இந்தியாவின் மிகப் பெரும் பிரச்சனைகளில் முக்கியமானது பாலியல் குற்ற வழக்குகளும், அதன் நடைமுறைகளில் உள்ள தேக்கமும். இதனை இந்தியாவின் அரசியல் கட்சிகள் சரி செய்ய வேண்டுமே தவிர, ஆதரவளிக்கும் அதிசயம் எங்காவது நடக்குமா? ஆனால் இந்தியாவை ஆளும் பாஜக இச்சாதனையை நிகழ்த்தி வருகிறது.

பாஜகவின் துறவி சின்மயனந்த் மீதான குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 24ம் தேதி உத்திரப் பிரதேசத்தில் சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயனந்த் தன்னையும், தன்னுடன் பயிலும் மாணவிகள் சிலரையும் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளாக்குவதாகக் கூறி சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றைப் பகிர்ந்தார். பிறகு உயிருக்குப் பயந்து மறைந்திருந்த இவரை காவல்துறை கண்டுபிடித்தது.

chinmayanand arrestபிறகு “மோடிஜி எனக்கு உதவுங்கள். காவலர்கள், மாவட்ட நீதிபதி என எல்லாம் தன் பக்கம் இருப்பதாக என்னை மிரட்டுகிறார். எல்லோரும் அவர் பக்கம் நிற்கிறார்கள். அவரை யாரும் இதுவரை விசாரிக்கவில்லை.” என்று மாணவி வீடியோ ஒன்றைப் பகிர அது வைரலாகி பரவலாக்கப்பட்ட பிறகே சின்மயனந்த் எனும் துறவியைக் கைது செய்தனர்.

சின்மயனந்த் கைது செய்யப்பட்ட பிறகு மாணவியையும் மிரட்டி பணம் பறித்தல் பிரிவின் கீழ் கைது செய்திருக்கிறார்கள் சிறப்புப் புலனாய்வு பிரிவினர். ஆனால், இத்தனைக்கும் மாணவியின் இடைக்கால ஜாமீன் மனு நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டு, விசாரணைக்கு வரும் நிலையில் அதற்கு முதல் நாள் கைது செய்திருக்கிறார்கள்.

2014 தேர்தல் பிரச்சாரத்தின் போதான வாக்குறுதி

2014ல் தேர்தலைச் சந்தித்த பாஜக, நாட்டில் நிலவும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரச்சாரம் செய்தார்கள். ஆட்சிக்கு வந்த பிறகும் “பேட்டி பச்சாஓ பேட்டி படாஓ” ( பெண்களைப் பாதுகாருங்கள், பெண்களைப் படிக்க வையுங்கள்) என்ற திட்டமெல்லாம் உருவாக்கினார்கள்.

ஆனால் பாலியல் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தரும் புகலிடமாக மாறியிருக்கிறது பாஜக. பாலியல் வன்புணர்வுக்கு ஆதரவான கருத்துகளைக் கூட வெளியிட்டிருக்கிறார்கள் பாஜகவில் சிலர்.

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் பாஜக

உபியின் சட்டக் கல்லூரி மாணவி என்றல்ல, பாஜக ஆட்சி பொறுப்பில் உள்ள பல மாநிலங்களில் இதே நிலை தான்.

ஜனவரி 2018ல் ஜம்மு & காஷ்மீரில் உள்ள கதுவா பகுதியில் 8 வயது பெண் குழந்தை கோவிலுக்குள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, கொன்று வீசப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் அப்போது பாஜக அமைச்சர்களாக இருந்த இருவர் கலந்து கொண்டனர்.

உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக தலைவர் குல்திப் சிங் செங்கார் அவரது நண்பர்களுடன் இணைந்து 17 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை இப்பெண் வெளிக் கொண்டு வந்த பிறகு சாலை விபத்து ஒன்றை நடத்தி, கொல்ல முயன்றார்கள். குல்திப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட உடன் பெண்ணின் தந்தை மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்திலேயே கொல்லப்பட்டார்.

பாஜகவில் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் சில வழக்குகள்

மார்ச் 2009

பாஜகவின் தலைவர் அசோக் தனேஜா தன் மகளை 8 வருடம் பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார். மருத்துவ அறிக்கையும் இதனை உறுதி செய்தது.

மே 2010

கர்நாடகாவின் முன்னாள் உணவு விநியோகத் துறையின் அமைச்சராக இருந்த பாஜக தலைவர் ஹலாலப்பா நண்பனின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

நவம்பர் 2012

மத்தியப் பிரதேசத்தில் பாலாகாட் மாவட்டத்தின் பாஜக அலுவலகத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 21 வயது பெண் புகார் அளித்தார்.

மே 2013

மூத்த பாஜக தலைவர் மது சாவன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்து, அதன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது,.

