அதிகாரம் எங்கெல்லாம் சுரண்டும் சிறுபான்மை ஆளும்வர்க்கத்தின் கரங்களில் குவிக்கப்படுகின்றதோ, அங்கெல்லாம் அது பாசிசமாக உருப்பெருகின்றது. அந்தப் பாசிசம் சுரண்டும் சிறுபான்மையின் அடியாளாக வேலை செய்வதையும், உழைக்கும் பெரும்பான்மையின் குரல்வளையை நெறிப்பதையுமே தன்னுடைய வேலையாகக் கொள்கின்றது. வர்க்க வேறுபாடுகள் தீர்க்கப்படாத சமூகத்தில் மேல்கட்டுமானம் என்பது எப்போதுமே அடித்தளத்தில் மீது ஆதிக்கம் செய்யவும், அதை இன்னும் அழுத்தி நசுக்கவும், ஒடுக்கவுமான கருவியாகவே பயன்பட்டு வந்திருக்கின்றது. இன்று இந்திய சமூகத்தில் மேற்கட்டுமானமாக இருக்கும் அரசு உறுப்புகள் அனைத்தும் அப்படித்தான் சாமானிய உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், அவர்களை மேலும் மேலும் ஒட்டச் சுரண்டும் சிறுபான்மையின் கையாளாகவுமே செயல்பட்டு வருகின்றன.

high court chennaiமக்களுக்கு சேவையாற்றவே உருவாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட அரசு உறுப்புகள் அனைத்தும் அந்தப் பணியை செய்யாமல் அப்பட்டமாகவே சாமானிய உழைக்கும் மக்களுக்கு எதிராக இன்று மாறியிருக்கின்றன. அவை தன்னை சமூகத்திற்கு அப்பாற்பட்ட சக்தி படைத்ததாக, சுரண்டுவதற்கும், ஒடுக்குவதற்கும் தனக்குக் கட்டற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நினைத்து மக்கள் விரோத அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சங்கராச்சாரியின் முன் காலில் செருப்பில்லாமல் நிற்பதற்கும், வைகுண்டராஜனின் முன்பு ஒரு புழுவைப் போல நெளிவதற்கும் பழக்கப்பட்ட அதே காவல்துறைதான், சாமானிய உழைக்கும் மக்கள் சிறுசிறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும்போது எந்தவித தார்மீக அறமும் இன்றி, அவர்களின் கை, கால்களை உடைத்து ஊனமாக்குவதோடு, கூடுமானவரை அவர்களிடம் இருந்து பணம் பிடுங்கும் வேலையையும் செய்கின்றது. காவல் நிலையங்களின் உள்ளே கட்டப்பஞ்சாயத்து செய்வதும், வெளியே வழிப்பறி செய்வதையுமே தங்களின் முதன்மையான தொழிலாகக் கொண்டு காவல்துறை செயல்பட்டு வருகின்றது.

பணக்காரர்களிடம் வாலை ஆட்டுவதையும், உழைக்கும் மக்களை கடித்து வைப்பதையும் காவல்துறை மட்டும்தான் செய்கின்றது என்று இல்லை. அதைவிட பல மடங்கு அதை முறைப்படுத்த வேண்டிய நீதித்துறையும் அப்படித்தான் இருக்கின்றது. ஊழலிலும், அதிகார அத்துமீறலிலும் ஈடுபடும் குற்றக்கும்பலின் புகலிடமாக நீதித்துறை இன்று மாறி இருக்கின்றது.

இன்று நீதிமன்றத்தை சூழ்ந்திருக்கும் இரண்டு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பது பார்ப்பன பயங்கரவாதமும், முதலாளித்துவ பயங்கரவாதமும் ஆகும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகிய நான்கு நீதிபதிகளும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது நமக்கு நினைவிருக்கலாம். மிக முக்கியமான வழக்குகளை தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு மட்டுமே விசாரிக்கின்றது, அவை மற்ற மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு ஒதுக்கப்படுவதில்லை, வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகின்றது, அவர் தனக்கு விருப்பமான அமர்வுக்கே வழக்குகளை ஒதுக்குகின்றார், இதனால் நீதிமன்ற நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்றும், நீதிமன்ற அமைப்பை பாதுகாக்காவிட்டால் நாட்டில் ஜனநாயகம் அழிந்துவிடும் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்கள்.

