இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதியில், சமீபத்திய ராணுவ நடவடிக்கைகளில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிகழ்வு கடந்த காலங்களை ஒப்பிடும்போது மிகப் பெரிய சிதைவு என்று கூறப்படுகிறது.

kashmir military 630முஸ்லிம்களை அதிகமாகக் கொண்ட காஷ்மீர் பகுதியில் ஆகஸ்ட் 5ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்ட 370 மற்றும் 35A சட்ட பிரிவுகள் நீக்கத்திற்கு, பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வரக்கூடிய நிலையில், ராணுவத்தின் நடவடிக்கைகள் மக்களின் மீது அடக்குமுறையை அதிகரித்துள்ளது.

காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது காஷ்மீர் மக்களுடைய அடிப்படை உரிமைகளையே அழிப்பதற்கு சமம் என்பதை உலக நாடுகளும் சமூக செயல்பாட்டாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மக்களிடம் எந்தவித கருத்துக் கேட்பு நடத்தாமல் இந்த சட்டப் பிரிவை நீக்கியது தவறும் என்றும், பாஜக அரசுக்கு தொடர்ந்து சுட்டிக் காட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் காஷ்மீரை தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற பாஜகவின் நோக்கம், முற்றிலும் மக்களின் மீதான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது என்பதை நாம் தொடர்ச்சியாகப் பார்த்து வருகின்றோம்.

1947ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், முடக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை சமீபத்திய நிகழ்வுகள் எடுத்துக் காட்டி வருகின்றன.

கிட்டத்தட்ட 3500லிருந்து 4000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. ஊடக சுதந்திரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஷ்மீர் பூமி என்பது ஒரு மயான பூமி என்று நமக்கு அப்பட்டமாகத் தெரிகிறது. உள்துறை அமைச்சகம் எந்தவித அக்கறையும் இல்லை மௌனம் காத்து வருகிறது.

இதுவரை காஷ்மீரில் மட்டும் 200க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளும், 100க்கும் மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள், அமைப்புகளின் தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று மக்களின் உரிமைகளுக்காக அடக்குமுறைகளை எதிர்த்து குரல் கொடுக்கக்கூடிய பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இப்படி காஷ்மீர் முற்றிலும் ஒரு மயான பூமியாக வரும் நிலையில் காஷ்மீருடைய பொருளாதார சூழலும், கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 40 நாட்களில் மட்டும் 3900 கோடி பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக காஷ்மீர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரீஸ் என்ற அமைப்பு தரவுகளை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், காஷ்மீர் இப்படியே தொடர்ந்து கொண்டு சென்றால், அதனுடைய எதிர்காலம் என்பது கிட்டத்தட்ட 50 வருடங்கள் பின்னோக்கி செல்லும் என்று கூறப்படுகிறது. மாற்றி அமைக்கப் போகிறோம் என்று சொல்லி 370 35A சட்டப் பிரிவுகளை நீக்கிய பாரதிய ஜனதா அரசு, கொஞ்ச நஞ்சம் இருக்கக்கூடிய காஷ்மீரை முற்றிலுமாக அழிக்கக் கூடிய நிலையிலேயே இருக்கிறது என்பதையே சமீபத்திய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

- நெல்லை சலீம்