உலக நியதிகள் யாவும், எல்லா கண்டுபிடிப்புகளும் தேவைகருதி முயன்று, தேவையை நிவர்த்தி செய்ய எழுந்தனவாகும். அவ்வகையில் முன்னேறிய விலங்கினமான மனிதன் தனது அடிப்படை விலங்கின இயல்புகளிலிருந்து மாறுபட்டு இயற்கையுடனானப் புரிதலை ஏற்படுத்திக்கொண்டு இயற்கையின் எல்லாக் கூறுகளையும் பயன்படுத்தக் கற்றுக்கொண்டு உலக உயிர்களில் தன்னைத்தானே முன்னிறுத்திக் கொள்ளும் முயற்சிக்கு கண்டறியப்பட்ட செயல்முறையே கல்வி என்பதே அறிவியலை முன்வைத்து நாம் அறியும் உண்மையாகும்.

 கல்வி என்பது நிறுவனப்படுத்தப்பட்டக் கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கு முன்பானதான அதன் உருவாக்கம் குறித்த கூறுகளைக் கருத்திலெடுத்து விவாதிப்பதும் உளவியல், வரலாற்றியல் தொடர்பானத் தடயங்களை எடுத்துக்கொண்டு ஆய்வதும் அதிகப் பயன்களைத் தரும்.

மனிதனும் மொழியும்

 மனித விலங்கு தான் அனுபவித்து அறிந்த, உணர்ந்த, செய்திகளை அல்லது உண்மைகளைப் பிறருக்கு அவ்வனுபவத்திற்கு முன்பே வழங்கிடும் முயற்சியாக கற்றுக் கொடுத்தல் அல்லது ஒன்றைப் பற்றிய தகவலை பகிர்ந்து கொள்ளுதல் என்ற அளவிலேயே ஆதி சமூகக் கல்வி தோற்றம் பெறுகிறது. அனுபவ அறிவுக்கான பகிர்வுதளமே கற்றல் - கற்பித்தல் - கல்வி என்பனவாகவும், அவற்றை எளிமைப்படுத்துகின்ற முயற்சியாக உபகரணமே மொழி என்பதாகவும் உருப்பெற்றது. 

languages around the worldஆதிகாலக் கல்வியின் தோற்றம் முழுக்கவுமே மனிதன் இயற்கையை தன்வயப்படுத்தி ஏற்றவாறு பயன்படுத்தி தன்னைக் காத்துக் கொள்ளுதல் என்பதிலிருந்து தொடங்கி, காலமாற்றத்திற்கு ஏற்ப, புதிய பரிணாமங்களுடன் கற்பித்தலும் கற்றுக்கொள்ளுதலுமாக அமைந்திருக்கிறது. கல்வி என்கிற செயல்முறைக்கு அல்லது தகவல் பரிமாற்ற வழிமுறைக்கு மனிதன் கண்டறிந்த உயரிய உபகரணம் மொழி.

 மொழியின் தோற்றமும் தேவையை ஒட்டியே அமைந்ததாகும். சைகையிலிருந்து எழுத்துரு வடிவத்திற்கும், சொற்பயன்பாட்டு நிலைக்கும், இலக்கிய வடிவத்திற்கும் மொழி பரிணமித்தது. மொழி உலகெங்கிலும் பலபட்ட பயன்பாடுகளுக்கு ஏற்பவும் உடல்மொழிகளுக்கு ஏற்பவும் மாற்றங்களையும் வேறுபாடுகளையும் அடைந்துள்ளது. அறிவியல்ரீதியானப் புரிதலில் மனிதனையும், கல்வி என்கிற செயல்பாட்டையும், மொழி என்கிற கல்வியல் உபகரணத்தையும் புரிந்து கொண்டாலன்றி தாய்மொழிவழிக் கல்வி குறித்த அடிப்படைகளை விவாதிக்க இயலாது.

