக கப்சா விடுவதில் அவர்களுக்கு இணையாக இங்கு யார் இருக்கிறார்கள்?

உத்தப்புரம் சுவர் பிரச்னையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டாதிருக்கும் முக்குலத்தோரை எப்படியாவது இழுத்துவிட்டு தலித்துகளையும் முக்குலத்தோரையும் மோதவிட வேண்டும் என்று ஒரு கோஷ்டி களமிறங்கியுள்ளது. உத்தப்புரம் அருகேயுள்ள கோடாங்கிநாயக்கன்பட்டியிலுள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அவமரியாதை செய்து பழியை தலித்துகள் மீது சுமத்திவிட்டால் அவர்கள் எதிர்பார்க்கிற மோதல்கள் தொடங்கிவிடும் என்று காய் நகர்த்துகிறார்கள். சிலைகளை முன்வைத்து மனிதர்களை பலிகேட்கும் சாதிவெறியை கட்டுக்குள் நிறுத்த, சிலையை அவமதித்த உண்மையான குற்றவாளிகளை கைதுசெய்ய தமிழக அரசு முனைப்புடன் இயங்க வேண்டும்.

உத்தப்புரத்தில் அடைந்திருக்கும் விடுதலையுணர்ச்சி ஒவ்வொரு கிராமத்துக்கும் பரவுமானால், ஒடுக்குமுறை சாதியாதிக்கத்தை தலித்துகள் தகர்த்துவிடுவார்கள் என்ற அச்சத்தை முன்வைத்து இடைநிலைச்சாதிகளை தலித்துகளுக்கு எதிராக அணிதிரட்டும் வேலையும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. தோப்புக்குள் தங்கியிருப்பவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க மூவேந்தர் முன்னேற்றக் கழக பொறுப்பாளிகள் வந்து போயிருக்கின்றனர். தோப்புக்குள்ளிருப்பவர்களை சமாதானப்படுத்தி ஊருக்குள் அழைத்துவரும் முயற்சியில் ஆளுங்கட்சியினரும் ஈடுபட்டிருக்கிறது. தோப்புக்கு உணவுப் பொருட்களை அனுப்பி பிள்ளைமார்களின் சாதிவெறியுடன் ஒருமைப்பாடு தெரிவிப்பதில் அக்கம்பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த சில இடைநிலைச் சாதிகளும் ஆர்வம் கொண்டிருக்கின்றனர்.

தலித்துகளின் தன்மான உணர்வையும் கல்வி பொருளாதார பண்பாட்டு வளர்ச்சியையும் காணச் சகியாத பல்வேறு குமைச்சல்களையும் பொருமல்களையும் உத்தப்புரத்தை மையமாக வைத்து ஒருங்கிணைக்கவும் தலித்துகளை தனிமைப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் எல்லா முயற்சிகளிலிருந்தும் தம்மைப் பாதுகாக்கும் நிலைக்கு தலித்துகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இருபதடி சுவற்றை இடித்ததற்கே இவர்களுக்கு இவ்வளவு கோபம் வருமென்றால், சிறைக்குள் அடைக்கப்பட்டதுபோல திரும்பிய பக்கமெல்லாம் தென்படும் மதில்சுவற்றுக்குள் பதினெட்டு ஆண்டு காலமாக முடக்கப்பட்டிருந்த தலித்துகள் மனதில் எவ்வளவு கொந்தளிப்பு இருக்கும் என்ற நியாயத்தைப் பேச இன்று மார்க்சிஸ்ட்டுகளைத் தவிர வேறு யார்தான் இருக்கிறார்கள் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். நீங்களும்..... 

- ஆதவன் தீட்சண்யா