நாட்டின் உயரிய நீதி அமைப்பான உச்சநீதிமன்றமே சங்கிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததைக் கண்டு நாடே மிரண்டு நின்றது. ஒருபக்கம் நீதிமன்றத்தின் மாண்புகளை காப்பாற்றப் போராடும் நீதிபதிகளும், இன்னொரு பக்கம் தனக்குக் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு பதவியும், சொத்தும் சேர்க்கத் துடிக்கும் நீதிபதிகளுக்கும் இடையே இந்திய நீதித்துறை மாட்டிக் கொண்டு சீரழிவதையும், இரண்டு எதிர் எதிர் போக்குகளாக நம் காலத்தில் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

சாதி, மதப் பித்து கொண்டவர்களாகவும், பதவிக்கு ஆசைப்படுபவர்களாகவும் இருக்கும் நீதிபதிகள், கீழமை நீதிமன்றங்களில் இருந்து, உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம், சி.பி.ஐ நீதிமன்றங்கள், என்.ஐ.ஏ நீதிமன்றங்கள் என அனைத்திலும் நீதித்துறையின் மாண்புக்கு சவால் விட்டுக்கொண்டு அமர்ந்திருக்கின்றார்கள். இதுபோன்றவர்கள் மூலம் தான் அசீமானந்தா, பிரக்யாசிங் தாகூர், கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித், டி.ஜி.வன்சாரா, மோடி, அமித்ஷா என அனைவருமே தங்களுக்கு சாதகமான தீர்ப்புகளைப் பெற முடிந்தது. இன்றுவரையிலும் பெற்றும் வருகின்றார்கள்.

இப்படி நீதிபதிகள் தங்களின் அதிகாரங்களை பணத்திற்காகவும், பதவிக்காகவும் , சாதிக்காகவும், மதத்திற்காகவும் முறைகேடான வழிகளில் பயன்படுத்தி நீதியின் மாண்புகளை சீர்குலைக்கும்போது, ஒரு சாதாரண குடிமகனாக அவனால் இந்த அநீதிக்கு எதிராக எதுவுமே செய்ய முடியாத சட்டப் பாதுகாப்பை அவர்களுக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியிருக்கின்றது. அந்தத் தைரியத்தில் தான் என்ன வேண்டுமானாலும் உத்திரவிடலாம், என்ன வேண்டுமானாலும் கருத்து கூறலாம் என்ற எண்ணத்தில் பல நீதிபதிகள் செயல்பட்டு வருகின்றார்கள்.

நீதிபதிகள் தன்முன் இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நீதிபரிபாலனம் செய்வதற்குப் பதிலாக, தன்னுடைய சொந்த அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் இடமாக நீதிமன்றத்தை மாற்றும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருவதை நம்மால் பார்க்க முடிகின்றது. சில நாட்களுக்கு முன்பு இழப்பீடு தொடர்பாக தன்னிடம் வந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஒருவர், தமிழ்நாட்டில் தேசியமயமாக்கப்பட்ட பேருந்துகளை தனியார்மயப்படுத்த வேண்டும் எனக் கருத்துரைத்து இருந்தார். வழக்குக்கு எந்த வகையிலும் சம்மந்தமில்லை என்றாலும் அவரால் இப்படியான ஒரு கருத்தை எந்தவிதக் கூச்சமும், குற்ற உணர்வும் இல்லாமல் வைக்க முடிகின்றது என்றால் நீதிபதியின் உண்மையான நோக்கம் தான் என்ன? நீதிபதி தனியார் பேருந்து முதலாளிகளிடம் பணம் வாங்கிக்கொண்டுதான் இப்படி கருத்துரைக்கின்றார் என்று நாம் சொல்லவில்லை. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதற்கான வாய்ப்புகளை முற்றிலும் புறந்தள்ளிவிட முடியாது.