கல்வியும் மொழியும்

 கல்வி ஒவ்வொரு பிராந்தியங்களுக்கும். ஒவ்வொரு மக்கள்குழுவுக்கும் மாறுபட்டதாகும். அந்தந்த மக்கள்குழுக்கள் கொண்டுள்ள உணவு, தொழில், பண்பாடு, வாழ்வியல் வழக்காறுகள், சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் உள்ளிட்டவற்றை மையப்படுத்தியே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்வியின் உபகரணமாக பயன்படுத்தப்படும் மொழியும் கல்விக்கு ஏற்ப அவ்வத் தன்மைகளையொட்டி நிலங்கள்தோறும் மாறுபட்டு அமைகிறது. மொழி என்கிற தகவல்தொடர்பு சாதனம் தனது நிலையிலிருந்து அல்லது தனது தோற்றக் காரணத்தை விடுத்துவிட்டு இயலுதல் தவறாகவே முடியும். மொழி மீது புனிதக் கட்டுமானங்களையும் மரபுரீதியிலான மாண்புகளையும் கட்டமைக்கும் பொழுது, மொழி இயல்பாகவே தான் எழுந்த காரணத்தை விட்டு அகன்று விடுகிறது. எனவே மொழிவழிக் கல்வி என்பதை சமகாலத் தேவையை ஒட்டியும் விவாதித்தல் நன்று.

மொழியும், தாய்மொழியும்

 மொழியைப் பயன்படுத்தி பிறரோடு தொடர்பு கொள்ளுதலின் போது தகவல் பரிமாற்றமே முதன்மை பெறவேண்டும். தகவல் பரப்பு மட்டுமே இலக்கென்றால் அத்தகைய உணர்வுத்தொடர்பு முக்கியத் தேவையாக இருப்பதில்லை. அதேவேளையில் உணர்வுப் பகிர்மானத்துக்கு இரு நபருக்கு இடையிலான உணர்வு ரீதியானத் தொடர்பு இருக்க வேண்டும். உணர்வும் கருத்தும் உளவியல் மாண்புகளை ஒட்டி நெருக்கமானப் புரிதலை ஏற்படுத்தும். எல்லா மொழிகளிலும் இதனைக் காண முடியும்.

 தாய்மொழிவழிக் கல்விக்கு எதிரான சில கருத்துக்கள் ‘பொதுமொழி என்பது நவீன காலத்தேவை’ என்பதை சமகாலப் புரிதலென மாற்றுக் கருத்தை முன் வைக்கின்றனர். தகவல்தொடர்பு மட்டுமே மொழியின் முக்கிய செயல்பாடு என்ற வகையில் நோக்கினால், பொது மொழியின் வாயிலாகத் தகவல் பரப்பப்படும் பரப்பின் விரிவு கருதி அத்தகவல் பெருமளவு மக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில் சில மாறுபட்டக் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

             பொதுமொழியாக, ஒன்றை ஏற்றுக் கட்டமைத்திடும் போது அதன் பயனாக இயலும் உலகளாவிய ஒன்றுகூட்டுதல் என்பது மனித சமூகத்திற்கு அதிகப் பயன்களை தரும்.

             மனிதக் குழுக்கள் ஒவ்வொன்றும் தமக்கெனத் தனித்தனி மொழி, பண்பாட்டு கலாச்சாரக் கூறுகளைக் கொண்டுள்ளது. அத்தனித்துவங்களை மதிக்கவும், அதன் வழிநின்று கல்வியைக் கற்பித்து உலகளாவிய தகவல் பரிமாற்றத்திற்கு வழிவிடுதல் வேண்டும்.

