குறைந்தபட்ச அடிப்படை மாத ஊதியம் ரூ.4600- என மசோதா தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் சட்டம் நிறைவேற்றப்பட்டது - பத்திரிக்கைச் செய்தி.

மனிதர்கள் தம்மிடமுள்ள கருவிகளைக் கொண்டு இயற்கையின் மீது செயல்பட்டு தமது தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற பொருள்களைப் படைக்கும் நிகழ்வுப் போக்கையே உழைப்பு என்கிறோம்.

எந்தவொரு பொருளையும் உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவுடன் முதலாளி எதிர்பார்க்கும் லாபத்தைச் சேர்த்து அந்தப் பொருளுக்கு நிர்ணயிக்கப்படுவதே விலை ஆகும்.

எனது உழைப்பின் விலை என்ன? உங்கள் உழைப்பின் விலை என்ன? நமது உழைப்பின் விலை என்ன? என்பன போன்ற கேள்விகள் நமக்குள் என்றாவது தோன்றியதுண்டா?

salary vs work doneஅந்த பெரிய மனிதர் பெரும்பணக்காரராய் இருப்பதற்கு காரணம் அவர் 4 மணி நேரம்தான் தூங்குவாராம். 20 மணி நேரம் தன் நிறுவனத்தின் நிர்வாகத்தை தினமும் கவனிப்பாராம் என்று ஒருவர் இன்னொருவரிடம் பேசிக் கொண்டிருந்தார் .

அப்போது அந்த இன்னொருவர் கேட்டார், அப்படியென்றால் அந்தக் கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளிகள் பணக்காரராக மாறிவிட்டார்களா? ஏன் மாறவில்லை ? என்று.

அவர்கள் இருவரும் வேறு யாருமல்ல. பால்கடை நடத்துபவர்கள். தினமும் காலை முதல் இரவு வரை ஓயாது உழைப்பவர்கள். டீக்கடைகளுக்கும், வீடுகளுக்கும் பால்பாக்கெட் போடுபவர்கள். இருவரும் தினமும் பல ஆயிரம் லிட்டர் பாக்கெட் பால் விற்றாலும் அவர்கள் கையில் என்னமோ, வண்டி பெட்ரோலுக்கும், தினசரி சாப்பாட்டுக்கும் காசு நிற்பதே சிரமம்தான். ஆனால், அந்த பால் விநியோகம் செய்யும் நிறுவனம் பல கிளைகளுடன் பல்லாயிரம் கோடி இலாபத்துடன், தொலைக்காட்சிகளில் விளம்பரத்திற்கு மட்டும் பல கோடி ரூபாய்களை வாரி இறைத்துக் கொண்டு இருந்தது.

இதில் நிறுவனம் நடத்தும் முதலாளி விமானத்தில் செல்வதற்கும், பால்பாக்கெட்டுகளை மூலை முடுக்கெல்லாம் சென்று விற்றுக்கொடுத்த விற்பனை செய்யும் உழைக்கும் மக்கள் ஓட்டாண்டிகளாகவே இருப்பதற்கும் யார் காரணம்?

கடவுளா?
ஜாதகமா?
தலைவிதியா?

நிச்சயமாக இல்லை. பால்பண்ணை வைத்திருப்பவர்களிடமிருந்து குறைந்த விலையில் பால் கொள்முதல் செய்யும் நிறுவனம் அதனை பாக்கெட்டுகளில் அடைத்து பால் முகவர்களுக்கு அனுப்புகிறது. பால் முகவர்களுக்கு சொற்பமான காசுகள் மட்டுமே லாபமாக கிடைக்கும் விதமாக விலை நிர்ணயித்து நிறுவனம் தன் கொள்ளை இலாபத்தைப் பெருக்குகிறது. பால் முகவர்களிடமிருந்து பெருமளவில் உழைப்பை சுரண்டுகிறது. இதே நிலைதான் பிஸ்கட் பாக்கெட் மற்றும் இதர பாக்கெட் செய்யப்பட்ட பொருள்களின் விற்பனையிலும் நடக்கிறது.