ஜூலை 2013

மத்தியப் பிரதேசைச் சேர்ந்த பாஜகவின் முன்னாள் அமைச்சர் 79 வயதான ராகவ்ஜி மீது ஒரு பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து தன் பதவியை ராஜினாமா செய்தார் ராகவ்ஜீ.

செப்டம்பர் 2013

பாஜக தலைவர் பிரமோத் குப்தாவிற்கு பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை கிடைத்தது.

நவம்பர் 2013

கர்நாடகாவின் ஸ்ரீனகிரி மாவட்டத்தின் பாஜக தலைவர் ஜீவராஜ் 23 வயது பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் கொடுத்த பெயரில் வழக்கு பதியப்பட்டது.

பின்னர் சில காலங்களில் குற்றச்சாட்டைக் கூறிய பெண் மர்மமான முறையில் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

ஆகஸ்ட் 2014

மத்தியப் பிரதேச பாஜக தலைவர் ஹமீத் சர்தாருடன் ஐந்து பேர் அஸ்ஸாமில் சிறுமியைக் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக கைது செய்யப்பட்டனர்.

செப்டம்பர் 2015

குர்கௌன் மாவட்ட பாஜக தலைவரும் உடன் இருவரும் மது அருந்தி விட்டு தனியார் விடுதியில் இருந்த 30 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

ஜூலை 2016

32 வயதான பெண் ஒருவரை பாஜக தலைவர் ஹரக் சிங் ராவத் பாலியல் துன்றுத்துதலுக்கு உள்ளாக்கியதாக உத்தரகாண்ட் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

அக்டோபர் 2016

பாஜக தலைவர் வெங்கடேஷ் மௌரியா மீது 38 வயதான பெண்மணி ஒருவர் பாலியல் பலாத்காரப் பிரிவில் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நவம்பர் 2016

குஜராத்தின் பாஜக தலைவர் அசோக் மக்வானா 13 வயதுப் பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

டிசம்பர் 2016

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பைத்துல் மாவட்டத்தில் பழங்குடிப் பெண்ணை, தன் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டி, அப்பகுதியின் பாஜக தலைவரும் அவரது கூட்டாளிகளும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

ஜனவரி 2017

திருமணமான 44 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாஜக தலைவர் அனில் போஷாலே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பிப்ரவரி 2017

1) 66 வயதான ஜெய்ஷ் பட்டேல் எனும் குஜராத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் மீது நர்சிங் படிக்கும் 22 வயதுப் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.

2) குஜராத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தில் 24 வயதுப் பெண் ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதில் 4 பேர் பாஜகவின் அப்பகுதியின் தலைவர்கள்.

3) டெல்லியின் முன்னாள் எம்.எல்.ஏ பாஜகவைச் சேர்ந்த விஜய் ஜாலியின் மீது மது அருந்தி விட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு பெண் புகார் அளித்தார்.

மார்ச் 2017

பாஜக தலைவர் போஜ்பால் சிங்கும், அவரது கூட்டாளிகள் இருவரும் இணைந்து தலித் பெண் ஒருவருக்கு அழகிப் பட்டம் வாங்கித் தருவதாக வாக்குறுதி கொடுத்து வரச் சொல்லி பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(மார்ச் 2017 வரைக்குமான தகவல்கள் தான் இதுவரை இருப்பது. இதற்கு மேலும் நிறைய வழக்குகள் பாஜகவினர் மீது இருக்கிறது.)

பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்க முனையும் பாஜக

உத்திரப் பிரதேசத்தில் உள்ள பாஜக அமைச்சர் ஒருவர் கடவுள் ராமரினால் கூட பாலியல் பலாத்காரத்தைத் தடுக்க முடியாது எனக் கூறினார். ஆனால், இதற்கு எதிராக பாஜக பெண் அமைச்சர்கள் கூட  கேள்வி எழுப்பவில்லை.

சத்தீஸ்கரில் உள்ள பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் கிரோன் கெஹர், பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எச்சரிக்கையாக இருந்திருந்தால் இதுபோல் சம்பவங்கள் நடக்காது என்றார்.

பாஜகவின் தாய்க் கழகமாக அறிவிக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மேற்கத்திய ஊடுருவலால் தான் பாலியல் குற்றங்கள் நடைபெறுகிறது. இந்தியப் பெண்கள் நல்ல மனைவிகளாக நடந்து கொண்டால் இக்குற்றங்கள் குறையும் என்றார்.

இத்தகைய குற்றவாளிகளின் கைகளில் அதிகாரங்கள் தற்போது கிடைத்திருப்பதால் இந்தியா தனது அனைத்துத் துறைகளிலும் பினதங்கி சீரழிவைச் சந்தித்து வருகிறது.

- அபூ சித்திக்