புனிதமும், பயனுறு நிலையும்

 கருத்தியல் ரீதியில், அறிவியல் ரீதியில் ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் “மரபும் புனிதமும் தேக்கி வைக்கப்பட்டு, புனிதப்படுத்தப்பட்ட மொழியைப் பாதுகாக்க முயலுதலின்போது சமூகம் தனது பழமரபுகளையும் பிற்போக்கு அடையாளங்களையும் பாதுகாக்க முயற்சிக்கிறது. இவ்வகை மொழிசார் அடையாளப்படுத்துதல் அதிகாரத்தேடலை நோக்கி மட்டும் நின்றிடுதலும் உண்டு. ஆதலால் மொழியின் புனிதப்படுத்துதலும், பெருமைமிகு அடையாளமாக நிறுவுதலும் தவிர்க்கப்பட வேண்டும்.” என்பதுவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

 தாய்மொழிவழிக் கல்வி வாயிலாக ஒரு மொழியைப் பாதுகாத்திட முடியும் என்கிற வாதமும் ஏற்புடையதன்று. பண்டு பயிற்று மொழியாக உச்சம் பெற்றிருந்த வடமொழி உள்ளிட்ட பலவும் பின்னாளில் அழிந்துபட்டமை அவற்றின் பயனுறு தன்மையில் ஏற்பட்ட போதாமையினாலேயே ஆகும். எனவே மொழிவழிக்கல்வி என்பதை மொழியைப் பாதுகாக்கும் செயல்முறையாகப் பார்த்திடுதல் கூடாது. மாறாக, மொழியின் பயனுறு தன்மைகளை அதிகப்படுத்துவதே மொழியைப் பாதுகாத்திட தக்க செயல்முறையாக அமையும்.

தாய்மொழி வழிக்கல்வி

 தாய்மொழி வழிக்கல்வியை வலியுறுத்தும் முன்னோர்களும் அறிஞர்களும் உளவியல் ரீதியிலாகத் தாய்மொழி உடனானப் பிணைப்புகளை முன்னிறுத்துகின்றனர். அவை உண்மையும் கூட. “ஒருவர் எம்மொழியில் பேசினாலும் அது கேட்பவருக்கு அவருடைய தாய்மொழியிலேயே புரிகின்றமையும், அவர் அதற்கான பதிலை தாய்மொழியிலேயே தயார் செய்துகொண்டு அதனை வேறுமொழிக்கு அல்லது எதிர் நிற்பவருக்கு புரிகின்ற மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடுகிறார்” என்னும் நிலையை அனுபவித்துணர்ந்தோர் தாய்மொழி உடனான உடலியல் மற்றும் உளவியல் ரீதியிலானப் இயல்புப் பிணைப்பினை நன்குணர்வர்.

 ஒருவருக்கு தாய்மொழி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? ஏன் அதனைப் போற்றவும், கற்கவும் வேண்டும்? என்பனவும் நம்முன் நிற்கும் முக்கியமானக் கேள்விகளாகும். மூதாதையர் மொழி, பெருமைகளைக் கொண்ட மொழி, நம் உணர்வோடுப் பின்னிக் கலந்த மொழி, நம் அடையாளம் என்போமாகில் இக்கருத்துக்கள் தற்காலத்தோருக்கு பழமரபு பாதுகாத்தல் என்பதாகிக் குறுகிடுதல் உண்டு.

 முன்னோர் போற்றிய பலவற்றில் பிற்போக்கான அல்லது காலத்துக்கும், கருத்துக்கும் ஒவ்வாத பலவற்றை கண்முடி வழக்கெனக் கூறி, சமகாலச் சமூகம் தவிர்ப்பதைக் காண்கிறோம். அவ்வண்ணமே மொழியையும் முன்வைப்போமாகில் வளரும் தலைமுறை எளிதில் தாய்மொழியை உதறிடத் துணியும் என்பதே உண்மை. அதற்கான சான்றுகளாக நகர்புற மாணவரிடையேயான உரையாடல்களில் பன்மொழிப் பயன்பாட்டைக் காணலாம். கூடவே எல்லா மொழியையும் சுருக்க வடிவப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முயலுகிறது இளைய தலைமுறை.