ஆக, நிறுவனத்திற்கு பால் ஊற்றும் மாடு வைத்திருப்பவர்களுக்கான விலையை அந்த நிறுவனம்தான் முடிவு செய்கிறது. அதே போல்தான் பால் பாக்கெட் விற்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகையும் அந்நிறுவனத்தாலேயே முடிவு செய்யப்படுகிறது.

நீங்கள் 24 மணி நேரமும் உழைத்தாலும் உங்கள் உழைப்பிற்கான விலையை உங்களால் நிர்ணயிக்க முடியாத நிலை இருப்பதால், உங்களால் இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும், ஏன் ஜம்மு காஷ்மீரில் இருந்தாலும் அம்மாநிலத்தில் 370 - வது சட்டப்பிரிவு நீக்கப்ட்டாலும் உங்கள் வாழ்க்கைத்தரம் மேம்படாமலேயே இருக்கும் நிலை உள்ளது. ஆனால், தான் உழைக்காமல் பிறரின் உழைப்பை சுரண்டி வாழும் இந்நாட்டின் மக்கள் தொகையில் 1 சதவீதம் மட்டும் உள்ள கார்ப்பரேட் கோடீஸ்வரர்களும், தங்கள் சம்பளத்தை தாங்களே இரு மடங்காக்கிக் கொள்ளும் அற்ப அரசியல்வாதிகளும் எளிதாக உலக பணக்காரர் வரிசையில் இடம்பெற்று விடுகிறார்கள்.

அப்புறம் சுவிஸ் பேங்கிலும் கணக்கு துவங்கி விடுகிறார்கள். அங்கே முதலீடு செய்கிறார்கள். அவர்களின் தேசபக்தி சுவிஸ் பேங்கில் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது. இதைக் கேள்வி கேட்பவர்கள் தேசவிரோதிகளாகி விடுகிறார்கள்.

சரி இவர்களுக்கு அடிப்படை மூலதனம் எங்கிருந்து வந்தது என்று பார்த்தோமானால், பெரும்பாலும் நம்மூர் பொதுத்துறை வங்கிகளில் பெருமளவு கடன் பெற்றே தங்கள் தொழிலை நடத்துகிறார்கள்.

ஆளும் அரசாங்கத்தின் ஆதரவு இருப்பதால் பெரும்பணக்காரர்கள் வாங்கிய கடன் முதலில் வாராக்கடன் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் பல இலட்சம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது, பின்னர் புதிய தொழிலுக்காக மீண்டும் கடன்வாங்கி நாட்டையே சூறையாடி விடுகிறார்கள். ஆனால் தம் உழைப்பிற்கான விலையை தாங்களே நிர்ணயிக்க முடியாக நிலையில் விவசாயிகளும் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும் பல கேள்விகளோடு அன்றாட வாழ்க்கைச்சூழலில் கடுமையான சவால்களை சந்திக்கிறார்கள்.

இதே உழைக்கும் மக்கள் தங்கள் உழைப்பின் விலையாகக் கிடைத்த சொற்பமான பணத்தைக் கொண்டு, அதிலும் கொஞ்சம் வங்கிகளில் சேமிக்கின்றனர். இந்தியா முழுக்க 99 சதவீதமான மக்களின் சேமிப்பே, பொதுத்துறை வங்கிகளை காப்பாற்றி வருகின்றது.

ஆக தங்களின் உழைப்பிற்கான விலையை தாங்களே நிர்ணயிக்க முடியாத நிலையில் வாழும் 99 சதவீதம் இந்திய மக்களின் சேமிப்பு பணத்தை, தங்களின் லாபத்தை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் 1 சதவீதம் பெரும்பணக்காரர்கள் வங்கிகளிடமிருந்து கடனாகப் பெற்ற பணத்தை திரும்ப செலுத்தாமல் தப்பி விடுகின்றனர். ஆனால் கல்விக்கடன் வாங்கிய மாணவர்கள் வேலைவாய்ப்பற்ற டிஜிட்டல் இந்தியாவில், கடன் வசூல் செய்யும் ஏஜென்சிகளால் மிரட்டப்படும் சூழல் இன்றும் உள்ளது.