நமக்குத் தெரிந்து எந்த நீதிபதியும் பேருந்தில் செல்வது கிடையாது. அப்படி இருக்கும் போது, நீதிபதி உண்மையில் சாமானிய மக்களின் நலனின் பாற்பட்டுத்தான் நீதிபரிபாலனம் செய்கின்றார் என்றால், சாலைகளை சீரமைக்கவும், தரமான பேருந்துகளை இயக்கவும், ஓட்டுநர்களின் வேலை நேரத்தை ஒழுங்கு முறைப்படுத்தவுமே உத்திரவிட்டிருக்க வேண்டும். ஆனால் நீதிபதிக்கு அதைப் பற்றியெல்லாம் அக்கறையில்லை என்பதைத்தான் அவரது கருத்துக்கள் காட்டுகின்றது. அன்று அவர் முன்னால் எந்த வழக்கு விசாரணைக்கு வந்திருந்தாலும் மாண்புமிகு நீதிபதி அவர்கள் பேருந்துகளை தனியார்மயப்படுத்த வேண்டும் என்றுதான் சொல்லி இருப்பார்.

இது ஒரு புறம் என்றால், இன்னொருபுறம் சென்னை தாம்பரத்தில் இயங்கி வரும் கிறிஸ்தவக் கல்லூரி மாணவிகளுக்கு 2 பேராசிரியர்கள் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்கள் என்று வந்த புகாரின் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் சம்மந்தப்பட்ட பேராசிரியரை பணி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸைக் கொடுத்துள்ளது. இதை எதிர்த்து அந்தப் பேராசிரியர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் வழக்குக்கு எந்த வகையிலும் சம்மந்தமில்லாமல், எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் "ஆண், பெண் என இருபாலர் பயிலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் படிப்பது பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது அல்ல என்ற கருத்து பெற்றோர்கள் மத்தியில் நிலவுகிறது. அதே போல கட்டாய மதமாற்றத்திலும் சில நிறுவனங்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தரமான கல்வியை வழங்கினாலும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் நன்நெறியைப் போதிக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகி உள்ளது” என கருத்துரைத்து இருந்தார்.

எச்.ராஜாவும், இல.கணேசனும், ராமகோபாலனும் நீதிபதியாக இருந்தால் என்ன சொல்வார்களோ, அதைத்தான் நீதிபதி வைத்தியநாதனும் சொல்லியிருக்கின்றார். காரணம் எச்.ராஜாவும், இல.கணேசனும், ராமகோபாலனும், வைத்தியநாதனும் தனித்தனி மனிதர்களாக இருந்தாலும், இவர்கள் அனைவரையும் இணைக்கும் புள்ளி என்பது பார்ப்பனியமே. தற்போது நீதிபதி வைத்தியநாதன் தான் சொன்ன ஆதாரமற்ற கருத்தை திரும்ப பெற்றுக் கொண்டார் என்றாலும், அப்படியான கருத்தை சொன்னதற்காக அவரை யாரும் பதவியில் இருந்து எல்லாம் நீக்க முடியாது, அவரை சிறைக்கு அனுப்பவும் முடியாது. அவர் வழக்கம் போல தன்னுடைய பாசிசக் கருத்துக்களை பரப்பும் மேடையாக தொடர்ந்து நீதிமன்றத்தை பயன்படுத்தலாம்.

இந்திய நீதித்துறை அதன் உச்சபட்ச அபாய கட்டத்தில் இருக்கின்றது என்பதைத்தான் இதுவரை நாம் பார்த்தோம். நீதிபதிகள் பார்ப்பனிய அடிமைகளாகவும், முதலாளித்துவத்தின் கைக்கூலிகளாகவும் மாறியிருக்கும் இந்த நேரத்தில் பாசிசத்துக்கு எதிரான நம்முடைய போராட்டம் என்பது நீதிமன்றத்தைத் தாண்டி வெளியே வரும்போதுதான் நம்மால் உண்மையில் பாசிசத்தை முறியடிக்க முடியும்.

- செ.கார்கி