 ஒரு மொழிக்குள் புனிதம், பெருமைகளை மட்டும் கருதி அடைபடுதலை விரும்பாமையே இன்றையக் கள யதார்த்தம். இவற்றைப் புறந்தள்ளிவிட்டு மொழிவழிக் கல்வி முன்வைப்பதாயே தாய்மொழிவழிக் கல்வி இன்று சறுக்கல்களைக் காண்கிறது. தாய்மொழி வழிக் கல்வி மிக எளிமையான, நெருக்கமான, உணர்வூட்டமான கற்றல்-கற்பித்தலில் அதிக அளவிலானப் புரிதலையும், சிந்தனைச் செழுமையையும் ஏற்படுத்துவதாக உள்ளது என்கிற புள்ளியிலிருந்து எதிர்காலச் சமூகம் ஆதரிக்க வாய்ப்புள்ளது.

தமிழரும் தமிழ் வழிக் கல்வியும்

 மொழி என்பது தனிமனித உரிமை என்றப் புரிதல் எல்லோருக்கும் கட்டாயம் வேண்டும். அது தனி மனிதனுடையத் தேர்வாக, அவனுடையத் தேவைகளுக்கு ஏற்றதாக அமைந்திருக்கும் பட்சத்தில் இயல்பாகவே எந்த ஒரு தனிமனிதனும் எளிய வகையில் மிகுந்த பயன்களைத் தரக்கூடிய ஒன்றினையேத் தேர்வு செய்வான். தேவைகள் செயற்கையாக உருவாக்கப்பட்டு இவ்வ மொழிகளைக் கற்க வேண்டும் என்கிற நிர்பந்தத்தை தனிமனிதன் மீது ஏவும்போது அது திணிப்பாக அமைந்துவிடுகிறது. அதுவே சமூகத்தைத் தன் சுயம் பாதிக்கப்பட்டதாகக் கருதி, திமிறி எழுதலை வலியுறுத்துகிறது.

 ஒவ்வொன்றின் தனித்துவத்தையும் மதிப்பது தற்காலத் தேவை. மொழிச் சுதந்திரம் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக மிக அவசியமானது. அந்தப் புள்ளியிலிருந்து தமிழ்வழிக்கல்வி என்பது வலியுறுத்தப்பட வேண்டும். ஏனையக் கட்டமைப்புகள், பெருமைகள், பண்பாட்டு அடையாளங்கள் என்பவற்றை தாய்மொழிவழிக் கல்வியோடு பொருத்தி அடைசெய்து வாதிடுவது தவறாகவே முடியும்.

 தமிழர் என்ற இனம் உள்ளவரை தமிழுக்கானத் தேவையும் ஏதோ ஒரு வகையில் இருந்துகொண்டே இருக்கும். தேவை உள்ளவரைத் தேவையாதைத் தெரிந்து வழங்க வேண்டியதே மேலானோர் கடமை. அவ்வகையில் தமிழர்க்குத் தமிழ் வழியிலானக் கல்வியினைத் தொடர்ந்து தருவது தேவையாகிறது.

 எந்த மொழி பயன்படுநிலைக்கு ஏற்ப, பலவாறாக தன்னை வடிவமைத்துக் கொள்கிறதோ, காலமாற்றத்தின் தன்மையை உட்கிரகித்துக் கொள்கிறதோ அம்மொழி தான் தோற்றியக் காரணத்தை, நோக்கத்தை, அதன் தேவையைத் தொடர்ந்து நிறைவு செய்து அது வாழும் மொழியாகி நிலைபெறுகிறது. தமிழ் மொழி வெகு இயல்பாகவே இத்தன்மைகளைத் தன்னகத்தேக் கொண்டுள்ளது. ஆக, இங்கே மொழியின் பயன்படுநிலையேப் பிரதானமாகிறது. எனவே நம் மொழியை நாம் காப்பாற்றியாக வேண்டும் என்கிற நிர்பந்தத்தையும் நாம் விட்டுவிடுவது நன்று.