இது இப்படியிருக்க பெரும் முதாலாளிகள் ஆதரவு பெற்ற கோடீஸ்வரர்கள் நிறைந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆளும் வர்க்க அரசியல்வாதிகள் தங்கள் சம்பளத்தை தாங்களே இரண்டு மடங்காக உயர்த்திக் கொள்கின்றனர். ஆனால் எந்த ஒரு விவசாயியாலும், அரசு ஊழியராலும், ஆசிரியராலும், மருத்துவராலும், விஞ்ஞானியாலும் தங்கள் சம்பளத்தை தாங்களாகவே உயர்த்திக் கொள்ள இயலாது.

வண்டி ஓட்டுபவர்கள், முடி வெட்டுபவர்கள், துப்புரவாளர், சாக்கடை சுத்தம் செய்பவர், பால் மற்றும் பேப்பர் போடுபவர், கடைக்காரர்கள், காவல்துறையினர், தனியார் மற்றும் பொதுத்துறை, அரசு உழியர்கள் என எல்லோருமே தங்கள் உழைப்பிற்கான விலையை நிர்ணயிக்க முடியாதவர்களாகவே உள்ளனர். அதற்கு காரணம் ஆளும் அரசுகளின் முதலாளி நலன் சார்ந்த சட்டதிட்டங்களே.

அன்றாட நிகழ்வுகளை நம் வாசலுக்கே கொண்டுவரும் பத்திரிக்கையாளர்களின் நிலை என்ன? ஒரு சில உழைக்கும் மக்கள் நடத்தும் பத்திரிக்கைகளைத் தவிர அனைத்து பத்திரிக்கைகளும் வணிக ரீதியாகவே அதன் முதலாளிகளால் நடத்தப்படுகின்றன. இப்பத்திரிக்கைகளில் பணிபுரியும் உழைக்கும் மக்களின் உழைப்பிற்கு விலை நிர்ணயம் செய்வதும் அதன் முதலாளிகளே. இன்றும் கூட 99 சதவீதம் பத்திரிக்கைத் துறை நண்பர்கள் வெறும் 10 ஆயிரத்திற்கும் குறைவான சம்பளமே பெறுகின்றனர்.

ஆனால் உழைக்கும் மக்களின் இந்நிலையை மாற்ற போராடமல் இருக்க வைக்க, தியானம், யோகா, தலைவிதி, பிரார்த்தனை, ஜெபம் என்ற பெயர்களில் பல சித்து விளையாட்டுக்களை நமது சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ள மதமும், அவன் அந்த இனம், நாம் இந்த இனம் என உழைக்கும் மக்களை ஒன்று சேரவிடாமல் ஜாதியும் நடத்திக் கொண்டிருக்கும் நாடாக டிஜிட்டல் இந்தியா உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இத்தகைய சூழலில் உங்கள் உழைப்பின் விலை என்ன என்று ஒருமுறை உங்கள் மனதிடமும் மற்றவர்களிடமும் உரையாடத் துவங்குங்கள், கேள்வி கேளுங்கள். தெளிவு பிறக்கும். முன்னேற்றத்திற்கான பாதை புலப்படும். உடனே வெற்றி கிடைக்காவிட்டாலும் ஒருநாள் நிச்சயம் நம் சந்ததியின் எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டும். நாம் நடும் பழத்தின் விதை மரமாகி நம் சந்ததிக்கு பழம் கொடுக்க இன்று நாம் நம் உழைப்பை செலுத்துவோம். இம்முயற்சியினால் நம் மகனும் மகளும், பேரனும், பேத்தியும், நலம் பெறுவார்கள், வளம் பெறுவார்கள் என்ற நம்பிக்கையோடு உழைக்கும் மக்களாகிய நாம், முன்னோக்கி முற்போக்கு சிந்தனையோடு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியே.

‘என்றும் நினைவில் கொள் மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது' - காரல் மார்க்ஸ்

- சுதேசி தோழன்