அரசும் கடனும்

 தாய்மொழிவழிக் கல்வியின் எளிமையான மற்றும் அதிக பயன்படுநிலைக் கருதித் தான் தாய்மொழிவழிக் கல்வியை ஊக்குவித்தல் வேண்டும். கால மாற்றத்தை ஏற்காத எதுவும், தேவைக்கேற்ப மாற்றங்களை அடையாத எதுவும், நிலை பெறுவதில்லை. அவ்வண்ணமே மொழி கற்றலின் பிரதிபலன்களை வேலைவாய்ப்பு சார்ந்த பொருளாதார மேம்பாட்டு வாய்ப்புகள் மூலமாகவும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கும் நம்மாலான அரசுக்கும் உண்டு. மொழியின் பயன்படு தளங்களைப் பரவலாக்குதல், மொழிப் பயன்பாட்டினை ஊக்குவித்தல், போன்றவை நிகழ்த்தப்பட வேண்டும்.

 மொழிப் பயன்பாட்டு நிலையிலிருந்து வேலைவாய்ப்புக்கான உறுதிப்பாடும் அமையும்போது இயல்பாகவே மொழிக்கானத் தேவை எழும். தேவைகள் நிர்பந்தங்களாக மாறி, சமூகத்தை மொழியின்பால் திருப்பும். இத்தகைய செயல்முறையினை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதில் ஏற்பட்ட தளர்வே தமிழ்வழிக் கல்வி தமிழருக்குத் தேவைதானா? என்கிற இவ்விவாத நிலைக்குத் தள்ளிவிட்டது. எங்கே சரி செய்ய வேண்டுமோ! அங்கே சரி செய்தால், அனைத்தும் சரியாகும். “மேல் கட்டுமானம் மாற்றமடையும் போது அடித்தளம் தானாகவே மாற்றத்தை ஏற்கும்” என்கிறது உருசிய மாமேதை லெனினின் வாக்கு.

 மீண்டும் கூறுகிறேன்..! தேவையே ஒரு பொருளின் வாழ்நாளை தீர்மானிக்கும். அவ்வண்ணமே மொழியும் காப்பாற்றப்படும், நிலைபெறும். தமிழ்மொழி கற்றல்-கற்பித்தல் பணிகளில் எதிர்காலத்திற்கான உத்தரவாதங்கள் அமைந்திருக்கும் பட்சத்தில் பொதுவெளியில் தமிழ்வழிக்கல்வி இயல்பாகவே முன்னேற்றப் பாதைக்கு நகரும்.

 புதியச் சிந்தனைகளும், மாற்று சிந்தனைகளும் தான் உலகில் நாகரிக வளர்ச்சியை தந்திருக்கின்றன. தாய்மொழி வழிக் கல்வியின் வாயிலாகவே சுயசிந்தனைக்கான அடித்தளங்களை ஏற்படுத்தமுடியும் என்கின்றன அறிவியல் ஆய்வுகள். அவ்வகையான கற்பித்தலே வெற்றிகரமானது என்பதை மனிதகுல வரலாறுகள் நம் கண்முன் நிற்கின்றன.

 எனவே தாய்மொழிவழிக் கல்வியை வரலாற்றோடும் உளவியலும் பொருத்திப் பார்த்து அறிவியல் தன்மையுடன் தலைமுறைகளுக்கும் அளிக்கும் பட்சத்தில் மனிதகுலம் செழுமை பெறும். நாம் இத்தகைய வலியுறுத்து தளங்களை நோக்கி கவனத்தை நகர்த்துதல் சிறப்பு. அரசு தாய்மொழி வழிக் கல்விக்கான முன்னெடுப்புகளை இன்னும் ஊக்கமுடன் மேற்கொள்ள வேண்டும். அரசுடன் இணைந்து அறிவார்ந்த சமூகமும் தமது பங்களிப்பை நல்கிட வேண்டும்.

- சி.விஜய், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர், மதுரை-625514